எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

-- ஆனந்த் கே.சகாய்

குஜராத் சட்ட மன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில், ஆளும் பா.ஜ.கட்சிக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் அமைப்பு காட்டி வரும் பயபக்தியும், விசுவாசமும் அசாதாரணமானதாக இருக்கிறது. கவலை தரும் ஆணையத்தின் செயல்பாட்டினைப் புரிந்து கொள்வது, மக்களுக்கு எளிதாகவே இருக்கிறது.

இந்த மோசடியைப் பற்றி குஜராத் வாக்காளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகுதான் நமக்குத் தெரியும். ஆனால் ஒன்றைப் பற்றி மட்டும் நம்மால் உறுதி செய்து கொள்ள முடியும். சட்டத்திற்குப் புறம்பான செயல்களை ஆளும் கட்சி செய்வதற்கு அனுமதிப்பதன் மூலமும், கூடுமான வரை எதிர் கட்சிகளுக்கு அளிக்கப்படாத சவுகரியங்களை ஆளும் கட்சிக்கு அளிப்பதன் மூலமும், இனி வரும் காலங்களில் எல்லாம் ஆளும் கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஆதரவாக நடந்து கொள்ளப் போகிறது என்பது மட்டும் நிச்சயமாகத் தெரிகிறது.

ஆளும் கட்சியின் அளவுக்கு அதிகமான அழுத்தம் தேர்தல் ஆணையத்துக்கு அளிக்கப்பட்டு இருப்பதாகத் தெரிகிறது. இந்திய ஜனநாயக அமைப்பின் தூண் என்று தன்னை மெய்ப்பித்து நிலை நாட்டிக் கொள்வதற்காக அழுத்தத்திற்கு அடிபணியாமல் உறுதியாக நிற்பதற்கு பதிலாக, தேர்தல் ஆணையம் ஆளும் கட்சியின் அதிகாரத்துக்கு அடி பணிந்துவிட்டது.

தேர்தல் விதிகளை மிகமிக நேர்மையாகவும், கடுமையாகவும் நடைமுறைப்படுத்திய பெருமையை முப்பது ஆண்டுகளுக்கு முன்பு டி.என். சேஷன் தலைமை தாங்கிய தேர்தல் ஆணையம் பெற்று இருந்தது. அவருக் குப் பின் வந்த தேர்தல் ஆணையர்களின் காலத்திலும் இரண்டாண்டுகளுக்கு முன்பு வரை அது நீடித்து இருந்தது.

வன்முறை அரசியல் வாதிகளை எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்பதை தேர்தல் ஆணையம் மிக நன்றாகவே அறிந்திருந்தது.

இந்தியாவில் மற்ற அனைத்து விஷயங்களும் தவறாகப் போய் விட்ட போதிலும் கூட, தேர்தல்கள் மட்டும் நேர்மையாகவும், நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடத்தப்படுகின்றன என்பதை பாமர மக்கள் இதுகாறும் நம்பி வந்துள்ளனர். இனியும் நம் நாட்டில் தேர்தல்கள் இவ்வாறு நடைபெறும் என்பதற்கான உத்திரவாதம் ஏதும் இல்லை.

உண்மையைக் கூறுவதானால், 2019ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தல் நேரத்திலும் கூட, தற்போது நிலவுவது போன்ற, ஆளுங்கட்சியின் விருப்பங்களுக்கு ஏற்றபடி தேர்தல் ஆணையம் செயல்படும் என்ற அய்யமும், அச்சமும் மக்களிடையே ஏற்படுவதற்குப் போதுமான காரணங்கள் உள்ளன.

மக்களின் வாக்குகளை எவ்வாறு கவர்வது என்ற தங்களது மாதிரி செயல்திட்டத்தை, வரும் 2019 நாடாளுமன்றத் தேர்தல்களில் நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்ற வகையில், இப்போது நடைபெற உள்ள குஜராத் சட்டமன்றத் தேர்தலில் சோதனை செய்து பார்க்க பாஜக முடிவு செய்துள்ளதாகவே தோன்றுகிறது. இது நாட்டிற்குப் பெரும் கவலை அளிக்கும் ஒரு விஷயமாகும்.

இதில் உள்ள குறிப்பு மிகவும் எளிமையானது. மக்களாக வாக்காளர்கள் வாக்கு அளித்து தேர்ந்து எடுத்த அரசு ஆட்சி செய்யப் போகிறதா அல்லது தேர்தல் ஆணையம் மற்றும் இதர அரசமைப்பு சட்ட அமைப்புகளின் கருணையான பார்வையின் கீழ் சட்ட மன்ற உறுப்பினர்களை கட்சி மாறச் செய்து குறுக்கு வழியில் அரசை அமைப்பவர்கள் நம்மை ஆளப் போகிறார்களா என்பது தான் நம் முன்னே உள்ள கேள்வியாகும். இது ஒன்றும் கற்பனையாகக் கூறப்படுவது அல்ல - கோவாவில் இது நம் கண் முன்னாலேயே நடந்துள்ளது. தேர்தலில் தோல்வி அடைந்த பா.ஜ.க. இப்போது அங்கே ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது.

தேர்தல் ஆணையத்திற்கு அளவுக்கு அதிகமான அளவுக்கு அழுத்தம் அளிக்கப்பட்டிருப்பது நன்றாக தெரிகிறது. ஒரு திட்டமிட்ட வழியில் ஊடகங்களும் இதைப்பற்றி பேசாமல் ஊமைகளாக ஆக்கப்பட்டு விட்டன.

ஆதிகார பூர்வமான புள்ளி விவரங்களை ஆய்வு செய்த செய்தி மற்றும் சம கால விவகாரங்கள் பற்றிய இணையதளம் ஒன்று, நடைமுறையில் செயல்படாமல் இருப்பதாகத் தோன்றிய இளம் குஜராத் தானிய வியாபாரி ஒருவர் நரேந்திர மோடியின் ஆட்சியின் போது தனது முதலீட்டைப் போல 16,000 மடங்கு லாபம் சம்பாதித்து இருக்கிறார் என்பதையும், கடந்த ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்படுவதற்கு ஒரு சில வாரங்களுக்கு முன்பு தனது கடையை மூடிவிட்டார் என்பதையும் நிலை நாட்டியுள்ளது. இந்த ஆராய்ச்சி அமைப்பின் மீது 100 கோடி ரூபாய் மான நஷ்ட வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டுள்ளது. இவ்வளவுக்கும் அந்த நிறுவனம் ஏதோ குற்றம் செய்துவிட்டதாக கூப்பாடிடு கின்றனர். அந்த செய்தியாளர் குற்றம்சாட்டவில்லை, வெறும் தகவல்களை மட்டுமே வெளிப்படுத்தியிருந்தார்.

100 கோடி ரூபாய் மான நஷ்டம் கோரியிருப்பது அனைவரையுமே திகைப்படையச் செய்துள்ளது. இந்திய ஊடக வரலாற்றில் இது போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது பற்றி இதுவரை கேள்விப்பட்டதே இல்லை. இந்த செய்தி வெளிவருவதற்கு முன்பாகவே, தனிப்பட்ட ஒரு மனிதரான இந்த குஜராத் இளம் வியாபாரி சார்பாக இந்தியாவின் கூடுதல் சொலிசிடர் ஜெனால் ஆஜாராகி வாதாடுவதற்கு மத்திய அரசு இரவோடு இரவாக அனுமதி அளித்திருப்பது மிகுந்த ஆர்வம் அளிக்கும் ஒரு செய்தியாகும்.

அந்த அகமதாபாத் இளம் வியாபாரி பா.ஜ.கட்சியின் தலைவரான அமித் ஷாஷன் மகன் என்பதால் மட்டுமே இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது மட்டும் மிகத் தெளிவாகத் தெரிகிறது. திடீரெனத் தொடுக்கப்பட்ட இந்த மான நஷ்ட வழக்கின் பின்னனியில் இருப்பவர் வியாபாரியான இந்த ஜெய் ஷாவா அல்லது நாட்டின் பிரதமருக்கு அடுத்த படியாக அதிக அளவு அதிகாரம் கொண்ட அமித்ஷாவா என்ற பிரச்சினை இப்போது எழுகிறது.

மான நஷ்ட வழக்கு தொடுப்பதற்கு நீதிமன்றத்தில் தனது மானம் மரியாதையைக் கெடுக்கும் வகையில் தவாறான செய்தி வெளியிட்டதற்காக செய்தியாளர் மீது நேரடியாகவே வழக்கு தொடுத்து இருக்கலாம். வெறும் ஒரு ரூபாய் மான நஷ்டம் கேட்டாலே போதும் இந்த வழக்கைப் பதிவு செய்வதற்கு. இந்த வழக்கில் வெளியிடப்பட்டுள்ள செய்தியோ மிகமிகச் சரியான செய்தி; அதன் புள்ளி விவரங்கள் அரசு ஆவணங்களில் இருந்து எடுக்கப்பட்டவை. இவை பற்றி எவரும் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை.

முக்கியமான தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில் இந்த விவகாரம் பற்றிய திரை மறைவு நடவடிக்கைகள் பொது மக்களின் கவனத்துக்குக் கொண்டு செல்லும் அளவில் இந்த விவகாரம் குறித்த தொடர் அறிக்கைகளை வெளியிடாமல் இருப்பதற்காக ஊடகத் துறையை அச்சுறுத்தும் வகையில் இந்த மிகப் பெரிய அளவிலான 100 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு வழக்கு தொடுக்கப்படுகிறது என்பதில் எந்த வித சந்தேகமும் இருக்க முடியுமா?

அவர்களின் நோக்கமே அந்த செய்தி கூறும் கதையை சாகடித்து அதனைப் பரவாமல் தடுப்பது மட்டும் தான். இந்த விவகாரம் பற்றி குறைந்த அளவு நாடாளுமன்றக் குழு ஒன்றினாலோ அல்லது நீதித்துறை கண்காணிப்பிலோ விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் என்ற நிர்பந்தத்தை இந்தத் கதை ஏற்படுத்தக் கூடும் என்ற அச்சம் அவர்களுக்கு இருப்பதே இதன் காரணம். இதனைப் போன்ற கடினமான மான நஷ்டஈடு வழக்கு தொடுப்பதன் மூலம் சம்பந்தப்பட்டவர்கள் மூச்சு விட அவகாசம் கிடைக்கும் என்ற அவர்களின் கணக்குத் தவறாகப் போனது. இந்தக் கதை காட்டுத் தீ போல் மிக மிக வேகமாக நாடு முழுவதும் பரவிவிட்டதால், இந்தக் கதையை வெளியே தெரியாமல் மூடி மறைத்து விடலாம் என்ற அவர்களது எண்ணம் பகற் கனவாகிப் போனது.

பாஜக-வின் கண்ணோட்டத்தில் ஆகட்டும், அமித்ஷாவின் கண்ணோட்டத்தில் ஆகட்டும், பிரதமர் நரேந்திர மோடியின் கண்ணோட்டத்தில் ஆகட்டும், அண்மையில் நடைபெற உள்ள முக்கியமான சட்டமன்றத் தேர்தல்களில் தங்களது வெற்றி வாய்ப்புகள் சிறப்பாக இருக்கவில்லை என்று கருதப்பட்டதாலும், குஜராத் பா.ஜ.க. அரசின் செயல்பாடுகள் மன நிறைவு அளிப் பவையாக இல்லை என்பதாலும், மக்களின் வாக்குகளைக் கவர்வதற்காக இறுதி நேரத்தில் சில சலுகைகளை அளிப்பதற்கு பா.ஜ.கட்சிக்கு தேர்தல் ஆணையத்தின் உதவி பயனுள்ளதாக இருக்கும் என்று பா.ஜ.க கருதியது. அண்மைக் காலமாகவே இந்திய ஊடகத் துறையினர் பல்வேறுபட்ட காரணங்களுக்காக பா.ஜ. கட்சியிடம் அடக்கமாகவும், விசுவாசமாகவும் நடந்து கொள்வதைத் தங்கள் கடமையாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர். இவ்வாறு நடந்து கொள்வது ஊடகத் துறையினருக்கு பெருமை சேர்ப்பதாக இல்லை. எதிர்பாராத முறையில் ஏதாவது ஒரு பத்திரிக்கையில் இருந்து இந்த விவகாரம் பற்றிய செய்தி வெளிவந்தால் சற்றும் ஈவு இரக்கம் இன்றி அதன் கழுத்தை நெறித்து கொல்லவும் அவர்கள் தயாராக உள்ளனர்.

என்றாலும் அவர்களது கணக்குகள் அனைத்தும் தவறாகிப் போய், அவர்களது தந்திரங்கள் பலிக்காமல் போய்விட்டன.

இது இந்திய அரசியலில் புகழ் பெற்றவர்கள் எனக் கருதப்படும் மோடி - ஷா இரட்டையரை புயலின் மய்யத்திற்குக் கொண்டு சென்றுள்ளதுடன், நாளுக்கு நாள் அவர்களின் நிலைமையை பரிதாபத்துக்கு உரியதாக ஆக்கிக் கொண்டு வருகிறது. அன்றொரு நாள் மோடி தன்னை இந்தியாவின் மகன் என்று அழைத்துக் கொண்டார். நில நடுக்கத்தினால் இடிந்து போன புகழ் பெற்ற கேதர்நாத் கோயிலைச் சீரமைப்பதற்கு குஜராத் முதல்வராகத் தான் இருந்தபோது பாழாய்போன ஜனநாயகக் கூட்டணி அரசு அனுமதிக்க மறுத்துவிட்டது என்று கடந்த வாரத்தில் பாபாவின் மைந்தன், கடவுளின் மகன் என்று தன்னைக் கூறிக் கொண்ட மோடி கண்ணீர் வடித்தார். தேர்தல் ஆணையத்தின் கருணையையும், ஆதரவையும் நம்பிக் கொண்டும், வணக்கத்திற்குரிய மத வழிபாட்டுத் தலங்களில் கண்ணீர் சிந்திக் கொண்டும், தேர்தல் நேரத்தில் மதப்பகை உணர்ச்சி என்னும் நஞ்சை சமூகத்தில் பரப்பவதற்கு தனது பரிவாரத் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களை அனுமதித்துக் கொண்டும், இருக்கும் பா.ஜ.கட்சியின் நிலை பரிதாபத்துக்கு உரியதாக உள்ளது. உண்மையான தலைவர்கள் செயல்படும் விதமே வேறு மாதிரியாக இருக்கும்.

தங்களது காலம் முடிவடைந்த பிறகு, அவர்கள் தோற்கடிக்கப்பட்டாலும் கூட அத்தகைய தலைவர்களை எவரும் கேலி செய்வதில்லை.

நன்றி: 'தி டெக்கான் கிரானிகின்' 27.10.2011

தமிழில்: த.க. பாலகிருட்டிணன்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner