எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

- பார்சா வெங்கடேஸ்வர ராவ் ஜூனியர்

குஜராத் சட்ட மன்றத் தேர்தலில் தொடர்ந்து ஆறாவது முறையாக பா.ஜ.க.  பெற்றுள்ள வெற்றி சில புதிர்களுடன் கிடைத்துள்ள வெற்றியாக இருக்கும் அதே நேரத்தில்,   காங்கிரசின் தோல்வியும் கூட ஆறுதல் தருவதாக  இருக்கிறது. தேர்தலில் ஆறுதல் பரிசு ஏதும் இல்லை என்றும், வெற்றி அல்லது தோல்வி என்ற இரண்டு மட்டுமே உள்ளது என்பதால் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது, காங்கிரசு தோல்வி அடைந்துள்ளது என்று  வாதாடுபவர்களும் உண்டு. ஆனால், அரசியல் என்பது அதனை விட அதிக சிக்கல் நிறைந்தது. இந்த வெற்றியை எண்ணி பா.ஜ.க. மெத்தனமாக இருந்துவிட முடியாது. அதே போல தனது தோல்வியை எண்ணி காங்கிரசு சோர்ந்து போய்விடவும் கூடாது.

பிரதமராக இருக்கும் ஒரு குஜராத்தியரான நரேந்திர மோடியை குஜராத் வாக்காளர்கள் கைவிட்டு விடவில்லை என்றே தோன்றுகிறது. பிரதமரின் கட்சியைத் தூக்கி எறிவதற்கான எல்லா விதமான காரணங்களும் இருந்த போதிலும், அவ்வாறு செய்ய  பெரும்பாலான  குஜராத் வாக்காளர்கள் விரும்ப வில்லை. மக்களவை தேர்தலில் தான் வென்ற குஜரர் மாநில  வதோதரா தொகுதி பதவியை ராஜி னாமா செய்து விட்டு, உத்தரப்பிரதேச மாநில வாரணாசி தொகுதி பதவியை மோடி தக்க வைத்துக் கொண்டு இருந்த போதிலும்,  குஜராத் வாக்காளர்கள் மோடியிடம் காட்டியுள்ள விசுவாசம் மனதை நெகிழச் செய்கிறது; ஒரு வழியில் மோடியின் நம்பிக்கைத் துரோகத்தை அவர்கள் மன்னித்து விட்டார்கள். உண்மையைக் கூறுவதானால்,  குஜராத் வெற்றி பா.ஜ.கட்சிக்கு ஓர் ஆறுதல் பரிசாக அமைந்திருக்கிறது என்றுதான் கூறவேண்டும். காங்கிரசுகாரர்கள் தன்னை இழிவுபடுத்தியதற்கு, குஜராத் வாக்காளர்கள் பழிதீர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறும் அளவுக்கு பிரதமர் மோடி இழிவான நிலைக்குத் தன்னைத் தாழ்த்திக் கொண்டார் என்று கூறுவதில் எந்த வித சந்தேகமோ, தவறோ இருக்க முடியாது. காங்கிரசு கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ள மணிசங்கர அய்யர் மோடியை ஓர் இழிந்த மனிதர் என்று கூறியதை, தோல்வி அடைந்துவிடக் கூடும் என்ற நிலையில் இருந்த பா.ஜ.கட்சியின் வெற்றி வாய்ப்புக்கு மோடி நன்றாகவே பயன்படுத்திக் கொண்டார். தங்களது செயல்திட்டங்களுக்காக பா.ஜ.கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று மோடி வாக்காளர்களைக்கேட்டுக்கொள்ளவில்லை; செயல் திட்டங்கள் பற்றி பேசுவதற்கு மோடிக்கோ, பா.ஜ.கட்சிக்கோ அதிகமான எதுவும் இருக்கவில்லை என்றே தோன்றுகிறது.  தேர்தல் அறிக்கை வெளியிடும் எண்ணமே முதலில் பா.ஜ.கட்சிக்கு இருக்கவில்லை; கடைசி நேரத்தில், எந்தவித சிந்தனையுமின்றி, அவசரம் அவசரமாகத் தயாரிக்கப்பட்டு,  முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற இருந்த நாளைக்கு முந்தைய தினம் அது வெளியிடப்பட்டது. குஜராத் தேர்தலில் வெற்றி பெறுவதை மோடி தனது தனிப்பட்ட பிரச்சினையாகவே எடுத்துக் கொண்டார். அதனால், தேர்தலில் மோடி வெற்றி பெற்றார் என்றும், பா.ஜ.க. தோல்வி அடைந்தது என்றும் கூடக் கூறலாம். மோடியும் அவரது கட்சியினரும் பேசி வரும் குஜராத் அடைந்துள்ள முன்னேற்றம் பற்றி எந்த விதமான பரிசீலனையும் இன்றி குஜராத் வாக்காளர்கள் இவ்வளவு நீண்டதொரு காலத்திற்கு எவ்வாறு நம்பி வந்தனர் என்பதுதான் விளக்கம் காண இயலாத புதிராகவே இருக்கிறது.

குஜராத் மாநிலத்தின் பொரு ளாதாரம் சிக்கல்கள் நிறைந்ததாகவும், முரண்பாடுகள் மலிந்ததாகவும் இருந்தபடியாலும், இத்தகைய பிரச்சினைகள் இந்த மாநிலத்துக்கு மட்டுமே உரிய னவாக இருந்தபடியாலும், குஜராத் மாதிரியான முன்னேற்றம் என்ற ஒன்று எப்போதுமே இருந்தது இல்லை. இந்த உண்மைக்கு எதிராக வாதாடுவதற்கு பா.ஜ.கட்சியினர் முதலில் முயன்றனர். மாநிலத்தின் பொருளாதாரம் தானாகவே செயல்படுவது என்ப தால்,  முதல்வராகவோ, பிரதமராகவோ மோடி உருவாக்கும் கொள்கைகளுடன் அதிக அளவு அவை தொடர்புடையதே அல்ல.  குஜராத் மாநிலத்தில் தொடங்க உத்தேசித்திருந்த நானோ செயதிட்டத்தின் தோல்வியே இதற்கு ஒரு சரியான எடுத்துக் காட்டாக விளங்குவதாகும். மக்கள் தொகை மற்றும் பொருளாதார அளவில் ஒரு சாதாரண அளவிலான மாநிலம் அது என்பதால், நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சிக்கு குஜராத் மாநிலம் ஆற்றும் பங்களிப்பு என்று ஒன்றும் பெரியதாக இருந்ததில்லை.  மற்ற மாநிலங்களுக்கு ஒரு முன்மாதிரியாக செயலாற்ற இயன்ற மாநிலம் அது என்று எதிர்பார்க்க இயலாது. இந்திய பொருளாதாரத்தை வெற்றி பெறச் செய்யும் குஜராத் மாநில தொழில் முனைவர்களும், டாடா, அம்பானி போன்ற பெரும் தொழில் அதிபர்களும் குஜராத் மாநிலத்துக்கு வெளியே இருந்துதான் செயல்பட்டு வருகின்றனர்.

அதனால், குஜராத் மாநிலத்தில் ஈடு இணையற்ற முறையில் பா.ஜ.க. பெற்று வரும் தேர்தல் வெற்றிக்குப் பின்னால் இருக்கும் ரகசியம் அதன் இந்துத்துவக் கோட்பாடுதானா என்ற கேள்வி நம் முன் எழுகிறது. அதுதான் உண்மை என்று நம்புவதற்கான தூண்டுதல் நமக்கு ஏற்படுகிறது. இக்கருத்தை மெய்ப்பிப்பதற்குப் போதுமான ஆதாரங்களைத் தோண்டி எடுத்து அளிக்க இயன்ற மதச்சார்பின்மை கோட்பாட்டாளர்கள் பலர் இருக்கின்றனர். ஆனாலும், இந்துத்துவக் கோட்பாடு தனது காலாவதி காலத்தைக் கடந்துவிட்டதாகவும், பா.ஜ. கட்சியும் கூட அதனை அறிந்திருப்பதாகவுமே தோன்றுகிறது.

இந்த மாநிலத்து மக்களின் சமூக மனநிலை மீது இந்து மதப் பாகுபாட்டு உணர்வு பெருமளவில் ஆதிக்கம் செலுத்துவதாக இருக்கிறது. ஆனால்,  ஆதிக்கசக்தி நிறைந்த ஓர் அரசியல் அமைப்பாக பா.ஜ.க. தோற்றம் பெறுவதற்கு முன்பாக இருந்தே நிலவி வரும் உணர்வு இது. 22 ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சிக்குப் பிறகு, மக்களுக்கு தனியான கவர்ச்சி எதனையும் அளிப்பதாக அது இருக்கவில்லை. இம்மாநிலத்துக்கான உறுதியான ஒரு அரசியல், பொருளாதார செயல்திட்டத்தை உருவாக்கிப் பிரச் சாரம் செய்வதற்கு, இம் மாநிலத்தில் பா.ஜ.க.வுக்கு மாற்றாக இருக்கும் ஒரே ஒரு அரசியல் கட்சியான காங்கிரஸ் தவறிவிட்டது.  இம்மாநிலத்தில் அரசியல் நிலைத்தன்மை நிலவுவதே பா.ஜ.கட்சியின் தொடர்ந்த தேர்தல் வெற்றிகளுக்குக் காரணமாக இருப்பது ஆகும். இம் மாநிலத்தில்  காங்கிரசு ஆட்சியில் இருந்தபோது, கட்சியினரிடையே நிலவிய உட்கட்சி சண்டைகளும், அதன் விளைவாக ஏற்பட்ட சமூக பதற்றங்களும் பா.ஜ.கட்சியில் இல்லாமல் மறைந்து போயின.

படிதார் மற்றும் ஆதிதிராவிடர்கள் சமூக நலன் களை ஆதரிப்பதற்காக ஜாதிப் பிரிவினைகளைப் மறுபடியும் ஒரு முறை பயன்படுத்திக் கொள்ள முயன்ற காங்கிரசு கட்சி, இச் சமூகக் குழுக்களின் தலைமைக்குப் போட்டியிடுபவர்களை ஆதரிக்க முன்வந்தது, எதிர்காலத்தில் எழ இயன்ற சச்சரவுகளைச் சுட்டிக் காட்டுவதாக அமைந்தது. குஜராத் மாநிலத்திலோ அல்லது வேறு எந்த மாநிலத்திலோ கட்சி முன்னேற்றம் பெறவேண்டும் என்று காங்கிரசு விரும்பினால், ஜாதிய அடிப்படையில் கணக்கிடுவதை அது கைவிட வேண்டும். பா.ஜ.கட்சியின் இந்துத்துவக் கோட்பாட்டின் முதுகெலும்பாக அமைந்திருக்கும் குஜராத்தில் உள்ள அதிக எண்ணிக்கையிலான இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் மற்றும் பழங்குடியின மக்களின் ஆதரவை பா.ஜ.க. ஏற்கெனவே திரட்டி வைத்துள்ளது. செல்வாக்கு மிகுந்த ஜாதி மற்றும் சமூக மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக ராகுல் காந்திக்கு எதிராக, குஜராத் பெருமை என்ற உணர்வு பூர்வமான பிரச்சாரத்தை மோடி தேர்ந்தெடுத்ததில் ஓரளவு நியாயமும் இருக்கிறது. இவ்வாறு காங்கிரசு தோல்வி அடைந்ததால்தான்,  மாநில அரசியலில் பா.ஜ.க. முதலிடம் வகிக்கிறது.

குஜராத்தைப்பற்றி ஆர்வம் அளிக்கும் மற் றொரு உண்மை,  இந்த மாநிலத்தின் இரண்டு பெரிய கட்சிகளுமே 40 சதவிகிதத்திற்கு மேலான வாக்குகளைப் பெற்றுள்ளன. பா.ஜ.க. ஏறக்குறைய 50 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது. பா.ஜ.கட்சி யாலோ, மோடியாலோ கவரப்படாத வாக்காளர்கள் ஒரு பெரும் பகுதியினர் இருப்பதை அது காட்டுகிறது.

பா.ஜ.கட்சியின் குஜராத் தேர்தல் வெற்றியைப் பற்றி பேசும்போது,  மோடியின் கவர்ச்சி அல்லது மோடியின் மந்திர தந்திர வித்தைபற்றி பேசுவது வலுவில்லாத ஒரு விளக்கமாகும். குஜராத் மக்கள் தங்களுக்கு முன் தேர்வுக்கு உள்ள கட்சிகளை எடை போட்டுப் பார்க்கின்றனர்.  ஒரு மூன்றாவது அரசியல் சக்தி உருவாவதற்கு இம்மாநிலம் இடம் கொடுக்கத் தயாராக இருப்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கொள்கை, கோட்பாடுகளில் இருந்து  மாறுபட்ட கட்சியாக அது இருக்க வேண்டும்.

நன்றி: ‘தி டெக்கான் கிரானிகிள்', 17.12.2017

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner