எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சர்க்கார் (அரசு) விடுமுறை நாள்கள்

இரு நூறு ஆண்டுகளாக நாம் அடிமைப்பட்டு கிடந்தோம். நம்முடைய அடிமைத்தளையை எந்த மதமும் அறுக்கவில்லை. பார்த்துக் கொண்டுதான் இருந்தன, எப்படி? ‘‘உன்னுடைய தலைவிதி, நீ அடிமையாக இருக்கும்படி நேரிட்டது’’ என்று கூறுவது போல் இருந்தது. மதம் ஏற்படுத்திய அந்தத் தலைவிதியை, நாட்டின் நலிவை தலைவர்கள், தங்கள் உழைப்பால் மண்டையில் அடித்து நொறுக்கினார்கள். தலை நொறுங்கவே - தளை அறுபட்டது. அடிமை நிலை மாறிற்று. சுதந்திரம் கிடைத்தது. ஆனால், ஓயா உழைப்பின் பயனாகவும், பல உத்தமர்களின் தியாகத்தினாலும் பெற்ற சுதந்திரத்தை ஏற்று நடத்திய மறக்க முடியாத ஒரு சரித்திர நிகழ்ச்சியை, மதக் கோட்பாட்டின்படி நாள் - கோள் பார்த்தே நடத்தினர் என்றால் - அதிலும் ஒரு குறிப்பிட்ட மதக் கோட்பாட்டின்படி நல்ல நாள் பார்த்து சுதந்திர அரசாங்கத்தைத் தொடங்கினர் என்றால், மதக் கலப்பற்ற அரசியலையே இவர்கள் நடத்துகிறார்கள் என்று எப்படிக் கூற முடியும்? மதமா நமக்குச் சுதந்திரத்தை வாங்கித் தந்தது? மக்களின் உழைப்பன்றோ இன்று நாம் சுதந்திரமாக வாழ்வதற்கு அடிகோலித் தந்தது. இதனை மறந்து மதங்களின் பெயரால் ஏற்படுத்தப்பட்ட ஆவணி அவிட்டத்தையும், கிருஷ்ண ஜெயந்தியையும், விநாயக சதுர்த்தியையும், மாளய அமாவாசையையும், ஆயுத பூசையையும், பக்ரீத்தையும், மொகரத்தையும், தீபாவளியையும், வைகுந்த ஏகாதேசியையும், சிவராத்திரியையும் அரசின் விடுமுறை நாள்களாகக் கொண்டாடலாமா?

...மத சம்பந்தமான நாள்களை அரசு விடுமுறை நாள்களாக்கிக் கொண்டாடுவது, ‘‘இருநூறு ஆண்டு களாக நாங்கள் அடிமைப்பகுதியில் வீழ்ந்து கிடந்த தைப் பார்த்துக் கொண்டிருந்த மதமே! எமது அரசியல் விடுதலைக்கு உதவி புரியாத மதமே! சமுதாய ஒற்றுமையைக் குலைத்து எங்களுக்கிடையே ஒட்ட முடியாத பிளவை உண்டாக்கிய மதமே! இருக் கின்ற சிறிதளவு ஒற்றுமையையும், அரசியலில் நுழைந்து குலைத்து விடாதே! அரசியலை விட்டுச் சற்று விலகியிருப்பதே நீ எங்களுக்குச் செய்யும் பேருதவியாகும்‘’ என்று கூறி அதனை அரசியலோடு பிணைக்காமலும், அரசியலின் பெயரால் அதற்கு விடுமுறை நாள்களை ஏற்படுத்தி மீண்டும் அரசியல் நெருக்கடிகளை உண்டாக்கி, அரிதில் பெற்ற விடுதலையை இழக்காமல் இருப்பதையுமே மத அடிப்படையின் மீது எழுப்பப்படாத இன்றைய அரசாங்கம் தன்னுடைய கடமையாகக் கொள்ள வேண்டும் என்று கூறுகின்றோம்.

‘திராவிட நாடு’ இதழ் - (23.5.1948).

சுயமரியாதைக்காரர்கள்

பல தலைமுறைகளாக, பலப்பல கோடி ரூபாய் பெறுமானமுள்ள விலையுயர்ந்த நவரத்தினங்கள் - கல்லிழைத்த நகைகள் - தங்க ஆபரணங்கள் - தங்கம், வெள்ளி ஆகியவற்றிலான சாமான்கள் - தங்கத்தில்  சிங்கம், வெள்ளியில் இரிஷபம் - பச்சைக்கல் பதித்த மயில் - கோமேதகக் கண்களுடன் கருடன் - குங்குமக் கெம்பு புதைத்த அன்னம் வெள்ளித் தேர், அதற்குத் தங்கக் குடை - இப்படிப்பட்டவை கோயில்களிலே தூங்கிக் கொண்டுள்ளன.

இவ்வளவும், இங்கு தாதுவருடப் பஞ்சம் - வங் காளப் பஞ்சம் - பீகார் பூகம்பம் - கங்கைப் பெருக்கம் - காவேரி உடைப்பு - காலராக் கொடுமை - உணவுத் திண்டாட்டம் போன்ற பலப்பல, பதை பதைக்கும் சம்பவங்களின் போதும், பரமனின் பெயரால், சிறையில் வைக்கப்பட்டிருந்தன. பக்தர்கள் இந்தப் பணத்துக்கு வட்டி பெறுகிற இடம் பரலோகம் என்று நம்பி, இந்தப் பகவான் பாங்கியில், பெரும் பொருளை டிபாசிட்டாகக் கட்டி வந்தனர், தலைமுறை தலைமுறையாக.

இவ்வளவு பெரும் பொருள் முடங்கிக் கிடப்பதால் எவ்வளவு பெரிய பொருள் நஷ்டம், தொழில் வளக் குறைவு ஏற்படுகிறது என்பது பற் றிய எண்ணமே ஏற்படவில்லை. மேலும்மேலும் தத்தமது சக்தியானுசாரம், கைங்கிரியம் செய்த வண்ணம் இருந்தனர். அவ்வப்போது அம்மனின் தாலியும், அய்யனின் பூணூலும், குதிரையின் வாலும், யானையின் தந்தமும், மயிலின் தோகையும், மரகத வளையலும் காணாமல் போய் விடும் - போனால் என்ன - பக்தர்கள் பதைப்பர் - புலன் விசாரிப்பர், முடிவு தெரியும் முன்னும், முந்திக் கொண்டு வருவர் ஒரு புதிய பக்தர், காணாமல் போனதைப் புதிதாகச் செய்து தர! அவர் கள்ளக் கையொப்பத்தின் மூலம் கனதனவானவராக இருக்கக் கூடும். இருந்தால் என்ன? காணிக்கையாக அவர் தரும் பொருளால் அந்தக் கதையை கூறவா முடியும்? .... நாட்டிலே  உள்ள ஏழ்மையும் திருக்கோயில்களிலே உள்ளச் செல்வத்தையும் ஒருசேர எடுத்துக் கூறி, ஏழையை ஈடேற்ற வழிதெரியக் காணோமே என்று சர்க் கார் ஏக்கம் கொண்டதாகக் காணப்படுவது வெண் ணெய்யிருக்க நெய்யில்லையே என்று அழும் போக்காகத் தெரிகிறது என்று எடுத்துரைத்தவர்கள் - பலமான எதிர்ப்புகளுக்கிடையே - சுயமரியாதைக் காரர்கள்தான். இதை நாடு அறியும்.

‘திராவிட நாடு’ இதழ், 30.10.1948

மாஜிக் கடவுள்கள்

கடவுள் எனத் தொழுகிறோமே, தாய், தந்தை, பாட்டன், பாட்டி என்று குடும்பம் கற்பிக்கிறோமே, வம்சாவளிக்குக் கதை கூறுகிறோமே, சரியா என்று புராணீகனும் எண்ணவில்லை, மக்களும் எண்ண வில்லை. அவ்வித எண்ணமே நாத்திகமாகக் கருதப்பட்டது.

...ட்யூட்டன் (கிரேக்கக் கடவுள்) கதையை மறந்து அவர்கள் நியுட்டன் (அறிவியல் அறிஞர்) காலத்தில் புகுந்து இன்று அதற்கு அப்பாலும் சென்று உள்ளனர். எருக்குப் பால் கொடுத்த பசுவின் கதையைக் கேட்டு மகிழ்ந்து காலத்தை மறந்து காளையின்றி பசு கன்று போடும் காலம் வரை வந்துள்ளனர்.  மண்டை ஓடே வான மண்டலம் என்ற கதை காலத்தைத் தாண்டி, வான மண்டலத்தில் காணப்படும் சந்திரமண்டலம் சென்று வரக் கற்றுக்கொள்ளும் காலத்துக்கு வந்துள்ளனர்.  பேரசூரனின் இரத்தமே கடல் என்ற கதைக் காலத்தைக் கடந்து, பல தினங்கள், நீர் மூழ்கிக் கப்பலில் தங்கி கடலுக்கடியே இருக்க முடியும் என்ற ஆராய்ச்சிக் காலத்தில் புகுந்திருக்கிறார்கள்; நாம்? இன்னமும் நரி பரியான பதிகத்துக்கு நாற்பத்து எட்டாவது விருத்தி உரை எழுதுபவருக்கு, நாமகள் தாசனார் விடுக்கும் மறுப்புரைப்பைப் பிரசுரிக்கும் நற்காரியத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கிறோம். நமக்கும் மட்டும் ஏனய்யா, இந்த நம்பொணாக் கதைகள்? நானிலத்தில் வேறு எங்கும் இவைதனை நம்புவார் இல்லையே என்று கேட்போரை நாத்திகர் என்று தூற்றும் ‘சத்காரியத்தில்’ ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம். சரியா? முறையா? தகுமா? கூற வேண்டாம்; எண்ணிப் பாருங்கள்!

‘திராவிட நாடு’ இதழ், 21.12.1949.

கட்சியில், கடவுள் - மதம்

பல நூற்றாண்டுகளாகவே நம் நாட்டுமக்கள் கடவுள் மதம் என்பதையே  தங்கள் வாழ்க்கையின் எல்லாத் துறைகளுக்கும் அடிப்படையாக வைத்து எல்லாக் காரியங்களையும் நடத்துவதில் பழக்கப்படுத்தப்பட்டு விட்டார்கள். ஆகையால், மக்களின் முன்னேற்றத்திற்கான காரியங்களைச் செய்ய விரும்புவோர், கடவுள் - மதம் ஆகியவற்றைப் பற்றிய கண்டனங்களோ எதிர்ப்புகளோ செய்யக் கூடாது, அங்ஙனம் செய்பவர்கள் கட்சியில் இருக்கக் கூடாது  என்பது நமது கட்சியிலுள்ள சிலரின் கருத்தாக இருப்பதை அறிகிறோம்.  ஆனால், இவர்களின் இக்கூற்று எந்த அளவில் உண்மை  என்பதையே ஈண்டு நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டியிருக்கிறது.

உண்மையாகவே கடவுளிடத்திலும், மதத்தினிடத் திலும் இவர்களுக்கு நம்பிக்கையும் பற்றுதலும் இருக்குமானால், முதலில், அப்பொருள்களைப் பற்றிய உண்மைக் கருத்துகளையும், அவை எவ் வகையில் மக்களின் வாழ்க்கைக்கு உதவி செய்தன - செய்கின்றன என்பதையும் அறிவோடு ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? மக்களின் வாழ்க்கைத் துறையிலுள்ள எந்தக் காரியம், எந்த முறையில் எந்தக் காலத்தில் இப்படிச் சொல்லப்பட்ட கடவுள் - மதம் ஆகியவற்றின் உதவியைக் கொண்டு நடைபெற்றது என்பதை ஆதாரத்தோடு விளக்க வேண்டாமா? கடவுள் - மதம் ஆகியவற்றுக்கும், மக்களின் வாழ்க்கைத் துறைக்கும் ஏற்படுகின்ற சம்பந்தம் எவ்வாறு - எந்த முறையில்  நிகழ்கின்றன என்பதையாவது எடுத்துக்காட்ட வேண்டாமா?

கடவுளின் கடாட்சமும், மதத்தின் மகிமையும், மங்கிப் போன ஏடுகளில் உள்ள எழுத்துகளில் காணப்படுகின்றனவேயொழிய,நடைமுறை யில் யாதாயினும் ஒரு நன்மை கடவுள் - மதம் ஆகியவற்றால் மக்களின் வாழ்க்கைக்கு ஏற்படு கின்றதா என்பதையாவது இவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டாமா?

- ‘நக்கீரன்’ என்ற புனைப் பெயரில் எழுதியது - (1.10.1944).

===========

அறிஞர் அண்ணாவின் அறிவுமொழிகள்

 

திராவிட இயக்கம்

திராவிட வீரமக்கள், தம் பண்டைநாட்டு பண்பை மறந்ததால் மனம் சுருங்கிப் போயிருக்கிறார்கள். வீரம் செறிந்த அந்த மக்கள் இன்று, துருப்பிடித்த கத்திபோல இருக்கிறார்கள். அந்தக் கத்தியை தட்டித் தீட்டி கூர்மை யாக்கித் தருகின்ற மகத்தான இயக்கம் திராவிட இயக்கம்.

கருத்தரங்குகளின் பணி

சிந்தனைகளைக் சேகரித்துக் கோவைப்படுத்தி விடுவதே கருத்தரங்கு களின் பணியாகும். தங்களையொத்த அறிஞர்களின் முன்னிலையில் தாங்கள் அறிந்தவற்றை எடுத்துக்கூறி, எந்த அளவு தங்கள் கருத்து அவர்கள் கருத்தோடு ஒத்துப் போகிறது, எந்த அளவு வேறுபடுகிறது என்று அறிந்து, மேலும் அதுகுறித்த விவாதத்திற்கு வழி வகுத்து, இத்தகைய கருத்தரங்குகளிடமிருந்து நற் பலன்களை எதிர்பார்த்திடும் மக்கள் முன்  கனிந்து உருவாகிய கருத்துக்களை வைத்திட வேண்டும்.

பகையை விரட்டுவோம்

‘‘அன்று தமிழ்ப் பெண்கள் புலியை முறத்தால் அடித்துத் துரத்தினர்; இன்றும் தமிழ்ப் பெண்கள் நமது பகையை முறத்தால் அடித்து விரட்டத் தயார்; எனினும் அந்த முறம் கிடைத்தால் ‘அதை எங்கு விலைக்கு விற்றுக் காசாக்கலாம்‘ எனக் கருதுகிற பகைதான் நமது பகை!’’

அறிஞர்களின் முடிவு

‘‘பல ஆராய்ச்சிகளால் செறிவூட்டப்பட்ட நவீன மொழிகள் எனப்படுகின்றவற்றோடு - தொன்மைத் தமிழ் மொழி எந்த அளவுக்கும் மட்டமானதல்ல’’ என்பதை இந்த அறிஞர் பெருமக்கள் கண்ட முடிவாகவுள்ளது.

பகுத்தறிவுப் பாதை

வைரம் ஜொலிக்க வேண்டுமானால் சாணை பிடிக்கத்தான் வேண்டும். தங்கம் பிரகாசிக்க வேண் டுமானால் தணலில் காய்ச்சத்தான் வேண்டும். ஆம் அதைப்போல், நல்வாழ்வு பெறவேண்டுமானால் நாம் பகுத்தறிவுப் பாதையில் செல்லத்தான் வேண்டும்.

மூடநம்பிக்கை

அறையில் இருந்தபடி ஆறாயிரம் மைலுக்கப் பாலிருக்கும் சீமையில் பாடப்படும் சங்கீதத்தைக் கேட்கிறோம் வானொலி மூலம். இது அதிசயமாகத் தெரியவில்லை நம்மவர்கட்கு, மாரிகோயில் பூசாரி யின் மந்திரம்தான் அதிசயமாகத் தெரிகிறது. காரணம்? மூட நம்பிக்கை.

- அண்ணா

அறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு மலர் (2009)

‘முரசொலி’ வெளியீடு

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner