--பார்சா வெங்கடேசுவரராவ் ஜூனியர்
உயர்நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதி கள் நியமனத்தில் பிரதமரையும், தன்னையும் உச்சநீதி மன்றத்தால் ஏன் நம்ப முடியவில்லை என்று கேட்ட தன் மூலம் மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் ஒரு மாபெருந் தவறை இழைத்துவிட்டார். கடந்த ஞாயிறு அன்று டில்லியில் நடைபெற்ற சட்ட தின விழாவில் பேசும்போது அவர் இவ்வாறு கேட்டார். அரசமைப்பு சட்ட வரைவுக் குழுவின் தலைவராக இருந்தவரும், அரசமைப்பு சட்டத்தை உருவாக்கியவர் என்று கருதப்படுபவருமான டாக்டர் பி.ஆர்.அம் பேத்கர் அவர்களின் புகழைத் தங்களுடையதாக ஆக்கிக் கொள்வதற்காக பா.ஜ. கட்சி அரசு உரு வாக்கியதுதான் இந்த சட்ட தின விழாவாகும்.
உச்ச நீதிமன்றம் தனது 2015 ஆம் ஆண்டு தீர்ப்பில், மத்திய அரசால் உருவாக்கப்பட்ட தேசிய நீதித்துறை நியமன ஆணைய சட்டம் செல்லாது என்று அறிவித்ததை ஒட்டி, இத்தகைய அரசியல் வாதப் போரில் ஈடுபடுவதை அமைச்சர் நியாயப்படுத்த முயல்கிறார் என்பது போல தோன்றுகிறது. அதற்கு பதில் அளித்து பேசிய இந்திய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, சட்டத்துறை, நிர்வாகத் துறை, நீதித் துறை ஆகிய அனைத்துப் பிரிவுகளும் தங்களது அரச மைப்பு சட்ட எல்லைகளுக்குள் செயல்பட வேண்டும் என்றும், அரசமைப்பு சட்ட இறையாண்மை அனைத் தையும் விட உயர்ந்தது என்றும் கூறி, சட்ட அமைச் சரின் வாயை எளிதில் மூடச் செய்துவிட்டார். தனது தொடக்க உரையின் போது, சட்டத்துறை, நிர்வாகத் துறை, நீதித் துறை ஆகியவற்றுக்கிடையே நிலவ வேண்டிய சமனத் தன்மையின் அவசியத்தைப் பற்றி மட்டுமே பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த எச்சரிக்கையுடன் பேசினார்.
தேசிய நீதித்துறை நியமன ஆணைய சட்டத்தை செல்லாது என்று உச்சநீதிமன்றம் அளித்திருந்த தீர்ப்பு பா.ஜ.க. அரசுக்குக் கிடைத்த பேரடியாகும். அந்த வழக்கில் அரசு சார்பில் ஆஜரான முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹட்கியின் வாதம் சிறப்பானதாக இருக்கவில்லை. நீதிபதிகள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுவார்கள் என்று அரசமைப்பு சட்டத்தில் மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. நமது அரசமைப்பு சட்ட நடைமுறையில் குடியரசுத் தலைவர் தானாகவே நேரடியாக செயல்படுவது இல்லை; பிரதமரின் தலைமையிலான அமைச்சரவை யின் அறிவுரையின் படியே செயல்படுபவர் ஆவார். இதன் பொருள், அப்போது ஆட்சியில் இருக்கும் அரசிடமே, நீதிபதிகளை நியமிப்பதற்கான அதிகாரம் இருக்கிறது என்பதுதான்.
உயர்நீதித் துறை நீதிபதிகளின் நியமன நடை முறையில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும் என்று அப்போது கூச்சல் போட்டுக் கொண்டிருந்த வர்களே பா.ஜ.கட்சியும் மற்ற எதிர்கட்சிகளுமே என்பதுதான் இதில் உள்ள அவலமே. இந்திய தலைமை நீதிபதியும், அவருடன் அவரது மூத்த நீதிபதிகளும் இணைந்து நீதிபதிகளை நியமனம் செய்ய வேண்டும் என்ற வாதத்தை அவர்கள் முன்வைத்தனர். பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்கட்சிகளின் வலியுறுத்தலால் ஏற்பட்ட விளைவுதான் கொலிஜியம் மூலம் நீதிபதிகள் நியமனம் செய்யப்படும் நடைமுறை. இந்த கொலிஜியம் நடைமுறையே தனது சொந்த பிரச்சினைகளை உருவாக்கிக் கொண்டது என்பதை யும், ஒளிபுகா ஓர் அமைப்பாக, அதன் செயல்பாடுகள் வெளிப்படைத்தன்மை அற்றவையாக ஆகிவிட்டன என்பதையும், நீதிபதிகளாக நியமிப்பதற்குத் தகுந்த நபர்களைத் தேர்ந்தெடுக்கும் அதனுடைய ஆற்றல் பற்றியே சந்தேகப்பட இயன்றதாக இருக்கிறது என்பதையும் அனைத்துக் கட்சியினரும் விரைவில் உணர்ந்து ஏற்றுக் கொண்டனர். கொலிஜியம் நடை முறையின் செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும் என்பதையும், தனது செயல்பாடு களுக்குப் பொறுப்பேற்று பதில் கூறக் கடமைப் பட்டதாக அது இருக்க வேண்டும் என்பதையும் உச்ச நீதிமன்றமே அங்கீகரித்து ஏற்றுக் கொண்டுள்ளது.
தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய சட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு அரசமைப்பு சட்ட உணர்வுக்கு எதிரானதாக இருக்கிறது என்பது தெளிவாகத் தெரிவதால், அது பற்றி குறிப்பிடுவதை அமைச்சர் தவிர்த்திருக்க வேண்டும். நீதிபதிகள் தங்களுக்குத் தாங்களாகவே ஒரு சட்டமாக இருக்க முடியாது என்பதுடன், உயர்நீதிமன்றங்களுக்கும் உச்சநீதிமன்றத்துக்கும் நீதிபதிகளை நியமனம் செய்ய உச்சநீதிமன்றத்தை அனுமதிக்கவும் முடியாது. மறு படியும் தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய சட்டத்தை நிறைவேற்றி, அத்துடன் இச்சட்டத்தை உச்ச நீதிமன்றத்தால் செல்லாது என்று அறிவிக்கப்பட முடியாது என்ற ஒரு திருத்தத்துடன் இணைத்து மறுபடியும் பிரகடனம் செய்வதற்கான அரசமைப்பு சட்டத் தெளிவும், அரசியல் துணிவும் மோடிஅரசுக்கு இருந்திருக்க வேண்டும். இவ்வாறு செய்வது சட்டப்படி தவறானது அல்ல. இதன் காரணம், நீதிபரிபாலனக் கொள்கையின்படி, தன்னைப் பொருத்த ஒரு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தானே ஒரு நீதிபதியாக இருக்க முடியாது என்பதுதான்.
திரு.பிரசாத் இந்த பிரச்சினையை தவறாக வடி வமைத்து விட்டார். பிரதமரையும், சட்ட அமைச்ச ரையும் நம்புவது என்பது அல்ல இப்போது நம் முன் உள்ள கேள்வி. அவர்களைப் பொருத்தவரை மக் களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அவர்கள் என்பது தான் அவர்களது வாதம். அரசமைப்பு சட்டத்திற்கு எதிரான ஒரு நிலையாகும் இது. நீதிபதிகளை நியமிக்க பிரதமருக்கோ, சட்ட அமைச்சருக்கோ எந்த அதி காரமும் இருக்கக்கூடாது. உண்மையைக் கூறுவ தானால், தேசிய நீதித்துறை நியமன ஆணைய சட் டத்தில், பிரதமர் அல்லது சட்ட அமைச்சரின் பகுத் தறியும் ஆற்றலுக்கு இடம் அளிக்கப்பட்டு இருக்க வில்லை. தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தில் அவர்கள் இடம் பெற்றிருப்பது முடிவானதாகவும், நிச்சயமானதாகவும் இருக்கலாம்; என்றாலும் தேசிய நீதித்துறை நியமன ஆணைய சட்டத்தின் செயல் பாடுகள் பற்றி இயற்றப்பட்டுள்ள விதிகளின்படி, அவர்களது முடிவுகள் நியாயமானவைகளாகத் தோற்ற மளிக்க வேண்டும்.
போர்வீரனின் ஒளிமிகுந்த கவசம் அணிந்து கொண்டு, நாட்டுக்கு நல்லது செய்ய புறப்பட்ட ஒரு தளபதியாக தனது தலைவர் மோடியை மாற்றிக் காட்டு வதற்கும், அதனால் நீதித்துறை தனது பேரறிவை அவரிடம் சரண் செய்துவிட வேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டுவதற்கும் சட்ட அமைச்சர் விரும்பி இருக்கிறார். பிரதமர் மோடி போன்ற பேரார்வம் கொண்ட உயர்ந்த தலைவர்களின் நல்ல நோக்கங் களை மட்டுமே நம்பி இந்தியாவைப் போன்ற அரச மைப்பு மக்களாட்சிகள் இருப்பதில்லை. குடியரசுத் தலைவர், தலைமை நீதிபதி உள்ளிட்ட அரசு அதிகாரி கள் அனைவரும் விதிகளுக்கும், சட்டதிட்டங்களுக் கும் உட்பட்டவர்கள், கட்டுப்பட்டவர்கள் ஆவர். தனது பேச்சில் மோடியின் பெயரை பிரசாத் பயன் படுத்தியிருப்பது மோசமான அரசியலும், மிகமிக மோசமான அரசியலமைப்புக் கோட்பாடும் ஆகும்.
அரசமைப்பு சட்ட இறையாண்மைக் கொள்கை யைக் காரணம் காட்டி அமைச்சரின் அரசியல் தாக்குதலை தலைமை நீதிபதி மிஸ்ரா நிச்சயமாகத் தடுத்து நிறுத்தியுள்ளார். என்றாலும், நீதிபதிகள் நியமன விவகாரத்தில் உச்சநீதிமன்றம் உறுதியான அடித்தளத்தில் நிற்கவில்லை என்பதே உண்மை. நீதிமன்றம் தன்னைத் தானே நியமித்துக் கொள்ள முடியாது. ஜனநாயக முறைப்படி தேர்ந்து எடுக்கப் பட்ட ஓர் அமைப்பால் சட்டமாக நிறைவேற்றப்பட்ட அரசமைப்பு சட்டத்தின் மூலமாகத்தான் நீதிபதிகள் நியமிக்கப்பட இயலும். நீதிபதிகள் எவ்வாறு நிய மிக்கப்பட வேண்டும் என்பது பற்றி அரசமைப்பு சட் டத்திற்குத் திருத்தங்கள் செய்வதற்கு சட்டமன்றங் களுக்கு அதிகாரம் உள்ளது.
புகழ் பெற்ற 1973 ஆம் ஆண்டு நடைபெற்ற கேசவானந்த பாரதி வழக்கில் மிக குறுகிய பெரும் பான்மையான 7 க்கு 6 என்ற நீதிபதிகளின் ஆதரவுடன் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் போதுதான் ‘‘அரசமைப்பு சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பு’’ என்ற கோட்பாடு, உருவாக்கப்பட்டது. இக்கோட்பாட் டின்படி, அரசமைப்பு சட்டத்தை மீறும் நோக்கமும், உணர்வும் கொண்ட எந்த ஒரு சட்டமும் செல்லாது என்று அறிவிக்கப்பட இயலும். நீதிபதிகள் நியமனத் தைப் பற்றி அரசமைப்பு சட்டத்தில் தெரிவிக்கப்பட் டுள்ளவை எவையும் இந்த அடிப்படைக் கட்டமைப்பு கோட்பாட்டின் நிழல் படியும் இடத்தில் கூட இல்லை.
நீதித்துறை பற்றி பா.ஜ.கட்சிக்கு இரண்டு சங்கடங் கள் உள்ளன. நீதிபதிகள் நியமன விஷயத்தில் எந்த அரசியல் குறுக்கீடும் இருக்கக்கூடாது என்று எதிர்கட்சியாக இருந்தபோது பா.ஜ.க. உரத்த குரலில் வலியுறுத்தி வந்துள்ளது. நல்ல நேரங்களில் அரசியல் ரீதியாக மேற்கொள்ள இயன்ற எளிமையான, கள்ளங்கபடற்ற ஒரு நிலை இது. அதற்கு மாறாக நீதிபதிகளை நியமிக்கும் உரிமை அரசு நிர்வாகத்துக்கு அளிக்கப்பட வேண்டும் என்று இப்போது அதனால் வாதாட முடியாது. பா.ஜ.க. ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால், மிகவும் சுதந்திரமாக செயல்படும் நீதித்துறையைப் பற்றி அரசு மகிழ்ச்சியுடன் இருப்ப தாகக் கூறிவிடமுடியாது. நிர்வாகத்தால் நீதிபதிகளை நியமிக்க முடியும் என்றாலும், அரசமைப்பு சட்டத் திற்கு எவ்வாறு விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதித்துறைக்கு கட்டளையிட முடியாது என்ற உண் மையை பா.ஜ.க. உணர்ந்து ஏற்றுக் கொள்ள வேண்டும். பிரதமர் நரேந்திர மோடியின் புகழைப் பாடுவது மட்டுமே இந்த பிரச்சினைக்கான தீர்வாக இருக்க முடியாது.
நன்றி: ‘‘தி டெக்கான் கிரானிகிள்’’,
28.11.2017 தமிழில்: த.க.பாலகிருட்டிணன்