எழுத்துரு அளவு Larger Font Smaller Font


- முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன்

மஞ்சை வசந்தன் எழுதி திராவிடர் கழக இயக்க வெளியீடாக வந்துள்ள தமிழர் தலைவர், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 85ஆம் ஆண்டுப் பிறந்த நாளில் வெளிவந்துள்ள "வியப்பின் மறுபெயர் வீரமணி" என்னும் புத்தகம் திராவிடர் கழகத்தவர் இல்லங்களில் இடம் பெற வேண் டிய - கட்டாயம் இடம் பெற வேண்டிய புத்தகம் ஏன்?

அவர் திராவிடர் கழகத் தலைவர் என்பதாலா? ஏன் இடம் பெற வேண்டும்?

பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்து உழைத்து உயர்ந்தவர் என்பதாலா? வறுமைச் சூழலில் பிறந்து வளர்ந்தாலும் அறநெறி, ஒழுக்கநெறி வழுவாமல், பெரு மைக்குரியவராய் முயன்று முன்னேறியவர் என்பதாலா?

பத்து வயதிலும், பள்ளிப் பருவத்திலும் மேடை ஏறி முழங்கி, திருமண வாழ்த்து உரை நிகழ்த்திய அற்புதம் நிகழ்த்தியவர் என்பதாலா?

மேடையேறி முழங்கிச் சமூகநீதி இயக்கத்தில் மேடைகளில் முழங்கிய அதே வேளையில் சரசுவதி கடாட்சம் என்பதையே விமரிசித்தவர், கல்வி ஓட்டத்தில் சிறந்து விளங்கிக் கல்வியில் முதல் தகுதி, பாராட்டு, பதக்கம் என்று பலபலப் பெற்றவர் என்பதாலா?

நூற்றுக்கணக்கில் நூல்களைப் படைத்தவர், நூற்றுக் கணக்கான வரிகளை இன்று வரை எழுதிக் குவித்தவர் இவர்போல் எவருமில்லை என்பதாலா?

மாற்றுக்கருத்துடையோர், மறுத்து உரைக்க வாதிடுவோர் எவரையும் கண்ணியமாக, ‘கப்சிப்' என்று வாய்மூடிடச் செய்ய வல்லவர் என்பதாலா?

தத்துவ விசாரணையில் தலை சிறந்தவர், மறுப்பு, திறனாய்வினைத் திண்மையாகத், திறமையாக, நுட்ப மாகச் செய்திட வல்லார் என்பதாலா?

பேச்சு, எழுத்து, நிர்வாகம், தலைமை, தொண்டு, இதழாசிரியர், போராட்டக்களத்தில் இன்றும் தலைவரான போதும் மற்றவரைத் தள்ளிவிட்டுவிட்டுத் தான் பின் நிற்காத் தளபதி, தலைவரான காலத்தில் தழும்பு மாறாச் சிறைக்கொடுமைக்கு ஆளானவர், எதிரிகளின் வன் முறைத் தாக்குதலுக்கு ஆட்பட்டவர், உலக சாதனைக் குரிய ஓய்வறியாத் தொண்டர் என்பதாலா?

எல்லாவற்றிற்கும் மேலாக விஞ்சி நிற்கும் மானிட உயர்பண்புத் திறமாம் மனித நேயர் என்பதாலா? என இப்படிப் பலப்பல கேள்விகள் கேட்டு இவை எல்லா வற்றிலும்தான் என்பதை மறுப்பதற்கில்லை என்ற போதி லும், இவற்றையெல்லாம் விட விஞ்சிய காரணம் ஏதேனும் இருக்க வேண்டும் எனில் திராவிடர் கழகம் என்பது யாது? தந்தை பெரியார் எனும் தன்னிகரில்லாத் தலைவர் யார்? அவர் வலியுறுத்திய கோட்பாடு எது என்பதை அறியத் தெளிய எடுத்துக்கூற, இயக்கக் கொள்கை, கோட்பாட்டை இவர் வாழ்க்கை வாயிலாக எவருக்கும் ‘பளிச்' எனப்பதில் கூற உதவிடும் நூல் இந்நூல்.

தந்தை பெரியாரைத் தமிழ் கூறும் நல்லுலகிற்குச் சாமி சிதம்பரனார் அறிமுகம் செய்தது போல், தமிழர் தலைவர் ஆசிரியரை முழுமையாக ஆவணப்படுத்திய நூல் இது என்பதால், என்றும் பேசப்படவேண்டிய நூல் என்பதால் இதன் அருமை பெருமைகளை அள்ளி, அள்ளிக் குவிக்கிறோம்.

கி.வீரமணியா? கடவுள் மறுப்பாளர் - தந்தை பெரியாருக்குப் பின், அன்னை மணியம்மையாருக்குப் பின் திராவிடர் கழகத்தின் தலைவராக விளங்கி வருபவர் என்று மட்டுமல்லாது, அவர் சாதனைகளைத் தமிழினத் திற்கு ஆற்றிய மகத்தான மிகப்பெரிய தொண்டை, தந்தை பெரியாரையே முன் நிறுத்தி, அவர் புகழ், பெருமைக்கொடி பறக்கச் செய்து, தந்தை பெரியாரை உலக மயமாக்கி, எல்லாவற்றிற்கும் மேல் தந்தை பெரியாரின் கொள்கைகளை மட்டுமல்லாது, தந்தை பெரியார் விட்டுச்சென்ற சொத்துக்களையும், சிதறாமல் காத்து வரும் பெருமை ஒன்று போதும்.

எத்தனை, எத்தனை நிறுவனங்கள்; செம்மாந்து உயர்ந்து நிற்கின்றன எனில் அத்தனைக்கும் பின்னே இந்த அற்புத மனிதரின் உழைப்பாற்றல் கண்டு நூலைப் படிப்போர் வியப்பில் நிற்பது உறுதி.

எவரேனும் வீண்பழி, அவதூறும் பேசினால் - வீரமணி என்னும் மனிதர் இத்தனை, இத்தனை செய்துள்ளார் எனத் தக்க ஆதாரத்துடன் பேசும் நூல் "வியப்பின் மறுபெயர் வீரமணி".

தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு சுயமரியாதை இயக்க வரலாறு, திராவிடர் கழக வரலாறு என்றால், தமிழர் தலைவர் ஆசிரியரின் வாழ்க்கை வரலாறு கூறும் நூல், அவருடைய வாழ்க்கை வரலாறு என்பதை விடத் தந்தை பெரியாருக்குப்பின், அன்னை மணியம்மை யாருக்குப் பின் திராவிடர் கழக வரலாறு கூறும் நூல்.

அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் பிறப்பு, படிப்பு, வளர்ப்பு என்ற கோணத்தில் மட்டும் அமையாமல் இயக்க வரலாறாகவே முன்னோக்கிச் செல்வதால் பிஞ்சு களுக்கும், பெரியவரான இளைஞர்களுக்கும், பொது வாழ்விற்கு வரும் தொண்டர்களுக்கும், தலைவர்களுக் கும், இவர் போல யார்? என்று ஊர் சொல்லத்தக்க இவர் வாழ்வு ஒரு வழித்தடம்தான், ஓர் உந்துசக்திதான், உயரிய பாடம் தான்!

புரட்சிக்கவிஞர் ஒரு முரட்டுப்பாவலர். எவரையும் எளிதில் பாராட்டிவிடமாட்டார். அப்படியே பாராட்டினார் எனில் நெஞ்சம் நிறையப் பாராட்டுவார்.

60 ஆண்டுகளுக்கு முன்பே - மிகப்பெரிய அரிய சாதனை செய்த காலத்திற்கு முன்பே புரட்சிக் கவிஞர் பாடிய அந்தப்பாடல் வரிகள் போதும் வீரமணி யார்? என்பதைப் பிழிந்து பழச்சாறாகக் கொடுத்த வரிகள்.

"இளமை வளமையை விரும்பும் என்பர்

இளமை எளிமையை விரும்பிய புதுமையை

வீரமணியிடம் நேரில் கண்டுள்ளேன்!

பாடிக் கைவீசிப் பலருடன் உலவி

வேடிக்கை பேசும் வாடிக்கைதன்னை

அவன் பாற் காண்கிலேன் அன்றும் இன்றும்

உற்றநோய் நோன்றலும் ஊர்நலம் ஓம்பலும்

நற்றவம் என்பர்; தொண்டென நவில்வர்!

தொண்டு மனப்பான்மை அந்தத் தூயனைக்

கொண்டது குழந்தைப் பருவத்திலேயே!

 

தமிழன் அடிமை தவிர்த்து குன்றென நிமிர்தல்

வேண்டும் என்றே நிகழ்த்தும்

பெரியார் ஆணை ஒன்றே பெரிதெனக்

கருதிய கருத்து வீரமணியை

வீண் செயல் எதிலும் வீழ்த்த வில்லை.

‘அண்டிப் பிறரை அழிக்க அல்ல

உண்டிக்கல்ல உயர்வுக்கல்ல

தொண்டுக்காகக் கல்வித்துறையில் தேர்ந்தோன்'

‘நினைவின் ஆற்றல் நிறைந்த வீரமணி'

‘பெருங் கூட்டத்துப் பெரியரும் பிள்ளையும்

விரும்பிப் பேசும் ஆற்றல் மிக்கோன்'

‘தமிழர் தமக்கும் தமிழ் மொழிக்கும்

உழைப்பதே செல்வமாகக் கொண்ட

மாண்பார் வீரமணி'

இவ்வாறெல்லாம் புரட்சிக் கவிஞர் 60 ஆண்டுகளுக்கு முன் கூறியவற்றை சரிபார்ப்பு பட்டியல் (சிபிணிசிரி லிமிஷிஜி) என்று கொண்டு ‘வியப்பின் மறுபெயர் வீரமணி' எனும் புத்தகத்தைப் படித்தால் அத்தனையும் ஒன்று கூடப் பிறழாது சரியாக இன்றும் இருப்பதைக் காணலாம்.

இந்தப் புத்தகம் கழகத்தவர் கரங்களில் மட்டும் தான் என்றில்லை, கி.வீரமணி குறித்து அறிய விரும்புவோர் கைகளில் சென்று சேரவேண்டும். பலப்பலப் பதிப்புகள் வெளிவரவேண்டும். தந்தை பெரியாருக்கு ஒரு சாமி சிதம்பரனார், தமிழர் தலைவர் வீரமணி அவர்களுக்கு ஒரு மஞ்சை வசந்தன் எனும் ஆவணமாகக் காலம் காலம் பேசப்படும் என்பது திண்ணம்.

இந்நூல் தமிழ்மண், இந்திய மண் கடந்து மலேயா, சிங்கப்பூர் ஆகிய கிளை நாடுகளிலும், அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி முதலிய மேலை நாடுகளிலும் சென்று சேர வேண்டும்.

இந்நூல் பரவுவதால், பலப்பலப் பதிப்புகளைக் காண்பதால் ஆசிரியருக்குப் சிறப்பு, பெருமை என்பதை விடத் திராவிடர் இயக்கத்திற்கே பெருமை என்று கூறலாம்.

இந்தப் புத்தகத்தைப் படிப்பதால் தமிழர் தலைவர் தமிழ்நாட்டில் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டை, நடை முறை செய்ததன் வழி மக்கள் தொகை விழுக்காட்டிற் கேற்ப இட ஒதுக்கீடு செய்தல் வேண்டும் எனும் கொள்கையை  நடைமுறைப்படுத்தி இந்தியாவிற்கே வழிகாட்டியிருக்கிறார் என்பதை நாம் கூறுவதை விட முன்னாள் தலைமை அமைச்சர் வி.பி.சிங் பாராட்டினார் என்பதை தெள்ளத் தெளிவாய் உணரலாம்.

வீரமணி எனும் இந்த மனிதரின் இன்றியமை யாமையை இந்தத் தமிழ்ச் சமூகம் இன்னும் முழுமையாக உணராது இருக்கலாம். வடபுலத்துத் தலைவர்கள் அதிலும் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் உணர்ந்ததுடன் அல்லாமல், ஒரு கோரிக்கையை ஒரு மாநிலத்தின் முதல்வர் நிதிஷ்குமார், எந்த அரசுப் பதவியிலும் இல் லாத, எந்த அரசுப் பொறுப்பிலும் இல்லாத தமிழர் தலைவருக்கு விடுத்தார் என்பதை அறிய இந்நூல் உதவுகிறது.

பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் கோரிக்கை வேண்டு கோள் இது!

"நீங்கள் இங்கே வரவேண்டும், வரவேண்டும், மீண்டும் மீண்டும் வரவேண்டும் பீகார் மக்களின் சார்பிலும், என்னுடைய சார்பிலும் கோரிக்கை வைக் கிறேன். நீங்கள் பீகாரையும் உங்களின் மற்றோர் ஊராக நினைத்துக் கொள்ளுங்கள். அதாவது உங்களின் சிந்தனையை நாங்கள் அனைவரும் ஏற்றுக் கொண் டுள்ளோம். பீகார் அரசின் முக்கியக் கொள்கையே சமூகநீதியோடு கலந்த வளர்ச்சிதான்" என்று கூறினார் என்றால் இவரின் தொண்டு இந்தத் தமிழ் மண்ணுக்கு மட்டுமல்லாது, பீகாருக்கும் தேவைப்பட்டது என்றால், இவர்தம் மகத்தான தொண்டின் மாண்பை உணரலாம்.

இந்நூல் ஒரு முழுமையான படப்பிடிப்பு. முத்து, முத்தான செய்திக் கருவூலங்கள். எழுதி எழுதிக் காட்ட ஏராளமான தகவல்கள். எதைக்கூறுவது, எதை விடுவது என்று இப்புத்தகத்தை ஆய்வு செய்யும் விமர்சகர் திணறத்தான் செய்வார்.

"திருவாரூரில் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள், அரங்கண்ணல் உள்ளிட்ட நண்பர்கள் துணையுடன் தென் மண்டலத் திராவிடர் மாணவர் மாநாட்டினை மே முதல் நாள் 1945இல் நடத்தினார். அப்போது கலைஞருக்கு வயது 21, அந்த மாநாட்டில் "போர்க்களம் நோக்கி" எனும் தலைப்பில் சிறப்புரையாற்றிட அழைக்கப் பெற்றவர் கி.வீரமணி, அப்போது அவருக்கு வயது 12 என்ற தகவலெல்லாம், திராவிடர் கழகத்தவரை மட்டுமல்லாது திமுகவினரையும் இந்தப் புத்தகத்தை வாங்கிப் படிக்கத் தூண்டும்.

ஓய்வறியா மேடைப் பேச்சாளர் வீரமணி என்பது உலகறியும், ஆனால் அவர் இசைப்பாடகர். மாநாடுகளில் பாடியுள்ளார் என்பது மட்டுமல்லாது இசை முரசு நாகூர் அனீபாவுடன் பாடியுள்ளார் என்பது போன்ற வியப்புச் செய்திகள் பலவும் நூலில் உள்ளன.

மிகப்பெருந் தலைவர்களான தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா இடையே பிணக்குத் தீர்க்கத் தூதுவராய்ச் சென்ற பெரிய மனிதர், 14 வயது மாணவர், இளைஞர் வீரமணி முதலிய தகவல்களும் உள்ளன.

ஆகவே இந்நூல் வீரமணியின் வரலாறு கூறும் நூல், தந்தை பெரியாரின் தகுந்த வாரிசு என்று மட்டும் கூறுவதன்று. திராவிட இயக்க வரலாறு கூறும் நூல். அவதூறு பேசும் அறிவிலிகளுக்கு ஆதாரத்துடன் சாட்டையடி தரும் நூல் என்பதோடு, வாழ்வியல் சிந்தனை முதலிய அறிவுக் களஞ்சியங்களும் இடம் பெற்ற நூல்.

ஓர் அரசியல் தலைவருக்கு ஒழுக்கம், அறநெறி, துணிவு, நேர்மைத்திறம் வேண்டுமோ, வேண்டாமோ சமூக சீர்த்திருத்த இயக்கத்தலைவருக்கு இன்றியமை யாதது என்ற நெறியில் பிறழாமல் வாழ்ந்தவர் தந்தை பெரியார்.

அந்தத் தந்தை பெரியார் வழியில் ஒழுக்கத்துடன், அறக்கோட்பாட்டுடன், துணிவுடன், நேர்மை பிறழாமல் பத்து வயது முதல் எண்பத்தைந்து வயது வரை 75 ஆண்டுக் காலம் வாழ்ந்த ஒரு மனிதரின், மாமனிதரின் வரலாற்றை எழுதப்போந்த நூலாசிரியர் மஞ்சை வசந்தன் பாராட்டுக்குரியவர்.

பாஸ்வெல்லின் ஜான்சன் வரலாறு, மோனிகா பெல்டனின் மி விமீமீt - ஸிணீழீணீழீவீ, மேகன்தாஸ் காந்தியின் ராஜாஜி வாழ்க்கை வரலாறு, தனஞ்செய் கீரின் அம் பேத்கர், ஜோதிபா பூலே வாழ்க்கை வரலாறு நூல்கள் போல் "வியப்பின் மறுபெயர் வீரமணி" பேசப்படும், பேசப்படவேண்டும்!

அத்தகு முதன்மைப் பணியில் திராவிடர் கழகத் தோழர்கள் ஒவ்வொருவரும் இந்நூலைச் சமுதாயத்தில் கொண்டு சேர்ப்பது, பார், பார்... எங்கள் இயக்கத் தலைவரின் பெருமையை, விந்தை வாழ்வை என்று மாற்றாரை உணரச் செய்வதன் வாயிலாக, இவ்வியக் கத்தவர் என்று பெருமை கொள்ள உதவும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner