எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

- கே. வெங்கடரமணன்

(கொள்கை, கோட்பாடுகளில் வேர் கொண்டிருந்த தமிழ்நாட்டு அரசியலில்,   தனிப்பட்டஒருவரை  முழுமையாக மய்யப் படுத்தும் ஒரு மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான விருப்பத்தை  ரஜினிகாந்த் அடையாளம் காட்டுகிறார்)

1970களின்போது,  தமிழ் சமூகத்தில்  ரஜினியின் ஸ்டைல் முதன் முதலாக உருவாக்கிய பரபரப்பும், கவர்ச்சியுணர்வும் நம்மில் பலருக்கும் நினைவு இருக்கக் கூடும். தனது மிகச்சிறந்த ஸ்டைலுக்காக நன்கு அறியப்பட்டுள்ள தமிழ்த் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நம்மிடையே நீண்டதொரு காலமாக இருந்து வந்த போதிலும்,  அவரது திரைப்  படங்கள் பொருள் பதிந்தவையாக இருந்தன  என்று   பலரும் எண்ண வில்லை. அவரது தொடக்க கால திரைப்படங்களும், நடிப்பும் ஊட்டிய நம்பிக்கை வெகு விரைவில் மறந்து போகப்பட்டது. சூப்பர் மனிதரின் சாதனையுடன் தொடர்புபடுத்தியே அவர் பார்க்கப்பட்டு வந்தார். அற்புத ஆற்றல் படைத்தவராக காட்டப்பட்ட அவரது பாத்திரங்கள், மனிதரால் செய்ய இயலாத சாதனைகளைச் செய்ய இயன்ற  எண்ணற்ற நகைச் சுவைக் காட்சிகளாக மாற்றம் பெற்றன. அவரது வேலையே அவரது ஸ்டைல் தான் என்பதை அவரது விசிறிகளாலும், அவரால் கவர்ந்திழுக்கப்பட்டவர்களாலும்  ஒப்புக் கொள்ளும் ஒரு காலம் வந்துவிட்டது. அவரது திரைப்படங்களில் எந்த அளவுக்கு அது உண்மையோ அந்த அளவுக்கு, தற்போது அவர் செய்துள்ள அரசியல் பிரவேசத்திலும் அது அந்த அளவுக்கு உண்மையாக இருப்பதாகும்.

செய்து முடிக்க இயலாத நம்பிக்கைகள்

ஸ்டைலுக்கும், சரக்குக்கும் இடையே உள்ள வேறுபாட்டைப் பற்றிய கேள்வி எழுப்பப்படும்போது, 'ஸ்டைல் என்பது ஒரு கலை' என்று  சூசன் சோன்டாக் கூறியுள்ளார். ரஜினிகாந்தின் கலையை, அச்சொல்லை அவருடன் தொடர்பு படுத்திப் பார்க்க முடியுமானால், அது அவரது ஸ்டைல்தான்.  "கலையின் மீது நுண்ணறிவு பழி தீர்த்துக் கொள்வது" என்று அழைக்கும் அளவில் அதற்கு எதிராக விளக்கம் அளிப்பது பற்றி சூசன் சோன்டாக் எச்சரித்துள்ளார். தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி நடிகர் ஒருவர் அரசியலில் குதிக்கும்போது,  அவரது அரசியலைப் பற்றியோ, நோக்கங்களைப் பற்றியோ  விளக்கமளிப்பதற்கான  நேரம் இன்னமும் வரவில்லை. அவரிடம் என்ன சரக்கு இருக்கிறது என்பதையோ அல்லது அவரது அரசியல் பார்வை எப்படி இருக்கிறது என்பதையோ பார்ப்பதற்கான நேரமும் இதுவல்ல.   வேகமாகப் படமாக்கப்பட்டுள்ள அவரது திரைப்பட சண்டைக் காட்சிகளில் ஆழ்ந்த அர்த்தங்களையோ, மறைந்துள்ள நோக்கங்களையோ காண்பது எத்தகைய வீணான வேலையோ,  அதைப் போன்ற வீணான வேலையே இப்போது அவற்றைப் பற்றியெல்லாம் தேடிக் காண்பதுவும்.

தமிழ்நாட்டு அரசியலில் தற்போது நிலவும்  தனிநபர் கவர்ச்சி மற்றும் தனிநபர் நாயக வழிபாடு கலாச்சாரத்தை மேலும் மோசமானதாக அவரது அரசியல் பிரவேசம் ஆக்கிவிடுமா, இது நாள் வரை தமிழ்நாட்டில் வரவேற்று ஏற்றுக் கொள்ளப்படாத வலதுசாரி அரசியலை வேரூன்றச் செய்வதற்கான களத்தை அவர்  தயார்ப்படுத் துகிறாரா; அவர் தானாகத்தான் செயல்படுகிறாரா அல்லது எவராலாவது பின்னணியில் இருந்து இயக்கப் படுகிறாரா என்ற கேள்விகள் எல்லாம் எழுப்பப்படு கின்றன. இத்தகைய கவலைகள் அனைத்தும் நியாய மானவை என்பதிலும், அவற்றுக்கு விடை தேவை என்பதிலும் எந்த வித சந்தேகமும் இருக்க முடியாது. என்றாலும், இன்று தமிழ்நாட்டில் நிலவும் சமூக, அரசியல் சூழ்நிலைகளில், முதலில் எழுப்பப்பட வேண்டியுள்ள வேறு சில கேள்விகளும் உள்ளன.

ரஜினிகாந்த் எதற்கு அரசியலில் ஈடுபட விரும்புகிறார்? தற்போதைய தமிழ்நாட்டின் அரசியல் நடைமுறை சரியாக இல்லாமல் தவறானதாக இருப்பதாகவும், அது மாற்றப்படவேண்டும் என்றும் அவர் கூறுகிறார்; மற்றவர்கள் கண்டு சிரிக்கும் அளவுக்கு தமிழ்நாட்டின் அரசியல் சீரழிந்துவிட்டது என்றும், ஆட்சியாளர்களே கொள்ளைக் காரர்களாக ஆகி விட்டனர் என்றும், இந்த நிலையிலாவது இந்த சீரழிவைத்  தடுத்து நிறுத்தத் தான் ஏதேனும் செய்யா விட்டால்,  தனது இறுதிக் காலம் வரை குற்ற உணர்ச்சியில் தான் தவித்துப் போய்விடுவேன் என்றும் அவர் கூறியிருக்கிறார். ஜெயலலிதா இயற்கை எய்தியது குறித்தும், தி.மு.க. தலைவர் கலைஞர் உடல் நலமின்மை காரணமாக தீவிர அரசியலில் பங்கெடுத்துக் கொள்ள இயலாத நிலையில் இருப்பது குறித்தும் அவர் குறிப் பிடுவதாகத் தோன்றக் கூடும். தற்போது தமிழக ஆட்சியில் உள்ள அ.இ.அ.தி.மு.க. ஆட்சி அனைத்து வழிகளிலும் மதிப்பிழந்ததாக இருக்கிறது. என்றாலும்,  அரசியல்வாதியாகப் போகும் ரஜினிகாந்த் கூறியுள்ள மற்ற விவகாரங்களில் எந்த அளவு உண்மை இருக்கிறது? கடந்த ஓராண்டு காலத்தில் மட்டுமே திடீரென்று சீரழிந்து போக இயன்றதல்ல அரசியல்; அத்துடன் லஞ்சஊழல் புகார்கள் எல்லாம் அண்மைக் கால சங்கதிகள் அல்ல. தமிழ்நாட்டு மக்களுக்கு ஏதேனும் மனக் கவலையையும், பெருத்த அவமானத்தையும் ஏற்படுத்துவதாக இருந்தால்,  அது திரைஉலகத்தினர், அவர்கள் புகழ் பெற்றவர்களாக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி,  பொது வாழ்க்கையில் எளிதாக நுழைந்து, இயல்பான அரசியல் தலைவர்கள் போலவே தோற்றம் அளிப்பதுவாகத்தான் இருக்க வேண்டும்.  இரண்டாம் தலைமுறை தலைவர் களை உருவாக்காத, உருவாவதை விரும்பாத தலைமை களினாலேயே, ஏதோ தனிப்பட்ட நபர்களால் நடத்தப் படும் மன்றங்களைப் போலவே,  பெரும்பாலான அரசி யல் கட்சிகள் தலைமை தாங்கி நடத்தப்படுகின்றன. தனிப்பட்ட கவர்ச்சி, புகழின் அடிப்படையில் அரசியல் அமைப்புகள் திரைப்பட நடிகர்களால்  துவக்கப்பட்டு, அவர்களது ரசிகர் மன்றங்களே உள்ளூர் கட்சிக் கிளைகளாக மாற்றப்படுகின்றன. ரஜினி துவக்க உத்தேசி திருப்பதும் இத்தகைய பட்டியலில் இடம் பெறப்போகும் மற்றொரு கட்சியாகும். 1  என்ற எண்ணிக்கையைத் தொடர்ந்து வரும் எண்ணற்ற பூஜ்யங்கள் கொண்ட ஒரு கட்சியாகத்தான் அதுவும் இருக்கப் போகிறது.

லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக அரசியல் தலைவர்கள் வாக்காளர்களால் பல நேரங்களில் தண்டிக்கப்பட்டுள்ளார்கள்.  1996 மற்றும் 2011 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அன்றைய அ.இ.அ.தி.மு.க.  மற்றும் தி.மு.க. ஆட்சியில் செய்யப்பட்ட தவறுகளுக்காக அவர்களுக்கு எதிரானதாகவே அமைந்திருந்தன. தமிழ் நாட்டின் நலன்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும்  அளவில் நிலவும்  ஒரு சில முக்கியமான பிரச் சினைகள் பற்றி சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ ஒரு நிலைப் பாட்டை அரசியல் கட்சிகள் மேற்கொள்ள வேண்டிய கட்டாய நிலையில் உள்ளன. இலவசங்கள் அளிப்பது என்ற தங்களது தேர்தல் நேர வாக்குறுதிகள் மூலமாக தமிழ் நாட்டின் இரு பெரும் கட்சிகளும் தேர்தலை வேறு பிரச்சினைகளை மய்யமாகக் கொண்ட தாக ஆக்காமல்,  வாக்காளர்களுக்கு கையூட்டு அளித்து வந்தன என்பது உண்மையே. மாநிலத்தைத் திறமையாக வழிநடத்திச் செல்ல இயன்ற பொதுமக்கள் மதிப்பு பெற்ற  ஒரு மாபெரும் தலைவர் இல்லை என்ற ஒரு காரணத் தைக் கொண்டே, அக்கட்சிகளுக்கு கோட்பாட்டு நோக் கங்கள் இல்லை என்று கூறியோ, தற்போதுள்ள அரசியல் பிரிவுகளின் சுமையோ, தந்திரங்களோ அற்ற ஒரு புதிய தலைவர் ஒருவரால் மட்டுமே இருளடைந்து போயுள்ள தமிழகத்தைக் காப்பாற்ற முடியும் என்றோ உரிமை கோர முடியாது. சில நோக்குநர்கள் கூறுவது போல, தமிழ்நாட்டு வாக்காளர்கள் நம்பிக்கை வைத்து தேர்ந்தெடுப்பதற்கான தலைவர்களுக்கே பஞ்சம் ஏற்பட்டுவிடவில்லை என்பது தான் உண்மை ஆகும்.

தேவதூதரை யார் கேட்டார்கள்?

அரசியல் நிலைத் தன்மை இல்லாத நேரங்களிலும் கூட,  இரு பெரிய அரசியல் கட்சிகளாலும் தனிப்பெரும்பான்மை கொண்ட அரசினை அமைக்க முடியாத போது, அவ்வப்போது உள்ள அரசியல் சூழ்நிலைகளுக்கு ஏற்ப புதிய புதிய கூட்டணிகள் ஏற்பட்டு,  கூட்டணி அரசுகள் மத்தியில் ஆட்சிக்கு வந்துள்ளன என்பதை எவரும் மறந்துவிடமுடியாது. இப்போது நம் முன் உள்ள கேள்வியே தமிழ்நாட்டைக் காப்பாற்ற வந்த தேவதூதரா ரஜினி என்பது அல்ல. தமிழகத்திற்கு ஒரு தேவதூதர் தேவையா என்பதே முதலில் கேட்கப்பட வேண்டிய கேள்வியாகும். தான் ஆட்சி அதிகாரத்தைத் தேடவில்லை என்றும்,  மாநி லத்தின் செல்வங்கள் கொள்ளை போவதைத் தடுக்கும் பாதுகாவலர்களை மட்டுமே தேடுவதாகவும் அவர் கூறி யுள்ளார். விரைவில் போர்க் களத்தில் இறங்கவேண்டும் என்றும்,  கோழைகள்தான் போரில் ஈடுபடாமல் இருப்பார்கள் என்றும் அவர் கூறியிருக்கிறார். தேவை ஏற்படும்போது போர் புரிவது நமது கடமை என்று கீதையில் கூறியிருப்பதையும் போதுமான அளவுக்கு அவர் எடுத்துக் காட்டியுள்ளார். போர்ப் பிரகடனம் மற்றும் பாதுகாவலர் அல்லது தேவதூதர் போன்ற உரு வகங்களைப் பயன்படுத்துவது, ஆட்சி செய்வோர் புரவலர்களாகவும், ஆளப்படுவோர் வாடிக்கையாளர் களாகவும் இருப்பதை விரும்பும் ஒரு மனோபாவத்தை வெளிப்படுத்துவதாகவே உள்ளது.

வெறுப்புணர்வு மாநிலத்தைச் சூழ்ந்திருக்கும்போது,  தமிழ்நாட்டு அரசியலில் இன்று உள்ள வெற்றிடம் உறுதி நிறைந்த ஒரு தனிப்பட்ட அரசியல் தலைவர் இல்லை என்பது மட்டும்தான். அது போன்ற தலைவர்கள் இல்லாமலும் கூட மக்களாட்சி வெற்றிகரமாக செயல்பட முடியும். அதற்குத் தேவையானதெல்லாம்  சட்டங்களும், அரசமைப்பு சட்டமும் என்ன செய்ய வேண்டும் என்று எதிர் பார்க்கிறதோ அதனை அனைத்துத் தனிப்பட்ட வர்களும், அமைப்புகளும் பிறழாமல் செய்ய வேண்டும் என்பதுதான்.  சோதனை வரும் காலங்களில் தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ள இயன்றதுதான் மக்களாட்சி எனப்படுவது. இதனை ஒரு நோய் போல கருதி,  அதனைத் தீர்க்க ஒரு தேவதூதர் தோன்றி வரவேண்டும் என்று நம்புவதே,  மக்களாட்சித் தன்மையின்  அடிப்படை மீதே நம்பிக்கை இல்லாமல் இருப்பதைக் காட்டுவதாக இருப்பதாகும். புதியதாக அரசியலுக்கு வரும் ஒருவரை சேர்க்காமல் கதவை மூடிவிடவேண்டும் என்ற பொருளை இது அளிக்காது. புடம் போடப்பட்ட மக் களாட்சி நடைமுறை ரஜினிகாந்துக்கும் சரி, மற்றும் அவர்களைப் போன்றவர்களுக்கும் சரி இடம் கொடுக் கவே செய்யும். அவ்வாறு இருப்பினும், இப்போது அரசி யலுக்கும், அரசியல் நடைமுறைக்கும்  வெளியே இருப்பவர்கள் அரசியலுக்கு வருவது தவிர்க்க முடியாத முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறிவிடமுடியாது.  ரஜினியின் அரசியல் பிரவேசத்தை ஏதோ பெருவெற்றி பெறக் கூடிய ஒரு திரைப்பட வெளியீட்டினைப் போல விவரிப்பதற்கு  திரைப்பட மொழியை சிலர் பயன்படுத்தி யுள்ளனர். தமிழ்நாட்டின் அனைத்துப் பிரச்சினை களையும் ஒரே நேரத்தில் தீர்ப்பதற்காக கடைசி நேரத்தில் அரசியலில் ரஜினி நுழைவது, திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் தோன்றி வெற்றி பெறும் கதாநாயகன் பாத்திரத்தில் நடிப்பதைப் போலவே அவர் நினைக்கிறார் என்றே தோன்றுகிறது. அத்தகைய திரைப்படக் காட்சி களில் பார்வையாளர்கள் உற்சாகமாக கைதட்டிப் பாராட்டுவார்கள்; ஆனால், நிஜ வாழ்க்கையில் அவர்கள் அவ்வாறு செய்வார்களா என்பது சந்தேகத்திற்கு இடம் அளிப்பதாகவே இருக்கிறது.

திரைப்பட நட்சத்திரமும் அவரது விசிறிகளும்

ஒரு திரைப்பட கதாநாயகனுக்கும், அவரது விசிறி ஒருவருக்கும் இடையே உள்ள இயல்பான தொடர்பை வைத்துப் பார்க்கும்போது, ரஜினி காந்தை ஆதரிப்ப வர்கள் தங்களது அரசியல் உணர்வுகளையே இழந்து விட்டவர்கள் போலவும்,  தங்களின் உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ளும் கவலை கூட இல்லாத அளவில் கண்களை மூடிக் கொண்டு அவரைப் பின்பற்றுபவர் களாகவும் ஆகிவிடும் விளைவை ரஜினி காந்தின்  அரசியல் பிரவேசம் ஏற்படுத்திவிடும் என்ற நியாயமான சந்தேகமும் நிலவி வருகிறது. தனது அரசியல் ஆன்மிக அரசியலாக இருக்கும் என்று அவர் அறிவித்திருப்பது, திராவிடக் கட்சிகளின் மய்யக் கோட்பாட்டுக்கே சவால் விடுவதாக சிலர் பார்க்கவும் செய்கின்றனர். இவை அனைத்தும் உண்மையில் வியப்பை அளிக்கும் செய் திகளே ஆகும். என்றாலும்,  இதில் உள்ள ஆபத்து வலதுசாரி அரசியல் தமிழ்நாட்டு மண்ணில் வேர் கொண்டுவிடும் என்பது மட்டுமல்ல; கொள்கை, கோட் பாடுகளில் வேர் கொண்டிருந்த தமிழக அரசியலை  முழுமையாக ஒரு தனிப்பட்டவரை  மய்யப்படுத்தும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவது என்னும் பேராபத்தை விளைவிப்பதுமாகும். கவர்ச்சியால் உந்தப்பட்ட மக் களைக் கொண்டு,  தனிப்பட்ட தன்னையே மய்யமாக வைத்து முதன் முதலாக அரசியல் செய்த எம்.ஜி.ஆர் பொது நலம், சமூக நீதி என்பனவற்றின் அடிப்படையில் அமைந்த ஒரு மேடையைப் பயன்படுத்திதான் புகழின் உச்சியை அடைந்தார். ஆனால், ரஜினிகாந்தோ தமிழ் நாட்டுக்குத் தேவையே இல்லாத ஒரு மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு விரும்புபவராகத் தன்னைப் பிரதிபலிக்கிறார்.

நன்றி: "தி இந்து" 03-01-2018

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner