எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெரும் மதிப்புக்குரிய திரு. கி.வீரமணி அவர்களுக்கு,

உலகத் தமிழ் அமைப்பு 1991 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நிறுவப்பட்டது; உலகளாவிய தமிழர்களின் அடிப்படை உரிமைகள், நீதி - நலன்களைப் பாதுகாப்பது, முன்னெடுப்பது, மீட்டெடுப்பது ஆகியவற்றின் பொருட்டுக் கடந்த 26 ஆண்டுகளாகச் சிறப்பாகச் செயலாற்றி வருகின்றது. தமிழர்களின் அரசியல் அதிகார மாண்பு, சமூக மேம்பாடு, பண்பாட்டுத் தெளிவு ஆகியவற்றுக்காக உலகத் தமிழ் அமைப்பு தொடர்ந்து அயராது உழைத்து வருகின்றது.

அமெரிக்காவின் தலைநகர் வாசிங்டன் டி.சி.-யில் டிசம்பர் 16, 2017 அன்று மாநாடு ஒன்றை உலகத் தமிழ் அமைப்பு நடத்தியது. இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும், அமெரிக்காவில் இருந்தும் பல அறிஞர்கள் பங்கேற்ற இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இத்துடன் இணைக்கப் பட்டுள்ளன.

வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் தமிழர்கள் மிகக் கடும் இடர்ப்பாட்டுக்கு ஆளாகியுள்ளதோடு, இந்திய அரசால் இரண்டாந்தரக் குடிமக்களாக - இந்தியைத் தவிர்த்த அனைத்து தேசிய இன மக்களும் -

நடத்தப்படுகின்றனரோ என்ற கருத்தை இம்மாநாடு முன்வைத்தது. உடனடியாகத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால், இந்திய அரசால் திணிக்கப்படும் “நீட்” தேர்வானது வருங்காலத் தமிழர் தலைமுறையினருக்கு மிகப்பெரும் அழிவுகளை விளைவிக்கும். ஆதலால், தமிழ்நாட்டுச் சட்டமன்றம் பிப்ரவரி - 18, 2017 அன்று ஒருமனதாக நிறைவேற்றிய இரண்டு சட்ட முன்வரைவுகளுக்கும் இந்தியக் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறத் தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் போதிய அழுத்தம் கொடுக்க வேண்டும்.

மாநில அரசின் அடிப்படை உரிமையும், மேலும் இந்திய ஓன்றிய அரசின் கூட்டாட்சி முறையின் அடிப்படையும் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள இக்காலக்கட்டத்தில், கட்சி வேறுபாடுகளைப் புறந்தள்ளி, அனைத்துக் கட்சிகளையும் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றாய் இணைந்து ஒன்றிய அரசுக்கு வேண்டிய அழுத்தம் கொடுத்து, மேற்குறிப்பிட்டச் சட்ட முன்வரைவுகளை இந்தியக் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று, சட்டமாக்கத் தாங்கள் ஆவனச் செய்யமாறு வேண்டிக் கேட்டுக்கொள்கின்றோம். ஒன்றாய் இணைவோம், வெற்றி பெறுவோம் !

அன்புடன்: முனைவர் வை. க. தேவ்  (தலைவர், உலகத் தமிழ் அமைப்பு)

 

பொருள்: தேசிய தகுதி - நுழைவுத் தேர்வு (NEET) முறையில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு வேண்டும்
பெரும்மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய திரு. கி. வீரமணி  அவர்களுக்கு,

வணக்கம் !

உலகத் தமிழ் அமைப்பு 1991 ஆம் ஆண்டு அமெரிக் காவில் நிறுவப்பட்டது; உலகளாவிய தமிழர்களின் அடிப் படை உரிமைகள், நீதி - நலன்களைப் பாதுகாப்பது, முன்னெடுப்பது, மீட்டெடுப்பது ஆகியவற்றின் பொருட்டுக் கடந்த 26 ஆண்டுகளாகச் சிறப்பாகச் செயலாற்றி வருகின்றது. தமிழர்களின் அரசியல் அதிகார மாண்பு, சமூக மேம்பாடு, பண்பாட்டுத் தெளிவு ஆகியவற்றுக்காக உலகத் தமிழ் அமைப்பு தொடர்ந்து அயராது உழைத்து வருகின்றது

அமெரிக்காவின் தலைநகர் வாசிங்டன் டி.சி.-யில் டிசம்பர் 16, 2017 அன்று மாநாடு ஒன்றை உலகத் தமிழ் அமைப்பு நடத்தியது. இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும், அமெரிக்காவில் இருந்தும் பல அறிஞர்கள் பங்கேற்ற இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மா னங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

இந்திய ஒன்றிய அரசு நடத்துகின்ற “நீட்” (மேலும் முன்மொழியப்பட்ட பிற தேர்வுகள்) தமிழ் நாட்டில் வருங்காலத் தலைமுறையினருக்கு மிகப்பெரும் அழிவுகளை விளைவிக்கும் என்பது இந்த மாநாட்டின் ஆய்ந்துத் தெளிந்தக் கருத்தாகும். “நீட்” (NEET) தேர்வின் உண்மையான பாதிப்பு அரசியலமைப்பிற்கு எதிராக மருத்துவக்கல்வியின் குரல்வளையை அறுக்கும் செயல். “நீட்” தன்னிச்சையானது, ஏழைகளுக்கு எதிரானது, மொழிச் சிறுபான்மைக்கு எதிரானது; மிக முதன்மையாக, பல மொழிகள் பல தேசிய இனங்கள் கொண்ட இந்தி யாவின் கூட்டாட்சி முறைக்கே எதிரானது.

இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடு கையில், சுகாதார அமைப்பில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. குறிப்பாக, ஊர்ப்புற மக்களின் சமூகத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, மாணவர்களின் அனைத்துப் பிரிவுகளுக்கும் தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்வி வழங்குகிறது. அரசாங்கத்தால் நடத்தப்படும் அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் மருத்துவ மேற்படிப்புக்கு - மிக உயர்ந்தத் தனிப்பிரிவுத் துறைகள் உட்பட - “ மருத்துவர்கள் முன்பே புரிந்தச் சேவை” (inservice) யின் அடிப்படையில் 50 விழுக்காடு இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்கள் ஊர்ப்புறங்களில் பணியாற்றுவதற்கு இதுதான் உண்மையான ஊக்குவிப்பு ஆகும். இதுபோல் ஏற்கனவே அடையப்பெற்ற விழுமி யங்கள் (values) எல்லாவற்றுக்கும் ‘நீட்’ எதிரானது; அவற் றையெல்லாம் ‘நீட்’ பாழாக்கிவிடும். ஊர்ப்புற - ஏழை மக்களுக்குத் தகுதி வாய்ந்த மருத்துவர்களின் சேவை இனி எக்காலத்திலும் கிடைக்காத மிகக் கொடுமையான நிலைதான் ஏற்படும்.

தமிழ்நாடு அரசு கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக, நன்கு திட்டமிட்டு, தமிழ்நாட்டு மக்கள் அனைவரின் நலன் கருதி, தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவக்கல்விக்கு ஏராளமான முதலீட்டில் உள்கட்ட மைப்புகளை உருவாக்கியுள்ளது. தமிழ்நாடு என்றுமே தனது மாணவர் களின் மருத்துவக் கல்வியைக் கண்ணும் கருத்துமாகப் போற்றிப் பாதுகாத்து வருகின்றது. இந்த “நீட்” என்பதை நம் மீது வலுக்கட்டாயமாகத் திணிப்பது என்பது , ‘குதிரை குப்புறத்தள்ளியது போதாது என்று குழியையும் பறித்ததாம்‘ என்பது போல், நாம் வளர்த்தெடுத்த உள்கட்டமைப்புகளை நாம் பயன்படுத்த இயலாமல் செய்து, அதே வேளை மற்ற மாநில மாணவர்களுக்குத் திறந்த வெளியாகத் திறந்துவிட்டு, அவர்கள் நமது மாண வர்களுக்கு உரிமையான இடத்தைச் சுரண்டுவதற்குத்தான் வழிவகுக்கும். இது தமிழ்நாட்டு மக்களுக்குப் பலவழி களிலும் பெரிய இழப்பாகத்தான் முடியும்.

இந்திய ஒன்றியத்தில் உள்ள அனைத்து மாநிலங்களில், தமிழ்நாட்டில் மட்டும்தான் 25 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகள் குறைந்தக் கட்டணத்தைத்தான் பெறுகின்றன: ஒரு மாணவருக்கு ஓர் ஆண்டுக்குப் பத்தாயிரம் ரூபாய் மட்டுமே! இத் தொகையானது தனியார் பள்ளிகளில் மழலையர் வகுப்புக்கு வாங்கும் கட்டணத்தை விடவும் குறைவானதாகும். தமிழ்நாட்டில் ஒரு மருத்துவக் கல்லூரியைக் கூட இந்திய ஒன்றியம் தொடங்கவில்லை!

“சிபிஎஸ்இ” (CBSE) பாடத்திட்டத்தை அடிப்படை யாகக் கொண்டதுதான் ‘நீட்’ தேர்வு என்பதை நாம் கூர்ந்துக் கவனிக்க வேண்டும். தமிழ்நாடு வாரியத்தின் பாடத்திட்டத்தைவிட “சிபிஎஸ்இ” பாடத்திட்டம் எந்த வகையிலும் உயர்ந்தது அல்ல. தமிழ்நாட்டு அரசின் பள்ளி களிலும், தமிழ்நாட்டு அரசின் உதவி பெறும் பள்ளிகளிலும் படிக்கும் மாணவர்கள் தமிழ்நாடு வாரியத்தின் பாடத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு கற்றுவருகின்றனர். இனிமேல், அவர்கள் அனைவரும் “சிபிஎஸ்இ” பள்ளி களில் சேர்ந்துப் படிக்கும்படி மறைமுகமாகக் கட்டாயப் படுத்தப்படுவார்கள். தமிழ்நாடு அதன் பொது நுழைவுத் தேர்வை (CET) நடத்திக்கொண்டிருந்த காலகட்டத்தில், “சிபிஎஸ்இ” மாணவர்கள் மாநில வாரிய மாணவர்களுக்கு இணையாகப் போட்டியிட முடியாததால், “சிபிஎஸ்இ”யில் இருந்து தமிழ்நாட்டு மாநிலப் பள்ளிகளுக்கு மாறுவதற்கு முயன்றனர் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

தமிழ்நாட்டு மக்கள் ஒருமித்த குரலுடன் “நீட்”-அய் எதிர்த்து, அதிலிருந்து நிரந்தர விலக்கு வேண்டி, தங் களுடைய முறையான உரிமைக்காகப் போராடுகின்றனர். தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா “நீட்”-க்கு எதிரான நிலையில் உறுதியுடன் இருந்தார்; இது சமூகநீதிக்கு வேட்டு வைக்கும் ஆயுதம் என்று கடும் கண்டனத்தை வெளியிட்டார்.

இங்குக் குறிப்பிட்டாக வேண்டிய செய்தி: பொது நுழைவுத் தேர்வு அறிமுகப்படுத்தும் முடிவை அந்தந்த மாநிலங்களே வைத்துக் கொள்ள நாடாளுமன்றக்குழு அறிக்கையை வெளியிட்டிருந்தது !

தமிழ்நாட்டின் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இளநிலை மருத்துவப் MBBS பட்டப்படிப்பிற்கான மொத்த இடங்களில் 85 விழுக்காடு தமிழ்நாட்டு அரசின் ஒதுக்கீடு உண்டு, மேலும் தமிழ்நாட்டில் உள்ள தனியார் தன்நிதி மருத்துவக் கல்லூரிகளில் 50 விழுக்காடு தமிழ்நாட்டு அரசின் ஒதுக்கீடு உண்டு என்பவைகளில் “நீட்’ தேர்வுக்குத் தமிழ்நாடு உட்பட்டதில்லை என்ற சட்டமுன்வரைவைப் பிப்ரவரி 1, 2017- அன்று தமிழ்நாட்டுச் சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது. அதே நாளில், தமிழ்நாட்டின் தனிப்பெருமைப் படைத்த ‘ஒருங்கிணைந்த மருத்துவச் சேவை’ (Integrated Medical Services யைக் காக்கும் பொருட்டு, அரசு மருத்துவர்கள் மேற்படிப்புப் படிப்பதற்காக 50 விழுக்காடு இட ஒதுக்கீடுகளைப் பாதுகாக்க வேண்டும் என மற்றொரு சட்டமுன்வரைவையும் தமிழ்நாட்டுச் சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது.

மேற்கண்ட இரண்டு சட்ட முன்வரைவுகளும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக . ஒன்றிய அரசுக்குப் பிப்ரவரி 18, 2017 அன்றே அனுப்பி வைக்கப்பட்டன. இவை மிக முதன்மையானதும் உடனடியானதுமாக இருப்பினும், இவற்றைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கும் அனுப்பாமல், பதிலும் அளிக்காமல், ஒன்றிய அரசு கிடப்பில் போட்டுள்ளது; இவை கிணற்றில் வீழ்ந்த கற்கள் போல் கிடக்கின்றன!

“நீட்”-க்கு முன்னர் தமிழ்நாட்டு அரசால் நடைமுறை படுத்தப்பட்ட மருத்துவக்கல்வி நுழைவு பற்றி எந்தவொரு காலத்திலும் எந்த இடத்தில் இருந்தும் முறையான புகார் எதுவும் இல்லை. தவிர, இந்த முந்தைய செயல்முறை சமூக நீதிக்கு ஊக்கமளித்துச் சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களுக்கும் சிறப்பான சேவையை வழங்கியது என்பதை மிகவும் அழுத்தமாகக் குறிப்பிட வேண்டும்.

“நீட்” என்பது தமிழ்நாட்டின் எதிர்காலத்தையே கேள்விக் குறியாக்கும் மாபெரும் அச்சுறுத்தலாக இருப்பதால், தமிழ்நாட்டுச் சட்டமன்றம் பிப்ரவரி, 18 2017- அன்று ஒருமனதாக நிறைவேற்றிய இரண்டு சட்ட முன்வரைவுகளுக்கும் இந்தியக் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற, கட்சி வேறுபாடுகளைப் புறந்தள்ளி, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றாய் இணைந்து, ஒன்றிய அரசுக்குப் போதிய அழுத்தம் கொடுக்க வேண்டும். இந்த ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழ் நாடு நிரந்தரமாக விலக்கு அடைவதற்குத் திட்டமிட்ட, ஒருங்கிணைந்த கூட்டு முயற்சி மூலம் மக்களிடம் ஒருமித்த கருத்துருவாக்கம் ஏற்படுத்தவும், நீட்டில் இருந்து விலக்குப்பெறத் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒத்துழைப்பு நல்கவும் ஆவனச் செய்யுமாறு வேண்டுகிறோம்.

ஒன்றாய் இணைவோம், வெற்றி பெறுவோம் !

தீர்மானங்கள்

1. மாநில அரசின் பாடத்திட்டத்தில் படிக்கும் ஊர்ப்புற, ஏழை மாணவர்கள் மருத்துவர்களாவதற்கும், கடைக் கோடிச் சிற்றூர்களில் தேவையான மருத்துவத் தொண் டாற்றுவதற்கும் பெரும் தடையாக இருக்கும் மிகக் கொடிய நீட் தேர்வுக்கு எதிராகத் தம் உயிரையே ஈகம் செய்த அனிதாவை இம்மாநாடு வணங்குகிறது.

2. தமிழ்நாட்டுச் சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட, நீட் விலக்குக் கோரும் தமிழ்நாட்டு அரசின் சட்டமுன்வரைவை உடனடியாக இந்திய ஒன்றிய அரசுச் சட்டமாக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

3. நீட் மட்டுமல்லாது, இந்திய நிலப்பரப்பு முழுவதற்கும் நடத்தும் எவ்வகையான நுழைவுத்தேர்வும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகள், மாணவர் சேர்க்கை ஆகியவை மாநில அரசின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் தற்போதையத் தீர்ப்புக்கு எதிராக இந்திய ஒன்றியத்தில் உள்ள அனைத்து மாநில அரசுகளும் வழக்குத் தொடுத்து, நுழைவுத்தேர்வு / மாணவர்ச் சேர்க்கை உரிமைகளை மாநில அரசுகளே திரும்பப்பெற இம்மாநாடு வலியுறுத்துகிறது.

4. இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்குப் புறம்பான முறையில் நெருக்கடிநிலையின்போது, மாநில அரசின் கல்வி உரிமை ஒன்றிய அரசால் தகாவழியில் பறிக்கப்பட்டது. அதனை மீண்டும் மாநிலப் பட்டியலில் சேர்க்க இம்மாநாடு வலியுறுத்துகிறது.

5. அய்ரோப்பிய ஒன்றியத்தைப்போல பல மொழி, பல பண்பாட்டு மரபுடைய, பல தேசிய இனங்கள் வாழும் நிலப்பரப்பு இந்திய ஒன்றியம். இந்திய ஒன்றியத்தில் பழமைவாய்ந்த பல செம்மொழிகள் உட்பட அனைத்து தேசிய மொழிகளுக்கும் ஒன்றிய அரசின் அலுவல் மொழியாகும் உரிமை இருந்தபோதும், இந்தியை மட்டும் அலுவல் மொழியாக்கி தொடர்ந்து அனைத்து தேசிய இனங்களுக்கும் பெரும் தீங்கிழைக்கின்றது. அனைத்து தேசிய மொழிகளையும் ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

6. இந்திய ஒன்றியத்தின் நிலப்பரப்பானது, தமக்கெனத் தனியான ஒரு மொழி, பண்பாடு, உணவுப்பழக்கம், உடை, வாழ்வுமுறையோடு “பல தேசிய இனங்கள்” வாழும் ஒரு துணைக் கண்டமாகும். தேசிய இனங்களின் தனித்தன் மையை அழித்து “இந்தி தேசியம்“ மட்டும் வளர்க்க எடுக்கும் நடவடிக்கைகளை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. அனைத்து மொழிவழி தேசிய இனங்களும் நிகராகவும், மிகவும் மரியாதையாகவும் நடத்தப்பட வேண்டும்.

7. தெற்காசிய நிலப்பரப்பில் முற்றிலும் வேறானப் பல தேசிய இனங்களைப் பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக ஒன்றுதிரட்டும் பொருட்டு, முன்னணி விடுதலைப் போராட்டத் தலைவர்கள் பல அரசியல் கூட்டங்களில் மொழி அடிப்படையில் மாநில அரசுகள் உருவாக்கப்படும், அனைத்து அதிகாரங்களும் மொழி அடிப்படையிலான மாநில அரசுகளுக்கு அளிக்கப்படும் என்று தீர்மானங்களை நிறைவேற்றினர். உண்மையான கூட்டாட்சியாகச் செயல்படுவதற்கு ஏற்ப தேவையான அரசியல் அமைப்புச் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும்.

அமெரிக்காவின் தலைநகர் வாசிங்டன் அருகில்

வர்சீனியாவில், டிசம்பர் 16, 2017 ஆம் நாள் நடைபெற்ற கல்வி உரிமை மாநாட்டில் மேற்கூறியத் தீர்மானங்கள் உலகத் தமிழ் அமைப்பால் ஒருமனதாக நிறைவேற்றப் பட்டது.

முனைவர் வை. க.தேவ்
தலைவர், உலகத் தமிழ் அமைப்பு

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner