எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

- மஞ்சை வசந்தன்-

தந்தை பெரியார் வாழ்ந்த காலத்திலும், மறைந்த காலத்திலும் அவருக்கு எதிரான தாக்குதல்களும், அவரின் நன்மதிப்பைத் தகர்க்கும் முயற்சிகளும் தொடர்ந்து நடந்து வருவதை வரலாரெங்கும் காணலாம்!

ஆனால், தந்தை பெரியார் அதற்கெல்லாம் அஞ்சாது, அசையாது, சமநிலையில் எதையும் ஏற்று, தான் ஆற்ற வேண்டிய கடமைகளை ஆற்றிக்கொண்டேயிருந்தார்.

வைக்கத்தில் வைத்த காலை வாங்கு!

வைக்கத்தில் வைத்த காலை பின்னே இழுக்கச் சொல்லி, திருவிதாங்கூர் இராஜா, இராஜகோபாலாச்சாரி, காந்தியார் என்ற பலரும் முயன்று பார்த்தனர். ஆனால், வந்த நோக்கம் சரியானது! தேவையானது; கட்டாயம் செய்யப்பட வேண்டியது. எனவே, என் பணி முடித்தே திரும்புவேன் என்று உறுதியுடன் நின்று போராடினார். தந்தை பெரியாரே எதிர்பாராத அளவிற்கு அவருக்கு ஆதரவு பெருகியது. பெரியார் இறந்துபோக வேண்டும்  என்று இராஜா யாகம் செய்தார். பெரியாருக்கு ஒன்றும் ஆகவில்லை. இராஜாதான் இறந்துபோனார். மாறாக, பெரியார் தன் போராட்டத்தில் வென்று ஒடுக்கப்பட்ட மக்கள் வீதியில் நடக்க அனுமதி பெற்று, வைக்கம் வீரராய்த் தழைத்து தமிழகம் வந்தார்.

செருப்பு வீசியவர்களே

சிலை வைத்த சிறப்பு!

தந்தை பெரியார் அவர்கள், மக்கள் ஆயிரக்கணக் கான ஆண்டுகளாய் ஏற்று வாழ்ந்து கொண்டிருக்கும் கடவுள், ஜாதி, ஆணாதிக்கம், சடங்கு, சம்பிரதாயம் போன்றவற்றைக் கடுமையாய் எதிர்த்துப் பேசியதால், மக்கள் அவரை முதலில் வெறுத்தனர். அவர் மீது செருப்புகளையும், பாம்பையும் வீசினர். அதற்காகப் பெரியார், தன் பிரச்சாரத்தை நிறுத்திக் கொள்ளவோ, மாற்றிக்கொள்ளவோ இல்லை. மாறாக, இன்னும் தீவிரமாய்ப் பேசினார்.

தந்தை பெரியாரின் கருத்துகளை, மக்கள் மெல்ல மெல்ல ஆராய்ந்து பார்த்தனர். பெரியார் சொல்பவை சரிதானே என்று ஏற்றனர். காலம் செல்லச் செல்ல பெரும்பாலான மக்கள் பெரியாரை ஆதரித்தனர். கடவுளை விடமுடியாதவர்களாய் இருந்தாலும் மற்றபடி பெரியார் கொள்கைகள் தங்கள் இழிவு நீங்கவும், தாங்கள் உயர்வு பெறவுமே என்று உணர்ந்து, பெரியாரைப் பாராட்டினர். செருப்பும், பாம்பும் வீசியவர்களே பெரியாருக்குச் சிலை வைத்து சிறப்புச் செய்தனர்.

ஆட்சியே காணிக்கை!

தந்தை பெரியாருடனான கருத்து வேறுபாட்டால் வெளியேறி, அவரைத் தூற்றிய அண்ணா உட்பட தி.மு.க. தலைவர்கள், 1967இல் ஆட்சியைப் பிடித்தனர். அந்த ஆட்சியையே, அண்ணா, பெரியாருக்குக் காணிக் கையாக்கி, தந்தை பெரியாரைத் தளிர்விட்டுத் தழைக்கச் செய்தார். தாக்குதல்களையே எருவாக்கிக் கொண்டு, தன்னிலையில் உறுதியுடன் நின்று தொண்டாற்றியதால், எதிர்த்தவர்களே, ஏற்றிப் போற்றி ஏந்திநின்ற நிலையில் இமயமாய்த் தழைத்தார் எம் பெரியார்!

இராஜகோபாலாச்சாரியாரே பாராட்டிய சுயமரியாதைத் திருமணம்!

தந்தை பெரியார், பார்ப்பான் இல்லாமல், மந்திரம் இல்லாமல், சடங்கு, சம்பிரதாயம் இல்லாமல், ஏன் தாலிகூட இல்லாமல் சுயமரியாதைத் திருமணங்களை நடத்தியபோது, இதுவெல்லாம் ஒரு திருமணமா? என்று இழித்தும் பழித்தும் ஏளனமாய், கேவலமாய்ப் பேசி, தந்தை பெரியாரை மக்களுக்கு எதிரியாய்க் காட்ட பார்ப்பனர்கள் முயன்ற நிலையில், தந்தை பெரியார், சுயமரியாதைத் திருமணம் தேவையானது, அது மான மீட்சிக்கான போர் என்று மன உறுதியுடன் சுயமரியாதைத் திருமணங்களை நடத்திவந்தார்.

அந்நிலையில் ஓர் ஆச்சரியம் என்னவென்றால், சுயமரியாதைத் திருமணத்தில் கலந்துகொண்ட இராஜகோபாலாச்சாரியார், “இது சிறந்த திருமணம், இப்படித்தான் திருமணங்கள் எல்லாம் நடக்க வேண் டும்’’ என்று பாராட்டிப் பேசினார்.

ஆட்சிக்கு வந்த அண்ணாவோ, “சுயமரியாதைத் திருமணங்கள் செல்லும்’’ என்று சட்டம் இயற்ற, தரணி யெங்கும் தந்தை பெரியார், தளிர்த்துக் கிளைத்த, கிளைத்துப் பரவிய மரமென வளர்ந்து உயர்ந்து நின்றார். அவர் பெருமையை தாக்கி, தகர்க்க முயன்றோர் தலை கவிழ்ந்தனர்.

வறட்டுத் தத்துவம் என்றவர்கள் வரவேற்ற வரலாறு!

கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள், காரல்மார்க்ஸ் தத்துவம்தான் அறிவியல் அடிப்படையுடையது; பெரியார் தத்துவங்கள் வறட்டு வாதங்கள் என்று பேசி கொச்சைப்படுத்தினர். ஆனால், இந்திய மண்ணிற்கு பெரியாரியமே ஏற்றது. நடைமுறைக்கு உகந்தது, ஆதிக்கம் அழிக்கும் அறிவியல் அணுகுமுறை என்று கம்யூனிஸ்டுகளே இன்று ஏற்றுப் பின்பற்றும் மாற்றம் நிகழ்ந்து, தந்தை பெரியாரின் தகைமை தரணிபோற்ற, ஏற்கத்தக்கதாக பரவி, உயர்ந்து ஒளிவீசுகிறது!

கொச்சைப்படுத்தப்படுத்த

உச்சிக்கு உயர்ந்தவர்!

இவர் எப்படி பெரியார்? இவர் என்ன புதிதாய் சொல்லிவிட்டார்? கடவுள் இல்லையென்று இவர்தான் சொன்னாரா? ஜாதியில்லையென்று இவர்தான் சொன் னாரா? பெண்ணுரிமை பற்றி இவர்தான் முதலில் பேசினாரா? பார்ப்பனர்களை இவர்தான் முதலில் எதிர்த்தாரா? இவருக்கு முன் பலர் செய்துள்ளனர். அப்படியிருக்க எல்லாவற்றையும் இவரே செய்ததாகக் காட்டுவதா? அவரது சீடர்கள் அண்ணாவும், கலை ஞரும், போதாக்குறைக்கு எம்.ஜி.ஆரும் சேர்ந்து பெரியாரை பெரிய ஆளாகத் தூக்கி நிறுத்திவிட்டனர் என்று ஆரியப் பார்ப்பனர்கள் பெரியாரை மட்டம் தட்ட பலவகையில், பலமுறை முயன்றனர். ஆனால், தந்தை பெரியாரோ அதையெல்லாம் மீறி அகில அளவில் அங்கீகாரம் பெற்றார்; இன்று அனைத்து நாடுகளிலும் போற்றப்படும் தலைசிறந்த சிந்தனையாளராய் உலக மயமாகி ஓங்கி உயர்ந்து நிற்கிறார்.

தந்தை பெரியார் கூறியதை அவருக்கு முன் பலர் கூறியிருக்கலாம். அவை வெறும் கருத்தாக காற்றில் கரைந்தன. ஆனால், தான் சொன்னதை பிரச்சாரம் செய்து, இயக்கத்தின் மூலம் செயல்படுத்தி, தன் கண் ணெதிரே அதன் நற்பயனை - விளைவைக் கண்டவர் பெரியார் ஒருவரே!

அவதூறுகளை அடியுரமாக்கி அகிலமெங்கும் கிளைத்தவர்!

தந்தை பெரியார் மீது மக்களுக்கு வெறுப்பை உண்டாக்க வேண்டும் என்பதற்காகவே, ஆரியப் பார்ப்பனர்கள் தொடர்ந்து அவதூறு பரப்பி வரு கின்றனர். பெரியார் இருந்தபோதும் அவதூறு பரப்பிய வர்கள், பெரியார் இறந்த பின்னும் அவரைப் பற்றி அவதூறுகளைப் பரப்பி வருகின்றனர்.

அண்மையில் இணைய வெளியில் ஓர் அயோக்கி யத்தனமான அவதூறு பரப்பினர்.

“ஒருவன் காம உணர்வு மிகும்போது, தன் மகளை அல்லது தன் தாயைக்கூட புணர்ந்து அந்த இச் சையைத் தணித்துக் கொள்ளலாம்’’ என்று பெரியார் கூறியிருக்கிறார்.

(ஆதாரம்: 11.05.1953 - ‘விடுதலை’)

என்று அப்பட்டமான ஒரு பொய்யை ஆதாரத்தோடு கூறுவதாய், பொய்யான ஆதாரத்தைக் கூறி மோசடி யாக, அயோக்கியத்தனமாக இணையவெளியில் பரவவிட்டனர்.

உடனே பெரியார் தொண்டர்கள், 11.05.1953 ‘விடுதலை’ நாளேட்டைத் தேடியெடுத்து, இந்த அயோக்கியர்கள் அவதூறாகப் பரப்பிய அச்செய்தி ‘விடுதலை’ ஏட்டில் எந்தப் பக்கத்திலும் இல்லை யென்பதை எடுத்துக்காட்டி, அவர்களின் மோசடிப் பிரச்சாரத்தைத் தகர்த்தனர்.

அய்யா பெரியார் ஓர் அனல் நெருப்பு. அவதூறுக் குப்பைகள் எவ்வளவு போட்டாலும் அவை சாம்ப லாகும்! அய்யாவின் புகழ் மேலும் மேலும் உயரும் என்பதை இது உறுதி செய்தது.

தந்தை பெரியார் ஒழுக்கத்திற்கும், நேர்மைக்கும், நாணயத்திற்கும் முன்னுரிமை அளிக்கக் கூடியவர். மனித நேயத்தின் மறுவடிவம்.

தனது சொத்துகளை இரமண ரிஷி தன் உறவினர்க்கு உயில் எழுதி வைத்தார். ஆனால், பெரியார் தன் சொத்துகளை மக்கள் நலனுக்கே அளித்தார்.

நாத்திகனுக்கு வைத்தியம் பார்க்கக் கூடாது என்று கூறிய மனிதநேயமற்றவர் சங்கராச்சாரி.

ஆனால், எதிரிக்குக்கூட தீங்கு வரக் கூடாது என்ற மாண்பின் சிகரம் தந்தை பெரியார்.

எனவே, அவரைத் தாக்கத்தாக்க, அவர் தழைப்பார்! மறைக்க மறைக்க வெளிப்படுவார்! எதிர்க்க எதிர்க்க ஏற்றம் பெறுவார். உலகளாவிய அவரது உயர்வு இப் படித்தான் வந்தது; வளர்ந்தது!

Comments  

 
#1 karnan 2017-10-02 16:56
தாக்கத் தாக்கத் தழைப்பவர் தந்தை பெரியார்
16 செப்டம்பர்: மஞ்சை வசந்தன் அய்யா,
மிகவும் சிறப்பாக எழுதப்பட்ட உண்மைகளை கொண்ட கட்டுரை. பாராட்டுக்கள்.
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner