எழுத்துரு அளவு Larger Font Smaller Font

‘என் வரித்துறைப் பயணமும் வாழ்வும்'

வரிஇயல் அறிஞர் ச.இராசரத்தினம் அவர்களின் தன்வரலாறு

- ஒரு பார்வைப் பயணம் -நேற்றையத் தொடர்ச்சி...

வாழ்க்கை முழுவதும் சுற்றிச் சுழன்று இன்று 90 அகவையைத் தாண்டி இருக்கிறார். மும்பை, அகமதாபாத், ஜூனாகாத், ராஜ்கோட்டு, நெல்லூர் என முதல் சுற்று முடிந்ததும் இலங்கை நோக்கிப் பயணித்தவர் வாழ்க்கையில் சென்னை வாழ்க்கை மூன்று சுற்றுகளாக வந்துள்ளது. முதல் சுற்று முடிந்ததும் டில்லி, இரண்டாம் சுற்று  முடிந்ததும் மும்பை, விற்பனை வரித் தீர்ப்பாயம் என்று முடிந்து இப்போது சென்னை மூன்றாம் சுற்றில் ஆணையர் பணியுடன் அரசுப் பணி ஓய்வு பெற்றுவிட்டது. பணி ஓய்விற்குப் பின் ஓய்வு இல்லை. தந்தை பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழகப் பணி எனத் தொடர்கிறார்.

560 பக்க நூலில் வரித்துறைப் பயணம் ஏறக்குறைய 503 பக்கங்கள் அதாவது 95 விழுக்காடு என்றாலும் துளைப்பாக இல்லை. நம்மோடு பயணிக்கும், நம்மில் ஒருவர் அருகில் இருந்து உரையாடுவதுபோல் இருக்கிறது. எதிரே இருப்பவர் கேட்கும் வினாக்களுக்குக் கேட்காமலே பதில் கிடைக்கிறது.

நூலின் செய்திகளை எடுத்துக்கூறத் தொடங்கினால் இடம் போதாது.

தம் ஜாதி இன்னது என்பதை ஒளிக்காமல் சுட்டிக்காட்டுவது குறிப்பிடத்தக்கது. ‘‘சூத்திர வகுப்பினர்களான நாடார்கள் தங்களை சத்திரிய வகுப்பினர் என்று கூறிக்கொண்டனர்’’ என்று குறிப்பிட்டுள்ளார். இன்றும் திருமங்கலத்தில் நான் படித்த பள்ளியின் பெயர் நாடார் உறவின்முறையினர் நடத்துவது. ‘‘பாண்டிய குல க்ஷத்திரிய நாடார் உயர்நிலைப் பள்ளி’’ சத்திரியர்களோ இல்லையோ அவருடைய வரித்துறைப் பயணத்தில் இந்தச் சத்திரியர்கள் என்பது பயன்பட்டதைக் காண்கிறோம்.

நிறைவாக என அவர் எழுதியிருப்பவை நெஞ்சை நிறைப்பவை

‘‘ஒரு பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திலிருந்து கல்வியை நினைத்துக்கூடப் பார்க்க முடியாத ஒரு பின்புலத்தை அடிப்படையாகக் கொண்ட நாட்டுப்புறம் சார்ந்த ஒரு சிறிய நகரத்திலிருந்து தொடங்கிய எனது நீண்ட பயணத்தின் கதை உரையை இத்துடன் நிறுத்திக் கொள்ள விரும்புகிறேன்.

ஒருவர் வாழ்க்கைக்குத் தேவையான குறிக்கோளை மனத்துள் கொண்டு கடின உழைப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வாரேயானால் அவரால் சாதிக்க முடியாதது எதுவுமில்லை. ஆனால், அவர் நல்ல உடல் நலத்தோடு இருக்க வேண்டும். உடல் நலம் என்பது நம் கைகளில் இருக்கிறது. புகையிலை, மது ஆகியவற்றை விலக்கி உணவில் கவனம் செலுத்தி நாள்தோறும் உடற்பயிற்சி மேற்கொண்டு வந்தால் நல்ல உடல்நலம் என்பது சாத்தியமாகும். சில நேரங்களில் இது போதுமானதாக இராது. அது கெட்ட வாய்ப்பாகும்.’’

நூலாசிரியர் தம் வாழ்வில் கற்றுக் கொண்டவை அனைத்தும் நூலைப் படிப்போருக்குக் கற்பிப்பவையாக அமைந்து இருப்பதுதான் வியப்பு.

நூலை மேலெழுந்தவாறு படித்துவிட இயலாது. ஆழ்ந்து படித்தால் நூலாசிரியர் எழுதியதன் அடிப்படை நோக்கம் நன்கு விளங்கும்.

‘‘அரசுப் பணிக்காலம் நிறைவடைந்த பின்னர் பெறுகின்ற ஓய்வுக் காலம்கூட மிகுந்த பயனுடையதாக சமுதாயத்திற்குப் பயன்படும் வகையில் பொதுநலப் பணியாற்றுவது மனநிறைவும், மகிழ்ச்சியும் தருவதாக இருக்கிறது என்பதை நான் உணர்ந்து கொண்டேன். இந்தக் காரணத்திற்காகவே ‘என் வரலாற்று நூல் என்னைப் புரிந்துகொள்வதற்கு மக்களுக்குப் பெரிதும் உதவியாக இருக்கும் என்று நான் கருதினேன். மேலும் வாழ்க்கையில் பங்கினை அனுபவிப்பதற்கான புதிய பாதைகளைப் பற்றிச் சிந்திக்கவும் இந்த வரலாற்று நூல் துணை புரியும். இஃது அரிதானதோர் நல்வாய்ப்பாகும். வாழ்க்கை நிலையானதல்ல என்றாலும் நாம் வாழ்கின்ற காலம் வரை நாம் கற்றுக் கொள்வதற்கும் தொண்டறம் செய்வதற்கும், வாய்ப்புகள் நிறைந்து கிடக்கின்றன. என் நீண்ட வாழ்நாளில் இதைத்தான் நான் உணர்ந்து கொண்டிருக்கிறேன்’ எனும் உண்மைக் கூற்று ஓய்வு பெற்ற பின்னும் வாழ்வைப் பயனுள்ள வழியில் செலுத்த வேண்டும். எல்லோருக்கும் பயன்மிக்க கருத்து.

இந்தக் கருத்தை, முதன்மைக் கருத்தை நன்கு உள்வாங்கிய நம் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவரின் பன்னூறு பயன்தக்க பாடங்கள் நமக்கு இளைப்பாற்றிக் கொள்ள உதவும் குளிர் தருவாக உள்ளன என்று கூறி நூலாசிரியரின் சீரிய இக்கருத்தைப் பதிப்புரையில் சுட்டிக்காட்டுகிறார்.

‘‘அரசுப் பணி ஓய்விற்குப் பிறகு சமுதாயப் பணி செய்யும் நல்வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஒருவர் நல்ல உடல்நலத்தோடு 55, 58, 60 அல்லது 62 அகவையில் ஓய்வு பெறும் காலத்தில் அதுவரை தாம் கற்றுக்கொண்டவற்றை இந்தச் சமுதாயத்திற்கு வழங்க வேண்டும். ஆனால், அதனால் அவரது வாழ்க்கை நலமும் வளமும் மிக்கதாக அமையும் என்பது எனது கருத்தாகும். ஒருவர் தாம் மேற்கொண்ட பாதையின் பயணத்தில் கற்றுக் கொண்ட அனுபவங்களை அதே பாதையில் பயணிக்கும் மற்றவர்களோடு பகிர்ந்துகொண்டு அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்’’ எனும் ஆசிரியர் ச.இராஜரத்தினம் அவர்கள் நூல் எழுதியதற்கான தன்னிலை விளக்கம். அதனை, தனிச்சிறப்பு வாய்ந்த பாடங்களின் அரிய தொகுப்பு என்று கூறுவது மெய்யேயாகும்.’’

வரித்துறை அறிஞரின் வாழ்வியல் கருத்துகள் திராவிடர் கழக (இயக்க) வெளியீடாக வருகிறது. எனில், அதில் பொருள் இருக்கும், பொருள் பொதிந்த அரிய கருத்துகள் இருக்கும் என்பதால் தமிழர் தலைவர் ‘‘மனிதன் தானாகவும் பிறக்கவில்லை, தனக்காகவும் பிறக்கவில்லை’’ என்றார் தந்தை பெரியார். ‘‘தான் பிறந்த குடும்பத்திற்கு மட்டுமல்ல. தான் அங்கமாக உள்ள சமுதாயத்திற்கும் என்ன செய்தோம் என, தொண்டற மனப்பான்மை மனிதர்கட்குத் தேவை. அதனைக் காட்டுகிறார் நூல் முழுவதும் பற்பல நிகழ்வுகள்மூலம்’’ என்று சுட்டிக்காட்டவும் தவறவில்லை. எனவே, தமிழர் தலைவர் குறிப்பிட்டது போல் இந்த நூலைத் திராவிடர் கழக வெளியீட்டகம் தமிழில் தருவது தமிழ்கூறும் நல்லுகத்திற்குத் தரும் அலுவலகக் கருவூலமேயாகும்.

திராவிடர் கழக வெளியீட்டகம் அருமையாகத் தயாரித்து வெளியிட்டு இருப்பது பாராட்டுக்குரியது.

இருப்பினும் சில சிறு குறைகள் இருக்கின்றன. அதைச் சுட்டிக்காட்டுவது அடுத்த பதிப்புகள் மேலும் செப்பமாக வெளிவரத் துணைபுரியும்.

பக்கம் 35, பத்தி 2, வரி 2: ‘‘வி என்ற ஒரு பொறியியல் நிறுவனத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட என்ற ஒரு பணியாளர்’’ என்பதில் பணியாளரின் பெயர் விடப்பட்டிருக்கிறது.

பக்கம் 38, பத்தி 2, வரி 9இல்: ‘‘அதிர்ச்சியடைந்தவனாய் என்பது அதிர்ச்சி என இருக்கவேண்டும்.’’

பக்கம் 74, பத்தி 2, வரி 2: ‘‘முகாமையான பாடங்கள் என்பது சரியாகப் படவில்லை. இதே சொல் வேறு இடங்களிலும் காணக் கிடைக்கிறது.’’

பக்கம் 92, பத்தி 2, கடைசியில்: ‘‘காஞ்சிபுரத்தில் உள்ள தொன்மையான சமணக் கோயிலான கயிலாசநாதர் கோயிலுக்கு’’ என்பது பிழை. ‘‘கயிலாசநாதர் கோயில், சிவன் கோயில். சமணக் காஞ்சியிலுள்ள சமணக் கோயிலுக்கு என்று இருத்தல்வேண்டும்.’’

நூலின் எண்ணங்கள், சுவைமிக்கச் செய்திகள், பயனுள்ள தகவல்கள், படித்தவர் பயன்பெறும் கருவூலங்கள் பலப்பல வகையால் பலவற்றையும் எடுத்துக்கூற விழைவுதான் என்றாலும் முடிந்தவரையே தொட்டுக் காட்டினோம்.

அழகிய கட்டமைப்பில், அருமையான அச்சில் வெளிவந்த இந்நூல் வாழ்வைச் செம்மையாகச் சீராக நடத்திச் செல்ல விழையும் அனைவர் கையிலும் இருக்க வேண்டிய நூல். இது தனிமனிதரின் வாழ்க்கைச் சித்திரம் என்பதைவிட வழிகாட்டும் நூல் எனலாம்.

மொழிபெயர்ப்பு நூல் என்று கூறவியலாத வகையில் நல்ல தமிழில் ஆங்கிலச் சொற்களை அள்ளித் தெளிக்காமல் அருமைத் தமிழில் வெளியிடப்பட்டுள்ளது என்பதால் மொழி பெயர்ப்பாளர் முனைவர் ப.காளிமுத்துவிற்குப் பாராட்டுகள்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner