எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஊடகங்களில் மக்களுக்கும், நாட்டிற்கும் பயனற்ற, தேவையற்ற கருத்துகள்தான் விவாதப் பொருளாக முன் வைக்கப்படுகின்றன. ஏழை எளிய மக்களின் முதன்மையான பிரச்சினைகள் புறம் தள்ளப்படுகின்றன.

மோடி அரசு செய்யும் விளம்பர தந்திரங்களுக்கு இவ்வூடகங்கள் அடி பணிந்து போகின்றன. ரூபாய் 500, 1000 பண மதிப்பு நீக்க நடவடிக்கை, சரக்கு சேவை வரி விதிப்பால் தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களுக்குக் கிடைத்து வந்த வருவாயில் ஏற்பட்டு வருகிற இழப்பு, சிறு, குறு, பெருந் தொழில்கள் நசிந்து வருகிற போக்கு, நாள்தோறும் இளைஞர்கள் வேலை வாய்ப்பினை இழந்து வரும் நிலை, நாட்டின் ஒட்டு மொத்தப் பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டு வரும் தொடர் சரிவு, உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் கவலை தரும் நிகழ்வுகள் போன்ற நாட்டின் முதன்மையான பிரச்சினைகளை ஆய்வு செய்யாமல் ஆண்டாளை அல்லவா ஊடகங்கள் முதன்மைப் படுத்துகின்றன.

மனித நாகரிக வளர்ச்சியில் பெண் வழி சமுதாயம் பல நூறு ஆண்டுகள் நிலை பெற்றிருந்தபோது இருந்த குமுகாய உறவுகள் எப்படி இருந்தன என்பதைப் பற்றி அறியாதவர்கள், புரிந்து கொள்ள முடியாதவர்கள் இன்று ஒளி ஊடகங்களில் உளறுகிறார்கள்.

அண்ணல் அம்பேத்கரிடம் ஒரு முறை கீதையைப் பற்றிக் கேட்டபோது "முட்டாள்களின் உளறல் blabberings of fools” என்று உண்மையைப் பகன்றார்.

ஆதிக்க சக்திகள் காலம்தோறும் முட்டாள்தனத்தையும், மூடத் தனத்தையும் சமயம் என்ற பெயரால் புகுத்தி, அந்த புராண,  கற்பனைக் கதைகளுக்குப் புனிதம் என்ற போர்வையைப் போர்த்தி மக்களை ஏமாற்றியதால்தான் அண்ணல் அம்பேத்கர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கண்ணன் பாடல்களையும்,  தோத்திரப் பாடல்களையும் பாடிய பாரதியாரின் இறுதி கால கவிதைகளில் பல மாற்றங்களைக் காணலாம்.

"உயிர் பெற்ற தமிழர் பாட்டு" என்ற தலைப்பில்

"ஒன்றுண்டு மானிடச் சாதி-பயின்று

உண்மைகள் கண்டவர் இன்பங்கள் சேர்வார்

இன்று படுத்தது நாளை - உயர்ந்

தேற்றம்அடையும் உயர்ந்தது அழியும்" - 4.

"கவிதை மிக நல்ல தேனும் - அக்

கதைகள் பொய் யென்று தெளிவுறக் கண்டோம்"

புவிதனில் வாழ்நெறி காட்டி - நன்மை

போதிக்கும் கட்டுக் கதைகள்

அவைதாம் காலத்திற்கேற்ற வகைகள்

அவ்வக் காலத்தின்

கேற்ற ஒழுக்கமும் நூலும்

ஞாலம் முழுமைக்கும் ஒன்றாய் - எந்த

நாளும் நிலைத்திடும் நூலொன்றும் இல்லை-13

சூத்திரனுக்கு ஒரு நீதி-தண்டச்

சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி

சாத்திரம் சொல்லிடுமாயின் - அது சாத்திரம் அன்று

சதியென்று கண்டோம் - 14

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பெண் குழந்தை தாலாட்டுப் பாடலை திருவாளர்கள் குத்தூசி குருசாமி- குஞ்சிதம் இணையருக்கு 1938 ஆம் ஆண்டு பெண் மகவு பிறந்த போது பாடி அளித்தார். பெரியார், ரஷ்யா என்று பெயரிட்டார். அரசு மருத்துவராகப் பணி புரிந்து ஓய்வு பெற்றவர் திருமதி ரஷ்யா. இவரது சித்தப்பா கல்வி நெறி காவலர் நெ.து. சுந்தர வடிவேலு ஆவார்.

அன்று குழந்தை ரஷ்யாவைப் பாராட்டிய இந்தப் பாடல் பகுத்தறிவின் உச்சமாகப் போற்றப்படுகிறது. பாவேந்தரின் சில வரிகள்-

"தெய்விகத்தை நம்பும் திருந்தாத பெண் குலத்தை -

உய்விக்க வந்த உவப்பே! பகுத்தறிவே!"

எல்லாம் கடவுள்செயல் என்று துடை நடுங்கும்-

பொல்லாங்கு தீர்த்துப் புதுமை செய வந்தவளே!

வாயில் இட்டுத் தொப்பை வளர்க்கும் உறங்கு சதிக்கிடங்கைக்

கோயிலென்று காசுதரும் கொள்கை தவிர்ப்பவளே!

சாணிக்குப் பொட்டிட்டுச் சாமி என்பார்.

செய்கைக்கு நாணி உறங்கு;  நகைத்து நீ கண்ணுறங்கு?”

இவ்வாறு எது உண்மை? எது பொய்? என்பதைக் கடந்த நூறு ஆண்டுகளாக திராவிடர் இயக்கமும், தமிழ்ப் பெருங்கவிஞர்களும் எடுத்துச் சொல்லியும் சதிக் கிடங்கிலிருந்து நமத்துப் போன வெடிகளை வீசி மக்களைத் திசைத் திருப்பப் பார்க்கின்றனர்.

இவ்வித போக்கிலிகளின் அடாத செயல்களை முற்றிலும் உணர்ந்த அறிஞர் அண்ணா தனது வாழ்நாளில் கையாண்ட அணுகு முறையைப் பார்த்தால் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

அண்ணாவை அன்றைய அமைச்சர் பக்தவச்சலம் மகள் சரோஜினி வரதப்பன் இழிவாகப் பேசினார் என்ற காரணத்திற்காக கவிஞர் கண்ண தாசன் கடும் சொற்களால் தாக்கினார். அச்சொற்கள் தாங்கிய இதழ் விற்பனைக்குக் கடைக்குச் செல்வது அண்ணாவால்  தடுக்கப்பட்டது.

கழகத்திலிருந்து பிரிந்த பிறகு அண்ணாவை,  கண்ணதாசன் தாக்கிய போது, 1965 ஆம் ஆண்டு கவிஞர் வேழவேந்தன் கவிதை நூல் வெளி யீட்டு விழாவில் கண்ணதாசனின் கவிதைச் சிறப்புகளை அண்ணா போற்றிப் புகழ்ந்தார்.

இத்தகைய அண்ணா போற்றிய தகைமைகளை ஆண்டாளுக்காக அவதாரம் எடுப்பவர்கள் எண்ணிப் பார்ப்பார்களா? அல்லது சங்பரிவார் கும்பலோடு காலம் தரப்போகும் கசப்பான படிப்பினையை ஏற்கப் போகிறார்களா?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner