எழுத்துரு அளவு Larger Font Smaller Font

- சுஹ்ரித் பார்த்தசாரதி

அனைத்து இனத்தவர், மதத்தவருடனும் சகிப்புத் தன்மையுடன் நடந்து கொள்ளும்,  மதச்சார்பற்ற, பன்முகத் தன்மை என்ற கருத்து கல்வெட்டில் பொறித்தது போன்றதொரு நிலைப்பாட்டை நாம் மேற்கொண்டதொரு கால கட்டமும் இருந்திருக்கக்கூடும். ஆனால், அதன் பின்,  குறிப்பாக 1900 க்குப் பிந்தைய ஆண்டுகளில் நடந்தேறிய பல நிகழ்வுகள் இக்கருத்தின் உண்மை நிலையிலும், நமது கற்பனையிலும் தீவிரமான மாற்றத்தை ஏற்படுத்திவிட்டன. மத்தியிலும், பல மாநிலங்களிலும் இப்போது ஆட்சியில் இருக்கும் கட்சியினர் உள்ளிட்ட சில குறிப்பிட்ட குழுவினர், ஒரு மாறுபட்ட வகையிலான இந்தியாவைப் பற்றி தீவிரமாக நம்பி வருவது தெளிவாக உணர இயன்றதாக உள்ளது. இதன் பின்னணியில் வைத்து,  வேலை வாய்ப்பு திறன் மேம்பாட்டுத் துறை மத்திய துணை அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டே கடந்த டிசம்பர் 24 அன்று ஒரு பொது மேடையில் பேசியது நமக்கு எந்தவிதமான வியப்பையும் அளிக்காது.

மதச்சார்பற்ற கோட்பாடும் நாமும்

"மதச்சார்பற்ற கோட்பாட்டாளர்கள், தங்களது பெற்றோரின் குருதி அடையாளத்தை அறியாதவர்கள்" என்று அறிவித்த அவர், "அரசமைப்பு சட்டத்தை மாற்றுவதற்காகவே நாங்கள் (பா.ஜ.க.வினர்) இருக்கிறோம்" என்று கூறினார். நமது அரசமைப்பின் நிலைப்பாட்டில் இருப்பதற்கு, மதச்சார்பற்ற கோட்பாடு மாதிரியான நம்பிக்கை தகுதி படைத்தது அல்ல என்பதையே அவரும், அவரது கட்சியினரும் தெளிவானதாக ஆக்கிவிட்டனர். அது முதல், ஆட்சியில் உள்ள அரசு அவரது பேச்சில் இருந்து தன்னை விலக்கி வைத்துப் பார்ப்பதாகவே கூறி வருகிறது.  திரு. அனந்தகுமாரும் தனது பேச்சை முழுவதுமாகத் திரும்பப் பெற்றுக் கொள்ளவில்லை என்ற போதிலும், அரசமைப்பு சட்டத்திற்கும், அதன் உயர் தன்மைக்கும் தனது விசுவாசத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால், ஏற்கெனவே வெளியே வந்துள்ள செய்தியும், அது தொடர்பான உரையாடலும், தற்போதைய ஆட்சியாளர்களின் எதிர்ப்பை வெளிப்படுத்துவதாகவே இருந்தனவேயன்றி வேறாக இருக்கவில்லை. ஆனாலும், ஆர்.எஸ்.எஸ். சின் உயர் மட்டத்தவர்கள் பலரும் அவ்வப்போது வெளிப்படுத்திய கருத்துகளை பிரதிபலிப்பதாகவே ஹெக்டேயின் பேச்சும் இருந்தது.  அரசமைப்பு சட்டத்தின் அடித்தளத்தில் அமைந்திருக்கும் மதச்சார்பற்ற நாடாக இல்லாமல் , ஆனால் அதன் ஆவணங்களின் இலக்கு, நோக்கங்களுக்கு வெளியே இருக்கும்  ஓர் இந்து நாடாக இந்தியாவிற்கான அங்கீகா ரத்தைப் பெறுவதே தங்களின் இறுதியான நோக்கம் என்பதைப் பறைசாற்றி வந்துள்ளவர்கள் அவர்கள்.

ஹெக்டேயின் பேச்சினைத் தொடர்ந்து மற்றவர் களிடம் ஏற்பட்ட எதிர்வினை பலவகையானதாக இருந்தது. ஒரு விவாதத்துக்கான அழைப்பாக அதனை சிலர் வரவேற்றனர்; ஆனால், மற்றவர்களோ உண்மையான எச்சரிக்கை மணி ஒலிப்பது போலவே அதனைக் கருதினர். என்றாலும், குறிப்பாக தீவிர வலதுசாரிகளாக இருந்தவர்கள், இக்கருத்தைத் தழுவிக் கொண்டு, இந்தியா எப்போதுமே ஒரு மதச் சார்பற்ற நாடாக இருந்ததில்லை என்றும், முதன் முதலாக இயற்றப்பட்ட அரசமைப்பு சட்டத்தின் முன்னுரையில் மதச்சார்பற்ற என்ற சொல் இருக்கவில்லை என்றும், நாட்டில் நெருக்கடி நிலை நடை முறைப்படுத்தப் பட்டபோது இந்திரா காந்தி அரசால் அரசமைப்பு சட்டத்திற்குக் கொண்டு வரப்பட்ட 42 திருத்த சட்டத்தின் மூலம்தான் அச்சொல் அரசமைப்பு சட்டத்தின் முன்னு ரையில் சேர்க்கப்பட்டது என்றும் சொல்லும் அளவுக்குச் சென்றுவிட்டனர். அரசமைப்பு சட்டத்தின் முன்னுரை யில் இச் சொல்லினைச் சேர்க்கவேண்டும் என்றும் விடுக்கப்பட்ட கோரிக்கையை டாக்டர் பி.ஆர்.அம் பேத்கர் நிராகரித்துவிட்டார்என்பதையும் அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். அரசமைப்பு சட்டத் தில் மதச் சார்பின்மை பற்றி பேசப்படாமல் இருந்த காரணத்தை வைத்துக் கொண்டு, இந்த உண்மைகள் எல்லாம், அரசமைப்பு சட்டக் கருத்தாக மதச்சார்பின்மை சேர்க்கப் படுவதற்கு எதிராகவே அமைந்துள்ளன என்பது அவர்களது நம்பிக்கை.

ஆனால், தனது முன்னுரையில் இடம் பெற்றிருக்கும் சொற்களில் இருந்து மட்டுமே இந்த மதச்சார்பற்ற தன்மையை அரசமைப்பு சட்டம் பெற்றிருக்கவில்லை என்பதை ஹெக்டே வெளியிட்டதைப் போன்ற அறிக்கைகளை வெளியிடுபவர்கள் உணர்ந்து புரிந்து கொள்ள வேண்டும். அரசமைப்பு சட்டத்தின் பல விதிகளையும், பகுதிகளையும், குறிப்பாக அதில் வழங்கப் பட்டுள்ள பல்வேறுபட்ட அடிப்படை உரிமைகளையும் ஒன்றாக வைத்துப் படித்துப் பார்த்தால்தான் இந்த உண்மையை அவர்களால் உணர்ந்து கொள்ளவோ, புரிந்து கொள்ளவோ முடியும். எனவே, அரசமைப்பு சட்டத்தின் முன்னுரையில் இருந்து மதச்சார்பற்ற என்ற சொல்லை நீக்குவதற்காக மேற்கொள்ளப்படும் எந்த முயற்சியைப் பற்றியும் நாம் பரிசீலனை செய்யும் முன்னர், அத்தகையதொரு மாற்றம் நீதித்துறையின் மறு ஆய்வின் முன் செல்லுபடியாகுமா என்பதைப் பார்க்க வேண்டும். என்றாலும் கூட, இந்தத் திட்டம் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது என்ற நம்பிக்கையைக் காட்டு வதாக இருப்பதால், ஹெக்டேயின் பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட வேண்டியதாகும். இப்போது மேற்கொள்ளப் பட்டிருக்கும் முயற்சி என்னவென்றால், அரசமைப்பு சட்டம் தூக்கிப் பிடிக்கும் மதச்சார்பற்ற மதிப்பீடுகளை சிறிது சிறிதாக ஆனால் ஒரே சீராக தாக்கி அழிப்பதும், அதனை அரசமைப்பு சட்டத்திற்குள் இருந்து தோற்கடிக்காமல்,  முதலில் வெளியில் இருந்து தாக்கி தோற்கடிப்பது என்பதும்தான். இந்தத் திட்டத்தை எதிர்த்து முறியடிப்பதற்கு தொடர்ந்த கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.  அரசமைப்பு சட்டத்திற்குத் திருத்தம் கொண்டு வருவதற்கான முயற்சிகளைத் தோற்கடிப்பது என்பது நிறைவேறாமல் போனால், வெறும் வெறிக் கூச்சல் போடாமல், உண்மை களை முன்வைத்து அரசமைப்பு சட்டத்திலும்,  மக்க ளாட்சியினால் காக்கப் வேண்டிய  உயர்ந்த நெறிகளான பன்முகத்தன்மை மற்றும் சகிப்புத் தன்மையிலும் நமக்கு உள்ள நம்பிக்கையை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தி, ஒரு பொது மக்களின் கருத்தை உருவாக்கிப் போராட வேண்டும்.

அரசமைப்பு சட்டக் கட்டமைப்புக்குள் வழங்கப்பட்டுள்ள சுதந்திரங்கள்

'மதச்சார்பற்ற',  'சமதர்ம' என்ற இரு சொற்களையும் அரசமைப்பு சட்டத்தின் முன்னுரையில் சேர்க்க வேண்டும் என்று அரசமைப்பு சட்ட மன்றத்தின் பீகார் மாநில உறுப்பினர் பிரஜேஷ்வர் பிரசாத் கொண்டு வந்த தீர்மானம் வெளிப்படையாக நிராகரிக்கப்பட்டுள்ளது என்பது உண்மைதான். ஆனாலும், மதச்சார்பற்ற கோட்பாட்டின் மதிப்பீடுகள் பற்றி நமது அரசமைப்பு சட்டத்தை இயற்றியவர்கள் எந்த வித சந்தேகம் கொண்டிருந்தனர் என்பதை இது காட்டுவதாக அமைந்தது அல்ல.  ஆனால், அதற்கு முற்றிலும் மாறாக, நாம் நம்பவேண்டும் என்று சிலர் விரும்புவதைப் போலவே,  இந்தியாவின் மதச்சார்பற்ற நிலையை அரசமைப்பு சட்ட மன்றம் அறிவிக்கப்படாத ஒரு கோட்பாடாகவே ஏற்றுக் கொண்டது என்றுதான் கூறவேண்டும். தனது குடிமக்கள் அனைவருக்கும் சட்டத்தின் முன் சமத்துவத்தை அளிக்க முன்வரும் எந்த ஒரு மக்களாட்சியும்,  பேச்சு சுதந்திரமும், எந்த ஒரு மதம் அல்லது நம்பிக்கையைப் பின்பற்றும் சுதந்திரமும் அளிக்கும் எந்த ஒரு மக்களாட்சியும் உண்மையில் மதச் சார்பற்ற தன்மை அற்ற அரசாக இருக்க முடியாது.  அவ்வாறு இருப்பது ஒரு முரண்பாடே ஆகும்.   அரசமைப்பு சட்டத்தின் உள் கட்டமைப்பிலேயே மதச்சார்பற்ற கோட்பாடு  பொதிந்துள்ளது என்பதும், மக்களாட்சி கருத்து முறையாக புரிந்து கொள்ளப்படுவ தாகும் என்பதும்,  ஒழுக்கரீதியாக மேற்கொள்ளப்படும் எந்த ஒரு நியாயமான மதிப்பீட்டிலும், தெளிவாகத் தெரியும்.  நமது அரசமைப்பு சட்டத்தின் மிமிமி ஆவது பிரிவில் உறுதி அளிக்கப்பட்டுள்ள வரிசையான அடிப்படை உரிமைகளில் இருந்து தோன்றி வருவது இந்த மதச்சார்பற்ற கோட்பாடு என்பது.  அனைத்து மதங்களைச் சேர்ந்த மக்களும் சமமாக நடத்தப் படுவார்கள் என்ற உத்தரவாதம் இல்லாத நிலையில், மத சுதந்திரத்துக்கான உரிமை ஒரு மனிதனுக்கு எவ்வாறு உறுதி அளிக்கப்பட இயலும்?

எனவே, இந்திய நாட்டின் சூழலில் மதச்சார்பின்மை என்பது என்னவென்பதை முழுவதுமாக அறிந்து கொள் வதற்கு, நமது அரசமைப்பு சட்டத்தை முழுமையாக நாம் படித்துப் பார்க்க வேண்டும். மதச்சார்பின்மை பற்றி இரு மாறுபட்ட கண்ணோட்டங்கள் அரசியலமைப்பு சட்ட மன்றத்தில் நிலவின என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. மதத்திற்கும், அரசுக்கும் இடையே ஒரு நெடுஞ்சுவர் எழுப்பப் படவேண்டும் என்பதைக் கேட்பவர்கள் ஒரு புறம். அனைத்து மதங்களையும் சமமாக அரசு நடத்த வேண்டும் என்று கேட்பவர்கள் மறுபுறம். நமது அரசமைப்பு சட்டத்தையும், அது வரையப்படும் போது நடைபெற்ற விவாதங்களையும் நுணுக்கமாக ஆய்வு செய்து காணும்போது, பிந்தைய கருத்துதான் சட்ட மன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பது தெளிவாகத் தெரிய வரும்.

அரசியல் அறிவியலாளர் ஷெபாலி ஜா சுட்டிக் காட்டியது போல, இந்த அரசமைப்பு சட்டக் கனவைப் பற்றி கே.எம். முன்ஷியின் சொற்களில் இருந்து மிகச் சிறந்த முறையில் அறிந்து கொள்ளலாம்.  "அரசையும், மதத்தையும் பிரித்துப் பார்க்கும் அமெரிக்க அரசமைப்பு சட்டத்தின் விதி நமது இந்திய நாட்டுச் சூழலுக்கு ஏற்றது அல்ல. இந்தியப் பண்பாடு கொண்ட ஒரு மதச் சார்பற்ற கொள்கையை நாமேதான் உருவாக்கிக் கொள்ள வேண்டும். ஆழ்ந்த மத நம்பிக்கை கொண்ட மக்கள் நாம்.  அதே நேரத்தில், பிற மதங்களின் பால் சகிப்புத் தன்மை கொண்ட வாழ்க்கை பாரம்பரியத்தையும் கொண்டவர்களாக இருப்பவர்களும் நாம். அனைத்து மதங்களும் ஒரே கடவுளை அடைவதற்கு வழி காட்டு கின்றன என்ற அகண்ட மனப்பான்மையைக் கொண்டது இந்து மதம். இத்தகைய சூழ்நிலையின் காரணமாக,  நமது நாட்டுக்கு என்று ஒரு மதத்தை நமது நாடு ஏற்படுத்திக் கொள்ளவில்லை; அல்லது அமெரிக்காவில் செய்தது போல மதத்திற்கும் அரசுக்கும் இடையே அழிக்க இயலாத ஒரு கோட்டினை நாம் வரைந்து கொள்ளவு மில்லை". அல்லது ராஜிவ் பார்கவா விளக்கியபடி, "இந்தியாவில் கடை பிடிக்கப்படும் மதச்சார்பின்மை என்ற கொள்கை கேட்பதெல்லாம், மதத்திற்கும் அரசுக்கும் இடையே கொள்கை அளவிலான ஓர் இடைவெளி இருக்க வேண்டும் என்பதைத்தான்". மதத்திலோ, மத விவகாரங்களிலோ அரசு தலையிட முடியாது என்ற பொருள் அளிப்பது அல்ல இது. அத்தகைய எந்த ஒரு குறுக்கீடும் அரசமைப்பு சட்டம் நிர்ணயித்துள்ள எல்லைகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். சில நேரங்களில் மதங்களுக்கிடையே மாறுபட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதும் கூட தேவையாக இருக்கலாம்.  அவ்வாறு செய்வது மத சுதந்திரம், சமத்துவம் அல்லது மதச்சார்பின்மையுடன்  ஒருங்கிணைந்த எந்த ஒரு மதிப்பீட்டையும் வளர்ப்பதாக இருக்குமானால், அந்த வேறுபாடு நீடிக்கும் வரை அது தொடர்ந்து கடைபிடிப்பதனை நியாயப்படுத்தவும் இயலும் என்றும் பார்கவா விளக்கிக் கூறுகிறார்.

மத விவகாரங்களில் அரசு எந்த அளவுக்கு தலையிடுகிறது என்றும்,  அரசமைப்பு சட்டத்தில் அளிக்கப்பட் டுள்ள உறுதிமொழியை அது மீறுகிறதா என்பது பற்றியும் நம்மால் நிச்சயமாக விவாதிக்க முடியும். அனைத்து மக்களுக்குமான ஒரு பொதுவான சிவில் சட்டத்தை உருவாக்குவது இந்திய மதச்சார்பற்ற தன்மையைக் காப்பதாக ஆகுமா இல்லையா என்பது பற்றியும் நாம் விவாதிக்கலாம். ஆனால் இதில் தெளிவாக இருக்கும் செய்தி என்னவென்றால்,  இந்தியாவைப் போன்ற ஒரு மாறுபட்ட பன்முகத் தன்மை கொண்ட தொரு சமூகம், நமது முன்னோர்கள் உருவாக்கித் தந்துள்ள மதச் சார்பின்மை கோட்பாட்டினைப் பின்பற்றாமல், வளம் பெற்று வாழமுடியாது.

அரசமைப்பு சட்டத்தின் அடிப்படையைத் தகர்த்துவிட்டு, அரசமைப்பு சட்டத்தைத் திருத்துவது என்பது பற்றி இன்னமும் கற்பனை செய்தும் நம்மால் பார்க்க முடியவில்லை. ஆனால், நாம் தற்காத்துக் கொள்ள வேண்டிய முயற்சிகள் இவை மட்டுமல்ல. ஆனால், அதே போன்று, சிறுபான்மை மத மக்களின்  சாதாரணமான  சுதந்திரங்கள் மீது பெரும்பான்மை மதத்தினர் ,  அரசின் அனுமதியுடனோ, அனுமதி இன்றியோ இழைக்கும்  நியாயமற்ற கொடுமைகளை வெளிப்படுத்தும் அவர்களது ஒவ்வொரு இயக்கம், ஒவ்வொரு செயல்பாடு ஆகியவற்றையும் எதிர்த்து நாம் போராட வேண்டும். அரசமைப்பு சட்டத்தின் சாரமும் ஆன்மாவும் என்ன என்பதையும், சமத்துவத்திற்காக அளிக்கப்பட்டுள்ள உறுதி மொழியில் நம்பிக்கையையும் அங்கீகரிப்பதன் மூலம் மட்டுமே இதனை நம்மால் செய்ய முடியும். நம்மை நாமே கேட்டுக் கொண்டிருக்க வேண்டியது என்னவென்றால்,  சமத்துவம் என்பது உண்மையில் நமக்கு அளிக்கப்பட்ட சொத்தா? உண்மையில் அது கோருவது என்ன?

நன்றி: 'தி இந்து' 02-01-2018

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner