எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

- குடந்தை கருணா -

கிரிமிலேயர் எனும் அரசியல் சட்ட விரோத விதியைப் பயன்படுத்தி, வங்கிகள் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங் களில் பணியாற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீட்டை ஒழித்திடும் கிரிமிலேயர் சட்டத்தை, மோடி அரசு வெளியிட்டுள்ளது.

மத்திய அரசு பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கிடும் ஆணையை மத்திய அரசு 8.9.1993 முதல் நடைமுறைப்படுத்தியது. இதில் பிற்படுத்தப்பட்டோரில் முன்னேறிய பிரிவினரை நீக்க வேண்டும் என்ற உச்சநீதி மன்ற ஆணையின்படி, ஒரு குழு நியமிக்கப்பட்டு, அதன் பரிந்துரைப்படி, மத்திய அரசில் குரூப் ஏ, குரூப் பி பதவிகளில் பணியாற்றுவோரை, கிரிமிலேயர் என அறிவித்தது மத்திய அரசு. குரூப் சி மற்றும் குரூப் டி பிரிவு பணியாளர்களைப் பொறுத்தவரை, ஆண்டு வருமானம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்றும், அத்தகைய ஆண்டு வருமானத்தில், மாதச் சம்ப

ளத்தையும், விவசாய வருமானத்தையும் கணக்கில் எடுத்திட தேவையில்லை என்றும் அரசு அறிவித்தது.

பொதுத்துறை நிறுவனங்களைப் பொறுத்தவரை, மத்திய அரசுக்கு இணையான குரூப் ஏ, பி பதவிகள் எவை என நிர்ணயிக்கும்வரை, அதில் பணியாற்றும் பிற்படுத் தப்பட்டோரின் ஆண்டு வருமானத்தை, அதில் மாதச் சம்பளம் தவிர்த்து, கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அரசாணை தெரிவித்தது.

இதன்படி, மத்திய அரசில் குரூப் சி, டி, பதவிகளிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும், பிற்படுத்தப்பட்டோரில் முன்னேறிய பிரிவினர் என்பதைக் கண்டறிய ஆண்டு வருமானம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு, அது ரூ.ஆறு லட்சத்திற்கு குறைவாக இருந்தால், அவர்களுக்கு, பிற்படுத்தப்பட்டோருக்கான சான்றிதழ் வழங்கப்பட்டு வந்தது. இந்த வருமானத்தில், மாதச் சம்பளம் மற்றும் விவசாய வருமானம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அரசமைப்புச் சட்டத்தில் இடஒதுக்கீடு குறித்த எந்தப் பிரிவிலும் கிரிமிலேயர் எனும் பொருளாதார அளவு கோல் இல்லை என்ற நிலையில், இது நீக்கப்பட வேண்டும் என திராவிடர் கழகம் உள்ளிட்ட சமூக அமைப்புகளும், அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு உள்ளிட்ட நலச் சங்கங்களும், திமுக, வலது கம்யூனிஸ்ட், ஜனதா தளம், பாமக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்திய நிலையிலும், மாதச் சம்பளம் ஆண்டு வருமானத்தில் எடுத்துக் கொள்ளாததால், பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் பிற்படுத்தப்பட்டோரின் பிள்ளைகளுக்கு சான்றிதழ் பெறவும், கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு பெறவும் ஒரு வாய்ப்பு கிட்டியது. இத்தகைய சூழ்நிலையிலும், தற்போது மத்திய அரசின் குரூப் ஏ பதவிகளில், பிற்படுத்தப்பட்டோர் வெறும் பத்து விழுக்காடுதான் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கடந்த இரு ஆண்டுகளாக, மத்திய அரசின் பணி யாளர் ஆணையம் நடத்தும் குடிமைப்பணி தேர்வில் வெற்றி பெற்ற பிற்படுத்தப்பட்டோருக்கு, பிரதமரின் கட்டுப்பாட்டில் இயங்கும் பணியாளர் நலத்துறை, பணி ஒதுக்கீடு அளிக்கவில்லை. இதற்கான காரணம், தேர்வு பெற்ற பிற்படுத்தப்பட்டோரின் பெற்றோர், பொதுத்துறை நிறுவனங்களில்பணியாற்றுகிறார்கள்;அவர்களது ஆண்டு வருமானம் ரூ.ஆறு லட்சத்திற்கு மேல் உள்ளது என்று, அவர்களது மாதச் சம்பளத்தை வருமானமாக கணக்கிட்டு, அவர்கள் முன்னேறிய வகுப்பினர்; ஆகவே, பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் அவர்களுக்கு பணி வழங்க முடியாது என பணியாளர் நலத்துறையின் அதிகாரிகள் தன்னிச்சையாக கருத்து தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட மாணவர்கள் சென்னை நிர்வாக தீர்ப்பாயத்திலும், சிலர் உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த சென்னை நிர்வாக தீர்ப்பாயம், மத்திய பணியாளர் நலத்துறையின் செயல்பாடு சட்டவிரோதமானது என 12.1.2017 அன்று தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து, பணியாளர் நலத்துறை, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், ஜி.ஜெயச்சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு, சென்னை நிர்வாக தீர்ப்பாயத்தின் தீர்ப்பை உறுதி செய்து 31.8.2017 அன்று தீர்ப்பளித்தது. பணியாளர் நலத்துறையின் சட்ட விரோத முடிவைக் கண்டித்தும், பாதிக்கப்பட்டோருக்கு உடன் பதவி வழங்கிடவும் தீர்ப்பில் கூறப்பட்டது.

தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டிய மத்திய அரசின் பணியாளர் நலத்துறை, தங்களது 8.9.1993 ஆணையில் திருத்தம் செய்து புதிய ஆணையை தற்போது 6.10.2017 அன்று வெளியிட்டுள்ளது. இந்த திருத்தத்தின்படி, பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் பிற்படுத்தப்பட்டோர், அவர் கள் நிர்வாகிகளாக பணியாற்றினாலும், அதற்குக் கீழ் உள்ள பணிகளில் இருந்தாலும், ஆண்டு வருமானம் ரூ. ஆறு லட்சம் (தற்போது ரூ.எட்டு லட்சம்) மேல் இருப்பின், அவர்கள் முன்னேறிய பிரிவினர் (கிரிமிலேயர்) எனக் கருதப்படுவார்கள்; அதேபோன்று, அரசு வங்கிகள் மற்றும் காப்பீட்டுக்கழகத்தில் பணியாற்றும் பிற்படுத்தப்பட்டோர், அதிகாரிகளாக பணியில் தேர்வானாலே, அவர்கள் கிரிமிலே யராகக் கருதப்படுவார்கள்; அதிகாரிகள் பதவிக்குக் கீழ் உள்ள எழுத்தர், பியூன் பதவிகளில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், ஆண்டு வருமானம் ரூ.ஆறு லட்சம் (தற்போது எட்டு லட்சம்) மேல் இருந்தால், அவர்கள் கிரிமிலேயராகக் கருதப் படுவார்கள்.

இந்த ஆணையை, சம்மந்தப்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் 31.3.2018-க்குள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆணை நடைமுறைப்படுத்தப்பட்டால், தற்போது மத்திய அரசின் கல்வித்துறையிலும், பணிகளிலும் சேரும் பிற்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கைக் கணிசமாகக் குறை யும். அந்த இடங்கள், பொதுப் பிரிவினர் என்ற போர்வையில், பார்ப்பனர்களுக்கு செல்லும் நிலை ஏற்படும்.

மத்திய அரசின் பதவிகளுக்கு இணையாக பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பதவிகள் குறித்து தேசிய பிற்படுத் தப்பட்டோர் ஆணையம் 26.10.2015 அன்று மத்திய அரசுக்கு அறிக்கைஅளித்துள்ளது.இந்தபரிந்துரையையும்,மத்திய அரசின் பணியாளர் நலத்துறை ஏற்கவில்லை. பிற்படுத்தப் பட்டோருக்கான நாடாளுமன்றக் குழுவின் கருத்தையும் ஏற்கவில்லை. மாறாக, பணியாளர் துறையில் உள்ள இட ஒதுக்கீட்டிற்கு எதிரான அதிகாரிகள் முடிவு செய்து ஆணையை வெளியிட்டுள்ளனர்.

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு, அரச மைப்புச் சட்ட அதிகாரம் அளிப்போம் என்று கூறி, மாநில அரசின் உரிமைகளைப் பறித்திட ஒரு சட்டத்தைக் கொண்டு வந்த பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, எந்தெந்த பிற்படுத்தப்பட்ட பிரிவினர் மத்திய அரசின் பணிகளில் கூடுதல் இடங்களைப் பெற்றுள்ளார்கள் என்று எந்த புள்ளி விவரத்தையும்,கணக்கெடுப்பையும்வெளியிடாமல்,பிற் படுத்தப்பட்டோரில் மிகப் பிற்படுத்தப்பட்டோரைக் கண் டறிய நீதிபதி ரோகிணி தலைமையில் ஓர் ஆணையத்தை அமைத்துள்ள மோடி அரசு, தற்போது உச்சக்கட்டமாக, பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் பிற்படுத் தப்பட்டோரை முன்னேறியப் பிரிவினர் பட்டியலில் சேர்த்து உள்ளது.

அரசமைப்புச் சட்டத்தில் சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்டோரைக் கண்டறிய வேண்டும் என்றுதான் சொல்லப்பட்டுள்ளது.

பொருளாதரப்பிரிவு சொல்லப்படவில்லை.

அரசமைப்புச் சட்டவிரோத கிரிமிலேயர் பிரிவை முற்றிலுமாக நீக்கினால்தான், பிற்படுத்தப்பட்டோர் மத்திய அரசின் உயர் பதவிகளில் வாய்ப்பு பெற முடியும் என்பதை உணர்ந்து, மத்திய அரசின் இந்த சமூக விரோத ஆணையை எதிர்த்து போராட பிற்படுத்தப்பட்டோர் முன்வர வேண்டும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner