எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

- ஆனந்த் கே. சஹாய்

 

குஜராத் சட்ட மன்றத் தேர்தல் முடிவுகளைக் கண்டு பா.ஜ.க. அதிர்ச்சி அடைந்துள்ளது. ஆனாலும் தான் துணிவாக இருப்பதாகக் காட்டிக் கொள்வதற்கு என்ன வெல்லாம் செய்ய வேண்டுமோ அவற்றையெல்லாம் செய்து வருகிறது. காங்கிரசு தேர்தலில் தோல்வி அடைந்து விட்ட போதிலும், அத்தோல்வியிலும் கசப்பு கலந்த இனிப்பு இருக்கத்தான் செய்கிறது.

வாக்குகள் எண்ணப்படும்போது, குறைந்த அளவு பெரும்பான்மையில் காங்கிரசு வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போகவில்லை என்ற தோற்றத்தைத் தந்த நெருக்கடியான தருணங்களும் இருந்தன. இறுதியாக எண்ணி முடிக்கப்பட்ட பத்துப் பன்னிரண்டு தொகுதிகளின் முடிவுகள் எந்தப் பக்கத்தில் வேண்டுமானாலும் சாயலாம் என்னும் அளவுக்கு, இரு கட்சிகளுக்கும் இடையே இருந்த வாக்கு வித்தியாசம் குறைவாகவே இருந்தது.

எப்போதுமே பா.ஜ.கட்சிக்கு ஆதரவாக இருக்கும்,  தாழ்ந்த நிலையில் இருக்கும் ஒரு காவிப்படையின் சாதாரணத் தொண்டர் முன் தலை வணங்கி, நெற்றியைத் தேய்த்துக் கொண்டிருக்கும்,   தொலைக்காட்சி செய்தித் தொகுப்பாளர்கள் எல்லாம் தொனி மாற்றி பேசியது எதையும் கற்பனைக்கு விட்டுவிடவில்லை. தேர்தல் கணிப்புகள் வெளிவந்தபோது, சங்கடத்தை ஏற்படுத்தும் அளவுக்கும், வாய் கிழியும் அளவுக்கும் அச்சுறுத்தும்  சவடால் பேசி வந்த  பா.ஜ.க. தலைவர்களின் ஜம்பமான பேச்சு திடீரென்று அடங்கிப் போனது.

2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்னோடியாக அதற்கு முன்பு நடைபெற உள்ள பா.ஜ.க. ஆட்சி செய்யும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் போன்ற மாநில சட்ட மன்றத் தேர்தல்களில், இந்துத்துவக் கோட்பாட்டுக்கு எதிரான சக்திகள் தாங்கள் இழந்திருந்த அரசியல் களத்தை மீண்டும் கைப்பற்றி ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்ற சூழ்நிலையை குஜராத் தேர்தல் முடிவுகள் உருவாக்கியுள்ளன.

குஜராத் சட்டமன்றத் தேர்தலின் மிகமிக முக்கியமான விளைவு, சில வார காலத்துக்கு முன்னர் முடியாது என்று கருதிய அளவில், நாட்டின் அரசியலில்  புதியதொரு  திருப்பத்தை அது  ஏற்படுத்தியது என்பதுதான்.

இத்தகைய ஒரு பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்ததற்கான அனைத்துப் பெருமையும் காங்கிரசு கட்சியின் புதிய தலைவர் ராகுல் காந்தியையே சாரும். தேர்தலில் போட்டியிட இயன்ற வயதினைக் கூட எட்டாத ஹர்திக் படேல் மற்றும் அல்பேஷ் தாகூர், ஜிக்னேஷ் மேவானி ஆகியோரின் சோர்விலாத உழைப்பினால் குஜராத் மாநிலத்தில் கொண்டு வரப்பட்ட அரசியல் சூழ்நிலை மாற்றத்தை, மிகுந்த திறமையுடன் ராகுல் காந்தி வழிநடத்திச் சென்றார். இந்த மூன்று இளம் தலைவர்களின் பெயர்களும் இப்போது குஜராத் மாநிலத்தின் ஒவ்வொரு குடும்பத்தினராலும் கொண்டாடப்படும் பெயர்களாக ஆகிவிட்டன.

எந்த அரசியல் கட்சியையும் சாராதவர்கள் அவர்கள் என்ற போதிலும், அவர்களது அரசியல் நோக்கம் என்னவோ மிகத் தெளிவாகவே இருந்தது. ‘குஜராத் மாதிரியிலான முன்னேற்றம்’ என்ற முழக்கம் நாற்றமடிப்பது என்பதால், பா.ஜ.கட்சியைத் தோற்கடிக்க வேண்டும் என்பதுதான் அவர்களது நோக்கம். மிகப் பெரிய பணக்காரர்களுக்கு ஆதரவாகவும், ஏழைகளுக்கு எதிராகவும் பிரதமர் நரேந்திர மோடி கடைபிடிக்கும் பொருளாதார மாதிரிக் கொள்கை இவ்வளவு அசாதாரணமான ஆர்வத்துடன் ஏன் திணிக்கப்படுகிறது  என்பதற்கு ஹர்திக் படேல், அல்பேஷ் தாகூர், ஜினேஷ் மேவானி ஆகியோரே வாழும் அடையாளங்களாக விளங்குகின்றனர்.

சாதாரண குஜராத் மக்களால் கட்டமைக்கப்பட்ட, பா.ஜ.கட்சியைக் கவலைப்படச் செய்த, புரட்சிக்கு அடித் தளமாக விளங்கியதே இந்த கள உண்மை நிலைதான்.

ஹல்டிகட்டியின் கதையை நன்கு அறிந்தவர்கள்தான் பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள்.

ராஜா மான்சிங்கின் தலைமையில் பேரரசர் அக்பரின் படைகளுக்கு எதிராக 1576 இல்  நடைபெற்ற போரில் சித்தூர் அரசர் மஹாராணா பிரதாப்சிங் வெளிப்படுத்திய ஈடு இணையற்ற வீரத்தை ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. எடுத்துக்காட்டுவது வழக்கமே. முடிவே அற்ற, இயல்பான இந்து முஸ்லிம் மன்னர்களிடையேயான போர்களை, தங்களது தவறான இந்துத்துவக் கோட்பாட்டினைப் பற்றி பிரச்சாரம் செய்வதற்கான ஒரு கருவியாக ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க பயன்படுத்திக் கொண்டன.

இந்த  குஜராத் தேர்தலில்போது மட்டும்,  ராகுல் காந்தி பிரதாப் சிங் ராணாவை பிரதிபலிப்பவராகவும்,   பேரரசரின் அதிகாரத்தையும், ஆள்படை, இழிந்த அரச தந்திரத்தையும்  கொண்ட  பேரரசர் அக்பரை பிரதிபலிப்பவராக  நரேந்திர மோடியும் இருந்தனர்.  இப்போரில் மான்சிங் என்று எவரும் இல்லை.

இப்போரில் போரிடுவதற்கான குஜராத் பா.ஜ.க. தலைவர்கள் எவருமில்லை. அச் சுமையை பேரரசரே (மோடியே)  ஏற்றுக் கொண்டார்.  அவரது வாழ்க்கையே தேர்தலின் வெற்றி தோல்வியைப் பொருத்திருப்பதாகக் கருதிய மோடியால் மற்றவர்களை நம்பமுடியவில்லை.

அந்தக் குறுகிய கணவாயில் நடைபெற்ற போரில் பிரதாப் சிங் ராணா தோல்வி அடைந்தார். அக்பரின் படை வீரர்களின் எண்ணிக்கையை விட பல மடங்கு குறைவான படைவீரர்களைக் கொண்டிருந்த பிரதாப் சிங் ராணா, அவருக்கு ஆதரவாக இருந்த வீரம் செறிந்த வில்லாளிகளின் உதவியுடன் இறுதி வரை மிகுந்த வீரத்துடன் போர் புரிந்தார். அந்த வீரம் நிறைந்த வில்லாளிகள் நாட்டுப் புறப்பாடல்களிலும், நாடோடிக் கதைகளிலும்  இன்றும் இடம் பெற்றிருக்கின்றனர்.  இப்போரில் தோல்வி அடைந்த பிரதாப் சிங் ராணா, உயிருடன் தப்பிச் சென்று, அதன் பின் நடைபெற்ற போர் ஒன்றில் வெற்றி பெற்று, தான் இழந்த ராஜ்யத்தின் பெரும்பகுதியை வென்றெடுத்தார்.

ஹர்திக் படேல், அல்பேஷ் தாகூர், ஜிங்னேஷ் மேவானி ஆகியோரே வீரம் செறிந்த குஜராத் வில்லாளி கள் ஆவர்.  பிரதாப் இல்லாமல் போயிருந்தால் எவ் வாறு போரே ஏற்பட்டிருக்காது என்பது போல இந்த மூவரும்இல்லாமல் போயிருந்தால் இந்த தேர்தல் மேடையே அமைத்திருக்கப்பட இயலாது.

தங்களுக்குப் பெரும் புகழ் சேர்க்கும் சூழ்நிலைகளை சில நேரங்களில் தலைவர்கள்  உருவாக்கிக் கொள்கிறார்கள். சில நேரங்களில், ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையை எதிர் கொள்ளும் அவர்கள் காட்சியையே தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்கின்றனர். மத உணர்வைத் தூண்டிவிட்டு,  மக்களிடையே பிரிவினையை உருவாக்கும் சூழ்நிலைகள் குஜராத்தில் உருவானதே மோடியின் செயல்பாடுகளின் விளைவாகும்.

தங்களுக்கு அதிக சலுகைகள் தரப்படவேண்டும் என்று பெரும் தொழிலதிபர்கள் அரசைத் தொல்லைப்படுத்திக் கொண்டே இருப்பதற்கும், சாதாரண மக்களுக்கும், கீழ்நிலையில் உள்ள வர்த்தகர்கள், வியாபாரிகள், தொழில திபர்கள், விவசாயிகள் தொழிலாளிகள் என அனைத்துத் தரப்பினருக்கும் தொல்லைகளும் துன்பங்களும் ஏற்பட்டுக் கொண்டு இருப்பதற்குமான எடுத்துக் காட்டுகளை குறிப்பாக  இம்மாநிலத்தில் காணலாம்.

வேலை வாய்ப்புகள் கிடைப்பது அரிதினிலும் அரிதாகி விட்டது. விவசாயிகளின் நிலங்களை தொழிலதிபர்களுக்கு மாற்றுவதற்கான சூழ்நிலைகள் உருவாக்கப் படுகின்றன.  முன்பு நிலங்களில் வேலை செய்து வந்த விவசாயத் தொழிலாளிகள் இப்போது வேலை வாய்ப்பற்றோரின் மிக நீண்ட பட்டியலில் சேர்ந்துவிட்டனர்.

இம்முறை குஜராத் தேர்தல் பிரச்சாரத்தின் போது முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரம் நாள்தோறும் பொழுதொரு வண்ணமுமாக காவிப் படையினரால் மேற்கொண்டு வரப்பட்டது.  குஜராத் சட்டமன்றத் தேர்தலில் மோடியைத் தோற்கடிப்பதற்காக பாகிஸ்தானுடன் சேர்ந்து சதி செய்ததாக முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மீதும்,   முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த இந்திய குடியரசு முன்னாள் துணைத் தலைவர் மீதும்,  இந்திய ராணுவ முன்னாள் தளபதி ஒருவர் மீதும்  குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் இந்தப் பிரச்சாரம் மக்களிடம் எடுபடவில்லை.

இந்துத்துவ அரசியலை முன்னெடுத்துச் செல்பவர்கள் இனியும் வழக்கம் போல தங்களால் செயல்பட முடியாது என்பதையே இது தெளிவாக்கியுள்ளது.

சவால் வந்து சேர்ந்துவிட்டது. அன்றாட வாழ்க்கை பற்றிய, விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் பற்றிய, விவசாயிகளும் தொழிலாளிகளும் படும் துன்பங்கள் பற்றிய கவலைகளைத் தீர்ப்பதற்குரிய, மக்களால் செலவிட இயன்ற அளவிலான குடியிருப்பு, கல்வி, மருத்துவ வசதிகள் அளிப்பதற்கான செயல்திட்டங்கள் உருவாக்கப் பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இவை அனைத்தும் மதச்சார்பற்ற, அன்றாட வாழ்க்கை பற்றிய  பிரச்சினைகள் ஆகும்; மதத்துடன் எந்தவிதத் தொடர்பும் அற்றவை. இவற்றுக்கெல்லாம் இந்து மத அரசியல் செய்யும் இந்துத்துவக் கோட்பாட்டாளரால் அளிக்க இயன்ற எந்த வித பதிலும் இல்லை.

‘மதச் சார்பற்ற’ என்ற சொல்லின் உண்மையான பொருளை அவர்கள் புரிந்து கொள்ள வில்லை என்றே தோன்றுகிறது. முட்டாள்தனமாக அதனை அவர்கள் கிண்டல் செய்கின்றனர். தாராளமனப்பான்மை கொண்ட ‘மதச்சார்பற்ற’ அரசியலில் உள்ள சிக்கல்களைக் கையாளத் தேவையான ஆற்றலையோ, மனப்பான்மையையோ, மக்களது வறுமையை முடிவுக்குக் கொண்டு வருவதற் கான பொருளாதார இலக்குகளையோ அவர்கள் பெற்றி ருக்கவில்லை.

இத்தகைய நாட்டின் சிக்கல் நிறைந்த பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழிகளைக் கண்டறிந்து செயல்படுத்துவதற்கு மாறாக, கலாச்சார தேசியம், ராணுவ வழியிலான வாழ்க்கை பற்றிய பெருமை, நினைத்த போதெல்லாம் தேசியக் கொடியை ஏற்றுவது என்பது போன்றவற்றை  தெளிவின்றி பேசி மக்களை அவர்கள் பெருங் குழப்பத்தில் ஆழ்த்தி விடுகின்றனர். ஆனால் இவற்றால் எல்லாம் வழக்கம் போல மக்களைக் கவர்ந்திழுக்க இயலவில்லை. ஏதோ ஒரு மாற்றம் ஏற்பட்டுவிட்டது. அதுதான் இப்போது பா.ஜ.  கட்சியின் கவலையாக இருக்கும்.

தங்களது நாட்டுப் பற்றைப் பற்றி மோடி மற்றும் அமித் ஷாவின் சான்றிதழ் தங்களுக்குத் தேவையில்லை என்றும்,  பாரதமாதா என்ற உணர்வின் பின்னணியைப் பற்றி, இந்துத்துவக் கோட்பாடு காட்சிக்குத் தோன்றுவதற்கு முன்பே  தான் மிகச் சிறப்பாக அறிந்திருப்பதாகவும் குஜராத் வாக்காளர்கள் இப்போதுதான் அவர்களுக்கு தந்தி அனுப்பி உள்ளனர்.

மதச்சார்பற்ற வாழ்க்கைக்கான வழி என்ற வடிவில் பா.ஜ.கட்சிக்கான சவால் வந்திருக்கிறது என்றால், அந்த சவாலை விடுபவர் வடிவில் ராகுல் காந்தியும் வந்துவிட்டார். என்றாலும், இந்த வாய்ப்பை காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் எவ்வாறு  பயன்படுத்திக் கொள்ளப் போகிறார் என்பதை நாம் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அவருடன் வர விரும்புபவர்கள் அனைவரையும்  தன்னுடன் அழைத்துச் செல்வதற்கான பெருந்தன்மை கொண்டவராக அவர் இருக்கிறாரா? அன்றாட அரசியலின் சின்னஞ்சிறு சச்சரவுகளால் கவனம் திசை திரும்பாமல் இருக்கப்போகிறாரா?

நன்றி: ‘தி டெக்கான் கிரானிகிள்’, 17.12.2017

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner