எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நீட் பல வகைப்பட்ட குமுறல்களின் குவிமையமாகி இருக்கிறது. அனிதாவின் மன்னிக்கவியலா மரணம் உணர்ச்சிக் கொந்தளிப்பை சேர்த்திருக்கிறது. தாங்கள் ஏமாற்றப்படுகிறோம், வஞ்சிக்கப்படுகிறோம் என்ற உணர்வில் ஒரு புதிய தமிழின உணர்வு பிறந்திருக்கிறது. தமிழ் நாட்டின் சமீபகால வரலாற்றில் ஒரு தீர்க்கமான கட்டத்தில் நிற்கிறோம். ஆனால் பிரச்சனையின் பல ஆழமான பரிமாணங்களைப் புரிந்து கொண்டிருக்கிறோமா என்ற ஐயம் கிளம்புகிறது. நீட் மருத்துவக் கல்வி குறித்தது மட்டுமல்ல. தமிழ்நாட்டின், இந்தியாவின் கல்வி முழுவதுடன் தொடர்புடையது. இத்தனை காலம் மறைக்கப்பட்டிருந்த உண்மைகளை வெளிக் கொணர வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. நீட் அவசியம் எதிர்க்கப்பட வேண்டும். ஆனால், புதிய அநீதியான நீட் எதிர்ப்புடன், பழைய அநீதிகளையும் சேர்த்து எதிர்த்து, புதிய கல்வி உருவாக்க வேண்டும். முதல் கேள்வி.

ஒரு கூட்டாட்சி அமைப்பில் கல்வி பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டு, அதிகாரங்கள் அனைத்தையும் மத்திய அரசு அபகரித்துக் கொள்ள அனுமதிக்கலாமா? இந்தியா பல தேசிய இனங்களின் கூட்டமைப்பு என்பதே மறந்து போய், மத்திய அரசின் அதிகார ஆக்கிரமிப்புகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டன. நீட்டின் முன் புலத்தில் கல்வி மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டுமென்ற குரல் எழுந்திருப்பது வரவேற்கத்தக்கது. அத்துடன் நின்று விடாமல், திராவிட இயக்கத் தொடக்கக் கால முழக்கமான மாநில சுயாட்சிஎன்பதை மீட்டெடுத்து, அரசியல் சாசனத் திருத்தங்களை மேற்கொண்டு, இந்தியா ஒரு அதிகாரப் பரவல் கொண்டஉண்மையான ஜனநாயகக் கூட்டாட்சியாக மாற்றப்பட வேண்டும். மாநில சுயாட்சி தமிழ் மண்ணுக்கு ஏற்கெனவே அண்ணா அளித்த தாரக மந்திரம் என்பதால், அதற்கான முன் முயற்சியை தமிழ் நாட்டில் இன்று போராடும் சக்திகள் அனைத்தும் ஏற்று, மற்ற மாநிலங்களை இக் கோரிக்கைக்காக ஒன்றிணைக்க முயல வேண்டும்.

அடுத்து, நாடு முழுவதற்கும் ஒரே தேர்வு, அந்த ஒற்றைத் தேர்வையே ஒரே அளவு கோலாகக் கொண்டு மாணவர் சேர்க்கை நடக்கலாமா? இன்றைய மத்திய அரசின் ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரேகொள்கை என்பதன் ஒரு பரிமாணமாகவே இதைக் காணலாம். பல நாடுகளில் விண்ணப்பதாரர்களின் தரம் காண சில தேர்வுகளை,   Standardised Tests
நடத்துவதுண்டு(எடுத்துக்காட்டு அமெரிக்காவின் GRE).
ஆனால்,அதனுடன், பள்ளி / கல்லூரிகளில் பெற்ற மதிப்பெண்கள், மாணவரின் வகுப்பறைக்கு அப்பாலான, விளையாட்டு, கலை போன்ற திறமைகள், குறிப்பிட்ட பாடத்துறைக்கான தகுதி (aptitude), சில சமயங்களில்நேர்காணல் இவை அனைத்தையும் கணக்கிலெடுத்துத்தான் மாணவர் சேர்க்கை நடக்கிறது. இங்கோ, வேலூர் மருத்துவக் கல்லூரியில், நீட் மதிப்பெண்ணுடன், அவர்களது விரிவான தேர்வும் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. அப்படி என்றால், மருத்துவத் திறன் என்பது, மனிதன், சமூகம், சூழல் எதன் காற்றும் படாத அரூவ அறிவியலா? அதையும் ஒரு அமெரிக்க நிறுவனம் தயாரிக்கும் தேர்வு கணிக்க முடியுமா?

அடுத்து, தமிழக மாணவர்களிடமிருந்து மருத்துவக் கல்வி பறிபோவதை அனுமதிக்க இயலாது. நீட் தமிழக மாணவர்களுக்குப் பெரும் அநீதி இழைத்திருக்கிறது. இந்தியாவிலேயே தமிழ் நாட்டில்தான் அதிக மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. பல்லாண்டுகளாக, தமிழக அரசு மருத்துவக் கல்விக்குப் பெரும் நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது. அத்துடன் தனியார் மருத்துவக் கல்லூரிகளும் நிறைய நிறுவப்பட்டிருக்கின்றன. இவற்றிலெல்லாம் இடம் பெற்று வந்த தமிழக மாணவர்கள் இன்று தேசிய, சர்வ தேசிய அளவிலான போட்டியை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. நீட்டில் போட்டியிடும் உரிமை வெளிநாட்டினவருக்கும், வெளிநாடு வாழும் இந்தியருக்கும், இந்திய வம்சாவளியினருக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. மற்ற மாநில மாணவரும் தமிழகக் கல்லூரிகளில் இடம் பிடித்துள்ளனர். ஆகவே தமிழக மாணவருக்கு நீட் பெரும் அநீதி விளைவித்திருக்கிறது என்பது உண்மையே. இந்த இழப்பு ஈடு செய்யப்பட வேண்டும். தமிழ் நாட்டிற்கு அப்பால் இருந்து இங்கு பயிலும் மாணவர் தமிழ் நாட்டில் பணி புரியப் போவதில்லை.

ஏற்கெனவே, கிராமப்புறங்கள் போதிய மருத்துவரில்லாத நிலையில் வாடும் பொழுது, நிலைமை இன்னும் மோசமாகப் போகிறது. அடுத்த கேள்வி, எந்த தமிழக மாணவருக்கு அநீதிஇழைக்கப்பட்டிருக்கிறது? நீட்டுக்கு முன்னால், நீட்டுக்குப்பின்னால்பயனடைந்தவர்கள் யார்? இழந்தவர்கள் யார்? நீட் தமிழ் நாட்டின் அரசுப் பள்ளி, கிராமப்புற, தமிழ்வழி கற்கும், அடித்தட்டு மாணவருக்குப் பெரும் அநீதிஎன்று, இதுகாறும் இப்பிரிவுகளைச் சேர்ந்த மாணவர் மருத்துவக் கல்வி வாய்ப்புப் பெற்றனரா என்று சிறிதளவும் கவலைப் பட்டிராதவர்கள் திடீரென்று இன்று அங்கலாய்க்கிறார்கள். சில புள்ளி விவரங்கள் அதிர்ச்சிஅளிக்கின்றன. 2009 - 2013 ஆன ஐந்து ஆண்டுகளுக்கும் சேர்த்து, தமிழ் நாட்டின் அரசு பள்ளி மாணவர் 177பேர்தான் மருத்துவக் கல்வியில் சேர்ந்தனர். இந்த எண்ணிக்கை 2014 இல் 32; 2015 இல் 35; 2016 இல் 35.அதாவது, மொத்தம் உள்ள சுமார் 3500 மருத்துவ இடங்களில் வெறும் 1சதவீதமே அரசுப் பள்ளி, தமிழ் வழிகற்கும் அடித்தட்டு மாணவர்கள்.

இந்த எண்ணிக்கை 2017 இல் நீட்டிற்குப் பின் 5 ஆகத் தேய்ந்திருக்கிறது. அப்படி என்றால், இது வரை தனியார் பள்ளிகளில் படித்து, கோச்சிங் சென்டர்களிலும்,  கோழிப்பண்ணைப் பள்ளிகள் என்று பெயரிடப்பட்டிருக்கும் கல்விக் கொள்ளை நடத்தும் பள்ளிகளிலும் அதிக செலவழித்து, தனிப் பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே மருத்துவக் கல்வி பெற்றனர். அனிதா போன்றவர்கள் விதி விலக்குகளாக வாய்ப்புப் பெற்றிருக்கலாம். இத்தகைய கல்விக்குப் பெயர் பெற்ற மாவட்டங்கள் நீட்டில் பெரும் சரிவைக் கண்டிருக்கின்றன. நீட்டுக்கு முன் வரை தமிழ் நாட்டின் நான்கு மாவட்டங்கள்தான்  நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு - மருத்துவ, எஞ்சினீயரிங் கல்லூரிகளுக்குப் பெரும் எண்ணிக்கையில் மாணவரை அனுப்பிக் கொண்டிருந்தன. இவ்வாண்டு நீட் தேர்வில் இம் மாவட்டங்கள் பெரும் சரிவை சந்தித்திருக்கின்றன.

இதை எப்படிப் பார்ப்பது? இப் பெரு நகர கோச்சிங் சென்டர்கள் நீட் வந்து விடும் என்று தெரிந்து அதற்கான பயிற்சி கொடுத்திருக்கலாம். எப்படி இருந்தாலும், நீட்டுக்கு முன்னும் அரசுப் பள்ளி, கிராமப்புற, தமிழ் வழி கற்கும், ஏழை மாணவருக்குப் பெரும் அநீதிதான் இழைக்கப்பட்டிருந்திருக்கிறது. ஒரு வேளை நீட் ஒழிக்கப்பட்டால், அதன் பலன் கிடைக்கப் போவது இந்தப் பெரும்பாலானவருக்கு அல்ல.

கோச்சிங் சென்டர், அதை ஒத்து கற்பிக்கும் பள்ளிகளில் ஏராளமான பணம் செலவழித்துப் படிப்போருக்குத்தான். ஆகவே, மிகப் பெரும்பாலான மாணவருக்கு வாய்ப்பும்,நீதியும் கிடைக்க வேண்டுமென்றால், நீட் ஒழிந்தால் மட்டும் போதாது. கோச்சிங் சென்டர்களும்,  கோழிப்பண்ணைப் பள்ளிகளும் ஒழித்துக் கட்டப்பட வேண்டும்.இந்த உண்மை போராடும் மாணவர் முன் வைக்கப்பட வேண்டும். இன்று போராடும் மாணவர் அநேகமாக அரசு கல்லூரி, பள்ளியினர். அவர்களது போராட்டத்தின் பலனை வசதிபெற்ற மாணவர், அவர்கள் தமிழராக இருந்தாலும், தட்டிக் கொண்டு போக விடக்கூடாது.அடுத்து, தமிழ் நாட்டுப் பாடத் திட்டத்தில் (State Board) படிக்கும் மாணவர்களுக்கு மனனம் செய்து கொட்டுவதே கல்வி என்ற நிலை ஏற்பட்டு விட்டது. புரிந்து,உள்வாங்கி, வாழ்வுடன், சூழலுடன் பொருத்தித் திறன் பெறுவது என்ற கல்வியின் ஆதாரப் பணி இங்கு மறைந்தேவிட்டது என்ற குற்றச்சாட்டு, நீட் களத்தில் நிறைய எழுந்திருக்கிறது.

மற்ற பாடத் திட்டங்கள் இத் திறமைகளைப் பயில்விக்கின்றனவா என்ற கேள்விக்குள் நான் புகவில்லை. தமிழகப் பள்ளிகளில் தேர்வுக்குத் தயாரிப்பது என்பது மனனம் செய்து கொட்ட வைப்பதுதான் என்பதைமறுக்கவியலாது. இதனை முன்னின்று எடுத்துச் செல்லும் ஸிஷீறீறீ விஷீபீமீறீs வழிகாட்டிகள் கோச்சிங் சென்டர் போன்ற பள்ளிகள்தான். ஏகப்பட்ட கட்டணம் வசூலிக்கும் இப் பள்ளிகள் தங்கள் மாணவரை எவ்வாறு வெற்றி பெறச் செய்கின்றன? செல்வந்தர் பிள்ளைகள் படிக்கும் இப்பள்ளிகள் தங்கள் செல்வாக்கினால் தேர்வு முறையையே நிர்ணயிக்கின்றன. சி.பி.எஸ்.இ. யுடன் ஒப்பிடும் போது, தமிழ்நாடு மிகவும்வேறுபடுவது பாடத்திட்டத்தில் அல்ல; தேர்வு முறையில்தான்.

முதலில் தேர்வுக்குப் படிக்க வேண்டிய பாடங்களை எவ்வளவு குறைக்க முடியுமோ, அதை செய்தல். ஒன்பதாம் வகுப்புப் பாடங்களையும், பதினொன்றாம் வகுப்புப் பாடங்களையும் தொடவே வேண்டாம். இரண்டு ஆண்டுகள் பத்தாம் வகுப்புப் பாடங்களையும், இரண்டு ஆண்டுகள் பனிரெண்டாம் வகுப்புப் பாடங்களையும் கற்றால் போதும். அப்போது பாடத்திற்கு அஸ்திவாரமே இருக்காதே! அஸ்திவாரம் எல்லாம் எதற்கு? தேர்வு வரை கட்டிடம் நின்றால் போதுமே. அதற்குப் பின் அது நின்றால் என்ன, சாய்ந்தால் என்ன? கற்றல் என்று இதைச் சொல்வதே தவறு. மாணவரை மனப்பாடம் செய்து கொட்டும் மனனப் புலிகளாக, கிளிப் பிள்ளைகளாக மாற்றுவதுதான் நோக்கம். இதில் தேர்வுக்கான மாதிரி வினாத் தாள்கள் (Blue Print 
என்று அதற்குப் பெயராம்.) ஒரு பாடத்திற்கு மூன்று கொடுக்கப்படுகிறதாம்.

அதில் இருக்கும் கேள்விகள் தவிர வேறு ஒன்றும் இறுதித் தேர்வில் கேட்காமல் பார்த்துக்கொள்ளும் செல்வாக்கு, கல்வி வியாபாரத்தில் கை தேர்ந்த இவர்களிடம் இல்லையா என்ன? இன்று தமிழ் நாட்டு மாணவர் பெறும் மதிப்பெண்கள், 100/100, 99/100 போன்றவை, கிள்ளிப்பிள்ளை மனனத்தில்தான் இயலும். புரிந்து, தெளிந்து, அறிந்து, புதிர் தீர்க்கும் (Problem Solving) திறன்களை எல்லாம் கற்றுத்தந்து, இப்போது போல் மதிப்பெண்கள் அள்ளிச் செல்லும்வித்தகர்களாக உருவாக்க முடியாது. அப்படி என்றால்,கோச்சிங் சென்டர் போன்ற பள்ளிகள் தங்கள் தனிப் பெரும்சாதனைகளை விளம்பரம் செய்து, கட்டணக் கொள்ளைஅடிக்க முடியாது. ஆகவே, நீட் அளித்த அதிர்ச்சி வைத்தியம்,நீட் ஒழிப்புடன் நின்றுவிடாமல், கல்வியின் மாண்பையே சிதைத்து சீரழித்ததை, அதன் பின் இருக்கும் தனியார் பள்ளிஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். அனைத்துக் குழந்தைகளுக்கும் சமமான தரமுடைய கல்வியை இலவசமாகத் தரும் ஜனநாயகக் கல்விக் கொள்கை என்றேனும் உருவாக வேண்டும்.

நன்றி: 'தீக்கதிர்' (3.10.2017)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner