எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

(அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மீதான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் என்னும் பா.ஜ.கட்சியின் தொடர் தாக்குதல் பிரச்சாரத்தினை 2ஜி வழக்கின் தீர்ப்பு பலமிழக்கச் செய்துவிட்டதாகவே தெரிகிறது)

-  வெங்கடேஷ் ராமகிருஷ்ணன் மற்றும் பூர்ணிமா திரிபாதி

 

மத்திய முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சராக வும், சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சராகவும் இருந்து சாதனை படைத்த கபில்சிபில்தான், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் 2017 டிசம்பர் 21 ஆம் தேதியில் வழங்கப்பட்ட தீர்ப்பின் அரசியல் விளைவுகள் பற்றிய ஆக்கபூர்வமான மதிப்பீட்டினை வெளியிட்ட ஒரே மூத்த காங்கிரசு தலைவராவார். "இந்தத் தீர்ப்பினை காங்கிரசு கட்சிக்குக் கிடைத்த தார்மீக வெற்றி என்று கொண்டாடலாம் என்றாலும்,  அதனால் நாம் இழந்த மற்ற அனைத்தையும்  நம்மால்  திரும்பக் கோரிப் பெற முடியாது" என்று அவர் கூறியுள்ளார். என்றாலும்,  2 ஜி ஒதுக்கீட்டினால் அரசுக்கு எந்த வித இழப்பீடும் ஏற்பட்டுவிடவில்லை என்று 2011 இல் கூறியது உள்ளிட்ட அவரது இதர அறிக்கைகள் மிகைப்படுத்தப்பட்டவை என்றும், உணர்வு பூர்வ மானது என்றும், பாதகம் விளைவிக்கக்கூடியவை என்றும் காங்கிரசு வட்டாரங்களிலேயே சிலரால் கருதப்பட்டது. 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஊழல் நடந்திருக்கிறது என்றும், அதனால் அரசுக்கு 1 . 76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது  என்றும் பா.ஜ.க. தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டது, மன்மோகன் சிங் அரசுக்கு எதிராக பெரியஅளவிலான பொதுமக்களின் மனநிறைவின்மை உருவானதற்கும், 2014 மக்களவை தேர்தலில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி படு தோல்வி அடைந்ததற்குமான காரணங்களில் ஒன்று இது என்பதில் எந்தவித சந்தேகமும் இருக்க முடியாது. தேர்தலுக்கு முன், பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் என்று மோடி அறிவிக்கப்பட்டதும் அதனால்தான்.  2 ஜி ஊழல் உள்ளிட்ட பிரச்சினைகள் பற்றி காங்கிரசு தலைமை மீது குற்றம் சாட்டும்போது, மற்ற பா.ஜ.க. தலைவர்களை விட கூரிய நாக்கையும், இழிவுபடுத்திப் பேசும் பண்பையும் கொண்டவராக  மோடி இருந்தார்.

பா.ஜ.கட்சியின் 2014 மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில்  மூன்று ஜிக்கள் சுற்றி வந்தன. காமன் வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல்கள், 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு ஊழல் மற்றும் ராகுல்காந்தியின் மைத்துனர் ராபர்ட் வதேரா மீதான நில ஊழல் குற்றச்சாட்டு ஆகியவைதான் அவை. ஒட்டு மொத்த பா.ஜ.க. தலை மையும் இந்த மூன்று பிரச்சினைகளை யும் மிகப் பெரிய அளவில் பெரிதாக ஆக்கி, அய்க்கிய முற்போக்குக் கூட் டணி அரசின் இறுதி மூன்று ஆண்டு காலமாகத் தொடர்ந்து  பிரச்சாரம் செய்து வந்தனர். 2013 செப் டம்பரில் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டதற்கு பிறகு அந்த பிரச் சாரத்திற்கு மேலும் பலம் கிடைத்தது. மோடி கூறியதில் எல்லாம் உண்மையைத் தவிர வேறு எதுவுமே இல்லை என்று மக்கள் அனைவரும் நம்பும் அளவுக்கு தனது பிரச்சாரத்தை உச்ச கட்டத்துக்கு மோடி கொண்டு வந்துவிட்டார் என்பதை மூத்த தலைவர்கள் உள்ளிட்ட பா.ஜ.கட்சியினர் ஒப்புக் கொள்கின்றனர். அதனால், சுதந்திர இந்திய வரலாற்றில் முன்பு எப்போ துமே இல்லாத அளவில் ஊழல் புரிந்த அரசு அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு என்று பார்க்கப்பட்டது. 2014 மக்களவைத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை பெற்று பா.ஜ.க. வெற்றி பெறுவதற்கு இது பெரிதும் உதவியது.

2014 மே மாதத்தில் மத்திய அரசின் ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பிறகும்,  பா.ஜ.கட்சியும், அதனால் வழிநடத்தப்பட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணியும், ஊழல் நிறைந்த காங்கிரசு கட்சி ஒரு மாபெரும் சிலந்தி வலை என்ற பொதுமக்களின் கண்ணோட்டத்தில் இருந்து தொடர்ந்து பயன் பெற்று வந்தன. கடந்த மூன்றரை ஆண்டுகளாக காங்கிரசு கட்சி அடைந்து வந்த தேர்தல் தோல்விகள், இந்தப் பின்னடைவை பிரதிபலிப்பதாக இருந்தன. மென்மையாகப் பேசும் மன்மோகன் சிங்கைத் தாக்குவதற்கு மோடி இதனை ஒரு பிரச்சாரக் கருவியாகவே பயன்படுத்திக் கொண் டார். அவ்வப்போது, முன்னாள் பிரதமரை மவுன பாபா என்று மோடி குறிப்பிட்டதன் மூலம்,  லஞ்ச ஊழல் புகார் கள் மலை போல் குவியும்போது, பிரதமர் செயல்படாமல் மவுனமாக இருப்பதாக மோடி சுட்டிக் காட்டினார்.

2017 இல் பணமதிப்பிழப்பு நடவடிக்கையைப் பற்றி பேசும்போது, 'சட்டப்படியான கொள்ளை'   'திட்டமிட்டு நடத்தப்பட்ட திருட்டு' என்ற நாகரிகமான சொற்களை மன்மோகன் சிங் பயன்படுத்தினார். ஆனால் மோடியோ முந்தைய பிரதமர் பற்றி மிகமிக இழிவான சொற்களைப் பயன்படுத்தினார். "கடந்த 35 ஆண்டுகளாக, மன் மோகன்ஜி நாட்டின் பொருளாதார முடிவுகள் பற்றி நேரடியாகத் தொடர்பு கொண்டிருந்தார். அவரைச் சுற்றி பல ஊழல் புகார்கள் இருந்தன என்றாலும், அவர் தூய்மையானவர் என்ற தோற்றத்துடனேயே விளங் கினார். மழைக்கோட்டைப் போட்டுக் கொண்டு குளிய லறையில் குளிக்கும் கலையை அறிந்தவர் மன்மோகன் மட்டுமே" என்று மோடி குறிப்பிட்டார். பா.ஜ.க.வின் தலைவர்கள் முதல் தொண்டர்கள் அனைவரும் மற் றொரு முறை, இந்த ஊழல்களுக்கு மன்மோகன்சிங்கும் உடந்தை என்று மறைமுகமாக சுட்டிக் காட்டும்  மோடியின் இந்தப் பேச்சை ரசித்து உரக்கப் பாராட்டினர். அரசியல் உத்தி மற்றும் அரசியல் தந்திரம் என்ற வகையில்,  காங்கிரசுக்கு எதிரான ஊழல் புகார்களை பெரிது படுத்தி தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதற்கான ஒரு கருவியாகவே பா.ஜ.கட்சியும், மோடியும் முயன்றனர். அது வரை தங்களது தாக்குத லுக்கு உள்ளாத நபர்களையும் தங்களின் தாக்குதல் வட்டத்திற்கு அவர்கள் கொண்டு வந்துவிட்டனர்.

இடிந்து போன மாளிகை

இத்தகைய முயற்சிகளை  டிசம்பர் 21 நாளிட்ட வழக்கின் தீர்ப்பு நீர்த்துப் போகச் செய்துவிட்டது. லஞ்ச ஊழல் குற்றம் புரிந்ததற்கோ, சதித் திட்டம் தீட்டப்பட்ட தற்கோ எந்த விதமான சான்றுகளும் இல்லை என்று மிகத் தெளிவாகவும், உறுதிபடவும் நீதிபதி சைனி தெரிவித்திருப்பது, காங்கிரசு மீதான பா.ஜ.க.வின் ஊழல் குற்றச்சாட்டுகள் பற்றிய தாக்குதலைத் தடுத்து நிறுத்தி யிருக்கிறது. இந்த வழக்குகளில் எது ஒன்றிலும் குற்றம் சாட்டப்பட்டவருக்கு தண்டனை வாங்கித் தரும் அளவுக்கு மோடி அரசு கடந்த மூன்றரை ஆண்டு காலத்தில் எந்த விதத் தொடர் நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என்பதும் கவனிக்கத் தக்கது. நீதிபதி சைனி, "கடந்த 7 ஆண்டு காலமாக, கோடை விடுமுறை உள்ளிட்ட அனைத்து வேலை நாட்களிலும், காலை 10 மணியில் இருந்து மாலை 5 மணி வரை, சட்டப்படி அனுமதிக்கத் தக்க சான்று எதனையேனும், எவரேனும் கொண்டு வந்து கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்து தவம் செய்வது போல காத்துக் கிடந்தேன். ஆனால் எனது எதிர்பார்ப்பு வீணாகிப் போனது. ஒருவர் கூட வந்து ஒரு சாட்சியத்தைக் கூட அளிக்கவில்லை.  வதந்திகள், வம்புப் பேச்சுகள், ஊகங்களின் அடிப் படையில் மட்டுமே ஊழல் நடந்துள்ளது  என்று உரு வாக்கப்பட்டிருந்த கருத்தையே பொதுமக்கள் அனை வரும் பரவலாக நம்பினர் என்பதையே இது சுட்டிக் காட்டுகிறது. ஆனாலும், பொதுமக்களின் கண்ணோட்டத் திற்கு நீதிமன்ற நடவடிக்கைகயில் இடமில்லை"  என்று சுட்டிக் காட்டியுள்ளார்.

கடந்த ஏழு ஆண்டு காலமாக பிராசிகியூஷன் தரப்பு காட்டிய மெத்தனத்தைப் பற்றி நீதிபதி பேசியிருக்கிறார். அந்தக் காலத்தில் பாதி அளவில், மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசுதான் அதிகாரத்தில் இருந்தது. இதன் பின்னணியில்தான், இது மோடிக்கு பெரும் பின்ன டைவை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டது என்று மூத்த பா.ஜ.க. தலைவர் சுப்பிரமணிய சாமி தீர்ப்பை மதிப் பிட்டுப் பேசும்போது குறிப்பிட்டுள்ளார்.

இது முடிவான தீர்ப்பு அல்ல; அதன் மீது அரசு மேல் முறையீடு செய்யும் என்ற வழக்கமான பதிலைத்தான் பா.ஜ.க.வின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். என்றாலும், காங்கிரசுக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச் சாட்டு என்னும் பா.ஜ.க. கட்டிய மாளிகை ஆட்டம் கண்டுவிட்டது  என்பதை பா.ஜ.கட்சியின் உயர்மட்டத் தலைவர்களும் கூட வருத்தத்துடன் ஒப்புக் கொள்கின் றனர். இத் தீர்ப்பு பற்றிய மோடியின் கருத்து எதிர் பார்க்கும் வகையில்தான் இருக்கும்.   மற்ற விஷயங்களில் உரத்த குரலில் வாய் கிழியப் பேசும் போடி, கடினமான அரசியல் சவால்களை எதிர்கொள்ளும்போது  மட்டும் மவுனம் காப்பதுதான் அவரது வாடிக்கை.  தன்னை பிரதமர் பதவிக்குக் கொண்டு வந்த இந்த பிரச்சினை பற்றி கூட எந்த வித கருத்தும் தெரிவிக்காமல் அமைதி யாக ஆகிவிட்டார்.

காங்கிரசின் பிரதிபலிப்பு

இத்தீர்ப்பு பற்றிய பா.ஜ.க.வின் இந்த மவுனமான பிரதிபலிப்பையும் காங்கிரசு கட்சி பொதுமக்களின் கவனத்துக்கு எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும். முதன் முதலாக இந்தத் தீர்ப்பைப் பற்றி குறிப்பிடும்போது மன்மோகன்சிங் தான் இந்தத் தீர்ப்பை மதிப்பதாகவும், அவதூறு பிரச்சாரத்துக்கு  அது முடிவு கட்டிவிட்டது என்றும்  கூறினார்.  அரசுக்கு எந்த இழப்பும் ஏற்பட வில்லை என்ற தனது கருத்து இத்தீர்ப்பினால் நியாயப் படுத்தப்பட்டுள்ளது என்று கபில்சிபல் கூறினார்.  இந்த ஊழலால் அரசுக்கு 1.76 கோடி ரூபாய் உத்தேசமான இழப்பு ஏற்பட்டுள்ளது என்று பா.ஜ.கட்சியுடன் கை கோர்த்துக் கொண்டு குற்றம் சாட்டி, அவதூறு பரப்பிய கண்ட்ரோல் அன்ட் ஆடிட்டர் ஜெனரல் வினோத் ராய் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி கூறினார்.  அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளினால் பா.ஜ.க. பயனடைந்து வருவதாக கூறிய அவர், இதற்கு போபர்ஸ் வழக்கு ஒரு சரியான உதாரணமாகும் என்றும் கூறினார். ஆனால் இவற்றுக்கு  எல்லாம் நாங்கள் மிகப் பெரிய விலை கொடுக்க வேண்டியிருந்தது. பிரதமராக இருந்த ராஜிவ் காந்தியின் மிக நல்ல தோற்றத்தின் மீது சரி செய்ய முடியாத களங்கம் ஏற்படுத்தப்பட்டுவிட்டது. அதே போல இந்த 2 ஜி பிரச்சினை காரணமாக காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. இவற்றுக்கெல்லாம் யார் ஈடு செய்வார்கள்? பொய் மூட்டைகளின் அடிப்படையில் ஒரு அவதூறு பிரச்சாரத்தை மேற் கொண்ட பா.ஜ.க., கண்ட்ரோல் அன்ட் ஆடிட்டர் ஜெனரல் வினோத் ராயை இந்த சதித் திட்டத்தில் பயன்படுத்திக் கொண்டது. காங்கிரசு அரசால் நியமிக்கப் பட்டவர்தான் அவர். என்றாலும், அவர் விரும்பியபடி அமைச்சரவை செயலாள ராக அவர் நியமிக்கப்படாததால், எங்கள் மீதான ஒரு வெறுப்புணர்வை அவர் வளர்த்து வைத்துக் கொண்டிருந்தார். இதற்கு முன்பு எந்த ஒரு கண்ட்ரோல் அன்ட் ஆடிட்டர் ஜெனரலும் உத்தேச மான இழப்பு என்று கணக்கிடத் துணிந்த தில்லை. ஆனால் வினோத் ராய் அவ்வாறு செய்தார். அதனை எடுத்துக் கொண்டு பா.ஜ.க. பிரச்சாரத்துக்கு சென்றது."

"பா.ஜ.கட்சியின் பொய் மூட்டை எல்லாம் இப்போது அவிழ்ந்து உண்மை வெளியே வந்துவிட்டபடியால் பா.ஜ கட் சிக்கு நாடு அடுத்த பொதுத் தேர்தலில் ஒரு பொருத்தமான பதில் அளிக்கும்" என்றும் மொய்லி கூறினார். அவரது கருத்தை பகிர்ந்து கொண்ட அவரது சகாவான மூத்த காங்கிரசு தலைவர் சகீல் அகமது, "காங்கிரசு கட்சியும், அய்க்கிய முற்போக்குக் கூட்டணி யின் இதர கட்சிகளும் இந்தத் தீர்ப்பின் முக்கிய அம்சங்களை எடுத்துச் சென்று மக்களிடம் கூறுவோம்" என்று தெரிவித்தார். டிசம்பர் 21 நாளிட்ட இந்தத் தீர்ப்பின்  எதிரொலியை தீவிரமான பிரச்சாரம் மூலமும், மக்களுடன் தொடர்ந்து மேற் கொள்ளும் கலந்துரையாடுவதன் மூலமும் நீண்டதொரு காலத்திற்கு உயிர்ப்புடன், உணர்வுடன் வைத்திருக்க முடியும் என்று காங்கிரசு கட்சி தலைமையின் இத்தகையவர்களின் பிரிவினர் எதிர் பார்க்கின்றனர். இந்தத் தீர்ப்பு காங்கிரசு கட்சிக்குக் கிடைத்த தார்மீக வெற்றி என்றும், ஆனால் இதனால் கட்சி இழந்ததை எல்லாம் திருப்பிக் கொண்டு வந்து தர முடியாது என்றும் கூறியிருப்பதுதான் நிலவும் உண்மை நிலையை மிகச் சரியாகக் காட்டுவதாக உள்ளது என்றே தோன்றுகிறது. இந்திய அரசியல் ஊழல் வழக்குகள் வரலாற்றுக்கு மிகவும் பொருத்தமாகவும் இது இருக்கிறது. தீர்மானமான அரசியல் பாதிப்புகளை ஊழல் குற்றச் சாட்டுகளே உருவாக்கும்போது,  அவ்வப்போது அளிக்கப்படும் பகுதி தீர்ப்புகள் உள்ளிட்ட நீதிமன்ற நடவடிக்கைள் சோர்வு தருபவையாகவும், நீண்ட காலம் எடுத்துக் கொள்பவையாகவும் இருப்பதால், குற்றச் சாட்டுகளை நீர்த்துப் போகச் செய்து விடுகின்றன என்பதை ஆவணங்களின் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

இந்தத் தீர்ப்பு காங்கிரஸ் தலைமைக்கு, குறிப்பாக கட்சித் தலைவராக பதவி உயர்வு பெற்றுள்ள ராகுல் காந்திக்கு, கட்சியை புதுப்பிப்பதற்காக நாடு தழுவிய ஒரு பிரச்சாரத்தை மேற்கொள்வதற்கான ஒரு நல்ல வாய்ப்பினை அளித்துள்ளது.

நன்றி: 'தி ஃப்ரன்ட் லைன்' 19-01-2018

தமிழில் : த.க.பாலகிருட்டிணன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner