எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமிழ்நாட்டு எழுத்தாளர்களின் படைப்புகளையும், அவர்கள் தமிழுக்கு ஆற்றியுள்ள பங்கையும் நினைவுகூரும் வகையில் டிசம்பர் 16 சனிக்கிழமை’ நினைவின் தடங்கள்’ என்ற நிகழ்ச்சி சிங்கப்பூர் விக்டோரியா சாலையில் உள்ள சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் நடைபெற்றது.

இவ்வாண்டு மறைந்த உள்ளூர் எழுத்தாளர்கள் பெ.திரு வேங்கடம், பி.பி.காந்தம், பிரபல தமிழக எழுத்தாளர்கள் கவிக்கோ அப்துல்ரஹ்மான், அசோகமித்திரன், தமிழறிஞர் மா.நன்னன், மேலாண்மை பொன்னுசாமி, எம். ஜி.சுரேஷ் ஆகியோரின்படைப்புகளைப்பற்றிவாசகர்கள்மேலும் அறிந்து கொள்ளும் வகையில் நினைவேந்தல் நிகழ்ச்சி யாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் க.து.மு.இக்பால், பிச்சினிக்காடு இளங்கோ, சித்ராரமேஷ், ஷாநவாஸ், ராம்சந்தர், க.பூபாலன், சிவானந்தம் நீலகண்டன் ஆகியோர் மறைந்த எழுத்தாளர்களை பற்றி உரையாற்றினார்கள்.

தேசிய நூலக வாரியத்தின் தமிழ்மொழிச் சேவைகள் பிரிவு முதன்முறையாக இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து நடத்தியது. வருகையாளர்கள் அந்த எழுத்தாளர்களின் நூல்களை இரவல் பெறும் வாய்ப்பினையும்ஏற்பாடு செய்தி ருந்தனர்.

தமிழறிஞர் பேராசிரியர்  மா.நன்னன் அவர்களைப்பற்றி பேசிய சிங்கப்பூர் பெரியார் சமூகசேவை மன்றத்தின்

க.பூ பாலன் உரை:

தமிழகத்தின் தலைசிறந்த தமிழறிஞர்களில் ஒருவராக திகழ்ந்த பேராசிரியர் மா.நன்னன் அவர்களை பற்றி அவரை நினைவுகூரும் விதமாக ஒரு சில குறிப்பு களையும், சிறப்பு களையும் இந்த நேரத்தில் தங்களிடம் பகிர்ந்துக்கொள்வதில் மகிழ்கிறேன்.

குடும்பம்

தமிழறிஞர் பேராசிரியர் புலவர் மா. நன்னன் அவர்கள் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த காவனூர் என்ற ஊரில் மாணிக்கம் - மீனாட்சி என்ற தம்பதியருக்கு 4ஆவது பிள்ளையாக 1923ஆம்ஆண்டு ஜூலை மாதம் 30ஆம் தேதி பிறந்தார்.. வாழ்க்கைத் துணைவர்: ந.பார்வதி

மக்கள்: 1. வேண்மாள், 2. அண்ணல், 3.அவ்வை

இவரின்  மகன்அண்ணல், 36ஆவது வயதில் மாண்டு விட்டார்.

கல்வி

மா.நன்னன்அவர்கள் எட்டாம் வகுப்பு வரையில் படித்த பிறகு  விவசாயப் பணியில் சில ஆண்டுகளைக் கழித்தார்..

பிறகு சிதம்பரத்தில் புகுமுக வகுப்புப் படித்துத் தேறி அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் (1940-1944) புலவர் பட்டம் பெற்றார். கல்விப் பணியிலிருந்து கொண்டே

பி.ஏ., எம்.ஏ., ஆகியவற்றைப் படித்து பட்டம் பெற்றார்.

முனைவர் பட்டமும், தமிழாசிரியர் பயிற்சிச் சான்றும் சென்னை பல்கலைக் கழகத்தில் பெற்றார்.

ஆசிரியர்பணி

காவனூரில் பின்னர்  தொடக்கப் பள்ளியின் ஆசிரியராக கல்விப் பணியினை தொடங்கியவர், தொடக்கக் கல்வி முதல் பல்கலைக்கழகம் வரை உள்ள எல்லா நிலைகளிலும் பல பள்ளிகளில் கல்லூரிகளில் தமிழாசிரியராக பேராசிரி யராகப் பணிபுரிந்துள்ளார்.

தமிழ்வளர்ச்சித்துறையில்

தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநராக 1980 ஆம் ஆண்டிலிருந்து 83 ஆம் ஆண்டுவரை மூன்றாண்டுகள் பணிபுரிந்து, 1983 ஆம் ஆண்டு அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். தமிழ் வளர்ச்சித் துறையில் இயக்குநராகப் பணியாற்றும் போது, மூவாண்டு முனைப்புத் திட்டம் என்கிற ஒரு திட்டத்தைச் செயல்படுத்தினார். இதில், தமிழை நூற்றுக்கு நூறு சதவிகிதம் ஆட்சிமொழியாக நடைமுறைப் படுத்த வேண்டும் என்று ஆணை வெளியிட்டார். இதற்கு, “எங்க ளிடம் தமிழ் டைப்ரைட்டர் இல்லை,  தமிழ் அகரவரிசை இல்லை,  ஆட்சிச் சொல் அகராதி இல்லை” என்று அப் போது பல காரணங்கள் சொல்லப்பட்டன. ஆனால், அவற்றுக்கான ஏற்பாடுகளைச் செய்து தமிழுக்காக வாழ்ந்த நன்னன், எழுத்தறிவித்தலில் 'நன்னன் முறை' என்ற புதிய முறையையே உருவாக்கினார்.

சென்னையில் உள்ள பொதிகை, மக்கள் தொலைக் காட்சிகளிலும், தமிழ் இணைய பல்கலைக்கழக வாயி லாகவும் இவர் கற்றுக்கொடுத்த முறையை கோலாலம்பூர், லண்டனில் உள்ள தொலைக்காட்சிகள் ஒளிபரப்பி உள்ளன. சென்னைத் தொலைக்காட்சியில் 17 ஆண்டுகள் எண்ணும் எழுத்தும் என்ற நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். 60க்கும் மேல் உங்களுக்காக என்ற குறுநாடகங்களை எழுதி, இயக்கி, நடித்துள்ளார்.

நன்னன் முறை

நன்னன்முறையை ஒட்டி உருவாக்கப்பட்டுள்ள ஒரு நூலே தமிழ் எழுத்தறிவோம் என்பது. இந்நூலை “நன்னன் முறை” எனப்படும் முறைப்படிகற்பதற்கும், கற்பிப்பதற்கும் 43 முதல் 62 வரை உள்ள வகுப்புகள் போது மானவையாகும். அப்படிக் கற்றாலும் கற்பித்தாலும் தமிழில் உள்ள எதையும் படிக்கவும் எழுதவும் திறன் பெறமுடியும்.

எழுத்துப்பணி

கட்டுரைகள், ஆய்வுக் கருத்தரங்கக் கட்டுரைகள், பாடநூல்கள், துணைப்பாட நூல்கள் போன்றவை தவிர மற்றத்தனி  நூல்கள் எதுவும் 1989 வரை எழுதி வெளியிடவில்லை. எழுத்துப் பணி என்பது இயலாத பணி என்ற முடிவுடன் இருந்த இவருக்கு ஒரு வாய்ப்பின் உந்துதலால் ஏற்பட்ட எழுச்சியால் 1990 ஆம் ஆண்டு முதல் நூல்கள் எழுத தொடங்கிய இவர்  2010 ஆம் ஆண்டு வரை எழுபதுக்கு (70) மேற்பட்ட நூல்களை இன்றுவரை வெளியிட்டுள்ளார். சில நூல்கள் அய்ந்து பதிவுகளைக் கண் டுள்ளன.  இவர்தம் நூல்கள் மிகப் பெரும்பாலும் தமிழி யலும், பெரியாரியமும், பற்றியனவாகவே அமைந்துள்ளன. அவற்றுள் சில:

1.  தமிழ் எழுத்தறிவோம்

2.  தமிழா! எது வேண்டும்? தமிழா? கிமிழா?

3. தவறின்றித் தமிழ் எழுதுவோம்

4. திருக்குறள் மூலமும் கருத்துரையும்

5. நல்ல உரைநடை எழுத வேண்டுமா?

6. உரைநடையா? குறைநடையா?

7. தடம்புரள்கிறதா? தமிழ் உரைநடை

8. கல்விக்கழகு கசடற எழுதுதல்

9. செந்தமிழா? கொடுந்தமிழா?

10. எழுதுகோலா? கன்னக்கோலா?

11. பைந்தமிழுரை நடை நைந்திடலாமா?

12. ஏற்கப்படவேண்டிய தீர்வுகள்

13. இவர்தாம் பெரியார் (வரலாறு 4 ஆம் பாகம் - இந்தி)

14. பெரியார் கணினி

15. இவர்தாம் பெரியார்

16. பெரியாரின் குட்டிக் கதைகள்

17. பெரியாரின் உவமைகள்

18. பெரியாரின் பழமொழிகள்

19. பெரியாரியல் ஒன்று முதல் பத்தொன்பது வரை

20. பெரியாரைக் கேளுங்கள் (குறுமம்) ஒன்று முதல் இருபத்து நான்கு வரை

பொதுவாழ்வு

திருஞான சம்பந்தன் எனும் பெயரை நன்னன் என்று மாற்றிக் கொண்டார்

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்  புலவர் வகுப்பில் பயின்றபோது (1942 - 1943) உயர்சாதி மாணவர்கள் இசையரசு எம்.எம். தண்டபாணிதேசிகரின் தமிழிசை அரங் கில் குழப்பம் ஏற்படுத்திக் கலைத்து விட்டனர். அதன் பிறகு ஏற்பட்ட தமிழ் உணர்வினால் பேராசிரியர் அன்பழகன், நாவலர் நெடுஞ்செழியன் ஆகியோர் இராமையா எனும் பெயரை அன்பழகன் என்றும், நாராயணசாமி எனும் பெயரை நெடுஞ்செழியன் என்றும் மாற்றிக்கொண்டபோது இவரும் அவர்களுடன் இணைந்து திருஞான சம்பந்தன் எனும் பெயரை நன்னன் என்று மாற்றிக்கொண்டார்.

போராட்டம்

வெள்ளையனே வெளியேறு.  தமிழிசைக் கிளர்ச்சி, இந்தி எதிர்ப்புப் போர் ஆகிய போராட்டங்களிலும் பங்கு பெற்றுள்ளார். தொடர்வண்டி நிலையப் பலகைகளில் உள்ள இந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றுள்ளார்.

அரசியல்

படிப்பு முடிந்ததும் (1944) ஈரோட்டில் பெரியாரின் இல்லத்திலேயே தங்கிச் சுயமரியாதை இயக்கப்பணியில் ஈடுபட்டார்.

பிறகு பெரியாரின் உதவியால் தமிழாசிரியப்பணிக்குச் சேர்ந்துள்ளார். நேரடி அரசியலில் ஈடுபடாமலேயே இருந்தார்.

தமிழ்நாடு அரசின் சமூகசீர்திருத்தக் குழுவின் தலைவ ராகவும், அஞ்சல்வழிக் கல்லூரியின் முதல்வராகவும், தி.மு.கவின் தலைமை இலக்கிய அணியின் புரவலராகவும் செயல்பட்டுள்ளார்.

விருதுகள்

புலவர் பட்டம் -அண்ணாமலைப் பல்கலைக் கழகம் 1945

பி.ஏ., எம்.ஏ., பிஎச்.டி. தமிழாசிரியர் பயிற்சிச் சான்று - சென்னைப் பல்கலைக் கழகம்

பெரியார் பேருரையாளர் விருது 1982 - திராவிடர் கழகம்

பெரியார் விருது - தி. மு. க. 15.09.1997

திரு. வி. க. விருது - தமிழ்நாடு அரசு, 25.12.1996

தமிழ்ச் செம்மல் விருது - மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம்

“அப்பளம் உடைந்துவிடும்!”

“தொலைக்காட்சியில் அவர் பாடம் நடத்தும் அழகே தனி” என்று அவருடைய மாணவர் ஒருவர் சொல்கிறார். அப்பளம் என்கிறவார்த்தையைக் கூட அழகாய் உச்சரிப் பார். ஆம், அந்த வார்த்தையை எழுதும்போது ‘ப்’ என்ற எழுத்தின் மீதுவைக்கும் புள்ளியைக்கூட அழுத்தி வைக்க வேண்டாம் என்பார். அழுத்தி வைத்தால், அப்பளம் உடைந்துவிடும் என்று நகைச்சுவையுடன் பாடம் நடத்துவார் .

திருவாசகம்வகுப்பெடுத்தார்

தீவிர நாத்திகவாதியான நன்னன், மாணவர்களுக்கு திருவாசகம் வகுப்பெடுத்தார். திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்பதை மெய்பிக்கும் வகையில் மாணவர்கள் கண்ணீர் விடும் அளவிற்கு உருகி உருகி பக்திச் சுவை சொட்டச்சொட்ட திருவாசகம் நடத்துவார். நாத்திகரான உங்களால் எப்படி இந்த அளவுக்கு பக்திச்சுவையோடு பாடம் நடத்தமுடிகிறது என்று நன்னனிடம் மாணவர்கள் கேட்டனர். அதற்கு அவர் “என்னுடைய கொள்கை வேறு. ஆனாலும் ஒரு இலக்கியத்தை  அதன் சுவை குன்றாத வகையில் மாணவர்களுக்கு சொல்லவேண்டியது ஒரு ஆசிரியரின் கடமை. அதைத்தான் செய்கிறேன்” என்றார்.

“நன்னன்குடி” அறக்கட்டளை

“நன்னன் குடி”எனும் பெயரில் ஓர் அறக்கட்டளை நிறுவி அதன் வழி ஆண்டுதோறும் பல அறச் செயல்களைச் செய்துவருகிறார்..

1. அவரின் பெற்றோர் மாணிக்கம் - மீனாட்சி ஆகியோர் நினைவாகத் திருமுட்டதிலுள்ள த.வீ.செ.மேல்நிலைப் பள்ளியில் முதல் மதிப்பெண் பெறும் 3 மாணவர்களுக்கு மொத்தம் பத்தாயிரம் ரூபாய் ஆண்டுதோறும் பரிசளித்து வருகிறார்கள்.

2. அவரின் மாமனார், மாமியாராகிய ஆறுமுகம் - சானகி ஆகியோர் நினைவாகச் சாத்துக்குடலில் உள்ள நடுநிலைப் பள்ளியில் முதல் மதிப்பெண் பெறும் 3 மாணவர்களுக்கு மொத்தம் பத்தாயிரம்ருபாய் ஆண்டுதோறும் பரிசளித்து வருகிறார்கள்.

3. அவரின் மகன் ந.அண்ணலின் நினைவாகப் புதினம், சிறுகதை, பா ஆகிய போட்டிகள் நடத்தி அவற்றுள் சிறந்த படைப்புகளுக்கு மொத்தம் 50, 30, 20 ஆயிரம் ரூபாய் அளிக்கப்படுகின்றன.

4. 2008 முதல் தமிழைத் தமிழாக்குவோம் என்னும் பொருள் பற்றி மேல் நிலைப்பள்ளி மாணவர்களுக்கு தேர்வு நடத்தி அதில் முதல் 5 மதிப்பெண் பெறுவோருக்கு மொத்தம் இருபதாயிரம் ரூபாய் ஆண்டுதோறும் பரிசளித்து வருகிறார்கள்.

5. ஆண்டுதோறும் மகன் டாக்டர் அண்ணல் நினைவு நாளில் 5 சுயமரியாதைத் திருமண இணையர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் பரிசுத் தொகைக் கொடுத்து ஊக்குவித்து வருகிறார்

நன்னன் பற்றி கலைஞர்...

“பெரியார் என்ற சிற்பி இந்தச் சமுதாயத்தில் எத்த கைய அடிப்படை மாற்றம் ஏற்படவேண்டுமென்று புரட்சிக்கொடி ஏந்தினாரோ அந்தக்கொடி நிழலில் அணிவகுத்த தளகர்த்தர் களில் ஒருவராகவும், அந்த ஒப்பற்ற மேதையின் உழைப்பையும் உறுதிவாய்ந்த கொள் கைகளையும் போற்றுபவராகவும் விளங்கக்கூடியவர் நன்னன் என்பது என் அழுத்தமான எண்ணமாகும்“.

நன்னன் பற்றி பேராசிரியர் க.அன்பழகன்..

“முனைவர் நன்னன் எதையும் ஆழமாகச் சிந்தித்து, நுட்பமாக ஆராய்ந்து, தெளிவான முடிவுக்கு வந்து, திட்ட வட்டமாகச் செயற்படுத்துபவர்.அவர் எதையும் எண்ணித் துணிவார், துணிந்தபின் செயற்படுத்தத் தவறார்.

மொழிப்பற்றும், இனப்பற்றும் இரு கண்ணெனப் போற்றும் உணர்வினர். அவர் தமது நினைவு எல்லாம் பெரியாரின் சிந்தனையில் தோய்ந்தவர்”.

நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் பாராட்டு

தமிழை பிழையின்றி எழுதுவது குறித்தும், தூய தமிழில் பேசுவது குறித்தும் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகள் நடத்தி பல்லாண்டுகள் தமிழ் தொண்டாற்றிய பேராசிரியர் நன்னன் அவர்கள் தன்னுடைய மெய்ப்பாடுகள் மூலம் கருத்துக் கூறுவதில் வல்லவர். இதை நடிகர் திலகம் சிவாஜி அவர்களே வியந்து பாராட்டியுள்ளார்.

என்னை எல்லோரும் சிறந்த நடிகர் என்பர்.ஆனால், என்னைவிட ஒரு சிறந்த நடிகர் இருக்கிறார். அவர்தான் பேராசிரியர் நன்னன் அவர்கள்.

“நாங்களெல்லாம் பலபேர் பார்த்திருக்க நடிக்கக் கூடியவர்கள். ஆனால், எதிரில் யாருமே இல்லா நிலையில், எதிரிலுள்ளவர்களோடு உரையாடுவதுபோல், கேள்வி கேட்பது போல் மிகச் சரியான பாவனை செய்வதுதான் உயர்வான, கடினமான நடிப்பு. அதை மிகச் சரியாகச் செய்தவர் நன்னன் அவர்கள்” என்று நடிகர் திலகம் சிவாஜி வியந்து பாராட்டியுள்ளார்.

இப்படி இன்னும் பல சிறப்புகளுக்குரிய பேராசிரியர் மா.நன்னன் அவர்கள் 94 வயதில் முதுமை காரணமாக கடந்தாண்டு நவம்பர் 7ஆம் தேதி அன்று சென்னையில் காலமானார்.

மரணவாக்குமூலம்

அவர் மரணத்திற்கு முன் தன்னுடைய மரண வாக்கு மூலத்தை 27.8.2017 பிற்பகல் 3 மணியளவில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றனிடம்  சொன் னவை:

“ஒரு முழு பகுத்தறிவுவாதிக்கு, நாத்திகனுக்கு சாவும் ஒரு துச்சம்தான். நானோ முழு பகுத்தறிவாதி - பெரியாரின்   பெருநெறி பிடித்து ஒழுகுபவன். பெரியார் தொண்டர் என் பதில் முழு திருப்தி அடைகிறேன் - இது என் மரண வாக்குமூலம் என்று கம்பீரமாகவே சொன்னவர்."

தமிழுக்காகதன்னையேஅர்பணித்துஉழைத்து தொண்டாற்றி உடலால் மறைந்த பேராசிரியர் நன்னன் அவர்களின் நூல்களை வாசித்து பயன்பெறுவோம். அதுவே நாம் அவருக்கு செய்யும் மரியாதை. சிறந்த எழுத் தாளர்களுக்கு என்றுமே மரணம் என்பது கிடையாது. அவர்களின் உடலால் தான் மண்ணில் புதைக்கப் படுகிறார்களே தவிர அவர்களின் சிந்தனை எழுத்து என்றுமே தமிழ் உள்ளவரை வாழும் என்று கூறி வாய்ப்புக்கு நன்றி கூறி முடிக்கிறேன். நன்றி, வணக்கம்.

- க.பூபாலன், சிங்கப்பூர்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner