எழுத்துரு அளவு Larger Font Smaller Font

- வழக்குரைஞர் சு. குமாரதேவன்

பெருந்தலைவர் காமராஜர் மீது 1966இல் காவிகள் நடத்திய கொலை வெறித் தாக்குதல் நடத்தியதன் 51ஆம் ஆண்டு சில தகவல்கள்....

காவி நிறம் என்பது கலவரத்தின் குறியீடு என்பது உதாரணமாக்கப்பட்ட நாள்

07-11-1966. அன்று மதியம் 3 மணிக்கு டில்லியில் காமராஜரை உயிரோடு கொளுத்த நிர்வாண சாதுக்கள், சங்பரிவாரங்களின் முயற்சியால், டில்லி வரலாறு காணாத கலவரங்களைக் கண்டது.

1966ஆம் ஆண்டு நவம்பர் 2 அன்று நடந்த அகில இந்தியக் காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் காமராஜர், "பசுவதைத் தடைச் சட்டம்" கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை ஏற்க முடியாது என்றும், அது பைத்தியக்காரத்தனமானது என்றும் இந்தியாவின் மதச்சார்பின்மைக்கு எதிரானது, பெரும்பான்மை மக்கள் அசைவ உணவு உண்ணும் போது அதற்கு எதிராக அரசு முடிவெடுக்க முடியாது என்றும் கூறினார்.

இது போதாதா காவிகளுக்கு? காமராஜரை தீர்த்துக் கட்ட நாள் குறித்தார்கள். அந்த நாளே நவம்பர் 7.

நாடாளுமன்றக் கட்டடத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்து தீர்மானமாக பல நாட்கள் திட்டமிட்டு பேருந்திலும், ரயிலிலும் பயணச்சீட்டே வாங்காமல் பயணம் செய்து கலவரத்தை ஆரம்பித்தார்கள்.

கண்ணில் பட்ட தந்திக்கம்பங்கள், மின் கம்பங்கள், அரசு அலுவலகங்கள் குறிவைக்கப்பட்டு தாக்கப்பட்டன. பெரும் சேதத்தை ஏற்படுத்திய இந்தக் கலவரத்தை பூரி சங்கராச்சாரியார் முழு ஆதரவளித்துத் தூண்டினார்.

ஜனசங்கம், இந்து மகா சபா, இடுப்பில் கட்ட வேண்டிய துணியை தலையில் கட்டி முழு நிர்வாணமாக வந்த சாதுக்கள் என்றழைக்கப்பட்ட சண்டியர்கள், குடும் பத்தைத் தவிக்க விட்டோ அல்லது குடும்பத் தினரால் அடித்து விரட்டப்பட்டோ சாமியாரான வீணர்கள் இதில் தங்கள் வெறித்தனத்தைக் காட்டினார்கள். இந்த வெறிக்கூட்டம் நடத்திய காட்டுமிராண்டித்தனத்தை "பிளிட்ஸ்"ஏடு விவரிக்கும் போது, "நரகத்தின் வேட்டை நாய்களாக" நடந்து கொண்டார்கள் என்று எழுதியது.

டில்லியில் பணியிலிருந்த காவல்துறையினருக்கு சம்பளம் தர அந்த மாதம் தாமதமானதால் காவல்துறையினரும் பெரிய அளவில் அந்த வன்முறையைக் கண்டு கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டும் அப்போது எழுந்தது.

டில்லியின் முக்கிய வீதிகளில் வன் முறையையும், சேதத்தையும் விளைவித்த கலவரக்காரர்கள், ஏற்கெனவே திட்டமிட்டபடி காமராஜர் இல்லத்தை நோக்கி ஓடினார்கள். அவர்கள் தாக்கத் தொடங்கியது அமைச்சர் ரகுராமையாவின் வீட்டை. பின்பு காமராஜர் வீட்டை ஒரு காலிப் பயல் அடையாளம் காட்ட, மண்ணெண்ணெய் நனைத்த தீப்பந்தம், கற்கள், கட்டைகள், திரிசூலங்கள், குண்டாந்தடிகள் என்று சரமாரியாகப் பறந்தன. காவலாளி அடித்து விரட்டப்பட்டார். பாதுகாவலர்கள் காமராஜரைப் பார்த்து நிலைமை எல்லை மீறியுள்ளது என்று சொல்லி உடனடியாக தப்பிக்க வேண்டுகின்றனர். ஆனால் ஜனநாயகவாதியான காமராஜர், அவர்களிடம் நான் பேசுகிறேன் என்று கூறும் போதே கதவினைத் தள்ளிக் கொண்டு திரிசூலத்தோடு சாமியார்கள் வெறியோடு உள்ளே வரவும், ஒரு பக்கத்தில் தீயின் நாக்குகள் கட்டடத்தைப் பதம் பார்க்க, நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த பாதுகாவலர்கள், காமராஜரை அவசரமாகக் கட்டாயப்படுத்தி பின்புறமாய் நூலிழையில் தப்பிக்க வைத்தனர்.

இந்தியா மட்டுமல்லாது, உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய அந்த சம்பவத்தை பெரியார் கடும் கண்டனம் தெரிவித்து காவிகளின் வன்முறையை பொதுக் கூட்டங்கள் மூலம் அம்பலப்படுத்தினார்.

"காமராஜர் கொலை முயற்சி சரித்திரம்" என்ற ஒரு நூல் தொகுப்பை ஆசிரியர் கி.வீரமணி வெளியிட்டு, அந்த நூல் இன்றும் பல பதிப்புகள் வெளியிடப்பட்டு இன்றும் விற்பனையில் சாதனை படைத்து வருகிறது.

"காவிகள் என்றால் காலிகள் - காலிகள் என்றால் காவிகள் " என்ற புதிய சொல் வழக்கிற்கு உதாரணமாய் இந்த சம்பவம் காமராஜர் வரலாற்றில் மறைக்க முடியாத ஒன்றாகவே உள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner