எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

- ஜிக்னேஷ் மேவானி எம்.எல்.ஏ.,

ஜிக்னேஷ் மேவானி தேர்தலில் போட்டியிடுகிறார் ‘ எனத் தெரிந்தவுடன், காங்கிரசும் ஆம் ஆத்மியும் `தங்களது கட்சிகள் போட்டியிடப்போவதில்லை’ என அறிவித்தன. டிசம்பரில் நடந்த குஜராத் சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க.-வுடன் போட்டியிட்ட ஜிக்னேஷ், கிட்டத்தட்ட 20 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.  சில நாள்களுக்கு முன்னர் சென்னை வந்திருந்த வாட்காம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி, அம்பேத்கர் மணிமண்டபத்தில் நடந்த நிகழ்வில் பங்கேற்றார். அவருடன் உரையாடியபோது...

செய்தியாளர்: ‘உனா’ எழுச்சித் தொடங்கிப் பல் வேறு போராட்டங்களை நடத்தியிருக்கிறீர்கள். தற்போது நீங்கள் ஈடுபட்டிருக்கும் தேர்தல் பாதை, போராட்டங்களுக்கான வீரியத்தைக் குறைக்க வாய்ப்பிருக்கிறதா?’’

மேவானி: ‘‘இல்லை. நிச்சயமாக அப்படி நடக்க வாய்ப்பில்லை. தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு, மக்கள் மத்தியில் எனக்கான செல்வாக்குக் கூடி யுள்ளது. மக்களுக்கான இந்த இயக்கத்தில் பலர் தங்களை இணைத்துக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் பலர் இணைவதற்கு வாய்ப்புகள் அதிகம் என எண்ணுகிறேன். மக்களின் ஆதரவு இன்னும் அதிகமாகக் கிடைத்தால், நான் முன்னெடுக்க விரும் பும் போராட்டங்களில் மக்களையும் பங்கேற்கச் செய்வேன்.’’

செய்தியாளர்: ``யாருக்குச் சுதந்திரம் அதிகம்... சட்டமன்ற உறுப்பினரான ஜிக்னேஷூக்கா, போராளி ஜிக்னேஷூக்கா?’’

மேவானி: (சிரிக்கிறார்) ``சட்டமன்ற உறுப்பின ராக இருப்பதால் எனக்குப் புகழ் போதை வர வில்லை. நான் முன்னர் இருந்ததைப்போலவே இப்போதும் இருக்கிறேன். தேர்தலுக்கான பிரச் சாரத்தை மேற்கொள்ளும்போது, என்னைச் சுற்றி இருக்கும் நண்பர்களிடம் `நான் இரண்டு சதவிகிதம் அரசியல்வாதியாகவும், தொண்ணூற்று எட்டு சதவிகிதம் போராளியாகவும்தான் இருந்திருக் கிறேன்’ எனச் சொல்வதுண்டு. போராளியாக இருப்பதுதான் எனக்குப் பொருத்தமாக இருக்கிறது. மக்கள் என்னை ஒரு போராட்டக்காரனாக நினைவு கொள்ளவே விரும்புகிறேன். நான் பங்கேற்கும் போராட்டங்களையே மக்கள் நினைவுகொள்ள வேண்டும் என விரும்புகிறேன்; நான் போட்டியிட்ட தேர்தல்களை அல்ல.’’

செய்தியாளர்: ``பீமா கோரேகான் நினைவுப் பேரணி, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு ஆதர வளிக்கும் நிகழ்வு என விமர்சிக்கப்படுகிறதே?’’

மேவானி: ``தலித் மக்கள் அரசியல்மயப்படு வதைத் தாங்கிக்கொள்ள முடியாமல் இந்துத்துவ சக்திகள் வைக்கும் குற்றச்சாட்டுகள்தான் அவை. நான், மக்களின் போராட்ட மனநிலையை ஆதரிக்கிறேன். அன்றைய தலித் மக்கள், சாதிய மேலாதிக்க பூஷ்வாக்களுக்கு எதிராக அந்தப் போரைப் பயன்படுத்திக்கொண்டார்கள். ஜாதியச் சக்திகளுக்கு எதிரான ஒரு குறியீடு என்ற வகை யில், பீமா கோரேகான் போராட்டத்தை நான் ஆதரித்தேன். ‘’

செய்தியாளர்: ``டில்லியில் நீங்கள் பங்கேற்ற `யுவ ஹங்கர்’ பேரணியை, ஊடகங்கள் தவறாகச் சித் திரித்ததாகக் கூறுகிறீர்கள். உங்கள் புகார் என்ன?’’

மேவானி: ``டில்லியில் ஜே.என்.யூ. மாணவர்கள், புரட்சிகர இளைஞர்கள் ஆகியோருடன் சேர்ந்து நாங்கள் நடத்திய `யுவ ஹங்கர் பேரணிக்குப் பல தடைகள் எழுந்தன. வட இந்திய ஊடகங்கள் சில, பேரணி தோல்வியடைந்ததாகக் காட்டுவதற்கான பல வேலைகளை விடாப்பிடியாகச் செய்தன.  மூன்று பெரிய வட இந்தியத் தொலைக்காட்சி சேனல்கள், இதில் முன்னணியில் நின்றன. பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். முதலான இயக்கங்களிலிருந்து பெற்ற செயல்திட்டத்தை அவை நடைமுறைப்படுத்தின. எப்போதும் என்னைக் குறிவைத்து, என் பெயருக்குக் களங்கம் விளைவிப்பதையும், போராட்டங்களைக் கொச்சைப்படுத்துவதையும் முன்வைத்து வேகமாகச் செயல்படுகின்றன. பரவாயில்லை. அவை அப்படிச் செயல்பட்டாலும் அது நிலைப்பதில்லை.

இந்த நாட்டில் சிலபல உண்மையான ஊடக வியலாளர்களும் இருக்கிறார்கள். நான் மக்களுக்கான போராட்டங்களில் உண்மையுடன் நிற்பதால், மக்கள் என்னை ஆதரிக்கிறார்கள். எனவே, என்னைக் குறிவைக்கும் ஊடகங்களைவிட, மேம்பட்ட தளத்தில்தான் நின்றுகொண்டிருக்கிறேன்.’’

செய்தியாளர்: ``அய்தராபாத்தில் ரோஹித் வெமுலா, டில்லியில் முத்துகிருஷ்ணன், தற்போது அகமதாபாத்தில் மாரிராஜ். - உயர்கல்வி நிலை யங்களில் தலித் மாணவர்கள் மீது காட்டப்படும் பாகுபாட்டை எப்படிக் களைய வேண்டும் என நினைக்கிறீர்கள்?’’

மேவானி:``மாணவர்கள் மீது நிகழ்த்தப்படும் உளவியல் வன்முறைகளுக்கு மிக முக்கியக் காரணமாக இருப்பது, இன்னும் உயிர்ப்புடன் இருக்கும் ஜாதியக் கட்டமைப்புதான். ஒட்டுமொத்த இந்தியாவின் பிரச்சினையாக `ஜாதி’ இருக்கிறது என்பதை நினைக்கத் தவறிவிடுகிறோம். ஜாதியை வெறும் தலித்துகளின் பிரச்சினையாகப் பார்ப்பதோடு இதை நிறுத்திக் கொள்கிறோம். தலித் அமைப்புகளிடையேகூட ஜாதி ஒழிப்புக்கான சரியான புரிதல்களும் விவாதங்களும் இல்லை.

நான் சட்டமன்றத்தில் நுழைவதால் மட் டுமே ஜாதி ஒழிந்துவிடாது. நான் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து இன்னும் கடுமையாக அனைவரிடமும் இதையே வலியுறுத்தி வருகிறேன். ஜாதியும் வர்க்கமும் ஒன்றோடு ஒன்றாகப் பிணைந் துள்ளன. இந்த இரண்டையும் எதிர்த்து மக்கள் போராட்டங்கள் கட்டமைக்கப்பட வேண்டும். ஜாதி மறுப்புத் திருமணங்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். முற் போக்கான கருத்துகளும் அறிவியல்பூர்வமான விவாதங்களும் முன்னெடுக்கப்படவேண்டும். ஜாதியக் கட்டமைப்பின் அடித்தளத்தை உடைப்ப தற்கு, நம் முன் இருக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்த வேண்டும். நிலச் சீர்திருத்தங்களும், பொருளாதாரச் சீர்திருத்தங்களும் மேற்கொள்ளப்பட வேண்டும். கூட்டம் கூட்டமாக ஓர் இடத்தில் ஒரே ஜாதியினர் வாழும்முறை ஒழிக்கவேண்டும். கிரா மங்களாக இருந்தாலும் நகரங்களாக இருந்தாலும், தலித் மக்கள் ஊருக்கு வெளியேதான் வாழ்ந்து வருகின்றனர். தொடர்ந்துவரும் இத்தகைய இழிவுகள் அழிக்கப்படவேண்டும். அரசு இதில் தலையிட்டு, மக்கள் அனைவரும் ஜாதி, மத வேறுபாடின்றி ஒன்றாக வாழ்வதற்கான வழிமுறைகளைச் செய்யவேண்டும். இது, ஜாதி மறுப்புத் திருமணங்களுக்கு வழிவகுக்கும்; ஜாதியக் கட்டமைப்பை உடைக்கும்.

இன்னும் பல செயல்திட்டங்களைச் ஜாதி ஒழிப்புக்காக தொலைநோக்குடன் செயல்படுத்த வேண்டும். ஜாதியக் கட்டமைப்பு இறுக்கமாக இருக்கும்வரை, உயர்கல்வி நிறுவனங்களில் ரோஹித் வெமுலா போன்ற மாணவர்களின் மரணத்தைத் தடுக்க முடியாது. எனினும், தற்கால நிவாரணமாக பல்வேறு செயற்பாட்டாளர்கள் முன்வைக்கும் ரோஹித் வெமுலா சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். மேலும், நாடு முழுவதும் தலித் மாணவர்கள்மீது எந்தெந்த விதங்களில் பாகுபாடுகள் காட்டப்பட்டுவருகின்றன என்பதை மிகத் தீவிரமான ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும்.’’

செய்தியாளர்: ``குஜராத் மாநிலத்தில் கோத்ரா கலவரங்கள் முடிந்து ஏறத்தாழ 15 வருடங்கள் ஆகின்றன. இன்று குஜராத்தில் வாழும் இசுலாமி யர்களின் நிலை என்ன?’’

மேவானி: ``தலித்துகளின் நிலையில்தான் இசு லாமியர்களும் இருக்கிறார்கள். இசுலாமியர்கள், இன்று நவீனகால தீண்டப்படாதவர்களாக வாழ்ந்து வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் உழைக்கும் மக்கள். அவர்களின் வாழ்வாதாரம் மிக மோசமான நிலையில் இருக்கிறது. கலவரங்களில் பாதிப்படைந்த மக்களுக்கு மரியாதையும் இல்லை; அவர்களுக்கான நீதியும் கிடைத்தபாடில்லை.

அடுத்த அய்ந்து ஆண்டுகளில் நான் களப் பணியாற்ற விரும்பும் பகுதியும் அதுவே. ஏனென் றால், எனது வாட்காம் தொகுதியில் 70,000 முசுலிம் களும், 38,000 தலித்துகளும் இருக்கிறார்கள். எனக்கு தலித்துகளைவிடவும், இசுலாமியர்களே அதிக அளவில் வாக்களித்தனர். தலித்துகளும், இசுலாமியர்களும் இணைந்து பணியாற்றவேண்டும். இல்லையென்றால், குஜராத் மட்டுமல்ல; இந்தியா முழுவதும் இந்த நிலைமையே நீடிக்கும்.’’

செய்தியாளர்: ``ஹர்திக் படேல் மீது பரப்பப்படும் அவதூறுகளை எப்படிப் பார்க்கிறீர்க்ள்?’’

மேவானி:``நான், ஹர்திக் படேல், அல்பேஷ் தாக்கூர் மூவருமே, பா.ஜ.க. தனது பெருமையாகக் காட்டிக்கொண்ட குஜராத் மாடலை அம்பலப் படுத்தியுள்ளோம். 150 தொகுதிகளைக் கைப்பற்ற விரும்பிய பா.ஜ.க-.வின் திட்டம், விவசாயிகளின் போராட்டத்தாலும் சிதறியது. வெறும் 17 உறுப்பி னர்கள் கூடுதலாக வென்றதால், குஜராத் சட்ட மன்றத்தைக் கைப்பற்றி இருக்கிறது பா.ஜ.க. அதை அவர்கள் கொண்டாடவில்லை. வாட்காம் தொகுதி மக்கள் மட்டுமே கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.

பா.ஜ.க.வினருக்கு எங்கள் மூவரின் மீதும் அச்சம் இருக்கிறது. முன்பெல்லாம் படேல் சமூகத்தினர் பொதுவாக பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பர். ஆனால் இப்போது, `படேல்’ சமூகத்தின் வாக்குகளை ஹர் திக் தன் கைக்குள் வைத்திருக்கிறார் என் பதை அவர்களால் ஏற்க முடியவில்லை. ஹர்திக்கின் முன்னேற்றம், அவர்களை உறுத்துகிறது. இதைத் தடுக்க, என் பிம்பத்தைக் களங்கப்படுத்த முயற்சிப் பதைப்போலவே, ஹர்திக் படேல் மீதும் தனிநபர் தாக்குதல் தொடுக்கப்படுகிறது. அதனால்தான் இந்தப் பாலியல் குற்றச்சாட்டு நாடகத்தையெல்லாம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

பாலியல் உறவுக்கான சுதந்திரம் என்பது, ஒவ் வொருவரின் தனிப்பட்ட உரிமை. படுக்கை யறைக்குள் பக்குவப்பட்ட இரு மனிதர்களுக்கு இடையில் எது நடந்தாலும், அதில் தலையிட பா.ஜ.க.வுக்கு என்ன உரிமை இருக்கிறது? இது ஹர்திக் படேலுக்கு மட்டு மல்ல, இந்தியா முழுவதும் பா.ஜ.க.வை எதிர்ப்பவர்கள் அனைவரின்மீதும் இதுபோன்ற பலவிதமான குற்றச் சாட்டுகள் வைக்கப் படுகின்றன.

பல்வேறு பல்கலைக்கழகங்களில் செயல்படும் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டங்களும், முற் போக்கு மாணவர் இயக்கங்களும்கூட இப்படித்தான் குறிவைக்கப்படுகின்றன. இது கீழ்த்தரமான உத்தி. கருத்துகளோடு முரண்படுவதற்கு அவர்களிடம் எந்த நியாயமும் இல்லை என்பதைத்தான் இது தெளிவாகக் காட்டுகிறது.’’

- குணவதி , ர.முகமது இல்யாஸ்

‘விகடன் இணையம்', 2.2.2018

ஜிக்னேஷ் மேவானி குஜராத் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காகப் போர்க்கொடி தூக்கியவர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner