எழுத்துரு அளவு Larger Font Smaller Font

க.திருநாவுக்கரசு

சுரர்க்கு எதிரானவர்கள் அசுரர் எனப்படுகிறார்கள். சுரர்கள் - பூசுரர்கள் - அசுரர்கள் இப்படி ஒரு வகைப்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. சுரர்கள் என்பவர்கள் வானுலகில் இருப்பவர்கள்; தேவர்கள். பூசுரர்கள் என்பவர்கள் பூதேவர்கள்; பார்ப்பனர்கள். அசுரர்கள் என்பவர்கள் அரக்கர்கள்; இராட்சதர்கள். பொதுவாகவே இந்த மூன்று வகைப்பாடுகளும் வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள் ஆகியவற்றில் பேசப்படுகின்றன.

சுரர்கள் என்கிற வானுலக தேவர்கள் ‘சுரா’ எனும் மதுவைக் குடிப்பவர்கள். ஆகையினாலே அவர்கள் சுரர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். அசுரர்கள் மதுவைக் குடிக்கிற பழக்கமில்லாதவர்கள். ஆகவே அசுரர்கள் எனப்பட்டார்கள் என்று கூறுகிறார்கள். இந்து சமயச்சொல் அகராதி அசுரர் என்ற சொல்லுக்கு கீழ்க்காணும் பொருளைக் கூறுகிறது.

1) கள் அருந்தாதவர், 2) சுக்கிர சீடர், 3) பூர்வதேவர், 4) வானோர், 5) மேனி காப்போர், 6) கார்வள்ளார், 7) அவணர்,8) இராக்கதர், 9) தீயவர், 10) கொடியவர், 11) அரக்கர் என்று வழக்கில் இருந்தாலும் இருக்குவேதத்தில் மிகவும் பழமையான பகுதிகளில் அசுரர் எனும் சொல் மிகவும் உயர்ந்த ஆவி, கடவுள் தன்மையர் என்றே கூறப்பட்டுள்ளது,12) ருக்கு வேதத்தின் கடைசிப் புத்தகத்திலும் அதர்வண வேதத்தின் கடைசிப் பகுதியிலும் தேவர்களாகக் கருதப்பட்ட அசுரர்கள் தீய, கொடியவர்களாகக் காண்பிக்கப்படுகிறது. 13) ‘அசு’ என்ற சொல்லுக்கு மூச்சு என்று பொருள். அசுவிலிருந்து அசுரர்கள் பிரம்மாவால் படைக்கப்பட்டனர். காலப்போக்கில் ‘அ’ என்னும் எழுத்து நேர் எதிர் பொருள் கொள்வதாய் அமைந்ததால் ‘அ’‘சுரர்’ தேவர் அல்லாதவர் என்று பொருள்படத் தொடங்கியது. ஆனால் ‘சுரர்கள்’ வேதங்களில் அசுரர்களிலும் தாழ்ந்த தெய்வங்களாகவே கருதப்பட்டனர். பிறகு சுரர்கள் தேவர்களாகவும் அசுரர்கள் அரக்கர்களாகவும் எண்ணப்பட்டனர். ஆக, இந்து சமய அகராதி அசுரர் எனும் சொல்லுக்கு 12 பொருள்களைக் கூறியிருக்கிறது.

அபிதான சிந்தாமணி அசுரர் எனும் சொல்லுக்கு விரிவாகப் பொருள் கூறவில்லை. அசுரர் என்பவர் சுரராகிய தேவருக்கு விரோதிகள் என்று சுருக்கமாக, தெளிவாக கூறி இருக்கிறது. அதோடு அமிர்தபானம் ஒழித்தவர் என்றும் சொல்கிறது. குடிப்பழக்கம் இல்லாதவர் என்று கூறுகிறது. தஸ்யுக்கள் என்றால் எதிரிகளான - அரக்கர்கள். யாருக்கு எதிரிகள்? தேவர்களுக்கு! தஸ்யுக்கள் எனும் சொல் வேதங்களில் ஆளப்படுகிறது. அசுரன் எனும் சொல் ரிக்வேதத்தின் முற்பகுதியில் எங்கும் காணப்படவில்லை. பிற்பகுதியில் அச்சொல் ஆளப்படுகிறது.

ரிக் வேதத்திலே பல அசுரர்களின் பெயர்கள் காணப்படுகின்றன. சில இடங்களில் அசுரன் என்றால் ருத்திரனையும் மருந்துகளையும் குறிப்பதாகவும் பொருள் சொல்லப்படுகிறது. பித்துருக்கள் என்பவர்கள் அசுரர்கள் என்று சாயனர் என்னும் வேத உரையாசிரியர் கூறுகிறார். அசுரர்கள் தேவதைகளின் பகைவர்கள் என்றும் சொல்லப்படுகிறார்கள். அசுரர்களுக்கு இன்னும் எண்ணற்ற பொருள்களை - அர்த்தங்களைச் சொல்லி இருப்பார்கள். நாம் இங்கே எடுத்து வைத்தவைகளிலிருந்து அசுரர் என்பவர்கள் கடவுளின் எதிரி - விரோதி; வானுறையும் தேவர்களின் பகைவர்கள். வானுறையும் தேவர்களின் ஆதரவாளர்கள் பூசுரர்கள் - பூசுரர்கள் என்பவர் யார்? பூமியில் வாழும் பார்ப்பனர்கள். இவர்கள் நிலத்தேவர்கள். வானத்திலே இருக்கிறதேவரும் நிலத்தேவரும் இருக்கிற கடவுளர்கள் எல்லாம் ஒரு கட்சி - அதாவது அசுரர்களுக்கு எதிரான கட்சி! வேதங்களிலும், இதிகாசங்களிலும், புராணங்களிலும் வரும் இந்தச் வித்திரிப்புகள் எல்லாம் அதிகாரத்தில் இருப்பவர்களை எதிர்த்த போராட்டங்களாகவே இருக்கின்றன.

அசுரன், அரக்கன், இராக்தன், தீயவர், கொடியவர் என நாமம் இடப்பட்டிருந்தால் அவன் கடவுளுக்கு எதிரானவன். கடவுளின் எதிரி. ஆரியர்களின் பகைவன் என்று முத்திரை இட்டுக் கொள்ளலாம். ஆரிய வேதக்கற்பனை மிக அலாதியானது. அரக்கர்கள் எப்படி இருப்பார்கள் என்பதை ‘இரவின் அரக்கர்கள்’ - அதாவது அவர்கள் கருப்பாய் இருப்பதை அப்படி எழுதி வைத்திருக்கிறார்கள். கருப்பாய் இருப்பவர்கள் திராவிடர்கள் - தமிழர்கள். ஆரியர்கள் மஞ்சள் நிறத்தினர். அவர்கள் பஞ்ச சனங்கள் என்கிறார்கள். அய்ந்து வித ஆரியர்கள் இருந்தனர் என்று சொல்கிறது ரிக்வேதம்!

அசுரர்களை - அரக்கர்களை - திராவிடர்களை - தமிழர்களை ஒவ்வொரு இலாகா வாரியாகவும் ரிக் வேதம் படைத்துக்காட்டி இருக்கிறது. எல்லவற்றையும் இங்கே எடுத்துக்காட்ட முடியாது. சிலவற்றை மட்டும் கூறுகின்றோம்.

1) ஒலிர்வணவாபன் - வறட்சியை உண்டாக்கும் அரக்கன்.

2) நமூவி - மழை பொழிவதைத் தடுக்கும் அரக்கர்களில் ஒருவன்.

3) ஸ்வர்பானு - சூரிய, சந்திரர்களை மறைக்கும் அரக்கன்.

4) அற்புதா - மேகங்களின் அரக்கன்

5) சப்ததா என்வன் ரிக்வேதத்தில் கூறப்படும் ஓர் அரக்கனின் பெயர். இவனைப் போலவே பர்ணயன், காஞ்சன், பட்கிருமி முதலான அரக்கர்களின் பெயர்களும் ரிக் வேதத்தில் காணப்படுகிறது.

ரிக்வேதத்தில் பஞ்ச சனங்கள் என்று ஆரியர்களுள் அய்ந்து வகைகளைச் சொல்வது போல அதே வேதத்தில் மற்றொரு இடத்தில் பஞ்ச சனங்களுள் அசுரர்கள், இராட்சதர்கள் அடங்குவர் என்று ரிக்வேத உரையாசிரியர்கள் எழுதுகிறார்கள். நாம் மேலே இந்து அகராதியிலே குறிப்பிட்ட அத்தனை பெயர்களும் அசுரர்களுக்கு உரியவையே. இவர்களுக்கு என்னவேலை என்றால் ‘அழிப்பதையே விளையாட்டாகக் கொண்டவர்கள்? என்றே கூறப்பட்டுள்ளது. அழிப்பது என்றால் எதனை? வேள்வியை - யாகத்தை அழிப்பது.

இதனால் வேதகால ஆரியர்கள் அசுரர்களைத் தமது நிரந்தர எதிரிகள் ஆக்கிக் கொண்டார்கள். இதனை அவர்கள் பாகுபடுத்திக் குறிப்பிட்டுள்ளதை மண்டலம் 10 ஆக்தம் (ஆன்றோர் வாக்கு அல்லது வேதத்தின் பகுதி) 53இல் உரைக்குறிப்பு எழுதியவர் கீழ்க்காணும் விதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.

“அசுரர்கள் - வேதத்தின் பிற்பகுதியில் கூறப்படும் அசுரர்கள். எப்போதும் தேவர்களுக்கு எதிராகச் செயல்படுபவர்கள். இவர்கள் இராட்சதர்கள் எனப்படுபவர்கள் அல்ல. சில அசுரர்கள் விண்ணுலகில் வாழும் தேவதைகளாகக் கூட இருப்பார்கள். இந்த இருவரையும் ஒன்றாகக் குழப்பிக் கொள்ளக் கூடாது”.

இப்படி எழுதப்பட்டு இருந்தாலும் அசுரர்களை இராட்சதர்கள் என்றே இன்னமும் ஒன்றாகவே பார்க்கிறார்கள் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். ரிக்வேதம் இருவகை தேவர்களைக் கூறுகிறது. ஒன்று கடவுள்கள்; மற்றொன்று கற்றுத் தேர்ந்த பார்ப்பனர்கள் (பிராமணர்கள்). இப்படி அசுரர்கள் பார்ப்பனர்கள் கடவுளுக்கு இணையாக மேல் நிலையில் காட்டப்பட்டு இருக்கிறது. ரிக் வேதம் மண்டலம் 10; ஆக்கம் 90; 12ஆவது ரிக்குதான் நால்வருணத்தை உருவாக்குகிறது. இங்கிருந்துதான் வர்ணாசிரம ஈசல் பைய கிளம்புகிறது. இதிகாசங்கள், இதற்கு பல ஸ்மிருதிகள் (விதிகள்), புராணங்கள், நாடோடிக்கதைகள் உருவாக்கப்பட்டு அசுரத்தனம் சூத்திரத்தனத்திற்கு இறக்கப் பட்டது.

ஆக, அசுரர்கள் என்பவர்கள், நாவலந் தீவின் (இந்தியாவின்) பூர்வக்குடிகள். திரா விடர்கள், தமிழர்கள், சிந்துசமவெளி நாகரிகம் மறைந்து கி.மு.1500இல் செழுமைப்படுத்தப் பட்ட ரிக்வேதத்தில் பூர்வக்குடிகளை - அசுரர்களவில் பலவிதமான பெயர்களில் இன்னமும் அழைத்து வருகிறார்கள். 1976ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி முதன் முதலாக திமுக ஆட்சி மத்திய அரசினால் கலைக் கப்பட்டது. குடிஅரசுத் தலைவர் ஆட்சி பிரகனப்படுத்தப்பட்டது. மாலை 6 மணிக்கு இச்செய்தியை நானும் என் நண்பர் ஒருவரும் கேள்விப்படுகிறோம்.

எங்களுக்கு வியப்பு, அதிர்ச்சி, அன்றைக்கு தேனாம்பேட்டையில்நான் நடத்திவந்த அச்சகத்தின் அருகே திருவள்ளுவர் சாலையில் எஸ்.ஜே.சாதிக் பாட்சா பேசுவதாக இருந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டுவிட்டது. நானும் எனது நண்பரும் கலைஞர் வீட்டுக்கு போவோம் என முடிவு எடுத்தோம். தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையிலிருந்து வீனஸ் காலனி வழியாக கலைஞர் வீட்டிற்குச் சென்றால் தூரம் குறைவு. ஆகவே அந்த வழியாகச் சென்றோம்.

அதற்குள் மாலை 7 மணி ஆகிவிட்டது. நாங்கள் மிதிவண்டியில் செல்லுகிற போது ஆரிய சமாஜத்தில் ‘தியாகராஜ ராமாயணம்’ இசை பேருரை நிகழ்ச்சி தொடங்கப்பட்டு இருந்தது. அது குறித்து பெரிய போர்டு வைக்கப்பட்டு இருந்தது. அப்போது பேருரை நிகழ்த்துகிற சாஸ்திரிகள் சொல்கிறார். “அசுராளுக்கு அமுதம் கிடைத்தது. குடம்குடமாக குடிச்சிட்டா. அமுதத்தை அளவா பருகணும். அதிகாரம் சுகமா இருக்குனு அதிகமா அனுபவிக்கப்படாது. கடைசியில் அது ஆபத்தா முடிஞ்சிடும். முடிஞ்சிடும்னா... முடிஞ்சுட்டுது” இப்பேச் சைக் கேட்டுக் கொண்டே போனோம். என் நண்பருக்கும் விளக்கினேன்.

அமுதம் கிடைத்தாலும், அதிகாரம் கிடைத்தாலும் அவர்கள் எவ்வளவு அனுபவித்தாலும் அதன் அளவு, இங்கிதம் எல்லாம் அளந்தெடுத்து வைத்தது. அசுரரான நாம் அனுபவிக்கிறபோது அவர்கள் வாயில் இமயமாய் காட்சியளிக்கும் என்பதற்கு மேற்கண்ட நிகழ்வு ஓர் எடுத்துக்காட்டாகும். வேதகாலம் தொடங்கி இன்றுவரை சூத்திர, தாழ்த்தப்பட்டோர் - அசுரர்கள் பல்வேறு விதமாக இன்னமும் பழி வாங்கப்படு கிறார்கள்.

இராவணன், இரண்ய கசிபு, பத்மாசுரன், சூரபத்மன், நரகாசுரன், மகிஷாசூரன், கஜ முகாசுரன் ஆகிய இந்தப் பாத்திரப்படைப்பு கள் எல்லாம் அசுரனை - சூத்திர, தாழ்த் தப்பட்டவனைக் கீழ்மைப்படுத் தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டவையே ஆகும். இப்பாத்திரங்களை வகித்துக் கொண்டு திராவிட இயக்கம் நாடகங்கள் மூலமாக, உரையாடல்கள் மூலமாக, கதைகளின் மூலமாக தகுந்த பதிலடியை கொடுத்து வந்து இருக்கின்றோம்.

இராவணன் பற்றியசில செய்திகளைக் இக்கட்டுரையில் பதிவு செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். தினமணி நாளேடு (27.9.2017) கீழ்க்காணும் செய்தியை வெளியிட்டு இருக்கிறது.

1) “தசரா விழாக்களில் ராவணன் உருவ பொம்மைகளை எரிப்பதற்குத் தடை விதிக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோருக்கு உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் ஓம்வீர் சரஸ்வத் என்பவர் கடிதம் எழுதியிருக்கிறார்.

அவர் அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ராமாயணத்தில் இலங்கையின் அரசராக ராவணன் சித்திரிக்கப்பட்டுள்ளார். இவர், சரஸ்வத் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர். அவரது உருவ பொம்மைகள் தசரா விழாக்களில் எரிக்கப்படுவது, அந்த சமூகத்தினரையும், அவரை வணங்கிவரும் பிற சமூகத்தினரை யும் இழிவுப்படுத்துவதற்குச் சமம்.

மத்தியப் பிரதேச மாநிலம், மந்த்சவுரில் ராவணனுக்கு மிகப் பெரிய சிலை நிறுவப்பட்டுள்ளது. தலைநகர் தில்லிக்கு அருகே கிரேட்டர் நொய்டாவில் அவருக்குக் கோயில் உள்ளது. ராவணனை பெரும்பாலானவர்கள் வணங்கி வரு கின்றனர்.

தசரா விழாக்களில் ஏராளமானவர்கள் திரள்வதால் நெரிசலில் சிக்கியும், ராவணன் உருவ பொம்மை எரிக்கப்படும்போது தீ விபத்துகளும் ஏற்பட்டு கணிசமானோர் உயிரிழக்க நேர்கிறது. எனவே, ராவணன் உருவ பொம்மைகள் எரிக்க தடை விதிக்க வேண்டும் என்று அதில் ஒம்வீர் சரஸ்வத் குறிப்பிட்டுள்ளார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கும் இந்தக் கடிதத்தை ஓம்வீர் அனுப்பினார்.

இது ஒரு செய்தி. அடுத்து அதே தினமணி நாளேட்டில் (1.10.2017) இராவண னைப் பற்றி மற்றொரு குறிப்பு வெளியாகி இருக்கிறது. அதையும் அப்படியே கீழே தருகிறோம்.

2) விஜயதசமியை முன்னிட்டு உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூரில் அமைந்துள்ள 125 ஆண்டுகள் பழமையான ராவணன் கோயிலில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே இந்தக் கோயில் திறக்கப்படும் என்பதால், பெருந்திரளான பக்தர்கள் பூஜைகளில் கலந்துகொண்டு ராவணனை வழிபட்டனர். பொதுவாகவே, விஜயதசமி தினத்தில் ராவணன், கும்பகர்ணன் உள்ளிட்ட அசுர குலத்தைச் சேர்ந்த மன்னர்களின் உருவ பொம்மைகளை தீவைத்து எரியூட்டுவது வழக்கம். ஆனால், அதற்கு முற்றிலும் மாறாக கான்பூர் அருகே சிவாலாவில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் ராவணனைப் போற்றி சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

பத்துத்தலை ராவணன் என்பதைக் குறிக்கும் வகையில் தசானன் என்ற பெயரில் அழைக்கப்படும் இந்தக் கோயில் ஆண்டுதோறும் விஜயதசமி தினத்தில் மட்டும்தான் திறந்திருக்கும் என்பது மற்றொரு சிறப்பு. ராவணன், வேதங்களை கற்றுத் தேர்ந்த விற்பன்னர் என்பதாலும் சிவபெருமானின் மிகப்பெரிய பக்தர் என்பதாலும் மஹராஜ் குருபிரசாத் சுக்லா என்பவர், கடந்த 1890-ஆம் ஆண்டில் இந்தக் கோயிலை நிறுவினார்.

இந்த ஆண்டு விஜயதசமியையொட்டி நடைபெற்ற பூஜையில், ராவணன் சிலைக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்ட தாகவும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாட்டில் பங்கேற்றதாகவும் கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தினமணியில் வந்த இந்த இரண்டு செய்திகளையும் இப்போது பார்க்கலாம். முதல் செய்தியை எடுத்துக்கொள்வோம். இராவணன் இலங்கை அரசர். சரஸ்வத் பிராமண குலத்தைச் சேர்ந்தவர். அவருக்குக் கோயில் இருக்கிறது. பெரிய சிலை வைக்கப்பட்டு இருக்கிறது. தசரா விழாக்களில் எரிக்கப்படுவது அவரை இழிவுப்படுத்துவதற்கு சமமானது. அவர்கள் குலத்தாரையும் அவரை வணங்குப வரையும் பெருமைப்படுத்துவது ஆகாது. ஆகவே தசரா விழாவில் இராவணனை எரியூட்டாதீர்கள் என்று அச்செய்தியில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

பிராமண குலத்தைச் சேர்ந்த ஒருவர் அரசாக இருக்கலாமா? அது வர்ணக்கலப்பு ஆகாதா? வேதகாலத்தில் இந்த ‘கலப்பு’ ஸ்மிருதி காலங்களிலும், கீதை காலத்திலும் மாற்றப்பட்டுவிட்டனவே. பின் எப்படி பிராமண இராவணன் அரசன் ஆனான்? அவன் பிராமணன் தானா?

உ.பி.முதல்வருக்கும், உச்சநீதிமன்ற நீதிபதிக்கும் கடிதம் எழுதிய சம்வீர் இராவணன் சரஸ்வத் பிராமண குலத்தைச் சேர்ந்தவர் என்கிறார். இராவணனைப் பற்றி சந்திரசேகரசந்திர சரஸ்வதி சுவாமிகள் புலஸ்தியர் எனும் பிராமண வகுப்பை சேர்ந்தவன் என்று கூறிஇருக்கிறார். இதே கருத்தை பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் தாம் எழுதிய ‘இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்’ எனும் நூலில் குறிப்பிட்டு இருக்கிறார். இக்கூற்றுகளிலிருந்து இராவணன் சரஸ்வத் பிராமண குலத்தைச் சேர்ந்தவரா? அல்லது புலஸ்திய பிராமணகுலத்தைச் சேர்ந்தவரா? என்று தெரியவில்லை. இரண்டு குலங்களைச் சேர்ந்தவன் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதில் எது சரி.

இதற்கு வேதங்களில் சொல்லப்பட் டுள்ள ஏழு நிழிகள் - மாரிஸ், அத்திரி, அங்கிரஸ், புலஸ்தியர், யுலகன், கிரது, வசிஷ்டர் ஆகியோர். இவர்களுள் வருகிற புலஸ்தியர் எனும் நிழியின் மரபைச் சேர்ந்தவன் இராவணன் என்று கூறி கிறார்கள்.

அக்டோபர் 1 ஆம் தேதி வெளியான தினமணி இதழில் ‘இராவணன், கும்பக் கருணன் முதலானவர்கள் அசுரக் குலத் தைச் சேர்ந்தவர்கள்’ என்று செய்தியில் கூறப்பட்டு இருக்கிறது. இராவணன், இராமாயணம் எனும் இதிகாசத்தில் படைக்கப்பட்ட ஒரு கற்பனைப் பாத்திரம். அந்தக் கற்பனைப் பாத்திரத்திற்கு சொல் லப்படுகிற ‘குலம்’கூட ஒரே கருத்தாகச் சொல்லப்படவில்லை. கருத்துவேறுபாடு உள்ளதை தினமணி வெளியிட்டுள்ள செய்திகளிலிருந்தே தெரிந்து கொள் ளலாம்.

திராவிட இயக்கம் இராமயணத்தை எதிர்த்து பிரச்சாரம் செய்து அந்த நூல் கொளுத்தப்பட வேண்டும் என்று கூறி வந்தோம். அந்நூல் கடவுள் மாக்காவியம் அல்ல என்று பேசி வந்தோம். மேலே குறிப்பிட்ட இக்கற்பனைப் பாத்திரங்களை அசுரன், அரக்கன், இராட்சசர்கள் என்று கூறப்பட்டு வந்ததால் - தஸ்யுக்களை, திராவிடர்களை - தமிழர்களை வேதத்திலும் அதன் பிரச்சாரக் கருவி களிலும் அப்படிக் கூறி இழிவுப்படுத்தி வந்ததால் அப்பாத்திரங்களைக் கதா நாயகர்கள் ஆக்கினோம். இராவணனை வீரத்தமிழன் ஆக்கினோம். இராவண காவியம் படைத்தோம். இரணியன் அல்லது இணையற்ற வீரன் எனும் நாடகத்தை எழுதினோம். அசுரர்கள் வீரர்கள் சுரர்களையும் பூசுரர்களை எதிர்ப்பவர்கள் என்பதை உறுதிப்படுத்தி னோம்.

அசுரர்களைப் பற்றிய விவரங்களைப் பார்த்தோம். தீபாவளி ஏன் கொண்டாடு கிறார்கள்? இதிலே ஓர் அசுரன் வரு கிறான். தீபாவளி நரகாசுரனை கண்ணன் கொன்ற நாள் அது. நரகாசுரன் நாடாண் டது கண்ணனுக்குப் பிடிக்க வில்லை. அவன் மக்களை துன்புறுத்துகிறான் என்று சொல்லி கண்ணன் அவனைக் கொன் றான். இராவணன், இரண்ய கவிபு, பத்மா சுரன், சூரபத்மன், மகிஷாசுரன், கஜமுகா சுரன் முதலானவர்களின் அரசியல் அதிகாரத்தை கதையில் கைப்பற்றி நம்மை எப்போதும் மிரட்டி, அச்சமுறுத்தி வைப் பதற்கான ஏற்பாடே தீபாவளி போன்ற பண்டிகைகள். கதையானாலும் அசுரர் என்பவர்கள் தமிழர்கள் - திராவிடர்கள் ஆரியர் அல்லாதவர்கள். அவர்கள் கொல்லப்பட்ட நாளை நாம் தீபாவளி என்று கொண்டாடலாமா?


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner