எழுத்துரு அளவு Larger Font Smaller Font

2 ஜி -  வழக்கில் என்னை தவறாக தொடர்புபடுத்தியதன் பின்னணியை  தேடிக் கண்டுபிடித்து வெளிப்படுத்துவேன்

- திருமதி. கனிமொழியின் நேர்காணல்

2ஜி பிரச்சினையில் உள்ள உண்மை அது உத்தேசமான இழப்பு குறித்த ஒரு கணக்கு என்பது தான். அதற்காக அரசியல்வாதிகளைப் பற்றி குறை கூற நாம் விரும்புகிறோம்.  2ஜி வழக்கு ஒரு புறம் இருக்கட்டும்.  ஒரு நிறுவனத்தில் இருந்து ஓர் அரசியல்வாதி பணம் பெற்றுக் கொண்டார் என்றால், பணம் கொடுக்கும் நிறுவனத்துக்கு என்ன நேர்கிறது? யார் அவர்களைக் கேள்வி கேட்கிறார்கள்.  அக்கோப்புகளைக் கையாளும் அதிகாரிகளுக்கு என்ன நேரிடுகிறது?

-  ஆர்.கே. ராதாகிருஷ்ணன்

நீங்கள் அரசியலில் நுழைந்ததற்கு ஒரு சில ஆண்டுகளுக்கு பின்புதான் 2ஜி ஊழல் என்ற பிரச் சினை வெடித்தது. அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் நீங்கள் ஓர் அமைச்சர் அல்ல. கட்சிப் பொறுப்பு எதிலும் கூட அப்போது நீங்கள் இருக்கவில்லை. அப்படி இருந்தும் இதில் நீங்கள் எவ்வாறு ஈடுபடுத் தப்பட்டீர்கள்? வெளியான ராடியா நாடாவின்படி நிரா ராடியா போன்றவர்களுடன் பேசியது அதன் காரணமாக இருக்கும்  என்று நீங்கள் கருதுகிறீர்களா?

நிரா ராடியாவுடன் பேசியதுதான் இதற்கு அடிப்படை என்றால், அவருடன் பேசியவர்கள் ஆயிரக்கணக் கானவர்கள் இருக்கின்றனரே? அவர்களுக்கெல்லாம் ஒன்றும் நேரவில்லையே? சில அரசியல் ஊகங்களைப் பற்றி நாங்கள் பேசினோமே அன்றி, வேறு எது பற்றியும் அப்போது பேசவில்லை. அவர் குற்றம் சாட்டப்பட்டவர் அல்ல; ஒரு பிராசிகியூஷன் தரப்பு சாட்சியந்தான். அரசியல் பற்றி இது போன்ற பேச்சுகளை நான் எனது பத்திரிகை தோழர்களுடனும், அரசியல்வாதிகளுடனும் மேற்கொண்டு இருந்திருக்கிறேன். ஒரு அரசியல் வாதியை சந்திப்பது என்பதே என் வழக்கில் ஒரு பெரிய குற்றமாக ஆகிவிட்டது. இன்றும் கூட சில பிரச்சினைகள் பற்றி பேசுவதற்காக நான் பா.ஜ.க. அரசியல்வாதிகளை அவர்களது அலுவலகங்களில் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

அப்படியானால், நீங்கள் எவ்வாறு இதில் ஈடுபடுத் தப்பட்டீர்கள்? இதில் உங்களுக்கு தொடர்பு இருக்கிறது என்று மத்திய  புலனாய்வுத் துறை ஏன் கருதியது? நீங்கள் ஒரு முதல்வரின் மகள் என்பதால்,  உங்களால் செல்வாக்கு செலுத்த முடிந்திருக்கும் என்று கருதி யதாலா?

மத்திய புலனாய்வுத் துறைதான் அதற்கு பதில் சொல்ல வேண்டும்.  கலைஞர் தொலைக் காட்சியில் நான் ஓர் இயக்குநராகவும்கூட இருக்கவில்லை. நிறு வனத்துக்கான இடத்தைத் தயார் செய்து கொண்டிருந்த முதல் இரண்டு வார காலம் மட்டுமே நான் ஒரு இயக் குநராக இருந்தேன்.  அதன் பிறகு அப்பதவியை நான் ராஜினாமா செய்து விட்டேன். இது பற்றிய அனைத்து ஆவணங்களும் பதிவு செய்வதற்காக,  கம்பெனிகளின் பதிவாளரிடம் அளிக்கப்பட்டுள்ளன. அதன் பிறகு எந்த ஒரு நிர்வாகக் குழுக் கூட்டத்திலும் நான் கலந்து கொள்ளவில்லை. நான் இயக்குநராக இருந்த அந்த இரண்டு வார காலத்தில் எந்த விதமான முக்கியமான முடிவும் மேற்கொள்ளப்படவில்லை. அடிப்படை சட்ட விதிகளை நிறைவு செய்வதற்காக அங்கே நான் இருந்தேன். அதன்பின், நிறுவனத்தின் பொதுக் குழுக் கூட்டம் எதிலும் கூட நான் கலந்து கொள்ளவில்லை. எந்த நிகழ்ச்சிகள் எல்லாம் ஒளிபரப்பப்படுகின்றன என்பதை அறியும் ஆர்வமும் அற்றவளாகவே நான் இருந்தேன்.  கடனைப் பற்றி நடைபெற்றதாகக் கூறப் படும் கூட்டத்தில் நான் கலந்து கொண்டேன் என்பதை மெய்ப்பிக்க எந்த வித ஆவண ஆதாரமும் இல்லை என்பதை சிறப்பு புலனாய்வுத் துறை அறிந்தே இருந்தது.   கூட்டத்திற்கு வருகை தந்தோரின் பட்டியலில் எனது பெயர் இல்லை. அப்படியிருந்தும் நான் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டதாக மத்திய புலனாய்வுத் துறை கூறிவந்தது. ஆ. இராசாவின் முன்னாள் செய லாளராக இருந்தவரும், பிராசிகியூஷன் சாட்சியாக சாட்சியம் அளித்தவரும், பின்னர் பா.ஜ.க. வில் சேர்ந்த வருமான ஆசிர்வாதம் ஆசாரி, "நான் இதில் மூளையாக செயல்பட்டேன்" என்று கூறியுள்ளார். இவை அனைத் தின் அடிப்படையிலும் என்மீது ஒரு வழக்கு தொடரப் பட்டது.

வழக்கில் இருந்து விடுவிப்பதற்கான மனு ஒன்றை அளித்து நீங்கள் எளிதாக வழக்கில் இருந்து விடுபட்டிருக்கலாமே. அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசுதான் ஆட்சியில் இருந்தது; காங்கிரசு கட்சியும் உங்களது கூட்டணி கட்சிதான்; உங்கள் தந்தையும் முதல்வராக இருந்தார். அப்படியிருந்தும் நீங்கள் சிறைக்குச் சென்றீர்கள். நீங்கள் சிறைக்குச் செல்ல வேண்டும் என்று விரும்பியவர்கள் எவரேனும் காங் கிரசு கட்சியிலோ,  தி.மு.க. கட்சியிலோ இருந்தார்களா?

இருந்திருக்கலாம்.  அவர்களின் நோக்கம் என்னவாக இருந்திருக்கலாம் என்று கூற நான் விரும்பவில்லை. நான் சிறையில் இருப்பதைப் பார்க்க வேண்டும் என்று விரும்பிய சுயநலக்காரர்கள் இருந்துள்ளனர். அதனை மறுக்க என்னால் முடியாது.

ஒரு குற்றவாளியாக நீங்கள் சிறைக்கு சென்றீர்கள்.  இந்தியாவில் லஞ்ச ஊழல் என்பதற்கான முகங்களாக நீங்களும் ஆ. இராசாவும் ஆகிவிட்டீர்கள். இந்தியாவில் பெரும் அளவிலான குற்றச்சாட்டுகளுக்கு  அரசியல் வாதிகள்தான் பலியாகவேண்டியிருக்கிறதே அன்றி, கார்ப்பரேட் நிறுவனங்கள் பாதிக்கப்படுபவையாக இருப்பதில்லையே?

எப்போதுமே அப்படித்தான் இருந்து வந்துள்ளது. சிலரை நீங்கள் வெறுக்கவே செய்கிறீர்கள். இந்தத் தீர்ப்பிற்குப் பிறகும், அது ஒரு மிகப் பெரிய தொகை.  அது இல்லை என்று எப்படி உங்களால்  கூறமுடிகிறது? என்று  சிலர் கேட்கின்றனர்.

2ஜி பிரச்சினையில் உள்ள உண்மை அது உத்தேசமான இழப்பு குறித்த ஒரு கணக்கு என்பது தான். அதற்காக அரசியல்வாதிகளைப் பற்றி குறை கூற நாம் விரும்புகிறோம்.  2ஜி வழக்கு ஒரு புறம் இருக்கட்டும்.  ஒரு நிறுவனத்தில் இருந்து ஓர் அரசியல்வாதி பணம் பெற்றுக் கொண்டார் என்றால், பணம் கொடுக்கும் நிறுவனத்துக்கு என்ன நேர்கிறது? யார் அவர்களைக் கேள்வி கேட்கிறார்கள்.  அக்கோப்புகளைக் கையாளும் அதிகாரிகளுக்கு என்ன நேரிடுகிறது?

உங்கள் தந்தை முதல்வராக இருந்தார். உங்கள் கட்சி மத்திய ஆட்சியில் பங்கேற்றிருந்தது. முதல்வரின் மகள் சிறைக்குச் செல்ல வேண்டியதாயிற்று. ஆட்சியில் இருந்த கட்சி தி.மு.க. வின் ஆதரவை நம்பியிருந்த நேரத்தில் மத்திய புலனாய்வுத் துறையோ அல்லது அரசோ உங்களைக் கைது செய்ய முடிவு செய்ததா? இந்தக் கணக்கு சரியாக வரவில்லையே?

எனக்கும் இந்தக் கணக்கு விளங்கத்தான் இல்லை. ஆனால், அது நடந்துவிட்டது.  நான் ஒரு கடவுள் நம்பிக்கை அற்றவள் என்பதால், இதெல்லாம் விதி என்று என்னால் கூற முடியவில்லை. அரசியலில் எல்லா விதமான சக்திகளும் செயல்படுகின்றன; பெருமளவு பண்டமாற்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன; வேறு பல விஷயங்களும் நடந்து கொண்டுதான் உள்ளன. எதனையும் தெளிவாகச் சுட்டிக் காட்டிக் கூறுவதற்கு  என்னால் இயலவில்லை. என்றாவது ஒரு நாள் இந்த உண்மைகளையெல்லாம் தேடி வெளியே கொண்டு வர முடியும் என்று நான் நம்புகிறேன்.

தி.மு.க.வின் தலைமை நிலையமான அண்ணா அறிவாலயத்தில் வருவாய்த்துறை சோதனை நடந்து கொண்டிருந்தபோது, தேர்தல் கூட்டணி பற்றி தரை தளத்தில் தி.மு.க. காங்கிரசு கட்சிகளுக்கிடையே பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருந்தது வியப்பை அளிப்பதாக இருக்கிறது. தேர்தல் கூட்டணி பற்றி தாங்கள் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் ஒரு கட்சியின் அலுவலகத்தை சோதனை செய்ய தனது வருவாய்த் துறையைப் பயன்படுத்த அப்போதிருந்த அரசினால் எவ்வாறு முடிந்தது?

அதனை விளக்குவதற்கு உண்மையில் என்னால் முடியவில்லை. மத்திய புலனாய்வுத் துறையும், அமலாக்கத் துறையும், எந்த வித அரசியல் குறுக்கீடும் இன்றி, தாங்களாகவே சுதந்திரமாக செயல்பட்டிருக்கலாம்.  இன்று நாங்கள் பா.ஜ.க. ஆட்சிக்கு எதிராக இருக்கிறோம்.  என்றாலும், எங்களுக்கு  நல்லதொரு தீர்ப்பு கிடைத்தது. அரசிடம் இருந்து எந்தவிதக் குறுக்கீடும் இருக்கவில்லை என்பதற்கான பெருமையை அரசுக்கு அளிக்கத்தான் வேண்டும்.

இந்த வழக்கின் தினசரி விசாரணை உச்ச நீதி மன்றத்தால் கண்காணிக்கப்பட்டு வந்த போதிலும்,  இந்த வழக்கு ஏழு ஆண்டு காலம் நடைபெற்றது. சட்ட நடை முறையையும், உங்கள் தொழிலையும் அது எவ்வாறு பாதித்தது?

எங்களது பெரும்பாலான உரிமைகளை உச்சநீதி மன்றம் எடுத்துக் கொண்டது. உயர்நீதி மன்றத்தில் எங்களால் மேல்முறையீடு செய்ய முடியவில்லை. எந்த ஒரு சிறு விஷயத்துக்கும் ஒன்று விசாரணை நீதி மன்றத்துக்கோ அல்லது உச்ச நீதிமன்றத்துக்கோதான் நாங்கள் செல்ல வேண்டியிருந்தது. நீதித்துறையின் ஓர் அங்கமே, நாங்கள் அணுகுவதற்கு அப்பால் இருந்தது. அது நியாயமானதா? குற்றப்பத்திரிகை  பதிவு செய் வதற்கு முன் உச்சநீதிமன்றத்துக்குக் காட்டப்பட வேண் டும் என்றும்,  வழக்கு விசாரணையின் ஒவ்வொரு நிலை யையும் உச்சநீதிமன்றத்திற்குத் தெரியப்படுத்த வேண் டும் என்றும் உச்ச நீதிமன்றத்தால் ஒரு வழக்கு எவ்வாறு கண்காணிக்கப்பட முடியும்? அது நியாயமானதா? நேர்மையானதா?  இது ஒரு ஊழல் என்று கருதப் பட்டதால்,  மக்கள் இதனைப் பற்றியெல்லாம் கவலைப் படமாட்டார்கள். ஆனால், இது ஒரு சரியான முன் உதாரணமா? அது சரியானதா? அது நியாயமற்றது என்றே நான் கருதுகிறேன். பிராசிகியூட்டரை நியமித்த உச்ச நீதி மன்றம், விசாரணை நீதிமன்ற நீதிபதியை நியமனம் செய்யுமாறு உயர்நீதி மன்றத்தைக் கேட்டது.

கலைஞர் தொலைக் காட்சியில் 60 சதவிகித பங்குதாரராக இருந்த போதிலும், கலைஞரின் மனைவி தயாளு அம்மாளை குற்றச்சாட்டுப் பட்டியலில் இருந்து சிறப்பு புலனாய்வுத் துறை விடுவித்துவிட்டது. நிறுவ னத்தின் செயல்பாடுகள் பற்றி அன்றாட அடிப்படையில் அவருக்கு விளக்கம் அளிக்கப்பட்டு வருவதாக ஓர் அறிக்கை தெரிவிக்கிறது. 20 சதவிகித பங்குகள் உள்ள இருவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்தபோது, இது எவ்வாறு முடிந்தது?

அவரால் ஆங்கிலத்தில் பேச முடியாது என்பதும், முடிவு எடுக்கும் நடைமுறையில் அவரால் தீவிரமாகப் பங்கேற்றுக் கொள்ள முடியாது என்பதும்தான் அதன் காரணம்.

ஊடகத்துறை விசாரணை பற்றி பேசப்பட்டுள்ள தீர்ப்பில்,  குற்றம் சாட்டப்பட்டவர்களை ஏற்கெனவே  ஊடகத்தினர் தண்டித்துவிட்டனர் என்று கூறப்பட் டுள்ளது.  ஆனால், அந்தந்த நேரங்களில் என்ன என்ன நடக்கின்றனவோ, அவற்றைத் தானே ஊடகத்தினர் பிரதிபலிக்கின்றனர்?

ஊடகத்தினர் வெறும் செய்திகளை மட்டுமே அறிவித்த அந்த பழைய நல்ல நாட்களைப் பற்றி நீங்கள் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். அந்த நிலையில் இப்போது நாம் இருக்கவில்லை. நமக்கு நல்ல டிஆர்பி ரேட்டிங் குகள் தேவை;  மக்களின் கவனத்தை நாம் கவர்ந்திழுக்க வேண்டும்; பொதுமக்களுடன் இணைந்து நாம் செயல்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். கலைஞர் தொலைக்காட்சியில் நான் ஒரு இயக்குநர் என்றும், 2 ஜி ஊழல் பணமான 200 கோடி ரூபாய் கலைஞர் தொலைக்காட்சிக்கு வந்தடைய நான் எவ்வாறு கருவி யாக  இருந்தேன் என்றும், இவையெல்லாம் உண்மை யுடன் எந்தவிதத்திலும் தொடர்பு உடையவை  அல்ல என்ற போதிலும், திரும்பத் திரும்ப கூறிக்கொண்டே இருந்த ஒரு தொலைக்காட்சியின் மூத்த செய்தியாளரை நான் அறிவேன். சிறையில் இருந்து நான் திரும்பி வந்த பிறகு, நீதிமன்றத்தில் என்னை சந்தித்த அவர், கலைஞர் தொலைக்காட்சியில் நீ ஒரு இயக்குநராகவும் கூட இல்லை என்று நான் கேள்விப்பட்டேன் என்று என் னிடம் கூறினார். இப்படித்தான் ஊடகத்தினர் இருக் கின்றனர். ஒவ்வொரு ஊடக அமைப்பும் இவ்வாறு செய்கிறது என்று நான் கூற வரவில்லை. உயர்ந்த டிஆர்பி ரேட் பெற்றுள்ள, மிகுந்த மரியாதைக்குரிய தொலைக் காட்சி நிறுவனத்தின் மரியாதைக்குரிய, முக்கியமான செய்தியாளர்  அவர்.

நன்றி:  "ஃப்ரண்ட் லைன்'" 19-01-2018

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner