எழுத்துரு அளவு Larger Font Smaller Font

2 ஜி - அலைக்கற்றை ஒதுக்கீட்டு வழக்கு தீர்ப்பின் மீதான மேல்முறையீட்டில், புதிய  சாட்சியங்களை விசாரிக்கும் வாய்ப்பு இல்லை என்பதால்,

மேல்முறையீட்டினால் எந்த  மாற்றமும் ஏற்பட்டுவிடாது

டி.கே.ராஜலட்சுமி

 

(உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞர் ரெபெக்கா ஜானுடனான நேர்காணல்)

2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது, அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு எதிராக பா.ஜ.க. மேற்கொண்ட ஒட்டு மொத்த தேர்தல் பிரச் சாரமும் சார்ந்திருந்த, கடந்த 6 ஆண்டு காலமாக நடை பெற்று வந்த,  2ஜி ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருமே விடுவிக்கப்பட்டு வெளிவந்துள்ள தீர்ப்பு பெரும் வியப்பளிப்பதாக இருப்பதாகும். யுனைடெட் குழும நிறுவனங்களுக்காகவும், திருமதி கனிமொழிக்காகவும், இந்த வழக்கில் ஆஜரான உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞர் ரெபெக்கா ஜான் அவர்களுடன் ‘ஃப்ரண்ட் லைன்‘ ஆங்கில இதழுக்காக அளித்த பேட்டியின் தமிழாக்கம் இங்கே கீழே தரப்பட்டுள்ளது.

நீதிமன்றத்துக்கு முன் கொண்டு வரப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையிலான இந்தத் தீர்ப்பு எத்தகைய சிறப்பு வாய்ந்தது என்பதைப் பற்றியும்,  அரசுக்கு 1 . 76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு விட்டது என்ற தங்களது கருத்தையே மத்திய புலனாய்வுத் துறை எவ்வாறு கைவிட்டுவிட்டது என்பதைப் பற்றியும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் உள்ள நியாயம் என்ன? 2 ஜி அலைக் கற்றை ஒதுக்கீட்டில் எந்த விதக் குற்றமும் இழைக்கப்பட்டதைக் காணாத மத்திய புலனாய்வுத் துறை சிறப்பு நீதிமன்றம், அரசின் கொள்கைகளிலும், வழிகாட்டுதலிலும் இல்லாத தெளிவின்மையே இதில் பெருங்குழப்பம் ஏற்படுவதற்கு வழி வகுத்துள்ளது  என்ற கருத்தை தெரிவித்துள்ளது. ஆனால், 122 உரிமங்களை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அப்படியானால் அந்தத் தீர்ப்பு தவறான தாகுமா?

இந்த இரு நீதிமன்றங்களும் செயல்படும் எல்லை களைப் பற்றி ஏற்படுத்திக் கொண்டுள்ள  முற்றிநிலும்  தவறான புரிதலின் அடிப்படையில் அமைந்தது இந்தக் கருத்து. அளிக்கப்பட்ட உரிமங்களை ரத்து செய்வது பற்றி உச்சநீதிமன்றம் விசாரித்து வந்த வழக்கு, உரிமங்கள் வழங்கப்பட்டதில் ஏற்பட்ட  தவறான நடைமுறை பற்றியதுதானே அன்றி, தனிப்பட்ட எவர் ஒருவரும் இழைத்த குற்றத்தைப் பற்றியது அல்ல. தவறு இழைப்பதற்கும், குற்றம் இழைப்பதற்கும் இடையே சட்டத்தில் ஒரு வேறுபாடு உள்ளது. தவறான செயல்கள் மேற்கொள்ளப்படுவதால்,  பொருளாதார விளைவுகள் ஏற்படக் கூடும்.  குற்றம் இழைக்கப்பட்டதாகவும் சில விஷயங்கள் இருக்கக்கூடும் என்பதால், அத்தகைய குற்றத்துடன் நேரடியாகத் தொடர்புடையவர்கள் குற்ற வியல் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டியவர்கள் ஆவர். இவ்விரண்டுக்கும் இடையேயான எல்லைகள் முற்றிலும் வேறுபட்டவையாகும். இவ்வாறு கூறுவது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை குற்றவியல் விசாரணைக் குழுவின் தீர்ப்பின் மீது பொருத்திப் பார்ப்பது என்பது முற்றிலும் தவறானதும்,  சட்டத்தின் கீழ் உள்ள பல்வேறுபட்ட எல்லைகளைப் பற்றி தவறாகப் புரிந்து கொண்டதன் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் முயற்சியே இது. உரிமங்களுக்கு விண்ணப்பித்துள்ள பல்வேறுபட்ட நிறுவனங்களுக்கு உரிமம் வழங்குவதில் குற்றம் இழைப்பதற்கான சதித் திட்டம் ஏதேனும் தீட்டப்பட்டுள்ளதா அல்லது இந்த உரிமங்களை ஏ.ராஜா  குற்றமான ஒரு வழியில் வழங்கியுள்ளாரா என்ற கேள்விகள் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில்  எந்த இடத்திலும் எழுப்பப்படவில்லை. உச்ச நீதிமன்றத்துக்கு முன் இருந்த கேள்வியே அதுவல்ல. இந்தத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகள்,  சிறப்பு நீதிமன்றத்தின் முன் விசாரணையில் உள்ள குற்றவியல் வழக்கின்மீது எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பின் இறுதி வாக்கியத்தில் தெரிவித்துள்ளது.

பிராசிகியூஷன் அமைப்புகளின் திறமையின்மை யைப் பற்றிக் குற்றம் சாட்டுவதாகவும்,  சாட்சியங்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளின் தன்மை மற்றும் சாட்சிகள் விசாரிக்கப்பட்ட விதம், சாட்சிகளிடம் கேள்விகளைக் கேட்பதற்கும் தயங்கிக் கொண்டு, வெற்று சலசலப்பை ஏற்படுத்திக் கொண்டு இருந்தது பற்றியும் குறிப்பிடுவதாக இந்தத் தீர்ப்பு இருந்தது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டதற்கு, சட்ட அதிகாரிகளே பொறுப்பு என்றும் நேர்மையான அதிகாரிகள்  வேறு நல்ல முறையில் செயல்பட்டிருப்பார்கள் என்றும் சுப்பிரமணியன்சாமி குற்றம் சாட்டியுள்ளார். இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் வரை கொண்டு செல்ல இயலும் என்பதை,   கர்நாடக உயர்நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டதை சுட்டிக் காட்டி கூறப்படுகிறதே? ஜெயலலிதாவின் வழக்கு இந்த 2 ஜி வழக்கில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்றாகும். ஒரு செஷன்ஸ் நீதிமன்றத் தீர்ப்பை உயர்நீதிமன்றமும், உயர்நீதிமன்றத் தீர்ப்பினை உச்ச நீதிமன்றமும்  மாற்றி அமைக்க முடியும் என்பது கொள்கை அளவில் இயலக்கூடியதுதான். ஒரு வழக்கின் உண்மைகளை மற்றொரு வழக்கின் மீது பொருத்தி நாம் பார்க்க முடியாது என்பதை மறுபடியும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ஜெயலலிதா வழக்கில் சாதாரணமான கணக்குக் கூட்டலில் உயர் நீதிமன்றம் செய்துவிட்ட தவறை உச்சநீதிமன்றம் சரி செய்தது. அதனைப் போன்ற ஒரு வழக்கல்ல இது என்றே நான் கருதுகிறேன். சாமி கூறியது எதனைப் பற்றியும் தனிப்பட்ட முறையில் பதில் அளிக்க நான் விரும்பவில்லை. ஆனால், இதில் நான் சுட்டிக் காட்ட விரும்புவதெல்லாம், இந்த வழக்கை உச்சநீதிமன்றம் கண்காணித்து வந்தது என்பதைத்தான். பதிவு செய் யப்பட இருந்த குற்றச்சாட்டு வரைவும் முதலில் உச்ச நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டது. குற்றச்சாட்டு பதிவு செய்வது விசாரணை நீதிமன்றத்தின் முன்தான் நடைபெற வேண்டும் என்பதால்,  சட்டத்தின்படி இது முன்னுதாரணம் அற்றதாகும். இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றத்தில் குற்றச் சாட்டு பதிவு செய்யப்படும் முன் உச்சநீதிமன்றம் அதனைப் பார்த்துள்ளது. சிறப்பு பப்ளிக் பிராசிகியூட்டர் ஒருவரும் உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். பெரும்பாலான வழக்குகளில் குற்றவியல் விசாரணைக் குழு நடந்து கொள்ளும் முறை பற்றி எனக்கு பிரச்சினை இருக்கிறது என்ற போதிலும்,  இந்த வழக்கில் சட்ட அலுவலர்கள் நடந்து கொண்ட முறை எந்தவிதத்திலும் நேர்மையற்றதாக இருந்தது என்று எப்போதுமே நான் கூறமாட்டேன். அவர்கள் எந்த வகையில் நேர்மை தவறிவிட்டார்கள்? அவர்கள் ஒரு வழக்கில் வாதிட்டுத் தோற்றுப் போனார்கள்;  நாங்கள் வாதிட்ட வழக்கில் வெற்றி பெற்றோம். அவ்வளவுதான்.

இந்த வழக்குக்கு நியமிக்கப்பட்ட இரண்டு சிறப்பு பப்ளிக் பிராசிகியூட்டர்களில் ஒருவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக ஆகிவிட்டார். மற்றொருவர் மிகவும் புகழ் பெற்ற வழக்குரைஞராவார். குற்றவியல் விசாரணைக் குழுவை ஒருவர் குறை கூறலாம்; வழக்கை  நடத்தும் சட்ட அலுவலர்களை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது மிகைப்பட்ட செயலாகும். உண்மையிலேயே ஏதேனும் ஊழல் நடந்ததா இல்லையா, அரசுக்கு உண்மையிலேயே ஏதேனும் இழப்பு ஏற்பட்டுள்ளதா இல்லையா, தவறான நபர்கள் இதில் சிக்கவைக்கப் பட்டுள்ளார்களா என்ற பல சந்தேகங்களை இத்தீர்ப்பு  எழுப்புகிறது.

உண்மையில் ஊழல் ஏதேனும் நடந்துள்ளதா இல்லையா என்பது பற்றி நீதிபதி ஷைனி தனது தீர்ப்பின் கடைசி பகுதியில் கூறியிருக்கிறார்.   மத்திய புலனாய்வுத் துறை அளித்துள்ள தொலைத்தொர்புத்துறை ஆவணங் களில் அளிக்கப்பட்ட சாட்சியங்களைப் பரிசீலனை செய்வது, சாட்சிகளின் வாக்குமூலங்களைப் பரிசீலிப்பது, தொழில்நுட்பத்துறை ஆவணங்களை வைத்துக் கொண்டு அவற்றுடன் தொடர்புபடுத்தி சாட்சிகளை விசாரிப்பது, குறுக்கு விசாரணை செய்வது ஆகிய செயல்களுக்காகவே, ஏறக்குறைய 1500 பக்கங்கள் கொண்ட அவரது தீர்ப்பில்,  1,450 பக்கங்களுக்கும் மேலாக உள்ள பகுதியை நீதிபதி ஒதுக்கியுள்ளார். இவற்றின் அடிப்படையிலேயே அவர் முடிவெடுத்துள்ளாரே அல்லாமல், வெறும் காற்றில் இருந்து இந்த முடிவை அவர் எடுத்துவிடவில்லை. பிராசிகியூஷன் தரப்பினர் நீதிமன்றத்தின் முன் அளித்திருந்த சாட்சியங்கள்,  தொலைத்தொடர்புத் துறை கோப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில்தான் அவர் இந்தத் தீர்ப்பை அளிக்கும் முடிவுக்கு நீதிபதி வந்துள்ளார். தங்களது சாட்சியங்களை நீதிபதி பரிசீலிக்கவே இல்லை என்றும், குற்றம் சாட்டப்பட்டவர்களின் சாட்சியங்களை மட்டுமே பரிசீலித்தார் என்பதும் போன்ற வியப்பைத் தரும் வகையில்  சிறப்பு புலனாய்வுத் துறை  அதிகாரிகன் பேசி வருவதையும் நான் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன். 2007-2008 ஆம் ஆண்டில், 2 ஜி ஊழல் பற்றிய எந்த ஒரு சிறு சந்தேகமும் இல்லாத ஒரு நேரத்தில் தொலைத்தொடர்புத் துறை கையாண்டு வந்த கோப்புகளையும், ஆவணங்களையும்தான் நீதிமன்றம் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. அவையெல்லாம் அவ்வப்போது எழுதப்பட்ட அலு வலகக் குறிப்புகள்தான். சிறப்புப் புலனாய்வுக் குழுவின் சாட்சியங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் சாட்சிகளிடம் செய்த குறுக்கு விசாரணைகளையும் பரிசீலித்துதான் நீதிபதி இந்த முடிவுக்கு வந்துள்ளார்.

இந்த வழக்கை நீதிமன்றம் தவறாக நடத்தியது என்று மத்தியப் புலனாய்வுத் துறை குற்றம் சாட்டுவதன் காரணம் என்ன? தனது தீர்ப்பின் இறுதிப் பத்தியில் நீதிபதி தெரிவித்துள்ள கருத்துகள், நீதி மன்றத்தின் முன் வைக்கப்பட்ட சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்டவைதான். இதனை எந்த விதத்திலும் குறையே கூறமுடியாதபடி நீதிபதி தனது தீர்ப்பை அளித்துள்ளார். அது தனிப்பட்ட, யதேச்சதிகாரம் கொண்ட, உணர்ச்சி மிகுந்த, கருத்து தெரிவிக்கும் தீர்ப்பு அல்ல.  ஆவணங்களில் இருந்து , ஊழல் ஒன்று நடந்துள்ளது என்ற உணர்வு எனக்கு ஏற்படவே இல்லை  என்று அவர் கூறியது மிகமிக நியாயமானதே ஆகும். சிறப்புப் புலனாய்வுக் குழு பொருத்தமான, சரியான கேள்விகளைக் கேட்கவில்லை;  பிராசிகியூஷன்தரப்பு சாட்சிகள் சாட்சியம் அளிக்கத் தயங்கியது, தவிர்த்தது; பிராசிகியூடர் ஒரு கேள்வியைக் கேட்பதற்கும் தயங் கினார் என்பது போன்ற பிராசிகியூஷன் தரப்பினரின் திறமையின்மை பற்றி பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றனவே.

அது வழக்கின் பிற்பகுதியில்தான்.  குற்றம் சாட் டப்பட்ட 17 நபர்களின் ஒவ்வொரு வழக்கினையும் அவர் பார்த்து வந்தார்.  தீர்ப்பின் கட்டமைப்பே அதுதான். உரிமங்கள் முறையில்லாத வழியிலோ அல்லது குற்றம் இழைக்கும் வழியிலோ அளிக்கப் பட்டுள்ளனவா,  அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கிகு இடையேயான சதித் திட்டம் ஏதேனும் இருந்ததா,  அந்த நிறுவனங்கள் முதலில் உரிமங்கள் பெறத் தகுதி படைத்தவர்கள்தானா,  எந்த ஒரு தனிப்பட்ட நிறுவனத்துக்கும் உதவி செய் யும், சலுகை காட்டும் நோக்கத்துடன் இறுதி நான் நிர்ணயிக்கப்பட்டதா,  மற்ற நிறுவனங்களுக்கு எதிராக ஒரு சில நிறுவனங்களுக்கு மட்டுமே உதவி செய்யும், சலுகை காட்டும் வகையில் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற கோட்பாடு உருவாக்கப் பட்டதா, இறுதியாக இதனால் அரசுக்கு ஏதேனும் இழப்பு ஏற்பட்டுள்ளதா என்பது போன்ற   பரிசீலிக்க வேண் டிய பல விஷயங்கள் நீதிமன்றத்தின் முன் இருந்தன. ஒவ்வொரு பிரச்சினையிலும், ஒவ்வொரு வழக்கிலும் தன் முன் வைக்கப்பட்ட சாட்சியங்களை நீதிபதி சைனி பரிசீலனை செய்த பின்னர், எந்த விதத்திலும் இந்தக் குற்றச்சாட்டுகளை நியாயப்படுத்த முடியவில்லை என்ற முடிவுக்கு வந்தார். ஒவ்வொருவர் மீதும் பிறப் பிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை பரிசீலனை செய்த பிறகு,  எந்த ஒரு ஊழலும் நடந்திருக்கிறது என்று தன் னால் கூறமுடியாது என்ற முடிவுக்கு நீதிபதி வந்தார்.

(தொடரும்)

நன்றி: ‘ப்ரண்ட் லைன்’,  19.1.2018

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner