எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

-  மின்சாரம்

ஆரியராவது - திராவிடராவது எல்லாம் வெள்ளைக்காரன் கற்பித்தது - அவனின் பிரித்தாளும் சூழ்ச்சி என்று பல்லவி பாடுவார்கள் பார்ப்பனர்கள் - அந்தப் பல்லவிக்கு அனு பல்லவி பாடுவோர் விபீஷணர்கள்.

இவை எல்லாம் வெள்ளைக்காரன் கண்டுபிடித்ததும் அல்ல - தந்தை பெரியார் கற்பித்ததும் அல்ல.

சிந்துச் சமவெளி திராவிட நாகரிகம் என்று சொன்னவன் வெள்ளைக்காரனா? நாகர்கள் திராவிடர்களே என்று சொன்ன அண்ணல் அம்பேத்கரை எந்தப் பட்டியலில் கொண்டு போய் வைப்பார்கள்?

ஆரியர்கள் தங்களால் தோற்கடிக்கப்பட்ட எதிரிகளாகிய திராவிடர்களை தங்களுடைய புத்தகங்களில் தஸ்யூக்கள் என்றும்; தானவர்கள் என்றும், ராட்சதர்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள் என்று வரலாறு எழுதிய சி.எஸ். சீனிவாச்சாரி மற்றும் எம்.எஸ். இராமசாமி அய்யங்கார்களும் வெள்ளையர்களா அல்லது கருப்புச் சட்டைக்காரர்களா?

இவை எல்லாம் இவர்களுக்கு அனுகூலமாக இருந்தபோது ஆனந்த பைரவி பாடிக் கொண்டு திரிந்தார்கள். திராவிடர் இயக்கம் தோன்றி உண்மைகளைப் புட்டு வைத்து ஆரியர்களின் ஏக போகமாக இருந்த கல்வியை, உத்தியோக மண்டலத்தைச் சிதற அடித்த நிலையில், ஆரியர்களின் கடந்த கால வரலாற்றின் அட்டூழியங்கள் மக்கள் மத்தியில் தோலூரித்துக் காட்டப்பட்ட தருணத்தில், தந்தை பெரியார் என்ற புது சகாப்த வெள்ளம் பொங்கி எழுந்த ஒரு கட்டத்தில் திராவிட இயக்கத்தின் எழுச்சி அங்கு இங்கு எனாதபடி எதிரொலித்த வேளையில் ஆரியப் பார்ப்பனர்கள் பிளேட்டைத் திருப்பிப் போட்டனர்.

ஆரியராவது, திராவிடராவது என்று பேச ஆரம்பித்தனர். தங்களுக்கு அது சாதகமாக இருந்தபோது பூணூலை முறுக்கிக் காட்டினார்கள்; அதுவே அவர்களுக்கு எதிர்விளைவை ஏற்படுத்திய போது ஆரியம் - திராவிடம் என்பதெல்லாம் பொய் மூட்டைகள் என்று முண்டாசு கட்டிப் பேச ஆரம்பித்து விட்டனர்.

இப்பொழுது அதிகாரம் தங்கள் கையில்  கிடைத்தது என்றவுடன் மறுபடியும் பூணூலை முறுக்கிக் காட்டும் மூர்க்கத்தனத்தில் குதித்து விட்டார்கள்.

இந்து ராஜ்ஜியம் என்பது அதுதான், ராம ராஜ்ஜியம் என்பதும் அதேதான், ஒரே கலாச்சாரம் ஒரே மதம் என்பதும் அதேதான்.

கவிப் பேரரசு வைரமுத்து ஆண்டாளை விமர்சித்தது திராவிடம் என்றால், ஜீயர்கள் உண்ணவிரதம் இருப்பது என்பது ஆரியம்தான்!

தமிழ்த் தாய் வாழ்த்துக்கு மரியாதை செய்யாமல் அடமாக  சண்டித்தனமாக காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி குத்துக் கல்லாக உட்கார்ந்திருந்தது ஆரியம்தான் - அதற்கு ஏற்பட்ட எதிர் வினையின் எரிமலை வெடிப்பு என்பதற்குப் பெயர் திராவிடம்தான்.

இரு அணிகளாகப் பிரித்து சண்டமாருதம் செய்வது எல்லாம் ஆரியர் - திராவிடர் போராட்டம்தான்.

ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை தேவை என்ற கருத்து திராவிடத்துக்கு சொந்தமானது; 'துக்ளக்'கும் விஜயபாரதங்களும் அதனைக் கேலி செய்வது ஆரியத்திற்கே உரித்தானது.

நவோதயாவும், 'நீட்' தேர்வும் வேண்டும் என்பது ஆரியம். இவை இரண்டும் கூடாது என்பது திராவிடம்! இரு வேறு பண்பாட்டு அலை மோதல் இதற்குள்ளிருக்கிறது.

நேற்று சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத்தின் சார்பில் ஒரு சிறப்புக் கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டு இருந்தது.

கூட்டத்தின் தலைப்போ 'ஆரியர் - திராவிடர் போராட்டம் - புதிய அத்தியாயம்' என்பதாகும். காலத்தின் அருமையை உணர்ந்து  ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அவசரக் கூட்டத்துக்கு இனமானம் பொங்கிற்றன்ன மக்கள் பெரும் அளவில் கூடினர். உரையை ஆர்வப் பெருக்கோடு அள்ளிக் குடித்தனர்.

இந்து என்பதற்கும், தமிழர்களுக்கும் எந்தவிதமான  ஒட்டும் இல்லை  - உறவும் இல்லை என்பதை எழுத்தாளர் மானமிகு பழ. கருப்பையா அவர்கள் ஆதார பூர்வமாக எடுத்து வைத்தார்.

வள்ளலார் காலத்தில் இந்து எங்கே இருந்தது? வேண்டுமானால் பாரதியார் அதனைத் தலையில் தூக்கிக் கொண்டாடினார் என்று சொல்லலாம். வெள்ளைக்காரன் கொடுத்த பெயர் இந்து என்பது. மானமிகு பழ. கருப்பையா அவர்கள் ஏதோ மேம்போக்காக  சொல்லவில்லை; காஞ்சி சங்க ராச்சாரியார் மறைந்த சந்திரசேக ரேந்திர சரஸ்வதியாலேயே ஒப்புக் கொள்ளப்பட்ட ஒன்றே.

"நமக்குள் சைவர்கள் வைஷ்ணவர்கள் என்று வேறாகச் சொல்லிக் கொண்டி ருந்தாலும் வெள்ளைக்காரன் நமக்கு ஹிந்துக்கள் என்று பொதுப் பெயர் வைத்தானோ நாம் பிழைத்தோம். அவன் வைத்த பெயர் நம்மைக் காப்பாற்றியது. அவன் மட்டும் ஹிந்து என்ற பெயர் வைத்திருக்காவிட்டால் ஒவ்வொரு ஊரிலும், சைவர் வைஷ்ணவர், சாக்தர், முருக பக்தர், பிள்ளையார் உபாசகர், அய்யப்பன் பக்தர், எல்லையம்மனைக் கும்பிடுகிறவன் என்று நம்மைப் பிரித்துக் கொண்டு தனித்தனி மதமாக நினைத்துக் கொண்டிருப்போம்!"

('தெய்வத்தின் குரல்' முதல் பாகம் பக்கம் 267)

எழுத்தாளர் பழ. கருப்பையா அவர்கள், இந்த ஹிந் துவுக்கும், தமிழர்களாகிய நமக்கும் எவ்வித உறவும் கிடை யாது என்று ஓங்கி அடித்தார்.

பக்தி மார்க்கமான சைவ மார்க்கம், இந்துத்துவாவுக்கு எதிரானது - வேத சிந்தனைகளுக்கு எதிரானது.

நியாயமாக நமது சைவ மடாதிபதிகள் இந்த இந்துத் துவாவை, இந்து மதக் கோட்பாட்டை எதிர்த்துக் கிளம்பி யிருக்க வேண்டாமா? அதைச் செய்யாத சைவ மடங்களுக்கு ஆயிரக்கணக்கான நிலங்கள் ஏன்? சொத்துகள் ஏன்? என்று கேட்டார் - தீப்பொறி பறக்க.

பக்தி மார்க்கத்தைவிட, திராவிட இயக்கம் பார்ப்பனீயத்தை எதிர்த்து, இந்து கோட்பாட்டை எதிர்த்துப் பெரும் போர் புரிந்து வெற்றி பெற்றதை சிலாகித்தார் தோழர் பழ. கருப்பையா அவர்கள். அதுவும் தந்தை பெரியார் தலைமையேற்ற நிலை யில் எதிரி முகாம்களை சின்னாப் பின்னப்படுத்தியது.

கடவுளை ஒதுக்கினாரே என்று சிலர் சொல்லக் கூடும் உன்னை மனிதத் தன்மையிலிருந்து ஒதுக்கியதை மீட்டுக் கொடுத்தவர் பெரியார்தானே என்று கேட்டார் பழ. கருப்பையா. பெரியார் கொள்கை, கடவுள் நம்பிக்கையாள ரையும் ஈர்த்தது. ஏதோ ஒரு வகையில் ஒட்டு மொத்த இனமே பெரியார் நிழலில் நின்றது என்பதை மிக அழகான ஒவியம் போல் வரைந்து காட்டினார் எழுத்தாளர் பழ. கருப்பையா அவர்கள்.

தமிழ்த் தேசியவாதிகள் பற்றி அவர் சொன்ன ஒரு கருத்து மிகமிக முக்கியமானது. 'நான் ஒன்றும் தமிழ் தேசிய வாதிகளுக்கு எதிரியல்ல. பார்ப்பானையும் தமிழன் பட்டியலில் சேர்த்துத் தமிழ் தேசியம் பேசுவது எப்படிச் சரி?

பார்ப்பான் தமிழ்ப் பேசுவதால் தமிழனா? பார்ப் பனீயத்தால் தமிழினம் பெற்ற சீர்கேடுகள் கொஞ்சமா - நஞ்சமா! 3000 ஆண்டு வரலாற்றை, போராட்டத்தைப் புறந்தள்ளி விட்டு, பார்ப்பனர்களை தமிழர்கள் பட்டியலிலும், உண்மை யிலேயே தமிழர்களுக்குப் பாடுபட்ட தந்தை பெரியார் போன்றவர்களை எதிரிகளின் பட்டியலிலும் சேர்ப்பது ஏளனத்துக்குரியது என்பதை அழுத்தம்  திருத்தமாகப் பதிவு செய்தார்.

தமிழ்நாட்டில் தெலுங்கு பேசும் பார்ப்பனன் இருக்கிறான், தமிழ்ப் பேசும் பார்ப்பனன் இருக்கிறான், கன்னடம் பேசுப் பார்ப்பனன் இருக்கிறான் இவர்கள் அத்தனைப் பேரும்  பேசும் மொழியால் மாறுபட்டாலும் அத்தனைப் பார்ப்பனப் பிரிவினரும் தமிழ்ச் தேசியப் பட்டியலில் இடம் பெறுவது எங்ஙனம்? என்ற அறிவார்ந்த வினாவை எழுப்பினார் பழ. கருப்பையா அவர்கள். இன்னொரு கருத்து அவர் உரையில் நறுக்குத் தைத்து போல், இந்த நாட்டில் முஸ்லிம்கள் தங்களைச் சிறுபான்மையினர் என்று சொல்லுகிறார்கள், கிறித்தவர்கள் தங்களைச் சிறுபான்மையினர் என்று அறிமுகப்படுத்திக் கொள்ளுகிறார்கள்.

ஆனால் நூற்றுக்கு மூன்று சதவீத மக்களைக் கொண்ட இனமான பார்ப்பனர்கள் என்றைக்காவது தங்களைச் சிறுபான்மையினர் என்று அறிவித்துக் கொண்டதுண்டா? தங்களைச் சிறுபான்மையினர் என்று ஒரு போதும்  அழைத்துக் கொள்ள மாட்டார்கள். காரணம் அவர்களின் ஆளுமை, எம்பவர்மென்ட் அப்படி.

தந்தை பெரியாரைப் பற்றி அப்படியே படம் பிடித்துக் காட்டினார். காங்கிரஸ் கட்சிக்குள் செல்வாக்குள்ள தலைவராக விளங்கிய போது சமூகநீதிக் கொள்கைக்காக அதைவிட்டு வெளியேறினார். அவர் நினைத்திருந்தால் காங்கிரசிலேயே தொடர்ந்திருந்து சுதந்திர இந்தியாவில் மாநில முதல் அமைச்சர் ஆகியிருக்கலாம்.

அந்தப் பாதை, நம் மக்களின் வளர்ச்சிக்கு, சுயமரியாதைக்கு வழி வகுக்காது என்று உறுதியாகக் கருதினார். தேவை சுயமரியாதை என்று கருதினார் - அதை ஊட்டவும் செய்தார். நாத்திகராக இருந்த பெரியார்தான் கோயிலில் ஏன் தமிழ் இல்லை என்று கேட்டார். அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை தேவை என்று வலியுறுத்தினார்.

ஆரியமும் இந்துத்துவாவும் நஞ்சு என்றால், அந்த நஞ்சின் முறிவுக்குப் பெயர்தான் பெரியார் என்றார் தோழர் பழ. கருப்பையா அவர்கள். ஒரு மணி நேரம் போனதே தெரியவில்லை என்று கூறும் அளவுக்கு ஓர் அறக்கட்டளைச் சொற்பொழிவுபோல் தன் உரையை அமைத்துக் கொண்டார்.

 

(முழு உரை தனியாக வரும்)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner