எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

- வெங்கடேஷ் ராமகிருஷ்ணன்

 

குஜராத் மாநில படிதார் சமூக இளம் தலைவரான ஹர்திக் படேலின்  பாலியல் ஒழுக்கக் கேட்டினைப் பற்றிய ஒரு குறுந்தகடு   நவம்பர் 13 அன்று கணினி தளத்தில் சுற்றுக்கு விடப்பட்டதைத் தொடர்ந்து,  இந்த விவகாரத்தில் பா.ஜ.கட்சிக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று தங்களது செய்தித் தொகுப்புகளில் தெரிவிக்குமாறு அனைத்து பத்திரிகையாளர்களையும், ஊடகத்தினரையும் கேட்டுக்கொண்டு அக்கட்சியின் செய்தித் தொடர் பாளர்கள் மற்றும் தலைவர்களிடமிருந்து தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள் வந்து கொண்டே இருந் தன. இந்த வீடியோ காட்சி தாங்கள் எதிர்பார்த்த பலனை அளிக்கப் போவதில்லை என்பதையும்,  பா.ஜ.க. மீதே அது திரும்ப வந்து தாக்கும் என்பதையும் சங்பரிவாரத்தினர் உணர்ந்து ஒப்புக் கொண்டதே இதன் காரணம். நரேந்திர மோடி 2004 முதல் 2014 வரை உறுப்பினராக இருந்த மணிநகர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த தீவிர ஆர்.எஸ்.எஸ். தொண்டர் குழு, ஒரு சில வாரங்களில் பா.ஜ. கட்சிக்குக் கிடைத்த பின்னடைவுகளில் ஹர்திக் படேல் பற்றிய வீடியோ விவகாரம் முக்கியமாகக் குறிப்பிடத் தகுந்த மூன்றாவது விவகாரமாகும்.

அக்டோபர் 25 அன்று சூரத்தில் கைது செய்யப்பட்ட  இரு அய்எஸ் தீவிரவாதிகளில் ஒருவர்  பரூச்சில் உள்ள  ஆங்கிலேஷ்ர் சர்தார் படேல் மருத்துவமனையில் பணி புரிபவர் என்பது தெரிய வந்ததால், அந்த மருத்துவ மனையுடன் தொடர்புடைய காங்கிரஸ் தலை வர் அகமது படேலுக்கு தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாகக் கூறி, அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று  முதல்வர் ருபானி ஒரு குற்றச்சாட்டை முன் வைத்தார்.  ஆனால் அந்த மருத்துவமனையின் அறங்காவலர் குழுவிலிருந்து தான் 2014 லேயே விலகிவிட்டது பற்றி தெளிவாகக் காட்டும் பிரமாணபத்திரம் ஒன்றை அகமது படேல்  அளித்து அந்தக் குற்றச்சாட்டை அவர் மறுத்தார். ஹர்திக் பட்டேல் பற்றிய பாலியல் குறுந் தகடு போல அகமது படேலின் விவகாரத்திலும் விரைவில் பொது மக்கள் ஆதரவு அவர் பக்கம் திரும்பிவிட்டது, பா.ஜ.கட்சியை மிகுந்த சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.

காங்கிரசுடன் உறவு கொண்டுள்ள ஹர்திக் படேல் மீது நம்பிக்கை இழந்த சில படிதார் அமைப்பு தலைவர்கள் பலரும் அதில் இருந்து விலகி பா.ஜ.கட்சியில் சேரப்போவதாக அக்டோபர் 22 அன்று பா.ஜ.க. அறிவித்தது. அவ்வாறு விலகும் தலைவர்களில் மிகவும் பெரிதாகப் பேசப்பட்ட வடகுஜராத் ஒருங் கிணைப்பாளர் நரேந்திர படேல்  மாநில பா.ஜ.க. தலைவர் ஜிட்டு வாகானி முன்னிலையில் தனது பதவி விலகலை அறிவித்த போதிலும், ஒரு சில மணி நேரத்திற்குள் தனது நிலையை மாற்றிக் கொண்டார்.  பா.ஜ.கட்சியில் சேர்வதற்காக தனக்கு 1 கோடி ரூபாய் கொடுப்பதாக வாக்களித்திருந்ததைக் கூறிய அவர், அதற்கு முன் பணமாக தனக்கு அளிக்கப்பட்ட 10 லட்ச ரூபாயையும்  ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் காட்டினார். அதனைத் தொடர்ந்து கடந்த ஜூலை மாதத்தில் படிதார் அமைப்பில் இருந்து விலகி பா.ஜ. கட்சியில் இணைந்த நிகில் சவானி என்பவரும் பா.ஜ.கட்சியை விட்டு விலகிவிட்டதுடன்,  முதல்வர் ருபானி உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் மக்களின் நலன்களில் அக்கறை காட்டாமல் தங்களது அரசியல் ஆதாயத்துக்காகவே பாடுபடுவதாகக் குற்றம் சாட்டினார்.

இவ்வாறு பா.ஜ.கட்சிக்கு இதற்கு முன்பு ஏற்பட்ட பின்னடைவுகளை சரி செய்வதற்காகவே, இப்போது ஹர்திக் படேலைப் பற்றிய இந்த பாலியல் குறுந்தகடு வெளியிடப்பட்டது என்றும், இச் செயலின் பின்ன ணியில் பா.ஜ.கட்சியினரும், அவர்களுடன் தொடர் புடையவர்களும் உள்ளனர் என்பது பற்றி பொது மக்களிடையே எந்த வித சந்தேகமும் இல்லை என்றும் சங்பரிவாரத்தைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.

இது போன்ற மோசமான தந்திரங்களைக் கையா ளும் துறை ஒன்று நரேந்திர மோடி மற்றும் அமித் ஷாவின்கீழ் குஜராத்தில்  பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது; இது போன்ற செய்திகளை அத்துறையினர்தான் பரப்பி வருகிறார்கள் என்பதை பொது மக்கள் அனைவரும் நன்றாக அறிவார்கள். பா.ஜ.கட்சியில் செல்வாக்கு மிகுந்தவராக இருந்த  சஞ்சய் ஜோஷி என்பவர் பற்றியும் இது போன்ற பாலியல் குறுந்தகடு ஒன்றை உருவாக்கி, சுற்றுக்கு விட்டு,  2000 ஆம் ஆண்டு அவர் கட்சியிலிருந்து நீக்கப் பட்டார். இது போன்ற முறையில் சில காங்கிரசு தலைவர்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது. கடந்த காலத்தில் இந்த தந்திரங்கள் எல்லாம் பலித்தன என்றாலும் இம்முறை அது பலிக்கவில்லை என்று மணிநகரைச் சேர்ந்த ஒரு ஆர்.எஸ்.எஸ். தீவிரத் தொண்டர் கூறுகிறார்.

இதற்கான காரணங்கள் பல உண்மைகளில் அடங்கி உள்ளன. பா.ஜ.கட்சியில் இருப்பவர்களும் கூட இதனை ஏற்றுக் கொண்டுள்ளனர். குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோது, மிகுந்த பயன் அளிக்கும் வகையில் குஜராத் மாதிரியிலான முன்னேற்றம்  பற்றி மேற்கொள்ளப்பட்ட பொய்ப் பிரச்சாரம், மோடி அரசால் பயனடைந்த போலி முதலாளிகளால் மேற் கொள்ளப்படும் உண்மையற்ற பிரச்சாரமே என்பது இப்போது வெளிப்பட்டுவிட்டது. அத்துடன் கணக்குத் தணிக்கை அதிகாரி அளித்துள்ள பல அறிக்கைகளும், தலித்துகள், படேல்கள், விவசாயிகள், மீனவர்கள் மேற்கொண்ட போராட்டங்களும் குஜராத் மாதிரியிலான முன்னேற்றம் என்ற மாயை வெடித்து புஸ்வாணம் ஆகிப் போனதற்கு பங்களித்துள்ளன. இதன் விளைவாக ஹர்திக் படேல், அல்பேஷ் தாகூர், ஜிக்னேஷ் மேவானி போன்றவர்களின் தலைமையில் ஒரு புதிய வகை யிலான ஜாதிகளிடையேயான ஒத்துழைப்பு உருவாகி வளர்ந்து வருகிறது. அனைத்துக்கும் மேலாக, புதிய சரக்கு மற்றும் சேவை வரி விதிப்புத் திட்டத்தினாலும், பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஏற்படுத்திய பாதகமான பாதிப்புகள் தொடர்வதன் காரணமாக,  விவசாய வர்த்தக சமூகத்தினர் மீது பொருளாதாரத் துன்பங்களை ஏற்படுத்திய சமூக பொருளாதார சூழ்நிலையும்  இவற்றுடன் சேர்ந்து கொண்டன.

இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து கடந்த தேர்தல்களில் இருந்து குறிப்பிடத் தகுந்த ஒரு சூழ்நிலை மாற்றம் இந்தத் தேர்தலில் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, மாநிலத்திலும், மத்தியிலும் ஆட்சி செய்யும் அரசுகளின் செயல் பாடுகளைப் பற்றி மக்கள் மேலும் மேலும் குற்றங் குறைகளைக் கூறிகொண்டே செல்கின்றனர். நந்தோலியைச் சேர்ந்த விவசாயிகள், விவசாயக் கூலிகளின் குழு ஒன்று ப்ரண்ட் லைனிடம் இவ்வாறு கூறியது: ‘‘மத்தியில் உள்ள காங்கிரசு அரசு விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான திட்டங்களை, குறிப்பாக சுகாதார மருத்துவத் துறை களில் நிறைவேற்ற தன்னை அனுமதிக்காததால், கார்ப்பரேட் நிறுவனங்களின் கட்டுமானப் பணிகளை மேம்படுத்துவதன் மூலம் குஜராத் மாதிரியிலான முன்னேற்றத்தை உருவாக்கத் தான் பாடுபட்டு வருவ தாக 2012 வரை நரேந்திர மோடி கூறிவந்தார். இப்போது டில்லி மற்றும் குஜராத் மாநில ஆட்சி அதிகாரம் அவரது கைகளில் உள்ளது. ஆனால், கிராமப்புற குஜராத் எந்த வித முன்னேற்றமும் இன்றி முன்பு இருந்தது போலவேதான் இப்போதும் இருக்கிறது. அவர் வாய்ச் சொல் வீரராக இருக்கிறாரே அன்றி செயலில் எந்த முன்னேற்றத்தையும் கொண்டு வருபவராக இருக்கவில்லை. அவரது தந்திரக் கலையையெல்லாம் அறிந்து கொள்ளும் ஆற்றல் அற்றவர்களாக அவர் களது சீடர்கள் உள்ளனர். நல்லாட்சி பற்றி அவர் கூறி வந்த பொய்கள் எல்லாம் வெளிச்சத்துக்கு வந்து விட்டன’’ என்று அவர்கள் கூறுகின்றனர்.

நகர்ப்புறங்களில் வாழும் வணிகர்களும், ஊதியத் திற்கு வேலை செய்யும் பணியாளர்களும் கூட மத்திய, மாநில அரசுகளைக் கண்டிப்பதில் அதே அளவுக்கு தீவிரமும், வேகமும் காட்டுகின்றனர். கடந்த ஓராண்டு காலத்தில், குஜராத் மாதிரியிலான முன்னேற்றம் என்று  குறிப்பிடப்பட்டு வந்த ஒவ்வொரு அம்சமும் பொய் என்பது வெளிச்சத்துக்கு வந்துவிட்டது எவ்வாறு என்பதை நாகரிகமான நாடகபாணியில் தலித் தலைவர் ஜிக்னேஷ் மேவானி ஒவ்வொன்றாக எடுத்துக் காட்டி வருகிறார். அதனால்தான் பா.ஜ.க. இத்தகைய மோசமான தந்திரங்களில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறுகிறார்.

ஹர்திக் படேலுக்கும், ஜிக்னேஷ் மேவானிக்கும் நேரடியான அரசியல் தொடர்புகள் இல்லாத நிலையில்,  அல்பேஷ் தாகூர் காங்கிரசு கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டதன் மூலம், அவர்களினால் கிடைக்கும் அரசியல் மற்றும் தேர்தல் ஆதாயங்கள் முறைப்படி காங்கிரசு கட்சிக்கு மடை மாற்றி விடப் படுகிறது. காங்கிரசு தலைவர் ராகுல் காந்தியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களுக்குக் கவர்ச்சி கூடியிருப்பதும், அவரது பேச்சைக் கேட்பதற்கு மக்கள் பெருந்திரளாக வருவதுமான ஒரு பெரிய திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளதாகவே தோன்றுவதாகக் கட்சி யைக் கடந்த அனைத்து அரசியல் நோக்கர்களும், தொண்டர்களும் கருதுகின்றனர். நவம்பர் இரண்டாவது வாரத்தில் பதானில் இருந்து மேகசேனாவுக்கு அவர் மேற்கொண்ட பயணத்தின்போது ராகுலுக்குக் கிடைத்த உற்சாகம் மிகுந்த வரவேற்பு, மேகசேனாவுக்கு 200 கி.மீ. தொலையில் உள்ள ருபானியின் ராஜ்கோட் தொகுதியையே உலுக்குவதாக இருந்தபடியால்,  பாது காப்பான நகர்ப்புற தொகுதியான வதோதராவுக்கு தன்னை மாற்றிக் கொள்ள ருபானி முடிவு செய்தி ருப்பதாக பா.ஜ.க. சங்பரிவாரத் தொண்டர்களே கருது கின்றனர்.

அரசியல் மற்றும் தேர்தல் பிரச்சாரத் தளங்களில் இத்தகைய பின்னடைவுகளை அடைந்திருக்கும் பா.ஜ.க. மற்றும் சங் பரிவாரம், மாநிலத்தின் பல தொகுதிகளிலும் நீடித்து வரும், மத அடிப்படையில் மக்கள் பிளவுப்படுத்தப்பட்டிருப்பதைப் பயன்படுத்தி சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்று நம்பிக் கொண்டுள்ளனர்.

இப்போது நம் முன் உள்ள முக்கியமான கேள்வியே என்னவென்றால், பா.ஜ.கட்சிக்கு எதிரான காங்கிரசு கட்சி மற்றும் இந்த மூன்று சமூகங்களைச் சேர்ந்த இளம் தலைவர்களின் கூட்டணி உருவாக்கியுள்ள புதிய ஜாதிய சமன்பாடுகளால், பா.ஜ.கட்சியைத் தோற்கடிக்க இயலுமா என்பதுதான். நிச்சயமாக பா.ஜ.க. தோற்கடிக்கப்படும் என்று ஜிக்னேஷ் மேவானி உறுதியாக நம்புகிறார். ‘‘மத்தியில் உள்ள மோடியின் ஆட்சி மற்றும் மாநில முதல்வர்கள் கடந்த மூன்றாண்டு காலத்தில் இருமுறை மாற்றப்பட்டதும் சேர்ந்து, முன்னேற்றம் என்ற பெயரில் அவர்கள் செய்துவரும் பாசாங்குகளைக் காணும் அளவுக்கு மக்களின் கண்களைத் திறந்துவிட்டுள்ளது. பிரபுத்துவ சமூக பொருளாதார நடைமுறைகள் மற்றும் நவீன போலி முதலாளித்துவ பொருளாதார நடைமுறையில் உள்ள அனைத்துக் கேடுகளும் கொண்ட கலவை தான் குஜராத் மாதிரியிலான முன்னேற்றம் என்பது, பணமதிப்பிழப்பு நடவடிக்கையும், சரக்கு மற்றும் சேவை வரித்திட்டமும் சேர்ந்து மக்களின் முதுகெலும்பையே உடைத்துவிட்டன. விவசாயிகள், வியாபாரிகள், தலித்துகள், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்கள் இந்தத் தேர்தலில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள்” என்று மேவானி கூறுகிறார்.

படிதார் சமூகத்தின் 70%க்கும் மேற்பட்டவர்களும், தலித் சமூகத்தின் 90%க்கும் மேற்பட்டவர்களும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு கோலி மக்களில் 70%க்கும் மேற்பட்டவர்களும் பா.ஜ.கட்சிக்கு வாக்கு அளிப் பார்கள் என்று ஹர்திக் படேல், அல்பேஷ், தாகூர் மற்றும் ஜிக்னேஷ் மேவானி ஆகிய மூன்று இளம் தலைவர்களும் நம்புகின்றனர். இந்த சமூகங்களைச் சேர்ந்த வாக்காளர்கள் 35%க்கும் மேல் உள்ளனர். ஏறக்குறைய 10% முஸ்லிம் வாக்காளர்களும் உள்ளனர்.

பா.ஜ.கட்சியைத் தோற்கடிப்பதற்கு இந்த சமூகங் களுக்கு போதுமான நியாயமான காரணங்கள் உள்ளன. அரசியல் கண்ணோட்டம் பற்றிய ஒரு போராட்டமாக மட்டுமே இல்லாமல் பல பத்தாண்டுகள் காலமாக அவர்களைச் சுற்றி வேர் கொண்டுள்ள சமூக சமன்பாடுகள், சமூக உணர்வுகளின் அடிப்படையிலான அரசியல் கணக்கைப் பற்றியதாகவும் இத்தேர்தல் அமைந்திருப்பது நன்றாகவே தெரிகிறது.

நன்றி: ‘ஃபரண்ட் லைன்’, 8.12.2017

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner