எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

-  கவிஞர் கலி.பூங்குன்றன்

துணைத் தலைவர், திராவிடர் கழகம்

உயர் எண்ணங்கள் மலரும் சோலையாம் தந்தை பெரியார் அடிப்படையில் சமத்துவவாதி - சமதர்மவாதி. குறள்போல அவர் சொன்ன கருத்து.

“பேதமற்ற உலகமே மேலான திருப்தியான இடமாகும்”

(‘குடிஅரசு’ - 11.11.1944, பக்கம் 11)

என்று குறிப்பிட்டுள்ளார்.

பேதம் - அது எந்த வடிவத்திலும் கூடாது - அறவே கூடாது என்பது அவரின் அசைக்க முடியாத ஆணித்தரமான கருத்தாகும்.

அவர் கடவுளை எதிர்த்ததும், மதத்தை மறுத்ததும், வேத சாஸ்திர புராண இதிகாசங்களை எதிர்த்ததும், ஏன் அரசமைப்புச் சட்டத்தையே எதிர்த்துப் போராடியதும் எல்லாமே ஜாதி ஒழிப்புக்காகத்தான். இவை அனைத்தும் ஜாதியைப் பாதுகாக்கும் சிப்பாய்களாக இருப்பதால்தான் அவற்றை எல்லாம் அவர் எதிர்க்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டது.

இதுகுறித்து தந்தை பெரியார் வாயிலாகக் கேட்பதுதான் சரியானதாக இருக்க முடியும்.

“நாங்கள் தீண்டாமை ஏன்? எப்படி வந்தது? என்று பார்க்கிறோம். மதத்தால் அவர்கள் தீண்டப்படாதவர்கள் என்று பதில் வருகிறது!

மதத்தால் ஏன் தீண்டப்படாதவர்கள் என்று கேட்கிறோம். அது சாஸ்திர சம்மதம் என்கிறார்கள். இந்த சாஸ்திரம் எப்படி வந்தது? என்றால், அது ஆண்டவன் ஆணை என்கிறார்கள்.

அப்படியானால் தீண்டாமையை நிலைக்கச் செய்யும் மதத்தையும், அதற்கு ஆதரவளிக்கும் சாஸ்திரத்தையும், அவை ஏற்படுத்திய கடவுள்களையும், ஒழித்தால்தான் தீண்டாமை ஒழியும் என்கிறோம்”

(‘விடுதலை’ 16.4.1950)

என்று அறிவியல்பூர்வமாகக் குறிப்பிடுகிறார் பெரியார்.

தந்தை பெரியாரைப் பற்றிக் குறிப்பிடும் அறிஞர் அண்ணா அவர்கள், “மூல பலத்தோடு போர்புரிவதுதான் தந்தை பெரியாரின் போர்முறை” என்று சொன்னதை இந்த இடத்தில் எடுத்துக்காட்டுவது பொருத்தமானதே!

இந்தத் தீண்டாமை, ஜாதி மறுப்பு தந்தை பெரியாரைப் பொருத்தவரை திண்ணைப் பள்ளிக்கூடத்தில் அவர் படித்த அந்தச் சிறு வயது முதலே தானாக உதித்த உணர்வாகும்.

திண்ணைப் பள்ளிக்கூடத்து ஆசிரியரின் மகள், தான் தண்ணீர் குடித்த தம்ளரைத் தண்ணீர்த் தெளித்து எடுத்த அந்தக் கணமே அவரது புத்தியில் வெடித்த மின்னல் கீற்று! அதுவே செடியாகி, மரமாகி, கனியாகிக் காய்த்தது. ஜாதி ஒழிப்பு வீரர் என்ற மகுடத்தை வரலாற்றில் அவருக்குச் சூட்டியது.

1917ஆம் ஆண்டில் ஈரோடு நகராட்சித் தலைவராக இருந்தபோது கொங்கப் பறைத் தெரு என்றிருந்ததை வள்ளுவர் தெரு என்று மாற்றினார் பெரியார்.

பாதுகாக்கப்பட்ட குடிநீரைக் குடிமக்களுக்கு முதன்முதலில் அவர் ஈரோடு நகர் மன்றத் தலைவராக இருந்தபோதுதான் வழங்கினார்.

எல்லா ஜாதிக்காரர்களின் தெருக்கள் வழியாக தண்ணீர் பைப்பு வரும்படிச் செய்துவிட்டார் ஈ.வெ.ரா. என்றுகூட அந்தக் காலகட்டத்தில் குறைகூறியவர்களும் உண்டு.

கீழ்ஜாதிக்காரர்கள் தொட்ட குழாய் என்பதால் அது தீட்டுப்பட்டுவிட்டது என்று கூறி, தண்ணீர்ப் பிடிக்கும் முன் குழயைத் தண்ணீரால் கழுவினர் உயர்ஜாதிக்காரர்கள் - படிப்படியாக அது ஒழிந்தது. இன்றைக்குச் சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன் இது செயல்பாட்டுக்கு வந்தது என்றால் அதற்குக் காரணம் தந்தை பெரியாரின் உள்ளத்தில் எப்பொழுதும் கிளர்ந்து நிற்கும் புரட்சிகரமான சிந்தனை ஒளிதான்.

காங்கிரசில் இருந்தபோதே நெல்லை மாவட்டம் சேரன்மாதேவியில் நடைபெற்ற குருகுலத்தில் ஜாதி வேறுபாடு காட்டப்பட்டது என்பதற்காகப் போர்க்கொடி உயர்த்தி அதனை ஒழித்துக் காட்டியவரும் பெரியாரே!

மாநிலக் காங்கிரஸ் தலைவராக இருந்தபோது திருவிதாங்கூர் சமஸ்தானம் - இன்றைய கேரள மாநிலம் வைக்கத்தில் தீண்டாமையை எதிர்த்துப் போராடி “வைக்கம் வீரர்” என்று வரலாற்றில் மெச்சத்தகுந்த பெருமைக்குரியவராகத் திகழ்ந்தார்.

தந்தை பெரியார் போராடி வெற்றி கண்ட அதே வைக்கத்தில் தமிழ்நாடு அரசு - கேரள மாநில அரசு கூட்டு முயற்சியால் சிறப்பாக நினைவு இல்லம் அமைக்கப்பட்டு, நூலகம், புகைப்படக் காட்சி, சிறுவர் பூங்கா, தந்தை பெரியார் சிலை உள்ளிட்ட அம்சங்கள் அடங்கிய வகையில் வரலாற்றுரீதியாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தனிக் கிணறு, தனிப்பள்ளி, தனிக் குடியிருப்பு போன்றவற்றை என்றைக்குமே பெரியார் ஏற்றுக்கொண்டது கிடையாது.

1926ஆம் ஆண்டு ஏப்ரல் ஆறாம் தேதி காரைக்குடிக்கு மேளதாளத்தோடு அழைக்கப்பட்டார் தந்தை பெரியார். எதற்காக? தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தனிக் கிணற்றினைத் திறந்து வைப்பதற்காக!

அந்த நிகழ்ச்சியில் தந்தை பெரியார் என்ன பேசினார்?

“இந்தக் கிணற்றைத் திறந்து வைக்கும் வேலையைப் பெருமையாகக் கொண்டு எனக்கு அளித்திருந்தாலும் உண்மையைச் சொல்லுகிறேன். இந்தக் கிணற்றைத் திறந்து வைக்கக் கொஞ்சங்கூட என் மனம் இடந்தரவில்லை. இதுபோல தனிக் கிணறு வெட்டுவது ஆதித் திராவிடர்கள் நம்மைவிடத் தாழ்ந்தவர்கள் என்பதும், அவர்கள் நம்முடன் கலக்கத்தக்கவர்கள் அல்லர் என்று எண்ணிக்கொண்டு ஒரு நிரந்தரமான வேலியும், நினைவுக் குறிப்பும் ஏற்படுத்துவதாகத்தான் அது அர்த்தமாகும்.

பட்சிகளும், மிருகங்களும் குளங்களில் தண்ணீர் குடிப்பதில்லையா? அப்படிப்பட்ட தண்ணீரை இந்த ஆதித்திராவிடத் தோழர்கள் எடுத்துச் சாப்பிடுவதால் என்ன கெடுதல் ஏற்பட்டுவிடும்?

அருமை ஆதித்திராவிடத் தோழர்களே! தனிக் கிணற்றில் தண்ணீர்க் குடித்து உயிர் வாழ்வதைவிட நாக்கு வறண்டு பொதுக்கிணற்றில் தண்ணீர்க் குடிக்கப் போராடி சாவதுதான் மனிதனின் சுயமரியாதைக்கு அழகு” என்று பேசினார்.

ஜாதி இழிவு சுயமரியாதைக்குக் கேடு என்று ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் உரிமைக் கிளர்ச்சியைத் தூண்டி வெற்றி பெற்றவர் தந்தை பெரியார்.

தனது இறுதிப் போராட்டமாக தாழ்த்தப்பட்டவர் உட்பட அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கானப் போராட்டத்தில் ஈடுபட்டு, அந்தப் போராட்டக் களத்திலேயே இறுதி மூச்சினைத் துறந்த தொண்டின் பழம் தந்தை பெரியார்.

ஜாதியைப் பற்றி அவர் சொன்ன கருத்துகள் சிந்தனைக்கு விருந்தானவை - மாற்றத்தை நோக்கி மனித மனங்களைத் தூண்டி அழைத்துச் செல்பவை.

ஜாதி, மதம், பழக்கவழக்கம் ஆகியவைகளில் மாற்றம் செய்யச் சம்மதிக்க வில்லையானால் வேறு எந்த விதத்தில் இந்நாட்டு மக்களுக்கு விடுதலையோ, மேன்மையோ, சுயமரியாதையோ ஏற்படுத்த முடியும்?

(‘குடிஅரசு’ 2.6.1935)

ஒரு பெருங்கூட்ட மக்கள் இன்று சமூக வாழ்வில் தீண்டப்படாதவர்களாகவும், மற்றொரு பெருங்கூட்ட மக்கள் சமூக வாழ்வில் சூத்திரர்கள், அடிமைகள், கூலிகள், தாசிமக்கள், இழிமக்கள் என்கின்ற பெயருடனும் இருந்து வருகிறார்கள் என்றால், இது மாறுவதற்கு அருகதை இல்லாத சுயராச்சியம் யாருக்கு வேண்டும்? இது மாறுவதற்கு இல்லாத மதமும், சாத்திரமும், கடவுளும் யாருக்கு வேண்டும்?

(‘குடிஅரசு’ 23.6.1935)

எந்த மனிதனும் எனக்குக் கீழானவன் அல்ல. அதுபோலவே எவனும் எனக்கு மேலானவனும் அல்ல. ஒவ்வொரு மனிதனும் சுதந்திரமாகவும் சமத்துவமாகவும் இருக்க வேண்டும் என்பதே அதன் பொருள். இந்த நிலை ஏற்பட ஜாதி ஒழிய வேண்டும்.

(‘விடுதலை’ 13.11.1961)

நோய் வந்தபின் நோய்க்கு மருந்து கொடுத்து வைத்தியர்கள் குணமாக்குகிறார்கள். ஆனால், அந்த நோய் அடுத்தடுத்து வராமலிருக்க அதற்குரிய காரணங்களைக் கண்டறிந்து அவற்றை ஒழிக்க வேண்டாமா? நோய் வந்து கொண்டேயிருப்பதும், அவ்வப்போது மருந்து கொடுத்துக் கொண்டேயிருப்பதும் பயனுள்ள செயலாகுமா? அதுபோலத்தான் சமுதாயத்தை நாசப்படுத்திவரும் ஜாதி நோய்க்கான மூலகாரணங்களைக் கண்டறிந்து ஒழிக்க வேண்டும்.

(‘விடுதலை’ 25.7.1962)

மனிதன் திருடுகிறான், பொய் பேசுகிறான், பாடு படாமல் வயிறு வளர்க்கப் பார்க்கிறான். இவனை மக்கள் இகழ்வதில்லை, ஜாதியை விட்டுத் தள்ளுவதில்லை; ஆனால், ஜாதியை விட்டு ஜாதி சாப்பிட்டால், கல்யாணம் செய்தால் ஜாதியை விட்டுத் தள்ளிவிடப்படுகிறான். இந்த மக்களின் ஒழுக்கம், நாணயம் எப்படிப்பட்டது பாருங்கள்.

(‘குடிஅரசு’ 20.12.1936)

நமக்கு ஓர் அறிவு அதிகமிருந்தும் பயன் என்ன? மிருகங்களுக்கு ஒர் அறிவு குறைவு என்றாலும் ஜாதி இல்லையே! மிருகங்களுக்கு அறிவில்லாததின் பயன் ஜாதி இல்லை. நமக்குள்ள இழிவு, ஜாதியால்தானே! இதைச் சிந்திக்க வேண்டாமா? என்றார்.

(‘விடுதலை’ 8.7.1961)

எல்லாவற்றிற்கும் மேலாக “ஒரு சுதந்திர நாட்டில் ஜாதி இருக்கலாமா? ஜாதி இருக்கும் நாட்டில் உண்மையான சுதந்திரம் இருக்குமா?” என்ற தந்தை பெரியார் 1957ஆம் ஆண்டு எழுப்பிய வினாவுக்கு 2017ஆம் ஆண்டிலும் பதில் இல்லை என்பதுதான் கசப்பான உண்மை!

ஜாதியைப் பற்றி இவ்வளவும் பேசிய தந்தை பெரியார், ஜாதியை ஒழிக்க என்ன செய்ய வேண்டும் என்பதற்கான வழிகாட்டும் கருத்துகளையும் கூறியுள்ளார்.

ஜாதிப் பட்டங்கள் சட்டப்பூர்வமாகத் தடுக்கப் பட வேண்டும். ஒரே வகுப்பில் திருமணம் செய்பவர் களுக்குப் பல கஷ்டமான நிபந்தனைகளையும் கட்டுத் திட்டங்களையும் விதிக்க வேண்டும். அத் தகைய திருமணம் புரிபவர்களுக்கு சமுதாயத்தில் செல்வாக்கில்லாமல் செய்ய வேண்டும்.

1927ஆம் ஆண்டில் தன் பெயருக்குப் பின்னால் இருந்த நாயக்கர் பட்டத்தை வெட்டி எறிந்தார்.

1929ஆம் ஆண்டில் செங்கற்பட்டில் நடந்த முதல் சுயமரியாதை மாநில மாநாட்டில் பெயருக்குப் பின்னால் தொங்கக்கூடிய ஜாதிப் பட்டத்தை நீக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியதோடு, அந்த மாநாட்டிலேயே  கீ.றி.கி சவுந்தரபாண்டியன், சிவகங்கை இராமச்சந்திரனார் போன்றவர்கள் தங்கள் பெயருக்குப் பின் இருந்த ஜாதிப் பட்டத்தை இன்று முதல் துறக்கிறோம் என்று பல்லாயிரம் மக்கள் கூடிய மாநாட்டிலே அறிவித்தார்கள். செயல்பட வைத்தார் என்றால், அது என்ன சாதாரணமா?

ஜாதிகளைக் குறிக்கும் குறியீடுகள் சட்டப்பூர்வமாகத் தடுக்கப்பட வேண்டும். ஜாதிக்கு - தீண்டாமைக்கு ஆதாரமாக இருக்கக் கூடியது எதுவாக இருந்தாலும் அவற்றிலிருந்து விடுபடும் பகுத்தறிவுச் சிந்தனை மக்கள் மத்தியில் ஊட்டப்பட வேண்டும் என்றும் தந்தை பெரியார் கூறுகிறார்.

ஜாதியை ஒழிக்காமல் சுதந்திரம் பற்றிப் பேசுவதோ, சமதர்மம் பற்றிப் பேசுவதோ பொருத்தமற்றது என்ற தந்தை பெரியார் அவர்களின் சிந்தனையைக் கருத்தில் தேக்கி - செயல்பாட்டுக்கான உறுதியை தந்தை பெரியாரின் நினைவு நாளான டிசம்பர் 24இல் உறுதி ஏற்போம்!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!

குறிப்பு: தந்தை பெரியாரின் நினைவு நாளான

டிசம்பர் 24 இரவு 7 மணிக்கு அனைத்து வானொலிகளிலும் ஒலிபரப்பானது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner