எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உடனே எழு தோழா!

மலரின் தொடக்கமே ஆக்கத்தை நோக்கி தி.க. தொண் டர்களையும், தமிழக மக்களையும் உணர்வூட்டி, கடமை காட்டி, விழிப்போடும், எச்சரிக்கையோடும் விடாமல் போராடி, ஆதிக்கவாதிகளின் பாஸிச செயல்பாடுகளைத் தடுத்துத் தகர்த்து, சமத்துவத்தையும் சமவுரிமையையும், சுயமரியாதையையும் நிலைநிறுத்த வேண்டியதன் கட்டா யத்தை வரிக்கு வரி வற்புறுத்தி வழிகாட்டி நிற்கிறது, தமிழர் தலைவர் அவர்கள் விடுத்துள்ள 17.09.2017 தேதியிட்ட அறிக்கை வடிவில்.

அவ்வகையில் இது மணக்கும் மலர் அல்ல; மாறாக,  மாற்றாரை தோற்றோடச் செய்ய எழுச்சியூட்டும் புரட்சி மலர்.

தமிழினத்தை தட்டியெழுப்பி தங்கள் கடமையாற்றத் தூண்டும், தமிழர் தலைவரின் “உதவாது தாமதம் உடனே எழு!’’ என்ற இந்த அறிக்கை, திராவிடர் கழகம் அந்த வகையில் தன்னை எப்படியெல்லாம் தகுதிப்படுத்தி, தயார்படுத்தி தக அமைத்துக் கொண்டு, தன் கடமையை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிக்கலிலும் எவ்வாறு செய்து கொண்டு வருகிறது என்பதையும் விரிவாக விளக்கியுள்ளது.

அறிக்கையின் தலைப்பே, ஒரு நொடியும், தாமதிக்காது, விழிப்பு, எச்சரிக்கை, விவேகம், வியூகத்துடன் எப்படி தி.க. தொண்டர்களும் தமிழர்களும் செயல்பட வேண்டும் என்பதை உள்ளடக்கி, குறள் வடிவில் குறிக்கோள் பொதிந்து அமைந்துள்ளது சிறப்பினும் சிறப்பாகும்!

எனக்குப் பின்...

இந்த அறிக்கையின் ஊடே, “எனக்குப் பின்’’ என்ற தலைப்பில், தந்தை பெரியாரும், அவரின் அடியொற்றி நடக்கும் அவரின் அசல் வாரிசான தமிழர் தலைவரும், இயக்கம் என்பது என்றும் இயங்கும், எமக்குப் பின்னும் இடையறாது இயங்கும், இந்த இயக்கத்தின் தொண்டர்கள் அப்படிப்பட்டவர்கள், இந்தத் தமிழ்மக்கள் அப்படிப்பட்டவர்கள் என்ற நம்பிக்கையை விதைத்ததன் மூலம், எதிரிகளின் எதிர்பார்ப்பு என்றும் நடவாது என்பதையும் உணர்த்தி யுள்ளமை, அறிக்கை இலக்கிற்கு அரண் அமைப்பதாய் உள்ளது.

புரட்சிக்கவிஞர் போர் முரசு!

அறிக்கையை அடுத்து வரும் புரட்சிக்கவிஞரின் உணர்ச்சி வரிகள், போர் முரசு கொட்டி, புத்துணர்ச்சி ஊட்டி நிற்கிறது.

ஜெர்மன் மாநாட்டுச் செய்திகள்

அடுத்து, மதவாத ஆட்சியால் இந்தியாவில் விளைந்த அவலத்தை படம்பிடித்துக் காட்டும், இம்மலர், பெரியார் உலக மயமாவதன், முத்திரைப் பதிக்கும் நிகழ்வாய் அமைந்த ஜெர்மன் மாநாட்டின் சிறப்புக் கூறுகள் அனைத்தையும் கூறும் வகையில், ஜெர்மன் மாநாட்டுக்குச் செல்லாதவர்களுக்கும் சென்றுவந்த ஓர் உணர்வை ஏற்படுத்தும் வகையில், அனைத்து நிகழ்வுகளும் பட விளக்கங்களுடன் பதிவு செய்யப்பட்டுள்ள பாங்கு படித்து மட்டும் உணரக்கூடிய ஒன்றாகும்.

தாலி கூடாது!

பெண்ணடிமைக்கும் சுயமரியாதை இழப்பிற்கும் காரணமான தாலி ஏன் தவிர்க்கப்பட வேண்டும் என்ற அண்ணாவின் கருத்துகள். தாலி மகத்துவத்தை தகர்த்து நிற்கிறது.

கலைஞர் கட்டுரை

இயக்கத்தின் தொண்டன் எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணம் கலைஞர். அதை அவர் வெவ்வேறு சூழலில் வெளிப்படுத்திய பாங்கு மலரில் பயனுறப் பதிவு செய்யப்பட்டிருப்பது பாராட்டத்தக்கது.

தீக்கதிர் செய்தி!

தந்தை பெரியாரின் தாக்கம் மார்க்சிஸ்ட்டு களிடம் எந்த அளவிற்கு ஏற்பட்டுள்ளது என்பதைத் தெரிவிக்கும் தீக்கதிர் செய்தியும், ஆரிய திராவிடப் போராட்டம் பற்றி கலைஞரின் கருத்துகளும் ஒரே பகுதியில் அச்சாகி சரியான திசை நோக்கி படிப்போரைப் பயணிக்கச் செய்வது தொகுப்பின் திறத்தை துலங்கச் செய்கிறது.

இனமானப் பேராசிரியர் எழுத்துகள்!

இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் அவர்களின் கருத்துகள், வழக்கம்போல் திராவிட இயக்க வரலாற்று ஆய்வுகளையும் திருப்புமுனைகளையும் இளைய தலைமுறைக்கும் உணர்த்தி நிற்கிறது. தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரின் சரித்திர சாதனைகளையும் தவறாது அவர் நன்றியுடன் பதிவு செய்துள்ளார்.

தந்தை பெரியார் பற்றி தளபதி!

தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் கட்டுரைத் தலைப்பே கட்டியம் கூறி நிற்கிறது. கலைஞரைப் போன்றே பெரியார், அண்ணா கருத்துகளை, கடமைகளை அவர் தன் உணர்வோடு ஊடுருவிப் பாயவிட்டிருக்கிறார்.

திருமாவின் திராவிட எழுச்சி!

திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று முழங்கி அரசியல் ஆதாயம் தேட முயலும் சில அரைவேக்காடுகளுக்கும், அவர்களின் உணர்ச்சியுரையால் உந்தப்பட்டு பின் தொடரும் பேர்வழிகளுக்கும், பெரியாரின் திராவிடக் கோட்பாடு தமிழ், தமிழர் வளர்ச்சிக்கு எழுச்சிக்கு எதிரானது அல்ல; மாறாக, ஏற்றதே என்பதைத் தன் ஆணித்தரமான கருத்துகளின் மூலம் நிறுவியிருக்கிறார் தொல்.திருமாவளவன் அவர்கள்.

ஆரிய ஆதிக்கத்திற்கு எதிரான போரின் அணிவகுப்பு அடையாளமே திராவிடம் என்பதை தன் கட்டுரையில்  தெளிவுபடுத்தி யுள்ளார்.

கவிஞர் பொன்னடியான்

கவிஞர் பொன்னடியான் தந்தை பெரியாரின் சாதி யொழிப்புப் போராட்டங்களை நினைவுகூர்ந்து, அவர் போராடிய மண்ணில் சாதிவெறி மீண்டும் தலைதூக்குவதை எண்ணி வருந்தி, அதற்கு ஒரே தீர்வு பெரியாரே என்பதை எடுத்துரைக்கிறார்.

எப்படியிருந்தது? எப்படி மாறியது?

எப்படியிருந்தது- எப்படி மாறியது? என்ற தலைப்பின் கீழ் கூறப்பட்டுள்ளவை பெரியார் தந்த பெரும் மாற்றங்களை இன்றைய தலைமுறை தெளிவுபெற உதவுகிறது.

வாழ்வில் வெற்றிபெற என்ன வழி என்று பெரியார் காட்டும் அரிய வழிகாட்டல்களை 12.05.1929 ‘குடியரசு’ ஏட்டிலிருந்து பதிவு செய்து, அது இன்றைக்கும் எப்படி வழிகாட்டுகிறது என்பதை உணரும்படி செய்தமை பாராட்டத்தக்கது.

சு.அறிவுக்கரசு

பெரியார் யாருக்கு எதிரி? என்பதை அடையாளம் காட்டும் சு.அறிவுக்கரசு அவர்கள், எதிர்க்கப்பட வேண்டி யவை பற்றி எடுத்துச் சொல்லி, வீரமாமுனிவர், உவே.சா., பாவாணர், பெருஞ்சித்திரனார் என்று ஏற்க வேண்டிய சான்றாளர்களை எடுத்துக்காட்டி, தந்தை பெரியாரின் பெரும் போராட்டங்களை, பெரும் தொண்டுகளை விரிவாக எழுதியுள்ளார். பல்வேறு வரலாற்றுச் செய்திகளின் பதிவாக இது அமைந்து சிறக்கிறது.

க.திருநாவுக்கரசு

திராவிட இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசு அவர்கள், பெரியார், “சீர்திருத்தவாதியல்ல; அவர் ஒரு முழுமையான புரட்சியாளர்’’ என்பதை, புத்தர், அம்பேத்கர் போன்ற பெரியார் ஏற்ற புரட்சியாளர்களைப் பற்றி எழுதி நிறுவியதோடு, பெரியாரின் சுயமரியாதை, சாதியொழிப்பு, சமூகநீதி, உண்மையான விடுதலைக் கோட்பாடு போன்ற வற்றை வரலாற்று வழியில் விளக்கியுள்ளதோடு, பெரியார் பெற்ற வெற்றிகளையும், அவற்றைக் காத்து வளர்க்க வேண்டிய நம் கடமைகளையும் உணர்த்தியுள்ளார்.

ப.காளிமுத்து

பேராசிரியர் ப.காளிமுத்து அவர்கள், பெரியார் ஒரு காலத்துக்கு உரியவர் அல்லர், அவர் காலாகாலத்திற்கும், உலகு சந்திக்கும் அனைத்து மாற்றங்கள், வளர்ச்சிகள், சிக்கல்கள் அனைத்தையும் எதிர்கொண்டு, ஏற்ற வகை யில் இவ்வுலகை இட்டுச் செல்லும் இணையில்லா சிந்த னையாளர், வழிகாட்டி, புரட்சியாளர் என்பதை வைக்கம் போராட்டம். தொடங்கி வரிசைப்படுத்தி, இன்றைக்கும் எதிர்காலத்திற்கும் பெரியார் எப்படி தேவைப்படுகிறார், தேவைப்படுவார் என்பதை படிப்போர் நெஞ்சில் ஆழ மாகப் பதிய வைக்கிறார்.

பெரியார் மேற்கொண்ட இரஷ்யப் பயணம், அதன் விளைவுகள் குறித்து 24.12.2016 ‘தீக்கதிர்’ வெளியிட்ட கருத்து களை வரலாற்றுப் பதிவாக இம்மலர் பதிவு செய்திருப்பது சிறப்புக்குரியது.

பேரா.மங்களமுருகேசன்

பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன் அவர்கள், உலகத் தலைவரான பெரியாரை பல கோணங்களில் பகுத்தாய்வு செய்து இன்றைய தலைமுறைக்குப் படம்பிடித்துக் காட்டி யுள்ளதோடு, பெரியாரின் மாண்பு, மனிதநேயம், சமத்துவம், சுயமரியாதை வேட்கை போன்றவற்றையும் பாராட்டும்படி பதிவு செய்துள்ளார்.

ஆய்வுப் பதிவு

ஆரியர்கள் வந்தேறிகள் என்பது ஆயிரமாயிரம் தடவை உறுதி செய்யப்பட்ட போதிலும், ஆரியப் பார்ப்பனர்கள் அறிவியல் பெயரில் இராமர்பால மோசடி செய்ததுபோல, மரபணு சோதனையிலும் மோசடி செய்து தவறான செய்தியை வெளியிட்டனர்.

ஆனால், அப்புளுகு அதிக நாள் நீடிக்கவில்லை. அதன்பின் நிகழ்த்தப்பட்ட மரபணு சோதனை ஆரியர்கள் வந்தேறிகள் என்பதை உறுதிப்படுத்தியது. “தமிழ் இந்து’’வில் (03.07.2017) வந்திருந்த இச்செய்தியை இம்மலர் பதிவு செய்து வரலாற்று ஆவணமாக ஆக்கியிருப்பது, மலர் தயாரிப்பின் நுட்பத்தை, பொறுப்பைக் காட்டி நிற்கிறது.

பெரியார் மாண்பு

அதேபோல், சிலையுடைப்பு சார்ந்து வினோபா கருத்து வெளியிட்ட போதும், நாவலர் சோமசுந்தரபாரதியார் பேசுகையில் ஏற்பட்ட சர்ச்சையின்போதும், பெரியாரின் பண்பட்ட செயல்பாடுகள்; மனிதநேய இயக்கம் தி.க., ஆர்.எஸ்.எஸ். ஆட்கொல்லி பாஸிச பாசறை என்ப தற்கான படப் பதிவுகள், பாஸிச பா.ஜ.க.வின் மதவெறிக் கொடுமைகள், கலாச்சாரப் படையெடுப்புகள் பற்றிய பட விளக்கங்கள், கருத்துப் பதிவுகள், ஆட்சியில் மதச்செயல் பாடுகள்-  அன்று 1952இல், இன்று 2017இல் என்ற பதிவு போன்றவை இடையிடையே பதிவு செய்யப்பட்டு, மலரின் ஓட்டத்தை உந்தித் தள்ளுவதோடு, படிப்போரின் சிந்தனைகளைக் கிளறுவதாயும் அமைந்துள்ளன.

கழக டைரி

செப்டம்பர் 2016 முதல் ஆகஸ்ட் 2017 வரை நிகழ்ந்த கழகச் செயல்பாடுகள், வரலாற்றுப் பதிவாக, மீள்பார்வையில் தோள் உயர்த்திக் கொள்ள, ஊக்கந்தரும் வகையில், நாற்பத்தைந்து பக்கங்களில் பதிவு செய்யப்பட்டிருப்பது, வரலாற்று ஆய்வாளர்களுக்கு எதிர்காலத்தில் மிக வும் பயன்படும்; அவர்களின் தேடல் நேரத்தையும், சுமையையும் குறைக்கும்.

ஆசிரியர் அறிக்கைகள்

12.09.2016 முதல் 31.08.2017 வரை ஆசிரியர் எழுதிய 201 அறிக்கைகள் விவரம் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆசிரியர் அறிக்கை என்பவை ஆட்சியாளர்கள், மற்ற அரசியல் கட்சிகள், அரசு அதிகாரிகள், மாணவர்கள், பொதுமக்கள் சார்ந்து ஒவ்வொரு நாளும் எழுதக்கூடிய சிக்கல்களுக்குத் தீர்வுகள், எச்சரிக்கைகள், வழிகாட்டுதல்கள், கண்டனங்கள், போராட்ட அறிவிப்புகள் என்று பலதரப்பட்டவை. இந்த அறிக்கைகள்தான், நாட்டின் செயல்பாடுகளை சரியான திசையில் மாற்றும் “சுக்கான்’’கள்.

இந்த அறிக்கைகள் பல அரசியல் செயல்பாடுகளைத் திருத்தியிருக்கின்றன; மாற்றியிருக்கின்றன, மக்கள் திரளைச் சேர்த்திருக்கின்றன, ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றம் பலவற்றை நிகழ்த்தியிருக்கின்றன. சமூகநீதி காத்து, மாநில உரிமைகள் பறிபோகாமல் தடுத்து, ஆதிக்கவாதிகளின் சூழ்ச்சிகளை சுக்கலாக்கியிருக்கின்றன.

ஓராண்டு வெளியிட்ட அறிக்கைகளின் பொருளடக்கம் இம்மலரில் பதிவு செய்யப்பட்டுள்ள பாங்கு, அறிக்கைகளை ஆய்வோருக்கு தேடுவோருக்கு பெரிதும் துணை நிற்பதாய் அமைந்துள்ளது வரவேற்கப்பட வேண்டியதாகும்.

பேரா.மா.நன்னன்

கழக டைரிக்கும், ஆசிரியர் அறிக்கை விவரங்களுக்கும் இடையே இணைப்பாய் 95 வயதில் வாழும் பெரியார் பெருந்தொண்டர், தமிழறிஞர் மா.நன்னன் அவர்களின் மரண வாக்குமூலப் பதிவு உள்ளத்தை உருக்குகிறது.

“என்னுடைய நீண்ட வாழ்விற்கும், சாதனைகளுக்கும், நிறைவான, நிம்மதியான வாழ்விற்கும், தெளிவிற்கும், உயர்விற்கும், மனிதநேய மலர்ச்சிக்கும் தந்தை பெரியாரைப் பின்பற்றி வாழ்வதே காரணம்’’ என்ற அவரது தொடக்கப் பதிவே மரண வாக்குமூலத்தின் மகுடமாய் அமைகிறது. கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தேர்ந்தெடுத்த தேவை யான கேள்விகளின் மூலம் பேராசிரியரின் உள்ளக் கிடக் கைகளை உதிர்க்கச் செய்து, மலரில் கோர்த்திருப்பது இளைய தலைமுறைக்கு பெரிதும் பயன்படும் என்பதோடு, மா.நன்னன் அவர்களின் முதிர்ந்த வாழ்வின் பகிர்வுப் பதிவாகவும் நிலைத்து நிற்கும் என்பதும் உறுதி!

தமிழர் தலைவர் சுற்றுப்பயணம்

84 வயதாகும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், பல்வேறு உடல்சார் சவால்களுக்கு இடையே, பணிச் சுமைகளுக்கு இடையே எப்படி ஓடோடி இயக்கப் பணி யாற்றுகிறார் என்பதனை எவரும் வியக்கும் வண்ணம் அவரது சுற்றுப் பயணங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பது, கழகத் தொண்டர்களின் கடமையை, வேகத்தை, செயல் திறத்தைக் கூட்டவும், தலைமையின் செயல் திறத்தை உலகிற்குக் காட்டவும் பெரிதும் உதவும்.

துரை.சந்திரசேகரன்

அறிவுப் பாதைக்கு மக்களை அழைத்து, மான உணர்வு ஊட்டியவர் தந்தை பெரியார். அவர் சிந் தனை வழிச் சென்றால் வாழ்வு வசந்தமாகும் என்று கூறும் துரை.சந்திரசேகரன் கட்டுரையில் பெரியாரின் பொன்மொழிகளைத் தொகுத்து வழங்கியுள்ளமை சிறப்புக்குரியதாகும்.

தாராசுரம் ஜி.சக்கரபாணி

107 சுயமரியாதைத் திருமணங்களை நடத்திச் சாதனை புரிந்த தாராசுரம் ஜி.சக்கரபாணியின் குடும்பத்தின் ஒப் பற்ற மானமீட்பு, ஆதிக்க ஒழிப்புப் பணி, வரலாற்று ஆவணமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தகுதி, திறமை ஒரு மோசடி!

தகுதி, திறமை என்ற கூப்பாடு ஆரியப் பார்ப்பன மோசடியேயன்றி வேறில்லை என்ற தந்தை பெரியாரின் ஆணித்தரமான கருத்துகள் தனித் தலைப்பாக, பதிவு செய்யப்பட்டிருப்பது, இன்றைய கட்டாயத் தேவையை உணர்ந்தே பதிவு செய்திருப்பதைக் காட்டுகிறது.

நீட்டை நீக்கு!

சமூகநீதியைச் சாய்க்க வந்த சதித் திட்டமான நீட்டைப் பற்றி காலங்கருதி, கட்டாயங் கருதி விரிவாக, தெளிவாக கருத்துகளை இம்மலரில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ‘நீட்’ ஏன் கூடாது என்பதற்கான பல்கோணப் பகுத்தாய்வாய் இப்பதிவு அமைந்துள்ளதால், இளைய சமுதாயம் இதன்வழி விழிப்புப் பெறும்.

தொண்டர்நாதன்

‘‘தொண்டர்நாதன் பெரியார்'' என்னும் தலைப்பின்கீழ் சாக்கோட்டை எஸ்.ஆர்.சாமிக்கு பெரியார் நிதிஉதவி செய்த மனிதநேயப் பாங்கு காவியமாய்ப் பதிவாகி, படிப்ப வர்களை நெகிழ்ச்சி கொள்ளச் செய்கிறது! தொண்டர்கள் மீது பெரியார் கொண்டிருந்த பற்றைப் பறைசாற்றும் ஆவணமாக இது அமைந்துள்ளது.

மைக்கேல் செல்வநாயகம் பேட்டி

லண்டன் கிராய்டன் நகர துணை மேயர் மைக்கேல் செல்வநாயகத்தை, கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் பேட்டிகண்டு பதிவுசெய்த செய்திகள், பெரியார் உலகம் தழுவி தழைத்துக் கிளைத்துள்ளதைக் காட்டும் அரிய ஆவணமாய் அமைந்துள்ளன. இவர் சமூக நீதிக்கான கி.வீரமணி விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. உலகநாடுகளில் ஜாதிய சிக்கல் வருவது, இந்தியாவிலிருந்து சென்றவர்களால் தான் என்ற சரியான செய்தியை இவர் இப்பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

அய்யா எரித்த அரசமைப்புச் சட்டம்

ஜாதி ஒழிப்பிற்காய் தந்தை பெரியார் அரசியல் சட்டத்தை எரித்து, துணிவுடன் நடத்திய போராட்டம் இந்திய வரலாற்றில் யாரும் செய்யாத சாதனையாகும். அது நிகழ்த்தப்பட்டு 60 ஆண்டுகள் ஆனநிலையில் இப்போராட்டம், இம்மலரில் பதிவு செய்யப்பட்டு இன்றைய தலைமுறைக்கு எழுச்சியும், துணிவும் ஊட்டுகிறது. சட்ட எரிப்புப் போராட்டத்தில் தொண்டர்கள் செய்த தியாகம் முழுமையாக இதில் பதிவாகியிருப்பது இம்மலருக்கு சக்தியூட்டக்கூடியதாய் உள்ளது.

கலி.பூங்குன்றன்

நிறைவாக கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள், திரா விடர் இயக்கச் சாதனைகளை அறுவடை செய்து அளந்து பார்க்கிறார்.

“திராவிடர் இயக்கம் சாதித்தது என்ன? என்று வினா எழுப்பி, கேட்போருக்கும், அறிய விரும்புவோர்க்கும் புள்ளி விவரங்களோடு புரியச் செய்திருக்கிறார்.

சாதனை அறிந்து பெருமை கொள்ளவும்; சாதிக்கத் துணிவு கொள்ளவும் இது நிச்சயம் இளைஞர்களைத் தூண்டும்.

ஆங்காங்கே அரிய செய்திகள்

சுட்டிக்காட்டப்பட்ட பதிவுகளோடு, பக்கத்திற்குப் பக்கம் பயனுள்ள பல வரலாற்று நிகழ்வுகள், பெட்டிச்செய்திகள், அரிய செய்திகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இவை படிக்கின்றவர்களின் ஆர்வத்தைத் தூண்டி, அவர்கள் பல பயனுள்ள கருத்துகளை அறிய உதவும்.

காகித மலர் அல்ல! கருத்து மலர்!

இது வண்ணக் காகிதத்தில் அச்சிடப்பட்டிருப்பதால் காகித மலர் அல்ல, கண்ணுக்குள் ஊடுருவி கருத்தில் பதிந்து, களத்தில் நிறுத்தும் கருத்து மலர்!

வாள் முனையைவிட பேனாமுனை ஆற்றல்மிக்கது என்ற உண்மையை, இந்த எழுத்தாயுதம் எண்பிக்கும்!

இது விலைமதிப்பற்ற ஆவணம்! குறைவாய்க் கொடுத்து நிறைய பெறலாம்!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner