எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை இடம் பெறக் கூடாது என்பதில் பார்ப்பனர்கள் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டுள்ளனர். இது கிறித்தவ சதி என்கின்றனர். அதே நேரத்தில் அங்கு சமஸ்கிருத இருக்கை இருப்பதுபற்றிப் பேச மறுக்கின்றனர். இது குறித்து சென்னை அய்.அய்.டி.யில்  நடந்த விவாத அரங்கில் பகுத்தறிவாளர் கழக மாநிலத் துணைத் தலைவர் கோ. ஒளிவண்ணன் பங்கேற்று விவாதித்ததும், அங்கு நிலவும் சூழல்களும் இக்கட்டுரையில் விவரிக்கின்றார்.

கடந்த மாதத்தில் ஒருநாள் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அய்அய்டி வளாகத்தில் ஹார்வர்ட் இருக்கைக் குறித்து மாணவர்களிடம் கலந்து உரையாட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது. மகிழ்ச் சியோடு ஒப்புக் கொண்டு கடந்த வெள்ளிக் கிழமையன்று அங்கு சென்றபோது ஆச்சரியம் ஆரிய வடிவில் காத்துக் கொண்டிருந்தது. இன்டேலாஜிக்கல் சுதேசி மாநாடு நடந்து கொண்டிருக்கிறது. எல்லோரும் நாற்பதிலிருந்து அறுபது வயதினை உடையவர்களாக இருந்தனர். மருந்துக்குக் கூட மாணவர் போல ஒருவர்கூட கண்ணில் தென்படவில்லை. பிரேக்கிங் இந்தியா என்கிற ஆங்கிலப் புத்தகத்தை எழுதிய ராஜீவ் மல்ஹோத்ரா என்பவரால் முன்னெடுத்து நடைபெறும் கருத்தரங்கம். இந்நூலினை மறுத்து தமிழர் தலைவர் அவர்கள் தொடர் உரை ஒன்றினை திடலில் ஆற்றினார். அவைகளைக் கேட்கும் வாய்ப்புப் பெற்றது இப்பொழுது இச்சமயத்தில் உதவும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை.

கருத்தரங்கின் நோக்கம், என்னிடம் கூறிய வகையில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப் பதன் நோக்கம் அதன் தாக்கம் என்பதாகும். தொடக்கம் எல்லாம் சரியாகத்தான் தொடங்கியது. இராஜீவ் மல்கோத்ரா நெறியாளராகவும், ஒருபுறம் நானும், இன்னொருபுறம் ஆர்எஸ்எஸ்ஸின்  ஊதுகுழல் 'சுதேசி' என்கிற பத்திரிக்கை யின் ஆசிரியர் பத்மினியும் கலந்து கொண்டோம். விவாதம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே அதன் போக்கு முற்றிலுமாக வேறு திசையில் பயணிக்கத் தொடங்கியது.

இந்த விவாதத்தின் மய்யக்கரு, "ஏன்  ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கக் கூடாது என்பதும், அதற்கான முக்கிய காரணம், அமெரிக்கநாட்டு கிறித்துவர்களுக்குத்  தமிழை உயர்த்திப் பிடிப்பதற்கான நோக்கம் தமிழ் மீதான உண்மையான பற்றல்ல; அதனை வாய்ப்பாகக் கருதி தமிழ்த் தேசிய இனவாதத்திற்கு முட்டுக் கொடுத்து அதன்மூலம் இந்தியாவைப் பிரித்துத் துண்டாக்கி விடவேண்டும் என்பதே". இதைதான் மய்யமாக வைத்து திரும்பத் திரும்ப விவாதித்தார்கள்.

நான் இதற்குப் பதிலளிக்கையில், 'தமிழை யாரும் உயர்த்திப் பிடித்துப் புகழ் பெற வேண்டிய நிலையில் எம்மொழி இல்லை. இன்றைக்கு உலகிலுள்ள ஏழு செம் மொழிகளில் சீரோடும் சிறப்போடும் உலகெங்கும் எட்டுக் கோடி மக்களால், அதுமட்டுமின்றிப் பல நாடுகளில் ஆட்சி, அலுவல் மொழியாகவும் வீற்றிருக்கிறது தமிழ். ஆகவே, யாரும் அம்மொழியை உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அது தேவையு மில்லை' என்றேன்.

"ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கும்போது, அவர்கள் போக்கிற்கு விட்டுவிட்டால் அது நமக்குத் தீமையில்தான் முடியும். ஆகவே, எதைச் செய்வதாக இருந்தாலும், நம்மைக் கேட்டுத்தான் செய்ய வேண்டும், அது, பாடத்திட்டமாக இருந்தாலும் அல்லது பேராசிரியர் நியமனமாக இருந்தாலும், என்று ராஜீவ் மல்கோத்ரா கூறியபோது, நான் குறுக்கிட்டு, நம்மைக் கேட்டுத்தான் என்றால், இங்கு 'நம்மை' என்று யாரைக் குறிப்பிடுகிறீர்கள்" என்று கேட்டேன். அதற்கு, பதில் சொல்லத் தடுமாறினார். நான் உடனே, 'ஒருவேளை, அரசாங்கம் அல்லது பல்கலைக்கழகம் என்றால், அவர்கள் நேர்மை யாக, சமனோடு நடந்து கொள்வார்கள் என்று உறுதியோடு சொல்ல முடியுமா' என்றதற்கு, 'முடியாது' என்றார். அப்படி யென்றால், நாம் 'ஹார்வர்ட் பல்கலைக் கழகத்திடமே விட்டுவிட வேண்டும். உலகின் முன்னணிப் பல்கலைக் கழகம், சிறப்பாக செயல் படுவார்கள் என்கிற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. உலகில் பல பல்கலைக் கழகங்களில் சமஸ்கிருதத்திற்கு இருக்கை உள்ளதே அப்பொழுது எதிர்க்காத நீங்கள் தமிழுக்கு முயற்சிக்கும் போது இத்தனை கேள்விகள் கேட்பது விந்தையாக உள்ளது' என்றேன். அரங்கத்தில் சிலர் கைத்தட்டினர்.

உடனே, ராஜீவ் அவர்கள், 'நீங்கள் உங்கள் மொழி மீது வைத்துள்ள அபரிதமான பிரியத்தில் பேசுகிறீர்கள். எங்கள் அச்சமெல்லாம் தமிழைக் காரணமாகக் கொண்டு நமது நாட்டில் எந்த பிளவையும் உண்டாக்கி விடக்கூடாது என்பதே' என்றார். நான் பதிலுக்கு 'நாட்டில் பிளவுக்கான  தூண்டுதல்கள் வெளியிலிருந்து வரத் தேவையில்லை. மத்திய அரசாங்கம், சமஸ்கிருதம் மற்றும் இந்தியை உயர்த்தி பிடிப்பவர்கள், ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், நான் என்ன உணவு உண்ணவேண்டும் எதை உடுத்த வேண்டும் என்று முடிவு செய்ய நினைக்கும் சிலரால்தான் இந்நாடு பிளவு பட்டுவிடுமோ என்கிற அச்சம் எங்களுக்கு உள்ளது' என்று கூறினேன். இதற்கு கூட்டத்திலிருந்து சில மறுப்புக் குரல்களும், ஒரே ஒருவரின் கைதட்டல் மட்டும் வந்தது. (அவர் யாராக இருக்கும் என்று பலமுறை தேடியும் கடைசிவரை கண்டுபிடிக்க முடிய வில்லை). 'மூவாயிரம் ஆண்டுகால இலக்கிய வளமும், செறிவும் கொண்ட எங்கள் மொழியும், பண்பாடும் எங்களுக்கு முக்கியம், தேசியம் என்கிற போர்வையின் கீழே அதனை இழக்க நாங்கள் தயாராக இல்லை. தமிழுக்குப் பிறகு தோன்றிய மொழி சமஸ்கிருதம் என்பதை நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள்'. (அரங்கத்தினர் ஏளனமாகச் சிரித்தனர், சில கண்டனக் குரல்கள்)

ராஜீவ் மீண்டும், 'ஒரே மொழி என்று இருப்பதில் என்ன பிரச்சினை உங்களுக்கு, அஃது இணைப்பு மொழியாக இருந்துவிட்டுப் போகட்டுமே, அதில் என்ன உங்களுக்குச் சங்கடம்?' என்றார். நான், 'ஆங்கிலம்தான் உலக அளவில் அந்தப் பணியைச் சரியாகச் செய்து கொண்டிருக்கிறதே, அதுவே இருந்துவிட்டுப் போகட்டுமே, அதில் உங்களுக்கு என்ன சங்கடம்?' என்றேன். அதற்கு கூட்டத்திலிருந்த ஒருவர், 'இவர்கள் (என்னை) புரிந்து கொள்ளமாட்டார்கள். மொழி வெறியர்கள்' என்றார். நான் சிரித்துக்கொண்டே எனக்கு இந்திமீது எந்த வகையிலும் வெறுப்பு கிடையாது. இதே மாநகரத்தில், நாளை மாலை  என்னுடைய புத்தகத் தின் இந்தி மொழிபெயர்ப்பு வெளியிடப்பட உள்ளது. உங்கள் அனைவரையும் இதனை வாய்ப்பாக கருதி அழைக்கிறேன்' என்றேன். (இப்பொழுது அரங்கில் பலத்த கைதட்டல்). நான் தொடர்ந்து, 'அதே நேரத்தில், எங்கள் மொழியை அழிக்கும் வகையில் இன்னொரு மொழித் திணிக்கப்படுவதை எதிர்க்கிறோம். இதற்கு அரங்கிலிருந்த ஒருவர், 'இந்தி படிக்க தமிழ்நாட்டில் தடை இருப்பதால், எங்கள் வீட்டுக் குழந்தைகளுக்குப் பெருமளவில் கஷ்டம் ஆகிவிட்டது' என்றார். நான், 'உங்கள் தவறான புரிதலுக்கு வருந்துகிறேன். தமிழ்நாட்டில் இந்தி படிப்பதற்கு  யாரும் தடை அளிக்கவில்லை. விருப்பப்பட்டவர்கள் படிக்கலாம். நகரின் மய்யப் பகுதியில் தியாகராயர் நகரில் இந்தி பிரச்சார சபா பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. பல பள்ளிக் கூடங்களில் விருப்பப்பாடமாக சொல்லித் தருகிறார்கள். இம்மாநிலத்தில் இரு மொழிக் கொள்கையைக் கடைப் பிடிப்பதால், ஆங்கிலம் தமிழ் இருமொழிகள் நடை முறை யில் உள்ளன. எல்லோரும் இந்திதான் படிக்க வேண்டும் என்பது திணிப்பு, அதைத்தான் எதிர்க்கிறோம்' என்றேன்.

'ஏற்கெனவே தஞ்சையில் உள்ள பல்கலைக்கழகம் போதிய நிதி ஆதாரம் இல்லாமல் தவிக்கிறது. இந்தியாவில் பல பல்கலைக்கழகங்களில் இன்னும் தமிழ்த் துறையோ, இருக்கைகளோ இல்லாதபோது ஹார்வர்ட்க்கு ஏன் நிதியுதவி செய்ய வேண்டும்' என்று பார்வையாளர் ஒருவர் கேட்டார். நான், 'உண்மைதான். இந்தியாவின் பிற மாநிலங் களில் அவ்வாறு துறை, இருக்கை அமைக்க வேண்டியது மத்திய அரசாங்கம். அவர்கள் பல்கலைக்கழக மானியக் குழுக்கள் மூலமாக நிதியளிப்பு செய்து இத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும். அவர்கள் சமஸ்கிருதத்திற்கும், இந்திக்கும் செலவிடுவதில் நூறில் ஒரு பங்குக்கூடத் தமிழுக்கும், பிற இந்திய மொழிகளுக்கும் செலவிடுவ தில்லை. இந்த மாற்றான் தாய் மனப்போக்கிற்கு எதிராக வாருங்கள், நாம் அனைவரும் இணைந்துக் குரல் கொடுப் போம்' என்றவுடன் அரங்கம் அமைதியாக இருந்தது. நான் சொன்ன கருத்தினை பார்வையாளர்கள் ஒத்துக் கொண் டார்கள் என்று சொல்லிவிட முடியாது. முன்வரிசையில் இருந்தவர்கள் ஒருவிதமான எரிச்சலோடு புழுவைப் பார்ப்பது போல என்னைப் பார்த்தனர். நான் மேலும், 'எமது ஊரில் பல்கலைக் கழகங்கள் சீர்க்கெட்டு உள்ளன என்ப தற்காக ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் இருக்கை அமைப்பதைக் குறைக்கூறுவது. நமது நாட்டில் சாலைகள் இன்னும் சரியாக அமைக்காமல் குண்டும் குழியுமாக உள்ளன, எனவே, விமான சேவை எதற்கு என்று கேட்பது போல உள்ளது' என்றேன்.

ராஜீவ், 'உங்கள் ஆதங்கத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், உங்களுக்கு தமிழ் என்பதைத் தாண்டி உலக அளவில் இந்தியாவிற்கு எதிராக நடக்கும் சதிகள் புரிந்து கொள்ளக் கூடிய பக்குவமோ அனுபவமோ இல்லை என்றார். நான், புன்னகையோடு, மேலே சொல் லுங்கள்' என்றேன். 'ஹார்வர்ட் போன்று பல ஆண்டு களுக்கு முன்னால் கலிபோர்னியா மாகாணத்தில் பெர்க்லி பல்கலைக்கழகத்தில் இதே போன்று ஓர் இருக்கை அமைக் கப்பட்டது. அவர்கள் தமிழ்ப் பணியைவிட, இந்தியாவில் கிறித்துவம் பரப்புவதற்குதான் அதனைப் பயன்படுத்தினர்' என்றார்.  நான் சிரித்துக் கொண்டே, 'நீங்கள் உலக அளவில் தேவையான அனுபவம் இதுதான்  என்றால், நான் உங்கள் மீது பரிதாபப்படுகிறேன்' என்றவுடன், முதன்முறையாக அதுகாறும், அமைதியாய், சாந்தமாய்ப் பேசிய ராஜீவ் மல் கோத்ரா சீறினார். மறைமலை இலக்குவனார் என்கிறவர் 'கிறித்துவர்களில் ஒரு பிரிவான  மார்மன் சமயத்தின் பைபிள் தமிழரின் திருவாசகத்தை நினைவுப்படுத்துவ'தாகப் பேசினார். 'தமிழ் என்கிற பெயரில் கிறித்துவத்தைப் பரப்ப பெர்கிலி இருக்கை மறைமலை இலக்குவனார் போன்றவர் களைப் பயன்படுத்திக் கொண்டது' என்று உரத்த குரலில் பேசினார். நான், 'இது முற்றிலும் தவறான தகவல். மறை மலை இலக்குவனார் அவர்கள் தமிழ் கூறும் உலகம் மட்டு மின்றிப் பிற மொழி அறிஞர்களும் நன்கறிந்த கல்வியாளர், ஆராய்ச்சியாளர், மேன்மைபல தாங்கிய அவர்களைக் குறித்த உங்களது புரிதல் தவறானது. அவரது தந்தை இலக்குவனார் உலகம் போற்றும் மொழி அறிஞர். ஆகவே, மறைமலை அவர்களை குறித்த உங்கள் பார்வையை தயவுசெய்து மாற்றிக்கொள்ளுங்கள். அடுத்து, தமிழ் என்பது உலகின் மூத்த மொழி, 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்கிற மாபெரும் கருத்தை, மனிதர்களை எந்த அடிப்படையிலும் பிரிக்காத, உலக மாந்தர்களை உறவு களாய் பார்க்கும் உன்னதத் தத்துவத்தை உலகிற்குத் தந்த மொழி, தமிழ்.

ஆகையினால், உலகில் எந்த ஒரு மொழியிலும் உள்ள தத்துவங்கள், இலக்கியங்கள், கருத்துகளைக் கண்டால், தமிழ் இலக்கியங்களோடு ஒப்பீட்டு நோக்குவது தமிழ் மரபு. ஒப்பிலக்கியம் தமிழின் சிறப்புகளில் ஒன்று. பல் கலைக்கழகங்களில் ஒப்பிலக்கியத் துறைகள் கொண்ட சிறப்பு தமிழுக்கு உண்டு. அந்த வகையில் மார்மன் சமயத்தின் பைபிளினை மறைமலையார் திருவாசகத் தினோடு ஒப்பிட்டு பேசி இருக்கலாம். நான் அதனை மனமாரப் பாராட்டுகிறேன். (அரங்கம் அமைதி.) தொடர்ந்து நான், 'ஜெர்மனி நாட்டில் கோலோன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை செயல்படுவதை அறிவீர்களா' என்று கேட்டபோது, 'இல்லை' என்பது போல தலையசைத்தார். 'நான் அந்த பல்கலைக் கழகத்திற்குச்  செல்லும் வாய்ப்பு பெற்றவன். அங்கு, துறைத்தலைவராக விளங்கும் பேரா சிரியர் உல்ரிக் நிக்கலஸ் அவர்கள் தமிழுக்கு அரும்பணி ஆற்றிவருகின்றார். அவர்தம் தொண்டால், அய்ரோப்பிய நாடுகளில் பலர் தமிழ்ப் பயில்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆகவே, இப்படிப்பட்ட இருக்கைகளால் தமிழின் பெருமை உலகெங்கும் செல்கிறது. தமிழ் இலக் கியத்தைப் படிப்பதன் வாயிலாக அயல் நாட்டினர் நமது உண்மையான கலாச்சாரம் பண்பாட்டினைத் தெரிந்துக் கொள்ள முடிகிறது. உள்ளபடியே, இந்தப் பணியினை மத்திய அரசாங்கம் செய்திருக்க வேண்டும். தமிழுக்கு மட்டுமல்ல, வங்காளம், மராத்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளுக்கும் இருக்கைகளும் துறைகளும் அமைத்து இந்தியாவின் தொன்மையை உலகிற்குச் சொல்லியிருக்க வேண்டும். வெறும் சமஸ் கிருதம் இந்தி வழியாக இந்தியாவைப் பற்றித் தெரிந்து கொள்ள முயற்சிப்பது குறுகியப் பார்வையாகத்தான் இருக்க முடியும்' என்றேன். ஒரு சிலர் ஆமோதிப்பது போல கைதட்டினர். பத்மினி அவர்கள் ஓரிடத்தில் தோழர் திருமாவளவன், ஆகியோரை குறித்து தரம் தாழ்ந்து விமர்ச்சித்தபோது, நான் வெகுண்டு, 'இது நாம் எடுத்துக் கொண்ட விவாதத்திற்குத் தேவையில்லாத விமர்சனம். இதற்கு நான் பதில் சொல்லத் தொடங்கினால், இந்த நிகழ்ச்சியின் போக்கு மாறிவிடும்' என்றவுடன், பத்மினி அவர்கள் சுதாரித்துக்கொண்டு, 'திருமாவளவன் எனக்கும் தெரிந்தவர், நண்பர்' என்று கூறி கருத்திலிருந்து பின் வாங்கிக் கொண்டார்.

ராஜீவ் மல்ஹோத்ரா போன்றவர்களுக்கு ஹார்வர்ட் இருக்கை, பெட்னா (வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு) போன்றவை ஒவ்வாமையாக உள்ளதை உணரமுடிகிறது. தனது காழ்ப்புணர்ச்சியினை அவ்வப் போது பேச்சினிடையே வெளிப்படுதினார். ஜார்ஜ் ஹர்ட் போன்ற தலைசிறந்த மேலைநாட்டு அறிஞர்கள் தமிழைச் சிறப்பித்துப் பேசுவதும், அஃதினை இந்தியாவின் தொன்மை வாய்ந்த உன்னத மொழி என்று பாராட்டு வதையும் அவர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை என்பதை புரிந்துக்கொள்ள முடிகிறது. காரணம், அவர்கள் கட்டமைக்க நினைக்கும் 'பாரதத்திற்கு' தமிழின் தனித் துவமும், மேன்மையும் தடையாக உள்ளதை உணர் கின்றனர். அதன் பொருட்டே, இந்த எதிர்ப்புகள் என்பது நமக்கு நன்கு புலப்படுத்துகிறது. அரங்கில் அமர்ந்திருந்த வர்கள் அவ்வப்போது சிறுசிறு சலசலப்புகளும், எதிர்ப்பு களும் காட்டினாலும் பெருமளவில் மாற்றுக் கருத்தினைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற மனப்பான்மை அவர்களிடம் இருந்தது. ஓரிடத்தில், தந்தை பெரியார் அவர்கள் பெயரினைக் குறிப்பிடும்போது மொத்த அரங் கத்திலும் பயங்கரமான எதிர்ப்பலை கிளம்பியபோது, ஆதிக்க சக்திகளின் அடித்தளத்தை அக்கிழவன் எந்த அளவிற்கு அடித்து நொறுக்கியுள்ளான் என்பதை நினைத்து வியந்தேன், பெருமிதம் கொண்டேன்.

விவாதம் நடந்த ஒரு மணிநேரமும் இறுக்கமான சூழ்நிலை இருந்தாலும், அவ்வப்போது நாம் எடுத்து வைத்த வாதங்களை இரசித்தனர். ராஜீவ் மல்கோத்ரா ஓரிடத்தில் 'என்னுடைய யூ டியூப் சேனலில் இலட்சக்கணக் கான பார்வையாளர்கள் உள்ளனர். அதில் உங்களை ஒருநாள் பேசவைக்கப் போகிறேன்' என்று கூறியபோது அரங்கில் சம்பிரதாயத்துக்காக கைதட்டல் எழுந்தது. அதேபோல் நான், ராஜீவிடம், 'உங்கள் கருத்துகளுக்கும் கோட்பாடுகளுக்கும் எனக்கு ஒப்புதல் இல்லை என்ற போதிலும்  அதைக் குறித்து ஆரோக்கியமாக விவாதிக்க வேண்டும் என்கிற உங்களது முயற்சியினைப் பாராட்டு கிறேன். அடுத்தமுறை, என்னைவிட இத்தலைப்புக்களில் அதிகம் கற்றறிந்த அனுபவம் வாய்ந்த அறிஞர்களைக் கொண்டு, இது போன்று அல்லாது, பலர் கலந்து கொள்ளக்கூடிய வகையில் நாம் கருத்தரங்கு ஒன்றினை நடத்தவேண்டும்' என்றேன். உடனே, ராஜீவ் அவர்கள் 'அப்படி ஒன்று நடைபெற்றால் நான்  அதற்கான செலவில் பாதிப் பணம் தருகிறேன்' என்றார். மிக்க மகிழ்ச்சி, என்று கூறி விடை பெற்றேன்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner