எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

மாங்காடு காமாட்சி அம்மன் ஆலயம் புதுப் பிக்கப்படுவதற்கும், அருகேயே ஒரு வேத பாடசாலை ஆரம்பிப்பதற்கும் மறைந்த காஞ்சி சங்கராச்சாரி சந்திரசேகரேந்திர சரசுவதி காரணமாக இருந்தார். அது 1952 ஆம் ஆண்டு. அரசு அதிகாரி ஒருவர் பெரியவாளைப் பார்க்க வந்தாராம். அவர் பெயர் லட்சுமி நாராயணன்.

ஒரு வியாழக்கிழமை அன்று அவரிடம், ‘‘நேத்திக்கு எனக்கு ஒரு சொப்பனம். ‘பஞ்சாக்னி ஜுவாலையால எனக்கு ஒடம்பெல்லாம் எரியறது. இங்கே புனருத்தாரணம் பண்ணணும்'னு அம்பாள் சொப்பனத்துல பேசினா. எங்கேயோ அம்பாள் கோயில் ஒண்ணு பாழடைஞ்சு கெடக்கு. கண்டுபிடிச்சு சொல்றியா?''ன்னு லட்சுமி நாராயணனிடம் மகா பெரியவா கேட்டார்.

‘‘ஒரு வாரம் டயம் கொடுங்கோன்னார்'' அவர்.

அடுத்த வாரம் அவரைப் பார்க்க லட்சுமி நாரா யணன் சென்றபோது, முதல் நாள் ராத்திரி மறுபடியும் அம்பாள் சொப்பனத்துல வந்ததா மகாபெரியவா சொன்னார்

சம்பவத்தன்று ஒரு யானை வந்து தும்பிக்கையால அவரைக் கைப்பிடிச்சு அழைச்சுண்டு போச்சு. பெரி யவா அந்த யானையோடு கிளம்பிட்டா. அவருக்கு மட்டும் அது யானையா தெரியலே. அம்பாளாத்தான் தெரிஞ்சிருக்கு.

ரொம்ப நேரம், ரொம்ப தூரம் யானை பெரிய வாளை அழைச்சுண்டு போச்சு. பெரியவாளும் அது பின்னாடியே நடந்து போயிண்டே இருந்தா. பல மணி நேரத்துக்கப்புறம் ஒரு மண் ரோட்டுல யானை திரும்பியது. அங்கே கொஞ்ச தூரம் போனதும், யானை மறைஞ்சுடுத்து. அப்படின்னா, அந்தப் பாழடைஞ்ச அம்பாள் கோவில் இங்கேதான் எங்கேயோ இருக்கணும்னு பெரியவாளுக்குத் தெரிஞ்சுடுத்து. ராத்திரி பெரியவா அங்கேயே தங்கறதா தீர்மானம் பண்ணிட்டா. அங்கே ஒரு மாட்டுக் கொட்டகை மாத்திரம்தான் இருந்தது. பெரியவா அதனுள்ளே போய்ப் படுத்து கொண்டார்.

வேண்டுவார் வேண்டுவதை அருள வல்லதும், சிறீ ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதுமான மகா தெய்வீக சக்திகள் வாய்ந்த ஓர் அர்த்தமேரு அங்கு இருந்தும் கூட, அதை தரிசித்துப் பயன் பெறுவதிலே மக்கள் அவ்வளவாக ஆர்வம் இல்லா திருப்பதைக் கண்டு அவர்களது கருணை உள்ளம் வேதனை அடைந்தது.

தான், வழக்கமாகப்படுத்துறங்கும் கட்டிலுக்கு அடியிலே ஒரு பெரும் புதையல் இருப்பதை அறியாமல், ஒருவன் நாள்தோறும் காலை முதல் மாலை வரையில் பிச்சை எடுத்தே வயிறு வளர்த்து வந்தானாம்.

அதே போல், அள்ள அள்ளக் குறையாத ஓர் அளப்பரும் திருவருட் களஞ்சியம் மாங்காட்டிலே இருந்தும், அதை அறியாமல் மக்கள், தம் குறைகளைப் போக்கிக் கொள்வதற்காக எங்கெங்கோ அலைந்து ஏங்கித் தவிக்கிறார்களே என்று மகா பெரியவா இரக்கம் கொண்டார். அங்குள்ள பரம்பரை அர்ச்சகராகிய மறைத்திரு ஏகாம்பர சிவாச்சாரியாரிடத்தில் இது பற்றி உரையாடினார்.

அந்த ஏரியாவுக்கு அப்போ மணலி ராமகிருஷ்ண முதலியார்தான் நாட்டாமை. பெரியவா வந்திருக்கிற விஷயம் தெரிஞ்சு முதலியார் வந்து பார்த்தார். ‘‘என்ன செய்யணுமோ, நான் செய்யறேன். பெரியவா கவலைப்படாதீங்கோன்''னார். ‘‘24 மணி நேரத்துல சம்ப்ரோட்சணம் பண்ணணும்''னு சொன்னா பெரி யவா. மளமளன்னு காரியங்கள் ஆரம்பிச்சுது.

ஆளுக்கு ஆயிரம் ரூபாய் போல போட்டனர். புதரும், பாம்புப் புற்றுகளுமா இருந்த அந்த இடத்தைச் சுத்தம் பண்ணினார்கள். சின்ன கோபுரம் தெரிஞ்சுது.

‘‘ஆதிசங்கரர் கர்ப்ப வாசம் இருந்த இடம் இதுதான்''னார் மகா பெரியவா. கர்ப்ப வாசம்னா பத்து மாசம் ஓரிடத்திலே தங்கியிருக்கறது. ‘‘அர்த்த மேரு இங்க பிரதிஷ்டை பண்ணியிருக்கு. அம்பாள் இங்கே உக்ரமா இருக்கா; அவளுடைய உக்ரத்தைத் தணிக்கணும்''னு சொன்னார்.

இதையெல்லாம் செஞ்சு முடிச்சுட்டுப் பெரியவா மறுபடியும் காஞ்சிபுரம் போயிட்டார். இடத்தை எல்லாம் சரி பண்ணி, கும்பாபிஷேகம் நடத்தினார்கள்.

காஞ்சி சிறீ சங்கராச்சார்ய சாமிகளின் ஆணையை சிரமேற்கொண்டு, அவர்கள் காட்டிய நெறியே நின்று, ஆலயத்தினுள்ளே நாள்தோறும் தீவிரமான ஜபயோக சாதனையில் ஈடுபடலானார் சிறீஏகாம்பர சிவாச்சாரியர். அதன் பலனைத்தான் இன்று நாள் தோறும் ஆயிரக்கணக்கில் வந்து பெருகி வழிகின்ற பக்தர்களின் கூட்டத்திலே நாம் பார்த்து மகிழ்கிறோம்.

‘‘உரு ஏறத் திரு ஏறும்'' என்பது ஆன்றோர் கண்ட அனுபவ உண்மை. அந்த நியதிப்படியே, சிவாச் சாரியாரின் ஜப யக்ஞம் ஏற ஏற, ஆலயத்திற்கு வரும் மக்களின் கூட்டமும் பெருகிக் கொண்டே வந்தது. கோவில் அதிகாரிகளால் எளிதில் சமாளிக்க முடியாத அளவுக்கு, இன்னமும் பெருகிக் கொண்டே வருகிறது. (ஆதாரம்: நூல் ‘தெய்வத்தின்குரல்')

(இப்படி ஒரு கதை மாங்காடு கோயில் கட்டிய வரலாறு என்று சில ஆண்டுகளுக்கு முன்பு ‘ஆலயம்' என்ற மாத இதழில் வெளிவந்துள்ளது.  இச்சம்பவம் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியாது. மேலும் மாங்காடு கோயில் உள்ள பகுதி கிராமப் பொதுநிலம்; அது தனியாருக்குச் சொந்தமான நிலமல்ல. முன்பு வயலில் அத்துமீறி மேயும் மாடுகளை பிடித்து கட்டி வைத்து உரிமையாளர்களிடம் தண்டம் வசூலிக்கும் பகுதி இதை பவுண்டி என்றும் கூறுவார்கள்.

ஊர் நெல்லடிக்கும்  பகுதியாகவும் இருந்தது. ஊர் நிலத்தை ஆக்கிரமித்து யாருடைய அனுமதியும் பெறாமல் ஒரு சாமியார் கனவில் வந்து கூறினார் என்ற ஒரே காரணத்தை வைத்து அங்கு ஒரு கோயில் எழுப்பி அதன் பயனை கடந்த 30 ஆண்டுகளாக பல பார்ப்பனக் குடும்பத்தினர் சுகபோகமாக அனுபவித்து வருகின்றனர்.)

குறிப்பு: கேட்பவன் கேனயனாக இருந்தால் எருமை மாடு ஏராப்ளான் ஓட்டியது என்பானாம் - அது இதற்குப் பொருந்துமா இல்லையா?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner