எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருச்சியில் நடைபெற்ற உலக நாத்திகர் மாநாடு

எதிர்காலம் அறிவியலுக்கும் - நாத்திகத்திற்குமே!  (5)

- முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன்

 

நேற்றையத் தொடர்ச்சி...

அடுத்துப் பேசிய மக்களவை உறுப்பினர் கனிமொழி "திருச்சியில் பெரியார் மாளிகைக்கு வரும்போது எங்கள் தாத்தா வீட்டுக்கு வந்த உணர்வைப் பெறுகிறோம், விடை பெறும்போது உற்சாகத்தோடும், ஊக்கத்தோடும் செல்லும் உணர்வைப் பெறுகிறோம்" என்று தன் உரையைத் தொடங் கினார்.

அவர் தன் உரையில் "வறுமையையும், நோயையும் ஏன் கடவுள் கொடுக்க வேண்டும்? தாய் - தந்தைமார்களின் தவறு களால் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டதாக ஒரு குழந்தை ஏன் பிறக்க வேண்டும் - இதற்கெல்லாம் கடவுள் பொறுப்பாளி இல்லையா?" என்று வினா எழுப்பியவர் "நாம் இத்தகைய மாநாடுகளை நடத்திக் கொண்டே இருக்க வேண்டும். பகுத் தறிவுவாதிகள், நாத்திகர்கள் அடிக்கடி சந்தித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஒருவர் கையை இன்னொருவர் பிடித்துக் கொண்டே பணியாற்றிட வேண்டும்" என்றார்.

அடுத்து உரையாற்றிய எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் "உலகில் மனிதநேயமும், அமைதியும், சகோதரத்துவமும் காப்பாற்றப்பட நாத்திகக் கொள்கையை உயர்த்திப் பிடிக்க இந்த மாநாடு கூட்டப்பட்டுள்ளது" என்றார். மதவாதத்தைத் தடுப்பதுதான் பொருள் முதல் வாதம், மனிதநேயம் என்பதுதான் நாத்திக அறிவியல் வாதம் என்றார்.

தம் உரையை நிறைவு செய்கையில் "ஆதிக்கத்திற்கும், ஜாதி மதவாதத்திற்கும் இன்னொரு பெயர்தான் ஆன்மிகம். ஆன்மிகத்தை எதிர் கொள்ளும் ஆற்றல் பெரியாரியலுக்கு உண்டு. கடவுள் மதத்தின் பெயரால் நடக்கும் ஒடுக்கு முறைகளை எதிர்த்திட இந்த மாநாடு நடைபெறுகிறது. ஒப்பீட்டளவில் நாத்திகர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருக்கலாம். ஆனால் எதிர்காலம் என்பது அறிவியலுக்கு - நாத்திகத் தத்துவத்திற்கு உரியது - அதுதான் வெல்லும் தத்துவம்" என்று கூறி முடித்தார்.

மனிதநேய நன்னெறி ஒன்றியத்தின் செயல் அலுவலர் கேரே மெக்கலாண்ட், தான் எவ்வாறு அய்.எச்.இ.யு. அமைப்பில் இணைத்துக் கொண்டேன் என்பதை விளக்கி இந்த மாநாடு நம்பிக்கையளிப்பதாகக் கூறினார். இறுதியாக திருச்சி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் ஞா.ஆரோக்கிய ராஜ் நன்றி கூறினார்.

மாநாட்டின் நிறைவு நாளான 7-1-2018 ஞாயிறன்று தமிழர் தலைவர் உலக நாத்திகர் மாநாட்டுப் பிரகடனத்தை அறிவித்தார்.

பிரகடனம் என்றால்

7.1.2018 மூன்றாம் நாள் மாநாட்டில் பேராசிரியர்கள், சட்ட நிபுணர்கள் - மேனாள் அரசு தலைமை வழக்குரைஞர் ரவிவர்மகுமார் ஆகியோர் கலந்து கொண்டு Humanist Declaration எனும் ஒரு பிரகடனத்தைத் தீர்மானமாக -  பொதுவாக இதுபோல் பன்னாட்டு மாநாடுகளில், தீர்மானம் என நிறைவேற்றுவதில்லை ஆகையால், மாற்றாக Declaration - பிரகடனம் என்று இம்மாநாட்டின் அத்தனை பெருமைகளும் கலந்து ஒரு தெளிவுமிக்க பிரகடனம் நிறைவேறியது.

இந்த மாநாட்டில் பங்கு பெற்ற, அயல் மண்ணிலிருந்து வந்த சார்பாளர்கள் வியந்து பாராட்டியது என்னவெனில் அவர்களுடைய நாட்டில் நாத்திகப் பகுத்தறிவு அமைப்புகள் என்பன அரங்க அளவிலேயே இருந்திருக்கையில், தமிழ் மண்ணில்தான் தந்தை பெரியாரின் அரும்பெரும் முயற்சி யின் பயனாய் அது ஒரு மக்கள் இயக்கமாக இருக்கிறது என்பதே.

மாநாட்டுப் பிரகடனம்

"திராவிடர் கழகம், விஜயவாடா -  நாத்திகர் மய்யம் மற்றும் பகுத்தறிவாளர் கழகம் ஆகியோர் இணைந்து திருச் சியில் 2018 ஜனவரி 5,6, 7 நாள்களில் நடத்திய உலக நாத்திகர் மாநாட்டில், நாத்திகர், மனிதநேயர், பகுத்தறிவாளர் சுதந்திர சிந்தனையாளர்கள் மற்றும் ஒத்த கருத்துடையோர் ஆகிய நாங்கள் பிரகடனப்படுத்தி உறுதி கூறுகிறோம்.

சிறார்களும் இளைஞர்களும்தான் உலக மக்களில் பெரும்பான்மையினராக இருக்கின்றனர். அவர்களிடம் நிலவும் தளைகளான அறியாமை, கல்வியறிவின்மை, மூட நம்பிக்கையொட்டிய பழக்கங்கள் ஆகியவைகளிடமிருந்து அவர்களை விடுதலை செய்திட வேண்டும். திறனாய்தல் மற்றும் தடையற்ற கேட்டறிதல் ஆகியவற்றை அவர்களுக்குப் புகட்டிட வேண்டும். இதனால் அறிவியல் மனப்பான்மை அவர்களிடம் பெருகி, பகுத்தறிவு மற்றும் நன்னெறி சார்ந்து வாழ்ந்திட வழி ஏற்படும்.  நாத்திகர், மனிதநேயர் மற்றும் பகுத்தறிவாளர் ஆகியோருக்கு எதிரான சகிப்புத் தன்மையின்மை, கொடுமைகள், வன்முறைகள் அதிகரித்து வருகின்றன.  மதவாத அடிப்படையாளர்களின் நடவடிக்கை களால் இளைஞர்கள், தீவிரவாதத்திற்குப் பலியாகிக் கொண்டு வருகிறார்கள்.

மூடநம்பிக்கைப் பழக்க வழக்கங்களாலும் மோசடி செய்திடும் சாமியார்களாலும், குழந்தைகளின், பெண்களின், ஒட்டு மொத்த சமுதாயத்தினரின் நலமும் நல்வாழ்வும் பாதிக்கப்படுகின்றன.  பெண்கள், குழந்தைகள் மற்றும் ஒரின, ஈரின, பால் மாற்றின மக்கள் அனைவரும் சம உரிமை படைத்தவர்கள்;  பாகுபடுத்தி வேறுபடுத்தும் விலங்கிலிருந்து விடுபட வேண்டியவர்கள். அவர்களுடைய சமத்துவத்திற்கும் சம உரிமைக்கும் பாடுபடுவோம்!

மதச்சார்பின்மை மற்றும் தளையற்ற சிந்தனையினை வளர்த்தெடுப்போம்! சமுதாயத்தில் விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கு, பெண்களுக்கு எதிராக ஏவப்படும் அனைத்துவித கொடுமைகளையும் அறவே நீக்கிடுவோம்! அனைவரையும் போலவே, நாத்திகர்களும், மனிதநேயர்களும், பகுத்தறிவா ளர்களும் தளையற்ற சிந்தனையாளர்களும் சம உரிமை படைத்தவர்கள் என்பதை உறுதி செய்து, அதனை, ஆளும் அரசினர்தம் கருத்திற்கு, கவனத்திற்கு கொண்டு செல்ல  உரியன செய்வோம்!

மதத்தையும், அரசையும் பிரித்துப் பார்த்தல், மதத்தையும் அரசியலையும் பிரித்தல், மதத்தையும் கல்வியையும் பிரித்தல் மற்றும் மதத்தையும் அரசாட்சியையும் பிரித்துப் பார்க்கும் கருத்துக் கண்ணோட்டத்தை வளர்த்தெடுப்போம்! கல்வி புகட்டுவதிலும் இளை ஞர்களிடையே பகுத் தறிவுச் சிந்தனையை வளர்ப்பதிலும், அரசு முக்கிய பங்கு ஆற் றிட வேண்டுகிறோம். நாத்திகம், மனித நேயம் ஒரு வாழ்க்கை முறை என்னும் கருத் தோட்டத்துடன், திற னாய்வு, அறிவியல் மனப்பான்மை, உய்த்து அறியும் கேள்வி உணர்வுகளை வளர்த் திடுவோம்!

அனைத்து மனிதர்களுக்குமான கண்ணியத்தினை சுயமரியாதையினை உயர்த்திப் பிடிப்போம்! நன்னெறி என்பது ஒரு சமூக அவசியம், அதன்மீது மத முக்கியத்துவம் ஏதும் இல்லை என்பதை உறுதிப் படுத்துவோம்! உலகெங் கிலும் உள்ள தெய்வ நிந்தனைச் சட்டங்களை நீக்கிட உரத்தக் குரல் கொடுப்போம்! ‘தீண்டாமை’ கொடுமையினை உள்ள டக்கிய ஜாதி முறையினை, இந்திய அரசமைப்புச் சட்டத்திலிருந்து நீக்கிட வேண்டுகிறோம்! பகுத்தறிவு சார்ந்த ஒப்புரவு சமூகத்தை உருவாக்கிட  அனைத்து நாத்திகர்கள், மனிதநேயர்கள், சீர்திருத்தவாதிகள் எடுக்கும் முயற்சிகளை செயல்களைப் போற்றுவோம்!

2018 ஜனவரி 7 ஆம் நாளான இன்று  நீதி, சமத்துவம், மனிதநேயம், அறிவியல் மனப்பான்மை, பகுத்தறிவு மற்றும்  கேள்வி கேட்டிடும் உரிமைகளின் - உணர்வு எழுச்சிக் குரலே இந்தப் பிரகடனம் என்று உலகுக்கு அறிவிக்கிறோம்".

இந்தப் பிரகடனத்தை மாநாட்டு வரவேற்புக் குழு சார்பில் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் முன் மொழிய மாநாட்டில் பங்கேற்ற அனைவரும் எழுந்து நின்று பெரும் கரஒலி எழுப்பி வரவேற்றனர்.

நரேந்திர தபோல்கருக்கு விருது

மதவெறியர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட பகுத்தறிவாளர் டாக்டர் நரேந்திரதபோல்கரின் மூடநம்பிக்கை ஒழிப்பிற்கு ஆற்றிய பங்கினைப் போற்றும் வகையில், புத்தூர் பெரியார் மாளிகையில், 6-1-2018 அன்று உலகநாத்திகர் மாநாட்டினை ஒட்டி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் விருதும், பாராட்டும் வழங்கப்படுமென லண்டன் - பன்னாட்டு மனிதநேய நன்னெறி ஒன்றியம் (International Humanist and - Ethical Union) அறிவித்திருந்தது. அறிவித்த விருதினை ஒன்றியத்தின் தலைவர்கள் நேரில் வந்து நரேந்திர தபோல்கர் நிறுவிய அமைப்பினரிடம் வழங்க முடிவு செய்திருந்தனர்.

உலக நாத்திகர் மாநாட்டுப் பொதுக்கூட்ட மேடையில் பன்னாட்டு மனிதநேய நன்னெறி ஒன்றியத்தின் தலை வர்களாக வருகை புரிந்திருந்த கேரே மெக்கலாண்ட், எலிசபெத் ஓ'காசே ஆகியோர் மாநாட்டுக்கு வருகை புரிந் திருந்த மகாராஷ்டிர அந்தராஷ்டிரதா நிர்மூலன் சமிதியின் செயல் தலைவர் அவினாஷ் பாட்டீலிடம் வழங்கினர். விருதினை வழங்குமுன் கேரேமெக்கலாண்ட், மதவெறி யினை எதிர்த் தும், நரேந்திர தபோல்கரின் மூடநம்பிக்கை ஒழிப்புப் பணியைப் பாராட்டியும் பேசினார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் முன்னிலையில் இவ் விருதினை வழங்கினர்.

(நிறைவு)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner