எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

- பரத் பூஷன்

 

குஜராத் சட்டமன்றத் தேர்தலில் ஒரு கேவலமான வெற்றியை பா.ஜ.க. பெற்றதற்குப் பிறகு, ராஷ்டிரிய சுயம் சேவக் சங்கத்திற்கும், நரேந்திர மோடி அரசுக்கும் இடையேயான  முரண்பாடுகள் அதிகரிக்கும் என்றே தோன்றுகிறது. இரண்டுக்கும் இடையேயான பதற்றம், அரசின் கொள்கை பற்றியும், 2019 - பொதுத் தேர்தல் செயல்திட்டத்தை உருவாக்குவது பற்றியுமாக இருப்ப தாகும்.

ஆர்.எஸ்.எஸ். இல்லாத மோடி, ஒரு குதிரையும், திருமண ஊர்வலமும் அற்ற ஒரு மாப்பிள்ளையைப் போன்றவர்தான். அதனால்தான் அதன் பிரதிநிதிகளை தேசிய அமைப்புகளுக்கும், ஆராய்ச்சிக்கு நிதி வழங்கும் நிறுவனங்களிலும், கல்லூரிகளிலும் நியமிப்பதன் மூலம் அரசு ஆர்.எஸ்.எஸ்.சை மகிழ்ச்சியாக வைத்திருக்க முயற்சிக்கிறது. ஆனால், ஆர்.எஸ்.எஸ். சுடனான பதற்றம் இன்னமும் நீடிக்கிறது என்பதை இரண்டு அண்மைக் கால நிகழ்வுகள் காட்டுகின்றன. சர்ச்சைக்குரிய காவல் துறை அதிகாரி  ராகேஷ் அஸ்தானாவை மத்திய புலனாய்வுத் துறை சிறப்பு இயக்குநராக மோடி-ஷா இரட்டையர் நியமித்தது பற்றி ஆர்.எஸ்.எஸ். மகிழ்ச்சி அற்று கோபம் கொண்டுள்ளது. அஸ்தானா குஜராத் மாநிலத்தில் ஆற்றிய பணியை நன்றாக உணர்ந்திருந்த போதிலும்,  வேறொரு அதிகாரியை அந்த இடத்தில் நியமிப்பதையே ஆர்.எஸ்.எஸ். விரும்பியிருந்தது. கடந்த டிசம்பர் மாத இறுதியில், இரண்டு மூத்த வருவாய்த் துறை அதிகாரிகளை முதன்மை ஆணை யர்களாக நியமிப்பதற்கு மத்திய அமைச்சரவை நியமனக் குழு ஒப்புதல் அளித்த போதும் ஆர்.எஸ்.எஸ். ஏமாற்றமடைந்தது. சந்தேசரா குழுமத்தைச் சேர்ந்த, ஒரு மூத்த காங்கிரசுகாரருடன் தொடர்புள்ள ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனத்திடமிருந்து கையூட்டு பெற்றனர் என்று இவர்கள் இருவரின் மீதும் மத்திய புலனாய்வுத் துறை குற்றம் சாட்டியிருந்தது.  மூன்று வாரங்களுக்குப் பிறகு, விமர்சனத்தையடுத்து, மத்திய அமைச்சரவை நியமனக் குழு இந்த முடிவை மாற்றிக் கொண்டது.

முன்னர், குஜராத்தில் குறைந்த அளவு பெரும் பான்மையுடன் வெற்றி பெற்றதைக் குறிப்பிட்டு, தேர்தல் பிரச்சாரத்தின்போது  ‘நாகரிகத்தைக் கைவிட்ட’ தற்காக பா.ஜ.கட்சியை ஆர்.எஸ்.எஸ். கண்டித்துள்ளது. இதற்கு மோடியிடமிருந்து ஒரு முக்கலோ, முனகலோ கூட வரவில்லை.  ஆர்.எஸ்.எஸ்.சின் கோட்பாட்டு செயல்திட்டம் என்பது அனைத்தையும் விட மேலானது என்று தெரிவிப்பது போலவே அந்த மவுனம் இருந்தது.

மோடி அரசின் பொருளாதார திட்டங்களுக்கு எதிரான பா.ஜ.கட்சியினரின் விமர்சனம்

இவ்வாறுதான், எடுத்துக் காட்டாக, அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா, சுப்பிரமணியன்சாமி போன்ற பா.ஜ.கட்சிக்காரர்களிடமிருந்தே எழுந்த அரசின் பொருளாதாரக் கொள்கையைப் பற்றிய  விமர்சனக்  குரல் அடக்கப்படவில்லை. அவர்கள் கட்சியில் இருந்து வெளியேற்றப்படவுமில்லை. ஒரு வேளை அவர்களது கருத்துகளும் ஆர்.எஸ்.எஸ்.சில் உள்ள சிலரால் பகிர்ந்து கொள்ளப்பட்டு இருந்திருக்கலாம்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையும், சரக்கு மற்றும் சேவை வரித் திட்டமும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைவதற்கும், வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்கவும் காரணமாக விளங்கின என்று ஆர்.எஸ்.எஸ்.கருதுகிறது. இவை இரண்டுமே சங்பரிவாரத்தின் இயல்பான, அடிப்படை ஆதரவாளர்களாக இருந்து வரும், சங் பரிவாரத்திற்குத் தொண்டர்களையும் நிதியை யும் அளித்து உதவி வரும், வர்த்தக சமூகத்தினரையும், சிறு வியாபாரிகளையும் பெருமளவில் துன்பத்திற்கு உள்ளாக்கி விட்டன.

பா.ஜ.க. அரசு மீதான ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளின் குற்றச்சாட்டு

அரசின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக ஒரு எதிர்ப்பு அணியையும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு உருவாக்கியது. நிதி ஆயோக் அமைப்புக்குத் தலைமை வகிப்பதற்காக பெரும் ஆரவாரத்துடன் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட அரவிந்த் பங்காத்ரய்யா,  ஆர்.எஸ்.எஸ்.சின் இணை அமைப்பான ஸ்வதேசி ஜாக்ரான் மஞ்ச் அளித்த அழுத்தத்தின் காரணமாக, அவரது பதவிக் காலம் முடிவதற்கு முன்பே அப்பதவியில் இருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.

ஆர்.எஸ்.எஸ்.சின் தொழிலாளர் பிரிவான பாரதிய மஸ்தூர் சங், வேலையற்ற முன்னேற்றத்தை பா.ஜ.க. அரசு உருவாக்கியது என்றும், தொழிலாளர்களின் கூலி குறைக்கப்படுகிறது என்றும், ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்கள் நியமிக்கப்படுகின்றனர் என்றும், நுண்ணிய, சிறிய, நடுத்தர தொழில்துறைகள் அழிக்கப் படுகின்றன என்றும் பா.ஜ.க. அரசு மீது குற்றம் சாட்டியது.

ஆர்.எஸ்.எஸ்.சின் விவசாயப் பிரிவான  பாரதிய கிசான் சங், விவசாயிகளின் நெருக்கடி நிலைக்கு நிவாரணம் அளித்து அவர்களது பிரச்சினைகளை சரியாகக் கையாளவில்லை என்று பா.ஜ.க. அரசு மீது குற்றம் சுமத்தியது மட்டுமல்லாமல், தேச அளவில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் தவிர்ப்பதே பெரும் பாடாக ஆகிவிட்டது என்றும் கூறுகிறது. மோடி அரசுக்கும், ஆர்.எஸ்.எஸ். குடும்ப அமைப்புகளுக்கும் இடையேயான முரண் பாடுகள் பொருளாதாரக் கொள்கை என்ற எல்லையைத் தாண்டியும் இருந்தன.

கொல்லப்பட்டுவிடுவோம் என்று அஞ்சும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளின் தலைவர்கள்

அரசைப் பற்றி விமர்சிப்பவர் என்று அனைவரும் அறிந்த விசுவ இந்து பரிசத் தலைவர் பிரவின் தொகாடியா, போலி என்கவுன்டரில் காவல்துறையினரால் தான் கொல்லப்பட்டுவிடக் கூடும் என்று அஞ்சுகிறார். இந்த அச்சத்துக்குக் காரணம் தனது கோட்பாட்டு எதிரிகள் அல்ல என்பதும், அரசில் உள்ள தன் நண்பர்களே காரணம் என்றும் கருதுவது வியப்பளிப்பதாக இருக்கிறது. பதின்ம வயதுக் காதலர்களையும், முஸ்லிம்களையும் ஒன்று போலவே வெட்டிக் குவித்து வரும் ராம்சேனா என்னும் கொலைகார கும்பலின் தலைவராக இருக்கும் பிரமோத் முத்தலிக் தனது கோட்பாட்டு நண்பர்களே தன்னைக் கைவிட்டு விடக்கூடும் என்று கூறுகிறார். காவியுடைத் தீவிரவாதி சுனில் ஜோஷியின் கதி என்ன ஆயிற்று என்பதை அவர்கள் நன்றாகவே அறிந்திருக்கிறார்கள்.

அரசுடனான பதற்றத்தை சமாளிக்கும் வகையில் வைத்திருப்பதற்காக, விசுவ இந்து பரிசத் அமைப்பின் தலைவர் பொறுப்பில் இருந்து தொகாடியாகவும், பாரதிய மஸ்தூர் சங்கத்தின் பொதுச் செயலாளர் விர்ஜேஷ் உபாத்யாயாவும் விலக்கப்படலாம் என்றும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மோடி மட்டுமல்லாமல் ஆர்.எஸ்.எஸ்.சும் கூட ராமர் கோயில் கட்டும் விவகாரத்தைக் கைவிட்டுவிட்டு தொகாடியா ஓடிப்போய் விடுவாரோ என்று அய்யுறுகின்றனர்.

தற்போது முதன்மை நிர்வாகியாக இருக்கும் பய்யாஜி ஜோஷி இருக்கும் இடத்துக்கு, மோடிக்கு நெருக்கமானவர் என்று கருதப்படும் மூத்த

ஆர்.எஸ்.எஸ்.தொண்டர்களில் ஒருவரான தத்தாச்சாரியா ஹோசபள்ளியைக் கொண்டு வருவதற்கான முயற்சியும் இதற்கிடையில் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இது பற்றி 2015 இல் மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சி தோல்வியில் முடிந்தது. இம்முறை அம்முயற்சி வெற்றி பெற்றால்,  கொள்கை முடிவெடுக்கும் விஷயத்தில் ஆர்.எஸ்.எஸ்.சில் தன்னால் செல்வாக்கு செலுத்த முடியும் என்று மோடி நம்புகிறார்.

2019  ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்னு ரிமை அளிக்கும் ஒரு தெளிவான இந்துத்துவ செயல் திட்டத்தை உருவாக்குவதற்காக, அமைப்பை சீர்ப்படுத்தும் பணிகள் அடுத்த சில மாதங்களில் மேற் கொள்ளப்படும்.

2019 பொதுத் தேர்தலில் நாடாளுமன்ற பா.ஜ.க. வேட்பாளர் தேர்வில் தங்களுக்கு ஒரு பெரிய அளவிலான பங்கு இருக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைமை விரும்புவதாகவும் ஊகங்கள் எழுந்துள்ளன. அதற்காக,  அவர்களது ஆலோசனைகளுக்கு ஒத்துப் போகும் ஒரு புதிய பா.ஜ.க. தலைவரும் தேவைப்படக்கூடும்.

ஆர்.எஸ்.எஸ். மோடிக்கு எதிராக இல்லை என்ப தையே நாம் முக்கியமாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஆர்.எஸ்.எஸ்.சின் அகண்ட செயல்திட்டத்தில், அதன் கோட்பாட்டு செயல்திட்டத்தை நிறைவேற்றுவதற்கான ஒரு கருவி மட்டுமே மோடி. இந்துத்துவ செயல்திட்டத்தில் இருந்து மோடி விலகிச் செல்வதற்குக் கோட்பாட்டு காரணங்கள் இல்லை என்பதையும்,  அரசாட்சியில் கடைபிடிக்க வேண்டிய கட்டாயங்களே காரணம் என்பதையும்  ஆர்.எஸ்.எஸ். நன்கு அறிந்து ஏற்றுக் கொண்டுள்ளது. என்றாலும், இந்துத்துவக் கோட்பாட்டுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் அளவில் தங்களுக்கு இடையே உள்ள முரண்பாடுகளை நீடித்து வைத்திருக்கவே அது விரும்புகிறது.

2019 பொதுத் தேர்தலை இலக்காகக் கொண்ட செயல்பாடுகள்

இதற்கிடையில், பா.ஜ.கட்சிக்கு எழும் எந்த சவாலையும் பலமற்றதாக ஆக்குவதற்காக, புகழ் பெற்ற காங்கிரசுகாரர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் மீதுள்ள லஞ்ச ஊழல் புகார் வழக்குகளை விரைவில் நடத்தி முடிக்கவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். விரும்புகிறது. இந்த ஆண்டு முடிவிற்குள் அயோத்தியா ராமர் கோயில் கட்டும் பணி தொடங்கப்பட வேண்டும் என்றும் அது விரும்புகிறது. அதற்கு உச்ச நீதிமன்றத்திடம் இருந்து ஆதரவான ஒரு தீர்ப்பு தேவை; இல்லாவிட்டால், ஒரு சட்டமியற்றி அதனைச் செய்ய வேண்டும். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு அளித்துள்ள சிறப்பு நிலையும் நீக்கப்பட வேண்டும் என்று அது விரும்புகிறது. அர சமைப்பு சட்டத்தின் 35 ஏ பிரிவு அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் அறிவிப்பதன் மூலம் இது செய்யப்படலாம். காஷ்மீர் பெண்களின் சொத்துரிமையைப் பற்றி மட்டுமே முடிவெடுக்கும் அளவுக்கு உச்சநீதிமன்றம் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளப் போகிறதா அல்லது மாநிலத்துக்கு வழங்கப் பட்டு வரும் அனைத்து சலுகைகள் பற்றிய விவகாரம் மாநில அரசு முடிவு செய்ய வேண்டியது என்று கைகழுவி விடுமா என்பதைப் பற்றி எந்த வழியிலும் முடிவுக்கு வரமுடியவில்லை. பிந்தைய நிலையில்,  மற்ற இந்திய மாநிலங்கள் பெற்றுள்ள அந்தஸ்தை மட்டும்தான் ஜம்மு - காஷ்மீர் மாநிலமும் பெற்றிருக்கிறது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுவிடும்.

ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் -மோடிக்கும் இடையே பெரும் அளவிலான பிரச்சினைகளில் ஓர்அகண்ட ஒத்த கருத்து நிலவுகிறது என்பது உண்மையே . ஆனாலும்,

ஆர்.எஸ்.எஸ். விரும்பும் வேகத்தில் செயல்பட முடியாத நிலையில் மோடி இருக்கிறார். என்றாலும் 2019 தேர்தலில் மறுபடியும் பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்கு மோடி இதுவரை பிரதமராக சாதித்தது என்ன என்று காட்டுவதற்கு அதிக விஷ யங்கள் இல்லை என்ற நிலையில்,  ஆர்.எஸ்.எஸ். இடும் கட்டளைகளுக்குப் பணிந்தே பா.ஜ.க. அரசு செயல்பட வேண்டும் என்பதை அவர்கள் இருவருமே நன்கு அறிந்துள்ளனர்.

நன்றி: ‘தி டெக்கான் கிரானிக்கிள்’, 24.01.2018

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner