எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இராணுவத்துக்கு ஆர்.எஸ்.எஸ். உதவி செய்வது என்பது

நாட்டிற்கு பேரழிவை ஏற்படுத்துவதாகும்!

‘‘டெக்கான் கிரானிகிள்’’ நாளிதழின் 14.02.2018 தலையங்கம்

ஒழுக்கத்திற்குப் பெயர் பெற்ற,  வீரம் நிறைந்த இந்திய ராணுவத்துக்கு இணையாக தனது ஆர்.ஸ்.எஸ். அமைப்பையும் கருதுவது பற்றி பரிசீலிக்க வேண்டும் என்று கேட்கும் அளவுக்கு அந்த  அமைப்பின் தலைவர் மோகன் பகவத் துணிவும், அசட்டு தைரியமும் கொண்டவராக இருந்துள்ளார். கடந்த ஞாயிறு அன்று பீகார் மாநிலத்தில் முசாபர்நகரில் தனது விசுவாசிகளிடம் அவர் இவ்வாறு பேசியுள்ளார் என்ற போதிலும், அவரது பேச்சுக்கு அனைத்து எதிர்கட்சிகளிடமிருந்தும், குறிப்பாக காங்கிரசு தலைவர் ராகுல் காந்தியிடம் இருந்தும் கண்டனக் கணைகள் சரமாரியாக தொடுக்கப்பட்டன. கலாச்சார அமைப்பு என்று தன்னை அழைத்துக் கொள்ளும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இனியும் தான் ஒரு கலாச்சார அமைப்பாக மட்டுமே செயல்படப் போவதில்லை என்பதை வெளிப்படையாகக் காட்டுவதுபோல இருக்கிறது அவரது பேச்சு.

எப்படியிருந்தாலும், பகவத்தின்பதிவு செய்யப் பட்ட பேச்சில்,  ‘‘நாட்டிற்கு தேவை ஏற்பட்டால், அரசமைப்பு சட்டமும் மற்ற சட்டங்களும் அனுமதிப் பதாக இருந்தால், ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் நாட்டைக் காப்பாற்றுவதற்காக  மூன்று நாட்களுக்குள் தயாராகவேண்டும். ஒரு ராணுவ வீரருக்கு பயிற்சி அளிப்பதற்கு இப்போது 6 முதல் 7 மாதங்கள் வரை ஆகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே அவர் தன்னைப் பற்றி பெரு மையும் பட்டுக் கொள்கிறார். ஆர்.எஸ்.எஸ். ஒரு ராணுவ அமைப்பு இல்லை என்றாலும், ராணுவ வீரர்களுக்குத் தேவையான ஒழுங்கையும், கட்டுப் பாட்டையும் அது பெற்றுள்ளது. இந்து தேசியத்தின் ஊற்றுக்கண் எனக் கருதப்படும் ஓர் அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ள இக்கருத்து அந்த அமைப்பு ஒரு ராணுவ அமைப்பைப் போன்றது என்பதை சுட்டிக் காட்டுவதாக இருக்கிறது. மதவாத படை அமைப்புகள் எத்தகைய பேரழிவை ஏற்படுத் தியுள்ளன என்பதை பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா, லெபனான், சோமாலியா போன்ற நாடுகளின் அனுபவங்கள் நமக்கு மிகவும் தெளிவாக எடுத்துக் காட்டுபவையாக உள்ளன.

இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான்  படைகளுக்கு ஆதரவாக தங்கள் தொண்டர்கள் போரிடுவார்கள் என்று பாகிஸ்தான் தாலிபான் அறிவித்து நீண்ட காலம் கடந்துவிடவில்லை. உணர்வாலும், பொரு ளாலும்  பகவத்தின் பேச்சும் அதைப் போன்றதுதான்.  தாலிபான் அறிவிப்பை பாகிஸ்தான் ராணுவம் எவ்வாறு புரிந்து ஏற்றுக் கொண்டதோ, அது போல பகவத்தின் பேச்சை இந்திய ராணுவமும் புரிந்து,ஏற்றுக் கொள்ளாது என்று நம்புவோமாக!  இந்தியாவுக்கு எதிரான சக்திகளை பன்மடங்காக்கும் ஓர் அமைப்பு தாலிபான் என்று பாகிஸ்தான் ராணுவம் அப்போது விவரித்திருந்தது.

ராணுவத்துக்குஉதவிபுரிவதற்காக துணை ராணுவ அமைப்பாக சேவை செய்ய அழைக்கப்படுவது ஒன்றே ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு பொருத்தமானதாகவும், விருப்பமானதாகவும் இருக்கும். அத்தகைய ஒரு நடவடிக்கை ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு ஒரு தேசிய அமைப்பு என்ற அதிகார பூர்வமான அந்தஸ்தை அளிக்கும் என்றே அது கணக்கு போடும். இவ்வாறு நிகழ்வதை அனுமதிக்கும் அளவுக்கு  சட்டங்களைத் திருத்துவது என்ற முட்டாள்தனமான முடிவுக்கு நமது ஆட்சியாளர்கள் வந்துவிடக்கூடாது. அதற்கு மாறான முடிவுக்கு அவர்கள் வந்துவிட்டால், அதிகார பூர்வமான அனுமதி பெற்ற, ஆயுதம் தாங்கிய தீவிரவாத அமைப்பையே அது உருவாக்கி விடும். உள்நாட்டுப் பகைவர்கள் என்று ஆர்.எஸ்.எஸ். கருதுபவர்கள்மீது இந்த தீவிரவாத அமைப்பினர் கட்டவிழ்த்து ஏவி விடப்பட்டுவிடுவார்கள்.

காளான்கள்போல பல்கிப் பெருகி  வரும்,

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கோட்பாடுகளைப் பின் பற்றும் காவி  துணை அமைப்புகள்  பசு பாதுகாப்பு அல்லது லவ் ஜிகாத் என்ற பெயர்களில் அன்றாடம் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டுக் கொண்டு வருகின்றன. ராணுவத்தின் உதவியாளர்கள் என்ற முறையில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களுக்கு ராணுவ உடை அளிக்கப்பட்டுவிட்டால், இந்திய தேசியம் என்பதற்கு மாறாக ஹிந்து தேசியம் என்ற கருத்து மதிப்பு பெற்று, இந்துக்கள் அல்லாத மக்கள் நாட்டுப் பற்று அற்றவர்கள் என்ற அடையாள வட்டத்துக்குள் கொண்டு வரப்பட்டுவிடுவர். இவ்வாறு செய்வது நாடு மற்றும் சமூக ஒருங்கிணைப்புக்கும் , கலாச்சார ஒற்றுமைக்கும் பேரழிவை ஏற்படுத்துவதாக அமையும்.

இவை அனைத்துக்கும் இடையே வேடிக்கை யான ஒரு பக்கமும் இருக்கிறது. முரளி மனோகர் ஜோஷி பா.ஜக. தலைவராக இருந்தபோது, குடி யரசு தினம் ஒன்றின்போது, சிறீநகரில் தேசியக் கொடியை  ஏற்றி வைக்க ஆசை கொண்டார். அந்த முயற்சியைக் கைவிடும்படி அரசு அவரைக் கேட்டுக் கொள்ளவில்லை. அதற்கு மாறாக, காலம் கெட்டுக் கிடந்ததால், பலத்த ராணுவ பாதுகாப்புடன் அவரை அங்கே அனுப்பி வைத்தனர். அப்போது ஆர்.எஸ்.எஸ். மார்தட்டிக் கொண்டு அவருக்கு பாதுகாப்பு அளிக்க  முன்வரவில்லையே!

நன்றி: ’டெக்கான் கிரானிகிள்’, 14.02.2018

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner