எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நெய்வேலி போராட்டம்

மக்கள் நலனே நாடும் ஓர் இயக்கம் திராவிடர் கழகமே! மீண்டும் மீண்டும் நிரூபணம்

- முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன்

தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கமும், அதன் அடுத்த பிறப்பு திராவிடர் கழகமும் சரி, மக்கள் நலன் நாடும் இயக்கங்களே.

அன்று - தந்தை பெரியாரின் தலைமையிலும் சரி, அதன்பின் அன்னை மணியம்மையாரின் தந்தை பெரியாரின் அடியொற்றிய தலைமையிலும் சரி, இன்று அய்யா, அன்னையார் அடிபிறழாத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணியின் ஆற்றல் மிகு தலைமையிலும் சரி இன்றுவரை தடம்புரளாத, தந்தை பெரியாரின் கொள்கையில் - அதாவது மக்கள் நலனே முதன்மை என்பதில் கிஞ்சித்தும் வழுவிடாத இயக்கம் இவ்வியக்கம்.

மக்களின் கையிலுள்ள வாக்குச்சீட்டுக்காகவோ, நாடாளுமன்றம், சட்டமன்றம் எனும் ஆட்சிக் கட்டில் ஏறவேண்டுமெனச் சமரசமோ, சரி செய்து கொள் வதோ செய்யாத இயக்கம்.

1957இல் பதவியை அடைய வேண்டும் என்பதே இல்லாது, கொண்ட கொள்கைக்காகப் பத்தாயிரம் பேரைப் போராட்டக் களத்தில் இறக்கி அதில் 3000 பேரை ஆறுமாதம் முதல் மூன்றாண்டுகள் வரை காராக்கிரகத்திற்கு அனுப்பி அதில் 18 தியாக மறவர்களைப் பலிகொடுத்த இயக்கம்.

திராவிடர் கழகம் என்ன சாதித்தது? என்றால் அறிவும், மானமும் மனிதருக்கு அழகு என்று வறட்டு வேதாந்தம் போதிக்காமல், அது வாழ்வியல் நெறி எனப் பதியச் செய்த இயக்கம்.

பட்டம், பதவி என்று எதுவுமில்லாமலே அரசியல் அமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தத்தைப் பெற்றுப் பிற்படுத்தப்பட்டோர் வாழ்வில் ஒளியேற்றிய இயக்கம்.

9.11.1993இல் டில்லியிலே குடியரசுத் தலைவர் பார்ப்பனர், தலைமை அமைச்சர் பார்ப்பனர், அது மட்டுமல்லாது தமிழகத்தின் முதல்வர் பார்ப்பனர் என்றிருந்த வேளையில் கடந்த 25 ஆண்டுகளாக எந்த மாநிலமும் பெற்றிடாத 69 விழுக்காட்டினைப் பெற்ற மைக்கு முழுக்க முழுக்கப் பொறுப்புடைய இயக்கம்.

பொறுப்புடையவர் தமிழர் தலைவர்

இவ்வியக்கம் வெறும் கடவுள் மறுப்பு இயக்கம், பகுத்தறிவு இயக்கம், சமூகப் புரட்சி இயக்கம்  ஆகி யன, மட்டுமல்லாது - பொருளாதாரச் சிந்தனை - தமிழகத்தின் பொருளாதார உரிமைகளை மீட்டெ டுக்கப் போராடவும் தயங்காத புரட்சி இயக்கம் என்ப தையும் மெய்ப்பித்திருக்கிறது.

“நரிமணம் பெட்ரோலுக்கும்

நெய்வேலி நிலக்கரிக்கும்

ராயல்டி வேண்டும்“

என்ற தமிழர் தலைவரின் குரலைக் கருப்புச்சட்டைத் தோழர்கள் கை காய பெரிய, பெரிய எழுத்துக்களில் எழுதி ஒரு விழிப்புணர்வுப் புரட்சியே ஏற்படுத்தி விட்டார்கள் அந்நாளில்.

முதல் நாள் நரிமணம் பெட்ரோலுக்கு ஆர்ப்பாட் டம்; மறுநாள் நெய்வேலி நிலக்கரிக்கு ஆர்ப்பாட்டம், எதற்கு? ‘ராயல்டி’ எனும் காப்புரிமை கேட்டு! இந்தப் போராட்டம் யாரைச்சென்று அடைய வேண்டுமோ, யார் காதை எட்டவேண்டுமோ அவரின் காதுக்கு எட்டியது. அந்த அலுவலர், போராடிய தமிழர் தலைவரை அழைத்து “Mr Veeramani, your demand is genuine demand. I understand the justice behind that you try to approach this with the appropriate authority” என்று தமிழக முதல்வர், தமிழக அரசு வாயிலாக எழுப்ப ஏற்பாடு சொன்னதன் பயனாகத் தமிழக முதல்வர் கலைஞர் மய்ய அரசுக்குக் கடிதம் எழுதிச் சாதனை நிகழ்ந்தது.

ஒரு காலத்தில் உயர் ஜாதி ஆதிக்கம் நிலவிய நெய்வேலியை “நெய்வேலியா, பூணூல் வேலியா?” என்று கேட்டுத் தமிழ் மக்களுக்கு சமூகநீதி பெற் றுத்தந்ததுடன் பொருளாதார உரிமைக்குரலும் எழுப்பி யவர் நம் தந்தை பெரியார்.

நவரத்தினங்களில் ஒன்று எனும், லாபம் ஈட்டித் தரும் நிறுவனம் பொன்முட்டையிடும் வாத்து. 2011 இல் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் போது நெய்வேலி நிறுவனத்துடன் மின்சாரம் பெறப் புரிந்துணர்வு ஒப்பந் தம் செய்தது. இது ஆட்சி முடியும் வேளை.

2011இல் ஆட்சி முடிவுற்றுத் தேர்தலுக்குப்பின் வந்த செல்வி ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் 28.1.2013 அன்று சீர்காழியில் 4000 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கும் அனல் மின் நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு என்.எல்.சி. நிருவாகம் வாரியத்தின் ஒப் புதல் பெற்றது. 8.4.2016 அன்று அதாவது 56கோடி ஒதுக்கியபின் ஏறக்குறைய மூன்று ஆண்டுகளில் அத்திட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொண்டது. நன்கு கவனிக்க வேண்டும்  திட்டம் வேண்டாம் என்று கூறவில்லை - திருத்தங்கள் மேற்கொண்டது.

அதற்கு ஆறு மாதங்களுக்குப் பின் செல்வி ஜெயலலிதா அரசு 7.10.2016 அன்று சீர்காழியில் இந்த அனல் மின் நிலையம் அமைத்திட 1190 ஏக்கர் நிலம் கையகப்படுத்த - அதாவது ஆர்ஜிதம் செய்ய ஆணை பிறப்பித்த சூட்டோடு அதற்கு வேண்டிய பணியாட்கள், அலுவலர்கள் ஆகிய செலவினங்களுக்கும் ஒப்புதல் அளித்து அப்பணி நிறைவேறிக் கொண்டிருந்தது.

இதே வேளையில் அதாவது நில ஆர்ஜித வேலைகள் நடைபெற்ற போது அதே செப்டம்பரில், அதே 2016இல் இரகசியமாகச் சீர்காழி திட்டத்தை மூடிட 27.10.2016 அன்று ஒரிசாவில் இடம் பார்த்தது. நிலம் அங்கே வாங்கும் இரகசியச் சதித்திட்டம் சதிகாரர்கள் நிறைவேற்றிக் கொண்டிருந்த வேளையில் செல்வி ஜெயலலிதா மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.

மருத்துவமனையிலேயே செல்வி ஜெயலலிதா டிசம்பரில் மறைந்தார். இங்கே அதிமுக அரசு பதவிப் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது.

அவ்வேளையில் என்.எல்.சி.யின் அதிபரின் வற் புறுத்தலின் பேரில் 25.1.2017 அன்று தமிழக நலனுக்கு உரிய இந்த சீர்காழி சுரங்கம் மூடும் திட்டத்திற்கு போர்டு எனும் நிருவாகத்தின் ஒப்புதல் பெற்று விட்டனர். இது வெளியில் தெரியாமல் இரகசியமாகக் காதும் காதும் வைத்தது போல செய்து முடித்து விட்டனர்.

ஜெயலலிதா அரசின் ஆணைப்படி நிலம் கையகப்படுத்தல், சீர்காழியில் துறைமுகம் அமைக்கத் திட்டம் ஆகிய தமிழக அரசுப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இது தெரியாமல், இந்தச் சதி புரியாமல் எம்.ஜி.ஆர். திரைப்படத்தில் திருமணம் நின்று போனது தெரியாமல், திருமணம் நின்று போன சதி தெரியாமல் அப்படத்தின் கதாநாயகி திருமண அழைப்புக் கொடுத்துக் கொண்டிருப்பார். அப்போது சீர்காழியின் பாட்டு பின்னணியில் எதிரொலிக்கும், “அறுந்து போன உறவறியாமல் அழைப்புக் கொடுக்கும் பெண் இங்கே” என்று.

தமிழனை இளிச்சவாயனாக எண்ணி என்.எல்.சி. தலைமை அதன் அதிபர் திட்டமிட்டே சதிவேலை செய்து இருக்கிறார். இங்கேதான் ஆட்சி என்று ஒன்று இல்லாமல் காட்சிதானே நடைபெற்றது. எனவே ஜூலை 2017இல் என்.எல்.சி. தமிழக அரசுக்கு நிலமெல் லாம் ஒன்றும் ஆர்ஜிதம் செய்ய வேண்டாம் என்று தாக்கீது அனுப்பியது.

ஒரிசாவில் இடத்தை மாற்ற இடம் தேர்ந்தெடுக்கப் பட்டபோது அந்த அரசாங்கம் உற்பத்தியாகும் மின்சாரம் மொத்தமும் வேண்டாம், 14 விழுக்காடு மின்சாரம் போதும் என்று கூறிவிட்டது தனிக்கதை.

இங்கே மின்சாரத் தட்டுப்பாடு, அதிக விலை கொடுத்து அண்டை மாநிலங்களில் தமிழக அரசு மின்சாரம் கொள்முதல் செய்கிறது. 4000 மெகாவாட் சுளையாகக் கிடைக்க வேண்டிய திட்டத்தைச் சதி செய்து மூடுகிறார்கள் என்றால் எவ்வளவு துணிச்சல் இருக்க வேண்டும்.

உங்களுக்கு ஓர் அய்யம் ஏற்படலாம். தமிழகத்தி லிருந்து இந்தத் திட்டத்தைக் கடத்திச் செல்கிறார்கள் என்றால், இன்னும் சொல்லப் போனால் திருடிச் செல்கிறார்கள் என்றால் அதற்கு என்ன காரணம்? என்ற அய்யம் ஏற்படலாம்.

இப்போதும் அண்ணாதான் நினைவுக்கு வருகிறார், எப்படி? “தம்பி சுண்ணாம்பில் இருக்கிறது சூட்சமம்!” என்றாரே அது தான்.

என்.எல்.சி. நிறுவனத்தின் அதிபர், தலைவர், சேர்மன் சரத்குமார் ஆச்சார்யா. இவர் ஒரிசா மாநிலத்தவர். இதற்குமேல் எதுவும் சொல்ல வேண்டியதில்லை.

சீர்காழி அனல் மின் திட்டத்தினால் மின்சாரப்பயன் மட்டும்தான் கிடைக்கிறதா? என்றால் அதற்கும்மேலே பெரும் பயன்கள் பொங்கிச் சிரிக்கும் தஞ்சை மண்ணுக்குக் கிடைக்க இருக்கிறது.

சீர்காழிக்குப் பக்கத்தில் உள்ள சிற்றூர்களான வேட்டகுடி, ராதா நல்லூர் ஆகியவைகளில் ஏற்படும் துணைத்தொழிற்சாலைகளால் வேளாண்மை பொய்த்து வாடும் தஞ்சை மக்களுக்கு வேலை வாய்ப்பும், பொரு ளாதார வளர்ச்சியும் அப்பகுதிகளுக்கு ஏற்படும்.

அது மட்டுமா? சீர்காழிப் பகுதியில் புதியதுறைமுகம் உருவாக வாய்ப்பு, இன்னும் பல பொருளாதார வளர்ச்சி அத்தனையும்கிடைக்கும். அதைக்கோட்டை விட்டுவிட்டுச் சும்மா இருக்கப்போகிறோமா?

இங்கேதான் நடக்கிற கூத்தைப் பார்க்கிறோமே. மூன்று அணி, இருவர் பிரிவு சேர்ப்பு, மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் புதுவை, கருநாடகம், கூர்க் என்று ஒளிந்து வாழ்ந்தது, எதிர்க்கட்சியினர் குட்காவைக் காண்பித்தார்கள் என்று நடவடிக்கை, நீட் தேர்வு அருமைச் செல்வி அனிதாவைப் பலி கொண்ட அவலம், நவோதயா தொடங்கத் துடிப்பு, அதற்கு எதிர்ப்பு. எனவே மெல்லச் சீர்காழித் திட்டம் ஒடிசாவிற்கு என்று செய்தியைக் கசிய விட்டார்கள்.

மற்ற அரசியல் இயக்கங்களெல்லாம் ஏதோ ஒரு மாயவலையில் சிக்கிய வேளையில் சமூக நலனில் மட்டுமல்லாது, தமிழகத்தின் பொருளாதார நலனில் உண்மையான அக்கறை கொண்ட தமிழர் தலைவர், தமிழகத்தில் உள்ள எந்த அரசியல் இயக்கங்களும் - இத்தனை கட்சிகள் இருக்கின்றனவே அவற்றில் ஒன்று கூட விழித்துக் கொள்ளாத நிலையில் 14.9.2017இல் சீர்காழியில் அமையவுள்ள அனல் மின்நிலையத்தை ஒடிசாவுக்கு மாற்றுவதா? செப். 18ஆம் தேதி நெய்வேலியில் திராவிடர் கழகத்தின் கண்டன ஆர்ப்பாட்டம்! ஒத்த கருத்துள்ளவர் பங்கேற்கலாம்! என்று அறிவிப்புச் செய்ததுடன்,

“14,482 கோடி ரூபாய் மதிப்பிலான பெருந்திட்டம் இது. சீர்காழியில் இத்திட்டத்தை நிறுவுவதற்காக துவக்க ஆய்வாக இதற்கு 50 கோடி ரூபாய் செலவு நிதியும் ஒதுக்கப்பட்டுச் செலவழிக்கப்பட்டுள்ளது. இதில் உற்பத்தியாகும் மின்சாரத்தைத் தமிழக அரசுக்கு விற்பது என தமிழ்நாடு மின் பகிர்வு கழகத்திற்கு (ஜிணீஸீரீமீபீ நீஷீ) ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், நெய்வேலி நிறுவனத்தின் இயக்குநர்கள் கூட்டத்தில், இத்திட்டத்தை ஒடிசாவிற்கு மாற்றுவது என்று முடிவு செய்துள்ளார்கள். மறுபடியும் தமிழ்நாட்டிற்கு பெருந்திட்ட இழப்பு - அதனால் ஏற்படும் வேலை வாய்ப்பு இழப்பு - மற்றைய பொருளாதார வளர்ச்சி இழப்பு - வர்ணிக்க இயலாதவை” என அறிவித்தார்.

20.9.2017 அன்று நிலக்கரி நிறுவனத்தலைவர் இப்போது “நிலக்கரியை இறக்குமதி செய்து இந்த அனல் மின்சார நிலையம் இயங்க வேண்டியுள்ளது. நிலக்கரி சீர்காழிக்கு வந்தால், செலவு அதிகம் - ஒடிசாவில் உள்ள தலாபிரா என்ற ஊரில் அமைந்தால் செலவு குறைவு” என்று காரணம் காட்டி நீட்டி முழங்கி யிருக்கிறார்.

இந்தக்கருத்து சீர்காழியைத் தேர்வு செய்வதற்கு முன்னால் தெரியாதா?

2013லிருந்து 2016 வரை ஆய்வு செய்த திட்டம். 2016 அக்டோபரில் ஜெயலலிதா இருக்கையில் அதற்கு என நில ஆர்ஜிதம், அதற்கு ஆட்களுக்கான செலவுத் தொகை ஒதுக்கும் வரையில் தெரியாதா?

தமிழ்நாட்டில் அதிமுக கோஷ்டிச் சண்டை, பதவிச் சண்டை ஆகியவைகளில் லோல்பட்டுக் கொண் டிருக்கும்போது தான் தெரிந்ததா?

தமிழ்நாட்டு நாடாளுமன்ற 50 பிடித்து வைத்த பிண்டங்கள் இன்று வரை இதுகுறித்து குரல் எழுப்ப வில்லையே ஏன்? இவர்கள் யாருக்கும் இல்லாத அக்கறை அரசியல் இயக்கங்களுக்கு இல்லாத அக் கறை, சமூகநீதி காக்கும், சமூக சீர்த்திருத்த இயக்கத் தலைவருக்குத்தான் ஏற்பட்டது.

இதைத்தடுக்க நெய்வேயில் செப்டம்பர் 18ஆம் தேதி காலை 10 மணியளவில் திராவிடர் கழகத்தின் செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, கழகப்பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன் ஆகியோர் தலைமை யிலும், நெய்வேலி வே.ஜெயராமன் முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற ஆணையிட்டவாறே நடந் தேறியது.

ஒத்தக் கருத்துள்ளவர்களும் கலந்து கொள்ளலாம் - சீர்காழியில் இத்திட்டம் அமைந்திடப் போராடுவோம் என்று அறிவித்தும் மற்ற அரசியல் இயக்கங்கள் ஆர்வமுடன் பங்கேற்கவில்லையே ஏன்?

திராவிடர் கழகத்திற்கு மட்டும் தான் அக்கறையா? தமிழக அரசியல் இயக்கங்கள் விழித்தெழ வேண்டும்.

ஒத்த கருத்துள்ளவர்கள் எவரும் கலந்து கொள் ளலாம் என்று அறிவித்தபின்னும் ஓர் இயக்கம் ஏதேனும் திராவிடர் கழகத்துடன் பங்கு பெற்றதா இல்லையே? பங்கு பெறாவிட்டாலும் என்.எல்.சி. நிருவாகத்தின் சதித்திட்டத்தைக் கண்டிக்கவாவது செய்ய வேண்டாமா? செய்யவில்லையே!

ஆனால் 20.9.2017 அன்று என்.எல்.சி. நிருவாகம் மட்டும் இவ்வளவு சதி வலைகளையும் பின்னிவிட்டு, திராவிடர் கழகம் போராட்டம் நடத்தியபின் பசப்பு வார்த்தைகளில் பூசி மெழுகி “என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் தாய்வீடு தமிழகம்தான்” நிருவாகம் விளக்கம் என அறிக்கை வெளியிடுகிறது.

“நாட்டில் நிலவிய சூழ்நிலை அத்திட்டத்தை அப்போதைய நிலையில் வெற்றிகரமாக இயக்க வாய்ப்புகள் இருந்தன. ஆனால் தற்போது மின்சக்தி யின் விற்பனை விலையை விட உற்பத்தி செலவு அதிகமாக இருக்கும் எனத் தெரியவந்துள்ளது. எனவே இத்திட்டம் சாத்தியமில்லை என முடிவாகியுள்ளது!! (“தமிழ் இந்து” பக்கம்: 7, 20.9.2017)

2013இல் தொடங்கி 2017இல் உற்பத்திச் செலவு அதிகம் ஆகிறது என்று பொய்க்காரணம், ஏமாற்றுக் காரணம் இன்று சொல்லும் இந்நிறுவனத்தை எதைக் கொண்டு அடிப்பது, ஏனென்றால் 2016இல் ஒடிசாவில் இடம் பார்த்த துரோக ஏமாற்றுவேலை, அன்றே திட்டத்தை நிறுத்த ஆணையிட்டதை ஒரு வருடம் கழித்து பூனைக்குட்டி வெளியே வருகிறது. இப்படித் தமிழகத்தை வஞ்சிக்கும் என்.எல்.சி. தலைமை, அதனுடைய போர்டும் ஓடஓட விரட்டப்படுமாறு போராட்டம் தீவிரமாக வேண்டும். இதைத் திராவிடர் கழகம், தமிழர் தலைவர் மட்டுமே செய்ய முடியும்.

அத்துடன் மோசடி, திருட்டுத்தனத்தை மறைக்க, “இதற்கு ஈடுசெய்யும் வகையில் தமிழகத்தில் கூடுதல் மின்நிலையங்களை அமைக்கத் திட்டங்கள் தீட் டப்பட்டு சுமார் 5300 மெகா வாட் திறன்கொண்ட மின்நிலை யங்களை அமைக்க பூர்வாங்கப் பணி நடைபெறுகிறது” என்று பசப்பு வார்த்தை கூறிப் பல்லிளிக்கிறது.

2013இல் 56 கோடியில் திட்டமிட்ட சீர்காழி மின் திட்டத்தைக் குழித்தோண்டிப் புதைத்துவிட்டு அதவாவது 2013இல் பிறந்த குழந்தையை 2017இல் நான்கு வயதில் சாகடித்துவிட்டு, இந்தப் பிள்ளை, போனால் பரவாயில்லை, இதை விட அழகான பிள்ளை அறிவுள்ள பிள்ளை பெற்றுக் கொள்ளலாம் என்றால் எந்தத் தாயாவது ஒத்துக்கொள்வாளா?

செய்வதையும் செய்துவிட்டு “என்.எல்.சி. இந்திய நிறுவனத்தின் தாய் வீடு தமிழகம் தான்” என்று தாய் உதாரணம் காட்டுகிறது என்.எல்.சி. அறிக்கை. எனவே தான் நாமும் இவ்வுதாரணம் காட்டுகிறோம்.

சீர்காழி திட்டம் தமிழகத்தின் உயிர் பிரச்சினையாக, உயர் பிரச்சினையாக நீட்தேர்வுபோல், நவோதயா போல், காவிரிப்பிரச்சினை போல் கருதித் தமிழகக் கட்சிகள் போராட வேண்டும்.

அதிமுக அரசு இனியும் தூங்கி எழுந்து காவிரியில் குளிப்பதை மட்டும் செய்து சங்கராச்சாரியார் காலில் விழுவதை மட்டும் செய்யாமல் தமிழக நலனுக்கு முழுக்குப் போடாமல் முதுகெலும்புடன் நிமிர்ந்து நிற்க வேண்டும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner