எழுத்துரு அளவு Larger Font Smaller Font


அசுரா வா! நீ இல்லாத தமிழகம் 44 ஆண்டுகளாகச் சுரர்களுக்குத் துளிர் விட்டுப் போயிருக்கிறது. அதிலும் இப்போது மிக, மிக அதிகமாகக் குளிர்விட்டிருக்கிறது.

நீ இருந்த காலக்கட்டங்களை நினைத்து, நினைத்துப் பார்த்து இறும்பூதி எய்துகிறேன். உன் காலத்தில் நடைபெற்ற தேவாசுரப் போராட்டங்களை எண்ணி எண்ணிப் பார்க்கிறேன். ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல. ஆயினும் என் நினைவில் பொறியில் தட்டும் அந்த நிகழ்வுகள் சாதாரணமானவையா?

அப்பப்பா! அசுரன் உள்னை வீழ்த்த அணி வகுத்து நின்றவர்கள் போர்ப்படை களுடன் வந்தவர்கள் தாம், ஆம்! அந்தந்தத் தேவாதி தேவர்கள் தாம் எத்தனை, எத்தனை பேர். அதிலும் அவாளின் தலை மைக்குரு, குல்லுகபட்டர் ராஜாஜி எனும் ராஜகோபாலாச்சாரியார் என்ன சாதாரண மானவரா? ராஜதந்திரி, ராஜரிஷி என் றெல்லாம் வர்ணிக்கப்பட்டவர், கீழ்ப்பாக் கம் மகான் என்று ஒரு சிறு கூட்டத்தால் புகழப் பெற்றவர் அசுரன் உன்னிடம் தோற்று ஓடிய காலங்களை எண்ணிப்பார்க்கிறேன்.

எப்படி, எப்படியெல்லாம் அவரைப் புகழ்ந்தனர், புகழ்மாலை சூட்டினர். அவருக்கு உடம்பெல்லாம் மூளை என்று உடல் சிலிர்த்துப் புளகாங்கிதம் அடைந் தனரே அந்தச்சிறு கூட்டத்தவர். அப்போது பளிச்சென்று அசுரன் நீ உரைத்தாயே “உடம்பெல்லாம் மூளையா?, எது, எது எங்கெங்கே இருக்க வேண்டுமோ அங்கேதான் இருக்க வேண்டும். மூளை எங்கே இருக்க வேண்டுமோ அங்கே இருந்தால்தான் மரியாதை, பெருமை” என்று அசுரன் நீ உரைத்தபோது, ஆர்ப்பரித்து மகிழ்ந்தது பெரும்பான்மையாய் விளங்கிய அசுரர் கூட்டம்.

புராணத்தில் வேண்டுமானால், நரகாசுரன், நாகாசுரன், பாணாசுரன் என்று அசுரர் பலர் பெயர் கூறப்பட்டு இருக்கலாம். ஆனால் தொடர்ந்து 95 ஆண்டுகள் வரை போராடிய எங்கள் ஒரே அசுரன் நீதான்.

அசுரன் நீ இருந்தவரை பூசுரர்கள், புல்லர்கள், அடங்கிக்கிடந்தார்கள். உன் நிழலில் அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட பெரும்பான்மைக் கூட்டம் பெருமித வாழ்வு வாழ்ந்தது. மானமும், அறிவும் மனிதருக்கு வேண்டுமென்ற உன் உரை மனதில் கல்மேல் எழுத்துப்போல் பதிந்துவிட்டது. சுயமரியாதை என்றால் என்னவென்று அறிவுத்திறம் பெற்றது. சுயமரியாதை வாழ்வே சுகமான வாழ்வு என்று சூளுரைத்து வாழ்ந்தது.

உன் போர்க்களங்கள் ஒவ்வொன்றும் கண்முன்னே கனவுபோல் விரிகிறது.

அன்று சேரன்மாதேவியில் குருகுலப் போராட்டம் நீ தொடுத்த அசுரப்போரின் முதல் மாபெரும் போர். பள்ளிச்சிறுவர் களிடையே - பார்ப்பனச்சிறுவருக்குத் தனியே சமையற்கட்டில் உணவு, தனித் தண்ணீர்ப்பானை, தனித்தண்ணீர்க்குவளை என்பதெல்லாம் தகர்ந்தது அசுரன் உன் போராட்டத்தால்.

அந்நாளில் தான் நம்மவர்க்கு எத்தனை, எத்தனை அவமதிப்புகள். ‘நம்மில் சிலர் கல்வி கற்கக்கூடாது! சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கொடு - கல்வியை மட்டும் கொடுக்காதே’ என்ற விலங்கொடித்த அசுரன் அல்லவா நீ.

தனிக்கிணறு என்று தனியே கிணறு வெட்டித் தாழ்த்தப்பட்டவர் மட்டும் அதில் நீர் எடுத்துக்கொள்ளட்டும் என்று ஏற்பாடு செய்து உன்னையே - காரைக்குடி அருகே சிராவயல் எனும் ஊரில் திறந்து வைக்க அழைத்தபோது, தாழ்த்தப்பட்டவருக்கு மட்டும் எனத்தனிக் கிணறு எதற்கு? எல்லோரும் நீர் எடுக்கும் கிணறு பொதுக்கிணறு அல்லவா? என்று புத்தி புகட்டிய அசுரன் அல்லவா நீ? மனித உரிமைக்கு, அடிப்படை உரிமைக்குக் குரல் கொடுத்த அசுரன் உன் தலைமை தமிழ்மண் தாண்டிக் கேரள நாட்டிற்கும் தேவைப்பட்டபோது, உடல் நிலையையும்பொருட்படுத்தாமல் ஓடிச்சென்று கேரள மண்ணில் வைக்கத்தில் குரல் கொடுத்துப் போரிட்டுத் தன் மனையாளையும் ஆம் அன்னை நாகம்மையாரையும், தன் சகோதிரி கண்ணமாவையும் அப்போரில் ஈடுபடவைத்த அசுரன் அல்லவா நீ.

அருவிக்குத்தி சிறையில் அடைபட்ட உன்னைக் காலில் கையில் சங்கிலி கட்டை போட்டு கயவர் கூட்டம் துன்புறுத்திய போதும் கலங்காது “நாயும், கழுதையும், பன்றியும் நடக்கும் தெருவில், ஆறறிவுள்ள மனிதன் நடப்பதற்குத் தடையா? என உரிமைக்குரல் கொடுத்த அசுரன் அல்லவா நீ!. நீ அன்று சூத்திரர்கள் நடப்பதற்கு உரிமை கோரினாய். 93 ஆண்டுகளுக்குப் பின் இன்று யது கிருஷ்ணன் கருவரையி னுள் அர்ச்சனை செய்கிறான் எனில் அடியெ டுத்துக் கொடுத்தவன் அசுரன் அல்லவா?

அசுரன் உன் போராட்டங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். இன்று இளைய தலைமுறை பெற்றிருக்கும் கல்வி உரிமை, வேலை வாய்ப்பு உரிமைக்கெல் லாம் அசுரன் நீதான் காரணம் என்பதை எவரும் மறுக்கவோ, மறக்கவோ முடியுமா?

குல்லுகபட்டர் ராஜகோபாலரின் ஆட்சியில் நடப்பட்ட நச்சுப் பயிர் குலக்கல்வித் திட்டம் மட்டும்தொடர்ந்து இருந்தால் இன்று எண்ணிப்பார்க்கவே அச்சமாக இருக்கிறது.

மலம் அள்ளுவோன் என்று இழிவாக ஒதுக்கி வைத்த, சாக்கடை அள்ளுவோன் என்று சதி செய்து பிரித்து வைத்த வீட்டுப்பிள்ளைகள். குலக்கல்வி எனும் கோடரியால் சாய்க்கப்பட்டு இன்று அப்பன் தொழிலை அவனது பிள்ளை சொப்பனத்திலும் நினைப்பதில்லை என்ற நிலை உயர நீ பட்டப்பாடு கொஞ்சமா?

சாதி ஆதிக்கச் சதிக்கூட்டம், வகுப்புவாரி உரிமைக்கு உலை வைத்தபோது, சதியை உடைத்து அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரச்செய்த, முடி, அரசுரிமை, மந்திரி பதவி, நாடாளுமன்ற உறுப்பினர் பதவி என்று எந்தப் பதவியும் இல்லாத அசுரன் நீ சாதித்துக் கொடுத்ததை நன்றி யுள்ள சமூகம் அசுரன் உன்னை அனு தினமும் நினைத்துக் கொண்டிருக்கிறது.

நல்ல வேளையாக “நீ தந்த அறிவு ஒன்றே போதும்” என்று சொல்லும் அசுரன் - உன் வாரிசு இன்று எம்மைக் காக்கக் கடுமையாக உழைக்கிறது. நீ தந்த அறிவு மட்டும் கொண்டு - பார்ப்பனத் தலைமையின் கீழ் பார்ப்பன ஆட்சி டில்லியிலும் இங்கும் இருந்த வேளையில் 69 விழுக்காடு இடஒதுக்கீடு பெற உழைத்து வெற்றி கண்டது எனில் அசுரன் உன் கோட்பாடு, கொள்கை, தத்துவம் எதுவும் நீர்த்துப்போகாததாலேதான். நீ நட்டு வைத்து வளர்த்திட்ட சுயமரியாதை மரம் பட்டுப் போகாததினாலேதான் சமூகத் தீமைகளுக்கு எதிராகத் துணிந்து தன்னலமற்று வாள் ஏந்தி வீரப்போர் புரிந்த உன்போல் அசுரன் வேறு யாருமில்லை. உன் கட்டளை வேத வாக்கு என்பதெல்லாம் பொய் - அதை விட உயர்வானது. நீ அழைத்தால், சமூகத்தீமைக்கு எதிராகக் காராக்கிரகம் போக வேண்டும் என்றால் எத்தனை, எத்தனை பேர் நூற்றுக்கணக்கில் அல்ல. ஆயிரக்கணக்கில் வந்தனரே அது எப்படி?

ஏழைகள், அன்றாடங் காய்ச்சிகள் அவர்கள் நீ அழைக்கும் போர்க்களத்திற்கு வந்தால் குடும்பம் சீர்குலையும், நல வாழ்வு பறிபோகும் என்ற போதிலும் 10,000 பேர் 1957இல் சாதி ஒழிப்பில் தயங்காது வந்தது மட்டுமல்லாது, மீண்டும் மீண்டும் வருவோம் என்று துணிந்து சிறை வாழ்வை ஏற்றவர்களில் பலபேர் வசதி படைத்த சீமான்கள், சுகவாழ்வைத் துறந்து வந்தனரே எப்படி... எனவே தான் பெரியார் மேலும் மேலும் தேவைப்படுகிறார். அசுரர்கள் மறுபடியும் மண்ணில் உதித்து வரவேண்டும்.

இன்று காவிக்கயவர்களின் வஞ்சனை, தமிழ் மண்ணுக்கு துரோகம் இழைப்பது ஆகியவற்றைப் பார்த்து வேதனைத்தீயில் வெந்து சாகும்போது எங்கள் கண்கள் அசுரன் உள்னைத் தேடுகிறது. எங்கள் மனம் அசுரன் உன் எண்ணத்தில் ஆழ்கிறது. ஏனென்றால், இந்த மண்ணில் சாதனை புரிந்து, நலிந்தவர் கண்ணீர் துடைத்த அசுரன் நீ! நீயேதான். நீ ஒருவன்தான்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner