எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

இரா.கண்ணிமை

 

பங்குனி உத்திரம் - ஆண்டுதோறும் பங்குனியில் வருகிறது. கோவணத்தோடு நிற்கும் பழனியாண்டிக்கு - பாலாபிசேகங்கள் - பலபல மொட்டை வேண்டுதல்கள். இந்த பழனியப்பன் என்ற சுப்பிரமணிய முருகனின் கதை இதோ:

சிவனின் இரண்டாம் மகன் சுப்பிரமணியன், சுப்பிரமணியன் யுத்த தேவனாம். இவனின் மறு பெயர்கள்:

முருகன் - அரண்மகன் - அறுமீன்காதலன் - ஆறுமுகன் - ஆசான் - ஆண்டலைக் கொடியோன் - கங்கை மைந்தன் - கடம்பன் - கந்தன் - கலையுணர் புதல்வன் - காங்கேயன் - கார்த்திகேயன் - குகன் - குழகன் - குறிஞ்சிவேந்தன் - குன்றெறித்தோன் - சிலம்பன் - சூர்ப்பகைவன் - செட்டி - செவ்வேள் - சேந்தன் - சேய் - சேவற்கொடியோன் - தாருகற் சேற்றோன் - தாருகாதி - தெய்வானைக்காந்தன் - வள்ளி மணாளன் - வாகுலேயன் - விசாகன் - வேலன் - வேலிறைவன் - வேல் - என்பவனவாம். இத்தனை புனைப்பெயர்கள் எதற்கோ தெரியவில்லை.

சுப்பிரமணிய விக்கிரகம் பன்னிரெண்டு கையுள்ள, மஞ்சள் நிறமுள்ளதாய் செய்யப்பட்டிருக்கும். சுப்பிர மணியனின் இரு மனைவிகளையும் மயில் வாகனத்தின் மேல் அதன் இரு பக்கத்திலும் இருக்கவைத்து வணங்கு கிறார்கள். சுப்பிரமணியனின் முக்கிய தலங்கள்:- திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய், திருவாவினன்குடி, திருவேரகம், திருத்தணி, திருச்செந்தூர், சோலைமலை, பழனி, கதிர்காமம் (இலங்கைத்தீவில்) முதலியனவாம்.

சூரபதுமன் எனும் ஓர் அசுரனை அழிப்பதற்காய் சிவன் தன் நெற்றிக்கண்ணிலிருந்து சுப்பிரமணியனை உண்டாக்கினாராம். சுப்பிரமணியன் அவ்வசுரனுடன் பத்து நாள்கள் போரிட்டும் முடியாததால் - அவனைத் தன் வேலாயுதத்தால் தந்திரமாக இரண்டாய்த் துண்டித்து ஒன்றை மயிலாகவும், மற்றதைச் சேவலாகவும் ஆக்கி, மயிலை தனக்கு வாகனமாகவும், சேவலைத் தன் கொடியாகவும் ஆக்கிக் கொண்டானாம்.

சுப்பிரமணியனுக்கு தெய்வானை என்ற மனைவி யும், வள்ளியென்ற வைப்பாட்டியும் உண்டு. திருத் தணியில் சுப்பிரமணியன் தன் இரு மனைவிகளோடும் இராத்திரி தோறும் படுத்திருப்பதாக - தினமும்காலையில் இவர்களை வந்து எழுப்ப கதவுகளைத் திறந்து - உள்ளே பூசை செய்ய வரும் பூசாரி, ஆண்டிகள், தட்டுமுட்டு சாமான்கள், நாடகக்குழுவுடன் கோயில் வாசற்படியில் நின்று அரோகரா போடுவார்களாம்.

இதுபற்றிய ஒரு விருத்தம்

எண்ணெய் வரவே வாசமெலு மிச்சம்

பழச்சாறிள நீரு முக்கனியுமே

இருக்குமொரு சாறுதேன் சர்க்கரைப் பால்

தயிரிடைக் கிடை திருமஞ்சனத்

திண்ணிறைய வேதியர், புண்ணிகைத்

தேருசெய் பஞ்சகவியஞ்

செய்யசெயன மறையோர்கள் கொடுவந்து

நிற்கிறார்தேவனே பள்ளியுணராய்த்

திருத்தணியில் வாழ்முருக தெய்வாணை

வள்ளிதன் தேவனே பள்ளியுனராய்!

சுப்பிரமணியன் இரு மனைவிகளுடன் இரவில் நித்திரை செய்வதாயும், தினந்தோறும் காலையில் பூசாரிகள் எழுப்பி எண்ணெய், மலர்கள், கரும்புசாறு, பழச்சாறு, இளநீர், தேன், பால், தயிர் முதலான பொருள்களை உண்ணக் கொடுக்கும் வழக்கம் திருத்தணிக் கோயிலில் உண்டாம்.

சுப்பிரமணியனுக்கு தெய்வானை எனும் மனைவி யிருக்க குறப்பெண்ணான வள்ளியின் அழகைப்பற்றி அறிந்து அவளைச் சேர ஆசை கொண்டு பல தந்திரங்கள் செய்தும் அவள் இனங்காததால் தன் அண்ணன் பிள்ளையார் உதவியால் யானை உருவாய் மாறி வள்ளியைத் துரத்தவே வள்ளி ஓடி சுப்பிரமணியனைச் சரண் அடைந்தாள். பிறகு சுப்பிரமணியன் வள்ளியிடம் கூடி தன் இச்சையை நிறைவேற்றியதாய் கதையுண்டு. கந்தபுராணம் வள்ளியம்மை திருக்கலியாணப்படலம்: 62, 64, 65, 67, 68, 69, 71, 72, 84, 87, 104, 107, 110, 111, 112, 113, 114, 115, 132, 133, 136, 137, 143, 160, 161, 162, 163, 164, 234ஆம் பாடல்களிலும் அறிந்து கொள்ளலாம்.

போகமுனிவர் சுப்பிரமணியர் வரலாறு கூறல்:

போகர் ஏழாயிரம் 4ஆம் காண்டம் பக்கம் 576

பிழைக்கவே வடிவேலர் தம்மைத் தானும்

பேரானயிவ் வுலகில் தேவனெ ன்றும்

வழக்கமுடன் யிதிகாசங்கள் சாஸ்தி ரங்கள்

வளமாகப் பாடிவைத்தார் வினயம் யாவும்

முழக்கமுடன் வடிவேலர் முருகன் தானும்

முற்பிறப்பில் பஞ்ச தக்கியனாக

தழக்கமுடன் பிறந்ததாய் சாத்தி ரங்கள்

தாரணியில் கவிவாணர் கட்டி னாரே!

பாடல் 590

இருந்திட்டார் வள்ளிதனை சிறையெ டுத்து

யெழிலாக அவனிதனில் இருந்தா ரென்றும்

பொருந்தவே உலகுதனில் சுவாமி யாக

பொங்கமுடன் வீற்றிருந்தார் சதாகா லந்தான்

வருந்தியே கோடிமனு பேர்க ளெல்லாம்

வையகத்தில் மகாதேவ னென்று சொல்லி

திருந்தியே சமஸ்கரித்து தலைகு னிந்து

திகழுடனே கோடியுக மிருகந் தாரே!

பாடல் 591

தாமான சாத்திரங்கள் சொன்ன தெல்லாம்

தகைமையுடன் பொய்யாச்சு பொன்னு லோகம்

நாமேதான் சொன்னபடி வடிவேலர் தானும்

நாட்டிலே யிருந்தாரோ யில்லை கண்டீர்!

வேமேதான் பூலோகம் தன்னை விட்டு

விடுபட்டு தேகமது மண்ணாய் போச்சு

போமேதான் மண்கூறு மண்ணாய் போச்சு

பூவுலகில் இருந்தாராம் காணோம் பாரே!

போகர் ஏழாயிரம் 6ஆம் காண்டம் பக்கம் 900

பாடல் 622

செப்பலாஞ் சுப்பிரமணியர் என்பார் பாரு

சிறப்பான மனிதரல்லால் வேறொன் றில்லை

ஒப்புடன் நீ நினைத்த சுப்பிர மணியன்

ஓகோ!கோ நாதாந்தக் கடவு ளாச்சு,

எப்படியும் நாதாந்தக் கடவு ளுக்கு

எழிலானஅவதார புருஷ னென்றும்

எழிலான சாத்திரங்கள் சொல்ல லாச்சே!

பாடல் 623

சொல்லவே யவரவர்கள்: தக்க நேர்மை

சுந்தரனே தன்மனத்தி லயிங்கிலங் கொண்டு

வெல்லவே பலவிதமாம் தெய்வம் போலே

விசாரணைக ளில்லாமல் பேதை நெஞ்சாய்

புல்லவே கவிவாணர் கட்டும் வாக்கியம்

புகழாகப் பலபுலவாம் நாமம் தன்னை

சொல்லவே நற்கடவுள் என்று கூறி

செம்மலுடன் மதிகெட்டு துதிப்பார் பாரே!

ஓர்வெண்பா

தம்பியோ பெண்திருடித் தாயாருடன் பிறந்த

வம்பனோ நெய்திருடி வாமணன் - அம்புவியில்

மூத்த பிள்ளையாரே முடிச்சவிழ்த்துக் கொண்டீரே

கோத்தி ரத்திலுள்ள குணம்

போக முனிவர் 4ஆம், 6ஆம் காண்டத்திலுள்ள பாடலால் மனிதர் தங்கள் அறியாமையால் சுப்பிரமணி யரை ஓர் சிருஷ்டி கர்த்தாவுக்குச் சமத்துவமான கடவு ளாய் வணங்கி வழிபடுகிறார்களேயழிய அவன் கடவுள் அவதாரமும் அல்ல - கடவுளுமல்ல - மனைவி - கூத்திகளுடன் வாழ்ந்த மனிதனேயாவான். சாத்திர புராணங்களாலும் - கட்டுக்கதைகளாலும் - கடவுளாய் மதிக்கப்பட்டான். வேறொன்றில்லை - என்றெல்லாம் தெளிவாகக் கூறியுள்ளார் போக முனிவர்.

கந்தனுக்குக்காவடி தூக்கும் பக்தர்களே! - மேலே சொல்லப்பட்டவை எங்கள் சொந்த புராணமல்ல - உங்கள் கந்தபுராணத்தில் சொல்லி வைத்தவைகள்தாம். போக முனிவர் தாகத்தோடு பாடிவைத்தவைகள் தாம். உங்கள் மனம் புண்படுகிறதா? படட்டும் பங்குனி உத்திர முருகனுக்கு அரோகரா போடுங்கள்! போட்டுக் கொண்டே இருங்கள்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner