எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

- பேராசிரியர் ப.காளிமுத்து

2017 டிசம்பர் 2 ஆம் தேதி, எப்போது விடியும் என்று காத்திருந்த கருஞ்சட்டைத் தோழர்கள் பொழுது புலரும் முன்னரே விடியற்காலை 5.30 மணிக்கு  ஈரோடு தொடர்வண்டி நிலையத்தில் குவிந்துவிட்டனர். தங்கள் அன்புத் தலைவரின் பிறந்தநாளில் அவர்தம் ஆசைமுகத்தைக் காண்ப தற்காக அலை அலையாகத் தோழர்கள் தொடர்வண்டி நிலையத்திற்கு வந்தவண்ணம் இருந்தனர். ஆனால் ‘ஏர்க்காடு’ வண்டி ஆறு மணிக்கு வரவேண்டியது, ஏழரை மணிக்கு வந்து சேர்ந்தது. தொடர் வண்டி நிலையகம் கருஞ்சட்டைக் கடலாகக் காட்சியளித்தது. என்றாலும் பயணிகளுக்கு இடையூறு இல்லாமல் தோழர்கள் தங்களை ஒழுங்குப் படுத்திக் கொண்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

‘ஏர்க்காடு விரைவு வண்டி’ ஈரோடு நிலையத்தை அடைந்தவுடன் ‘பறையொலி’ விண்ணைப் பிளந்தது! பறை இசை முழங்க ‘தந்தை பெரியார் வாழ்க!’ என்னும் வாழ்த்து முழக்கங்கள் நிலையத்தை அதிர வைக்க - தமிழர் தலைவர் தம் வாழ்விணையருடன் வண்டியிலிருந்து இறங்கினார். கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் பின் தொடர்ந்து வந்தார். பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் தலைவர் - முதுபெரும்பெரியார் பெருந் தொண்டர் - 95 வயது நிரம்பிய அய்யா பொத்தனூர் க.சண்முகம் அவர்கள் தமிழர் தலைவருக்குப் பயனாடை அணிவித்துக் கட்டித் தழுவி வரவேற்றார். அதன்பின்னர், தோழர்கள் ஒவ்வொருவராகப் பயனாடை அணிவித்துத் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துத் தமிழர் தலைவரை வரவேற்றனர். மலரின் குழியில் மணிநிறவண்டுகள் மொய்த்துக் கிடப்பதைப் போல அனைவரின் பார்வையும் தமிழர் தலைவரின் புன்முறுவல் பூத்த முகத்தின் மீதே மொய்த்துக் கிடந்தன.

பறை இசை முழங்க, கருஞ்சட்டைத் தோழர்கள் புடை சூழ - தமிழர் தலைவர் மெதுவாக நடந்து வந்ததைக் கண்ட தொடர் வண்டி நிலையத் தொழிலாளர் சிலர் ஓடிவந்து ‘அய்யா வணக்கமுங்க’ என்று கொங்குத் தமிழில் தங்கள் வணக்கத்தைத் தெரிவித்துக் கொண்டனர். பொதுமக்களும் தங்கள் வணக்கத்தைத் தெரிவிக்கத் தவறவில்லை.

நிலையத்தை விட்டு வெளியில் வந்த தமிழர் தலைவர் அங்கு ஆயத்தமாக இருந்த அவருடைய வண்டியில் ஏறி அமர்ந்தார். தமிழரின் ஆதி இசையான ‘பறை இசை முழக்கம்‘ முன்னே செல்ல ‘ஆக்சுஃபோர்டு’ விடுதி வரை தோழர்கள் தமிழர் தலைவரின் வண்டியைப் பின்தொடர்ந்து வந்தனர். விடுதியின் வாயிலில் காரைக்குடி சாமி.திராவிடமணி அவர்களும், அவர்தம் வாழ்விணையரும் தலைவரை மகிழ்ச்சி பொங்க வாழ்த்துக்கூறி வரவேற்றனர். திராவிடமணி அவர்களின் குடும்பம் மூன்று தலைமுறைகளைத் தாண்டித் திராவிடர் கழகத்தில் தொண்டாற்றி வரும் குடும்பம் என்பது குறிப்பிடத்தக்கது.

புன்னகை பூத்த முகத்தோடு மகிழ்ச்சி ஆர வாரம் செய்து கொண்டு தமிழர் தலைவரைப் பின்தொடர்ந்து வந்த தோழர்கள் ஆக்சுஃபோர்டு விடுதியில் தலைவரைத் தங்க வைத்துவிட்டுக் கருத்தரங்கு நிகழவிருந்த மங்களமகால் அரங்கிற்கு வந்து சேர்ந்தனர். அந்த அரங்கின் அகத்தும் புறத்தும் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான கருஞ்சட்டைத் தோழர்கள் ஒருவரோடொருவர் கைகுலுக்கித் தங்கள் தலைவரின் பிறந்தநாள் மகிழ்வைப் பகிர்ந்து கொண்ட காட்சி, நம்முடைய நெஞ்சத்தை மயிலிறகால் தடவிக் கொடுப்பதைப் போலிருந்தது. தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும், அண்டை மாநிலங்களிலிருந்தும் வந்திருந்த தோழர்கள் கூட்டம் கூட்டமாய் ஒன்று கூடி நலம் விசாரித்து உளம் மகிழ உரையாடிக் கொண்டிருந்தனர். மகளிரணித் தோழியரும், பெரியார் பிஞ்சுகளும் தங்களின் ஒப்பற்ற தலைவருக்கு வழங்குவதற்காக கையில் பழக்கூடைகளுடன் காத்திருந்த காட்சியைக் காண முடிந்தது. ஒரு தோழர் ‘செவ்வாழைத்தார்’ சுமந்து நின்ற காட்சியைப் பார்க்க முடிந்தது. இன்னொரு பக்கத்தில் கையில் விசிறியை வைத்துக் கொண்டு ஒரு ‘சாமியார்’ அமர்ந்திருந்தார். ஏ.சி. அரங்கில் விசிறியை வீசிக் கொண்டிருந்த அவரை அணுகி ‘அய்யா ஏ.சி. அரங்கில் அமர்ந்து கொண்டு விசிறிக் கொண்டிருக்கிறீர்களே!' என்று கேட்டோம். ‘நாம் விசிறி சாமிகள்’ என்றார், சிறிதும் தயங்காமல்! ‘அய்யாவைப் பார்த்து வாழ்த்துச் சொல்லிவிட்டுப் போகலாம் என்று வந்திருக்கிறோம்' என்றார். உடனே ஒரு தோழர் சாமி, மதியம் பிரியாணி, தயிர்ச்சோறு எல்லாம் இருக்குங்க; சாப்பிட்டுவிட்டுப் போகலாமுங்க’ என்றார். புன்முறுவல் பூத்த விசிறி சாமியார் ‘மகிழ்ச்சி! நாம் சைவம். நீங்கள் சாப்பிடுங்கள்’ என்றார்.

காலை பத்துமணிக்குத் தமிழர் தலைவர் மங்கள மகால் அரங்கிற்கு வந்து விட்டார். ‘தந்தை பெரியார் வாழ்க! தமிழர் தலைவர் வாழ்க!’ எனும் முழக்கங்கள் விண்ணைப் பிளந்தன. மக்கள் வெள்ளத்தின் நடுவே புன்முறுவல் பூத்த முகத்தோடு தமிழர் தலைவர் எல்லோர்க்கும் வணக்கம் சொல்லியவாறு மேடைக்கு வந்தார். அதுவரை கலைமாமணி திருத்தணி பன்னீர் செல்வம் குழுவினரின் இனிய இசை நிகழ்ச்சி  தோழர்களை மகிழ்வித்துக் கொண்டிருந்தது.

வரிசையாக அணிவகுத்து நின்ற தோழர்கள் தமிழர் தலைவருக்கு வணக்கம் செலுத்திவிட்டுத் தங்கள் வாழ்த்துகளையும், அன்பளிப்புக் கனிகளை யும் வழங்கிவிட்டு நகர்ந்தனர். ஆயிரக்கணக்கான தோழர்கள் அணிவகுத்து நின்றபோதிலும் சிறு சலசலப்போ ‘தள்ளுமுள்ளோ’ எதுவும் நடக்க வில்லை. திராவிடர் கழகத் தோழர்கள் காட்டிய ஒழுங்கும், கட்டுப்பாடும் காண்போரை வியப்பில் ஆழ்த்தின. பல்வேறு அரசியல் கட்சியினரும் தமிழர் தலைவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த வண்ணமிருந்தனர். மேனாள் அமைச்சர்கள் முத்துசாமி, திருமதி. சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகி யோர் தி.மு.கழகத்தோழர்கள் புடைசூழ வந்து தமிழர் தலைவருக்குத் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். மதிமுக மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி அவர்களும் தமிழர் தலைவருக்கு வாழ்த்துகளை வழங்கி மகிழ்ந்தார்.

அடுத்து இராவணன் - திராவிடன் நறுக்குகள் கலை நிகழ்ச்சிக்குப் பிறகு ‘திராவிடர் இனம் தலை நிமிர்ந்திட’ எனும் தலைப்பில் கருத்தரங்கு நடை பெற்றது. கருத்தரங்கில் உரையாற்றிய தோழர்கள் அனைவரும் ‘தத்துவங்களை - கொள்கைகளை மய்யப்படுத்தித் தலைவர்களுக்குப் பிறந்த நாள் கொண்டாடும் ஒரே இயக்கம் உலக அள வில் திராவிடர் கழகம் ஒன்றுதான்’ என்பதை விளக்கிப் பேசினார்கள். சிறிதுநேரம் கருத்தரங்கு நிகழ்வுகளைக் கவனித்துவிட்டுத் தமிழர் தலைவர் ஓய்வெடுக்கச் சென்றுவிட்டார். முன்னதாகக் கோவை இராமகிருட்டிணன் தோழர்களோடு வந்து தமிழர் தலைவருக்கு வாழ்த்துத் தெரிவித்ததோடு ‘விடுதலை’ சந்தாக்களையும் வழங்கிவிட்டுச் சென் றார்.

கருத்தரங்க நிகழ்விற்குப் பிறகு தோழர்கள் அனைவருக்கும் நண்பகல் உணவு வழங்கப்பட்டது. புலால் உணவும், தயிர்ச்சோறும், சாம்பார் சோறும் அனைவருக்கும் வழங்கப்பட்டன. தமிழர் தலைவரின் பிறந்த நாள் விழாவிற்குப் பல்வேறிடங்களிலிருந்தும் வந்திருந்த பெரியார் தொண்டர்கள் அனைவருக்கும் சுவையான நண்பகல் உணவு வழங்கிய ஈரோட்டுத் தோழர்களைப் பாராட்ட வேண்டும்.

பிற்பகலில் அய்ந்து மணியளவில் ஈரோடு வீரப்பன் சத்திரம் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் - திறந்த வெளி மாநாட்டரங்கில் முப்பெரும் விழா நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றன. ‘தமிழர் தலைவரின் தொண்டில் விஞ்சி நிற்பது - பெரியார் கொள்கையை உலகமயமாக்கியதே, பெரியார் கொள்கையைச் சட்டவடிவமாக்கியதே’ என்னும் தலைப்பில் பட்டிமன்றம் சிறப்பாக நடைபெற்றது.

மாலை ஏழுமணியளவில் பொத்தனூர் க.சண் முகம் அய்யா அவர்கள் தலைமையில் மாநாட்டின் சிறப்பு நிகழ்ச்சிகள் தொடங்கின. மாநாட்டில் உரையாற்றிய சட்டப்பேரவை உறுப்பினர் தனியரசு அவர்களும், தொல்.திருமாவளவன் அவர்களும் தங்கள் பொது வாழ்க்கை பெரியார் திடலில் இருந்தே தொடங்கியது என்பதைப் பெருமையோடு எடுத்து மொழிந்தார்கள். ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் ‘தங்கள் குடும்பமே ஆசிரியருக்கும், அன்னை மணியம்மையாருக்கும் நன்றிக் கடன் பட்டுள்ளமை’யை உருக்கமாக விளக்கினார். ஆசிரியரின் நிறைவுரையோடு இரவு பத்து மணிக்கு நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

இரவு உணவுக்குப் பின்னர் தொடர்வண்டி நிலையத்தில் தமிழர் தலைவரோடு இரவு 12.30 வரை உரையாடிக் கொண்டிருந்தோம். தந்தை பெரியார் மணியம்மையாரைத் தத்தெடுக்க மேற்கொண்ட முயற்சிகளைப் பற்றியும், அது நிறைவேற இயலாமற் போனமை பற்றியும் தமிழர் தலைவர் விளக்கமாக எடுத்துக் கூறினார்கள். அதன் பின்னர் மணியம்மையார் தம்மைத் தத்தெடுக்க மேற்கொண்ட முயற்சிகளை ‘வேண்டாமென்று’ தாம் மறுத்துவிட்ட நிகழ்வுகளையும் எங்களுக்கு எடுத்துச் சொன்னார்கள். ‘எப்பேர்ப்பட்ட தலைவரின் கீழ் நாம் பணியாற்றி வருகிறோம் என்பதை நினைத்து நினைத்துப் பெருமைப் பட்டோம்!’

சரியாக 12.30 மணிக்கு தமிழர் தலைவரை வழியனுப்பி வைத்து விட்டு மகிழ்ச்சியோடும், மன நிறைவோடும் வீடு வந்து சேர்ந்தோம்.

ஆசிரியரின் திருமணநாளைத் ‘தென்னாட்டுத் திருநாள்‘ என்று புரட்சிக் கவிஞர் பாடி மகிழ்ந்தார். அந்தத் ‘திருநாள்’ மகிழ்ச்சியை டிசம்பர் 2ஆம் தேதி ஈரோட்டில் நாங்கள் அனுபவித்தோம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner