எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

- நிலஞ்சன் முகாபாத்தியோயா

வேலை தேடும் எண்பது வயது முதியவர் என்று முன்னாள் நிதி மற்றும் அயல் துறையமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவை, தற்போதைய மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தரக்குறைவாகப் பேசியதைத் தொடர்ந்து சின்ஹா எழுதிய கட்டுரை அலை அலையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மோடி அரசில் துணை அமைச்சராக இருக்கும் சின்ஹாவின் மகன் ஜெயந்த் சின்ஹா உள்ளிட்ட அய்க்கிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் ஆகியோர் சின்ஹாவின் குற்றச்சாட்டுகள் பற்றி கருத்து தெரிவித்தனர். தனது பதவியைக் காப் பாற்றிக் கொள்வதற்காக ஜெயந்த் சின்ஹா அரசுக்கு ஆதரவாகப் பேசியிருப்பதில் வியப்பேதும் இருக்க முடியாது. சின்ஹாவும், ப. சிதம்பரத்துக்கு முன்பும் பின்பும் நிதியமைச்சராக இருந்தவர்களும் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளனர். அந்த வரிசையில் இப்போது முன்னாள் அமைச்சர் அருண் ஷோரியும் இணைந்துள்ளார். சில காலமாக இது பற்றி தான் பேசி வருவதாகவும், சின்ஹா கூறியதில் புதுமை ஏதுமில்லை என்றும் ப.சிதம்பரம் தெரி வித்துள்ளார்.

சின்ஹா அந்த கோரிக்கையை முன் வைக்காத போதிலும், பெட்ரோல் டீசல் விலையைக் குறைப்பதற்கான முடிவை முதன் முதலாக மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. சின்ஹாவின் தாக்குதல் மீதான விளைவு என்று இதனைக் கூறலாம். மேலும், சின்ஹாவின் கடுமையான தாக்குதலில் இருந்து தனது அரசை தீவிரமாகப் பாதுகாக்கும் வகையில் பேசுவதற்கு பிரதமர் மோடி இந்திய கம்பெனி செயலாளர்கள் சங்க மேடையைப் பயன்படுத்திக் கொண்டார். நாட்டின் பொருளாதார நிலையைப் பற்றிய  கருத்தில் இறுதியான முடிவு எட்டப்படவில்லை என்பதையே இவை காட்டு கின்றன.

‘‘மத்தியில் மோடி ஆட்சி தொடங்கிய  காலத்திலேயே, உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடுமையான வீழ்ச்சி அடைந்தது கிடைத்தற்கரிய நல்வாய்ப்பாக அமைந்தது. ஆனால் முன் எப்போதும் கிடைக்காத இந்த நல்ல வாய்ப்பை, மக்களுக்குப் பயன் தரும் வகையில், கற்பனை வளத்துடன் பயன் படுத்திக் கொள்ள மோடி அரசு தவறிவிட்டது’’ என்று சின்ஹா கூறியிருந்தார்.  ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத், இந்த அமைப்பின் முக்கிய பிரிவினராக இருக்கும்  வர்த்தகர்கள், சிறு வியாபாரிகள்,  நடுநிலைப் பிரிவு உத்தியோகஸ்தர்கள் ஆகியோருக்கு, தசரா விழாவின் போது ஆற்றிய உரையில், நாட்டின் பொருளாதார நிலை சீரழிந்துள்ளது பற்றி கவலை தெரிவித்திருந்ததற்கு சில நாட்கள் முன்னதாக,  யஷ்வந்த் சின்ஹா அந்தக் கட்டுரையை எழுதியிருந்தார். மத்திய பா.ஜ.க.அரசையும், பிரதமர் மோடியையும் பொதுவாக ஆதரிப்பவராக பகவத் இருந்த போதிலும்,  அவர் வெளிப் படுத்திய கவலையின் முக்கியத்துவத்தையோ, காலநேர பொருத்தத்தையோ அலட்சியமாக ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. வர்த்தகர்கள், சிறு வியாபாரிகள்,  நடுநிலைப் பிரிவு உத்தியோகஸ்தர்கள் ஆகியோருக்குத் தொல்லை தரும் பிரச்சினைகளைப் பற்றி பரிசீலனை செய்யப்படும் என்று மோடி உறுதி அளித்திருப்பது, பிரதமரின் அரசியல் களம் ஒரே இரவில் கவலை தரும் அளவுக்கு மாறிவிட்டது என்பதையே காட்டுகிறது.

புயலை எழுப்பிய சின்ஹா எழுதிய கட்டுரையில் இரண்டு கோணங்கள் உள்ளன. நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சி அடைந்துள்ளதா, இல்லையா என்பதைப் பற்றிய விவாதங்களுக்குள் செல்ல நான் விரும்பவில்லை. அக்கட்டுரையின் அரசியல் பாதிப்பு பற்றி மட்டுமே ஆய்வு செய்வதற்கு நான் விரும்புகிறேன். தனது உணர்வுகளை பா.ஜ. கட்சிக்குள் உள்ள பலரும் பகிர்ந்து கொள்பவர்களாக உள்ளனர். அச்சத்தின் காரணமாகவே தங்களது கருத்தை வெளிப்படுத்த அவர்கள் தயங்குகிறார்கள் என்ற  சின்ஹாவின் முதலாவது கருத்து அடிப்படையோ, ஆதா ரமோ அற்றது அல்ல. கடந்த மூன்று ஆண்டுகளாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு சங்கடம் அளிக்கும்  கேள்விகளைக் கேட்ட பல நிகழ்ச்சிகள் நடந்தேறியுள்ளன என்பதும்,  அவர்கள் அவற்றைப் பற்றி தொடர்ந்து பேசாமல் தலைமையினால் மவுனம் காக்கச் செய்யப்பட்டார்கள் என்பதும் உண்மையே. , 2015 பீகார் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர்கள் தேர்வுக்குப் பின்னணியில் பணப் பரிமாற்றம் இருந்தது என்ற குற்றச்சாட்டுகள், அண்மையில் மத்திய அமைச்சரவையில் புதியதாகச் சேர்க்கப்பட்டுள்ள ஆர்.கே.சிங்கினாலும் எழுப்பப்பட்டுள்ளன.  ஆனால், 2014 மக்களவைத் தேர்தலில் மோடி பெற்றிருந்த வியக்கத் தகுந்த வெற்றியின் காரணமாக, கட்சி உறுப்பினர்களுக்குள் மோடிக்கு இருந்த எதிர்ப்புக் குரல் ஒடுக்கப்பட்டுவிட்டது.

கடந்த காலத்திலும், நிகழ் காலத்திலும் சில உலகத் தலைவர்கள் பெற்றுள்ள முழுமையான அதிகாரத்தைப் பெற்றிருக்கும் பா.ஜ.க. வின் தலைமை கட்சியை இரும்புக் கரம் கொண்டு அடக்கி வைத்துள்ளது .  ஆட்சி மற்றும் கட்சியின் தலைமைப் பொறுப்பில் உள்ள ஷா, மோடி, ஜேட்லி ஆகியோரின் கட்டளைகளை ஏற்றுக் கொள்வதற்கு பெரும்பாலான பா.ஜ. கட்சித் தலைவர்கள தயாராகவும், விருப்பம் கொண்டவர்களாகவும் உள்ளனர். ஆனால், ஒரு முறை தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டுவிட்டால் போதும்,  இந்தத் தலைமை ஒரு புரட்சியை சந்திக்க வேண்டியிருக்கும் காலம் வெகு  தொலைவில் இருக்காது என்ற அச்சம் மட்டும் எப்போதுமே நிலவி வருகிறது. பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் பா.ஜ.கட்சியின் நம்பிக்கையைத் தகர்த்துவிட்டது. உட் கட்சி ஜனநாயகத்தை சீரழித்துவிட்டதாக மோடி, ஷா மீது, யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்ட நான்கு பா.ஜ.க. பெருந்தலைவர்கள்  குற்றம் சாட்டினர். ஆனால், ஆர்.எஸ்.எஸ்.சின் உதவியுடன் அந்த நெருக்கடி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. ஆனாலும், பணமதிப்பிழப்பு, சரக்கு மற்றும் சேவை வரி என்ற இரண்டு பொருளாதார முடிவுகளும் உருவாக்கிய நிச்சயமற்ற தன்மையின் காரணமாக,  சங் அமைப்பே அமைதி இல்லாமல் தவித்தது. இந்த நடவடிக்கைகளுக்கு நாக்பூரில் இருந்து பிணை கிடைப்பது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை.

மக்களவை தேர்தலில் தோல்வி அடைந்த பிறகும், நிதி அமைச்சராக இருந்து கொண்டு மேலும் பல துறைகளைக் கூடுதலாக வைத்திருக்கும் அருண் ஜேட்லி மீது யஷ்வந்த் சின்ஹா தாக்குதல் தொடங்கினார். நிதியமைச்சர் என்ற பெரும் சுமையை ஏற்றுக் கொண்டு, பணமதிப்பிழப்பு என்னும் சீரழிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டதாக அருண் ஜேட்லி மீது அவர் குற்றம் சாட்டினார். ஆனால், நிதி அமைச்சர் அருண் ஜேட்லி மீது மேற்கொள்ளப்பட்ட இத் தாக்குதல்கள் அனைத்துக்கும் அவர் பொறுப்பு அல்ல; நரேந்திர மோடிதான் பொறுப்பு. 1998 மக்களவை தேர்தலில் தோல்வி அடைந்த பிரமோத் மகாஜன், ஜஸ்வந்த் சிங் ஆகியோரை தனது அமைச்சரவையில் வாஜ்பேயி சேர்க்கவில்லை என்ற முன் மாதிரி இருந்த போதிலும், தேர்தலில் தோல்வி அடைந்த அருண் ஜேட்லியை அமைச்சரவையில் சேர்ப்பதற்கு மோடி தனது பிரத்தியேக அதிகாரத்தைப் பயன்படுத்தியுள்ளார். மறுபடியும், அருண் ஜேட்லியால் சமாளிக்க இயலாத அளவுக்கு பல துறைகளின் பொறுப்புகளை அவருக்கு அளித்ததும் மோடிதான். அருண் ஷோரியின் சொற்களில் கூறுவதானால், மொத்த ரூபாய் நோட்டுகளில் 86 விழுக்காட்டு மதிப்புள்ள நோட்டுகளை செல்லாது என்று அறிவித்த அற்புதம் நிறைந்த, பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டது. பண மதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டதற்குப் பிறகு சில நாட்கள் வரை அருண்ஜேட்லி அதனைப் பற்றி எதுவும் பேசாமல் மவுனமாக இருந்தை நம்மால் நினைவு கூர்ந்து பார்க்கமுடியும். அந்த நடவடிக்கை அவரையும் கூட அதிர்ச்சி அடையச் செய்துவிட்டது என்பதையே அது சுட்டிக் காட்டுகிறது. யஷ்வந்த் சின்ஹா இதற்கு நரேந்திர மோடி மீது தாக்குதல் நடத்தியிருக்கலாம்; ஆனால் அவ்வாறு செய்வதைத் தந்திரமாகத் தவிர்த்துவிட்ட சின்ஹா, அருண் ஜேட்லி மீது தாக்குதல் நடத்தவே  முடிவு செய்தார். எதிர்காலத்தில் நீங்கள் மோடி மீது தாக்குதல் நடத்துவீர்களா என்று செய்தியாளர்கள் நேரடியாகக் கேட்ட கேள்விக்கு, சின்ஹா பதில் அளிப்பதைத் தவிர்த்துவிட்டார். சின்ஹாவை வேலை தேடும் முதியவர் என்று அருண் ஜேட்லி கேலி செய்தது ஓரளவுக்கு சரியானதுதான் என் பதை இது காட்டுகிறது. என்றாலும், அதில் என்ன தவறு இருக்கிறது? 20 ஆண்டு காலத்துக்கும் மேலாக பா.ஜ.க.வில் இருந்துவிட்டு, புதியதாகத் தானே ஒரு கட்சியைத் துவங்குவதோ அல்லது வேறு ஒரு கட்சியில் சேருவதோ சின்ஹாவால் முடியாது. தனது அமைச்சரவை சகாக்களில் ஒருவரை நீக்கி விட்டு தன்னை மோடி நியமிக்கக்கூடும் என்பதுவே சின்ஹாவின் எதிர்பார்ப்பாக இருக்கக்கூடும். தனக்கென ஓர் அரசியல் அடித்தளம் அற்ற சின்ஹா, மோடியின் மீதே முழுமையாக சார்ந்து இருப்பவர் என்பதால், அருண் ஜேட்லி மீது தாக்குதல் நடத்துவதே பாதுகாப்பானது என்று  சின்ஹா நினைத்திருக்கலாம். என்றாலும், நிதியமைச்சர் மீது தாக்குதல் நடத்துவது, பிரதமர் மீது தாக்குதல் நடத்துவதற்கு சமமாகாதா? இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது என்னவென்றால், மோடியும் அவ்வாறு நினைக்கிறாரா என்பதுதான்.

சங்பரிவாரத்தின் ஆதரவினால் மட்டுமே மோடி ஆட்சி அதிகாரத்தில் இருக்கவில்லை; வாக்காளர்களின் ஆதரவைத் திரட்டுவதற்கான அவரது ஆற்றலினால்தான் மோடி ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறார். ஆனால், தான் விரும்பும் கொள்கைகளை நடைமுறைப் படுத்துவதற்கான சுதந்திரத்துக்கு, சங் பரிவார அமைப்புகளில் உள்ள தீவிர வாதிகளைக் கட்டுக்குள் அடக்கி வைத்திருப்பதற்கு மோடி ஆர்.எஸ்.எஸ். சையே சார்ந்து, நம்பி இருக்க வேண்டியுள்ளது. சின்ஹாவின் கட்டுரை மட்டுமல்லாமல்,  இந்தியாவின் பொருளாதார நிலை, வளர்ச்சி தடுமாறிக் கொண்டிருக்கிறது என்பது பற்றி பல தொடர் கட்டுரைகள் வெளிவந்த பிறகு ஏற்பட்ட பல முன்னேற்றங்கள் காரணமாக, அரசியல் களமே மாற்றி அமைக்கப்பட்டுவிட்டது. மோடி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துவது, குஜராத் சட்ட மன்றத் தேர்தல் முடிவுகளைப் பொறுத்து உள்ளது. பா.ஜ.க.வுக்கு ஏற்பட இயன்ற ஒரு சிறிய அதிர்வும் கூட, சமனத்தன்மையை மாற்றி அமைத்துவிடும். அதற்காகத்தான், உடனடியாக எந்தத் தொடர் நடவடிக்கையும் மேற்கொள்ளாமல், சின்ஹா போன்ற மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நன்றி: ‘தி டெக்கான் கிரானிகிள்’, 06.10.2017

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner