எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

- புலபிரை பாலகிருஷ்ணன்

 

நரேந்திர மோடியின் தலைமையிலான பா.ஜ.க. தோற்கடிக்க முடியாதது அல்ல என்பதை, அண்மையில் நடந்த உத்தரப்பிரதேச இரு மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் தெளிவுபடுத்தியுள்ளன. கோரக்பூர், பூல்பூர் தொகுதி வாக்காளர்கள் பா.ஜ.கட்சியை வீட்டுக்கு அனுப்பி நிராகரித்து விட்டார்கள். பா.ஜ.க. அளிக்கும் அரசியலால் கவரப்பட்டவர்களும் அல்ல என்பதையும், சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. பெருவெற்றி பெற்றது கண்டு அச்சப்படவும் இல்லை என்பதையும்  அவர்கள் உணர்த்தி விட்டனர். 2019 இல் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் நாட்டின் வேறு இடங்களிலும் இதே போன்ற தோல்வியை பா.ஜ.க. அடையமுடியும் என்பது இனி கற்பனை செய்து பார்க்க முடியாததாக இருக்காது..

என்றாலும் அது நிகழ்வதற்கு, முக்கிய எதிர்கட்சியான காங்கிரசின் ஆலோசகர்களுக்கு இந்தத் தீர்ப்பை படித்துக் காட்ட வேண்டும். "காங்கிரசு கட்சிமீது இந்துக்களுக்கு எதிரான கட்சி என்ற முத்திரையை பா.ஜ.க. குத்துவதற்கு வாய்ப்பு அளிக்காதபடி நாட்டின் மதச் சார்பற்ற தன்மையை வளர்க்கும் வழியில் வழக்கமாக காங்கிரசு  செய்து வரும் பிரச்சாரம் போதுமானது அல்ல என்பதை அவர்கள் உணரவேண்டும்" என்று குஜராத் சட்டமன்றத் தேர்தல்கள் முடிந்த பிறகு ஒரு பத்திரிகையாளர் எழுதி இருந்தது உண்மைதான். குஜராத் தேர்தலின் போது இந்து கோயில்கள் பலவற்றுக்கு காங்கிரசு கட்சித் தலைவர் வரிசையாக சென்று வழிபட்டது எந்த வித உதவியும் செய்துவிட முடியாது. இத்தகைய போலி மத வேடத்தைக் கண்டு ஏமாந்து போய்விடும் அளவுக்கு இன்றைய வாக்காளப் பெருமக்களும் முட்டாள்களாக  இருக்க வில்லை. இந்து மத மக்கள் பெரும்பான்மையினராக வாழும் கோரக்பூர், பூல்பூர் தொகுதிகளில் இந்து மதக் கோயில்களுக்கு அகிலேஷ் யாதவ் சென்று கொண்டிருக்கவில்லை. வாக்காளர்கள் தங்கள் ஆதரவை பா.ஜ.கட்சியிடமிருந்து சமாஜ்வாடி கட்சிக்கு மாற்றிக் கொள்வதை இது ஒன்றும் தடுத்து நிறுத்திவிடவில்லை. எதிர்கட்சிகள் ஒன்று சேர்ந்து வெற்றி பெறும் போது, பா.ஜ.கட்சியின் வாக்கு வங்கியில் சிறிதளவேனும்  சரிவு ஏற்பட்டிருக்கிறது என்பது வாக்கு எண்ணிக்கையில் இருந்து நமக்குத் தெரிய வருகிறது. இந்துக்களுக்கு எதிரான கட்சி என்ற தோற்றத்தை உருவாக்காமல் மதசார்பற்ற தன் மையை வளர்ப்பதற்கு காங்கிரசு கட்சிக்கு தோன்றியுள்ள இத்தகைய  ஆலோசனை விசித்திரமானதே ஆகும். தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியைத் தான் கைப்பற்ற நினைக்கும் அரசு, அரசமைப்புச் சட்டத்தினால் கட்டப்பட்டிருக்கும்போது, ஒரு அரசியல் கட்சியால் மதச்சார்பற்ற தன்மையை எவ்வாறு வளர்க்க முடியும் என்பது முதலாவது. எந்த மதநம்பிக்கை கொண்டவர்களாக இருந்தாலும், மத ஆர்வம் கொண்ட மக்களைப் பொருத்தவரை, உண்மையான மதச் சார்பற்ற தன்மை கொண்ட கட்சியின் ஆட்சியினால் எந்த ஒரு மதக் குழுவும் ஏன் அச்சம் கொள்ள வேண்டும் என்பது இரண்டாவது. இறுதியாக,  மதச் சார்பின்மை பற்றி இந்திய மக்களுக்கு எவரும் பாடம் கற்றுத் தரவேண்டியதில்லை என்பதை இந்த வாக்காளர்கள் காட்டிவிட்டனர். காங்கிரசு கட்சியின் எந்த வித உதவியும் இன்றியே அவர்கள் இந்துத்துவ அரசியலை நிராகரித்துவிட்டனர். அவர்கள் நிராகரித்தது இந்துத்துவ அரசியலைத்தான் என்பதை  நம்மால் உறுதிப்படுத்திக் கொள்ள முடியுமா? முடியாது.  மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சிக்கு எதிரான மக்களது மனநிலை கூட இந்த நிராகரிப்புக்குக் காரணமாக இருக்கலாம். பா.ஜ.கட்சியின் தோல்விக்கு இதுவே காரணமாக இருந்தால், வாக்காளர்கள் உண்மையாகக் கவலைப்படும் விஷயங்கள் மீது எதிர் கட்சிகள் இன்னமும் அதிக கவனம் செலுத்த வேண்டியது மிகமிக முக்கியமானது. இத்தகைய குறைபாடுகள் உள்ள விஷயங்களில் மருத்துவ மனைகள் முதலிடத்தைப் பெறுகின்றன. முதல்வர் யோகி ஆதித்தியானந்தின் தொகுதியில் இருக்கும் அரசு மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

2019 தேர்தல் வெற்றிகளைப்  பற்றி பரிசீலிக்கும்போது காங்கிரசு கட்சியைப் பற்றியும் பரிசீலிக்க வேண்டிய தேவை என்ன? மக்களவையில் காங்கிரசு கட்சி வெறும்40 இடங்களை மட்மே பெற்றிருக்கிறது என்ற போதிலும், இன்னமும் தனிப்பெரும் எதிர்கட்சியாக அக்கட்சிதான் விளங்குகிறது. அதன் முக்கியத்துவம், அக்கட்சி பெற்றுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் கடந்தது ஆகும். சிந்திக்கும் மன நிலையைப் பொருத்தவரை, இந்தியா முழுவதற்குமாக பொருந்தக் கூடிய விஷயங்களைச் சிந்திக்க இயன்ற ஒரே கட்சி காங்கிரசு கட்சிதான். பா.ஜ.கட்சியுடனான சந்திரபாபு நாயுடுவின் கூட்டணி முடிவுக்கு வந்த பின்னர், நாட்டின் தென் மாநிலங்கள் அனைத்திலும் பா.ஜ.க. அல்லாத இதர கட்சிகள்தான் ஆட்சி செய்து கொண்டிருக்கின்றன. 2019 மே மாதம்வரை இந்த நிலையே நீடிக்கும் என்று வைத்துக் கொண்டால்,  தென் இந்திய மக்களின் எதிர்பார்ப்புகளுக்காகப் பாடுபட இயன்ற கட்சி காங்கிரசு கட்சிதான் என்பதை வரலாறு காட்டுகிறது. உத்தரப்பிரதேச இடைத் தேர்தலில் பா.ஜ. கட்சியை வென்ற கட்சிகளால் இந்த இடத்தை நிரப்ப முடியாது. சமாஜ்வாடி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி இரண் டுமே ஆணாதிக்கம் நிறைந்த கட்சிகளாக இருப்பவை ஆகும். லாலு பிரசாத்தோ, முலாயம் சிங்கோ விந்திய மலைக்குத் தெற்கே தங்களது கட்சியைக் கொண்டு செல்ல முயன்றதில்லை. உண்மையைக் கூறுவதானால்,  பிராந்திய அரசியலிலேயே மூழ்கிக் கிடப்பவர்களாக அவர்கள் தோன்றுவது மட்டுமன்றி,  கூச்சநாச்சமின்றி தங்களது ஜாதியினருக்கு ஆதரவாக இருப்பவர்களும் ஆவர். இவை எல்லாம் தென் மாநிலங்களில் செல்லுபடியாகாது.

அதற்கு மாறாக, எவ்வளவுதான் வரையறைகளும், கட்டுப்பாடுகளும் இருந்த போதிலும், நேரு-காந்தி குடும்பத்தினர் பன்முகத் தன்மை கொண்ட இந்திய நாட்டு மக்களுடன் இயல்பாக கலந்து பழகுவதற்கே பிறந்தவர்கள் போன்றே தோன்றுகின்றனர். பாரம்பரியமாக அவர்கள் பெற்று வந்துள்ள மிகமிக அரிய கொடை இது. ஆனால், பா.ஜ.கட்சியுடன் தேர்தல் களத்தில் போட்டியிடுவதற்கு காங்கிரசு கட்சிக்கு சமூக உறவுகளை வளர்த்துக் கொள் ளும் திறமை மட்டுமே போதாது; அதற்குக் கூடுதலான திறமைகளும் தேவை. இத்திறமைகள் சிலவற்றை காங்கிரசு கட்சி சமாஜ்வாடி கட்சி, ராஷ்டிரிய ஜனதா தளம், பகுஜன் சமாஜ் கட்சிகளிடமிருந்து கற்றுக் கொள்ளலாம்.  மற்ற கட்சிகளுடனான பேச்சு வார்த்தைகளின்போது மோடியைப் போன்ற ஒரு பாணியை பின்பற்றுபவராக மாயாவதி உள்ளார். அதற்காக வாக்காளர்கள் பரிசளிப் பதைப் பற்றி உங்களால் குறை கூறமுடியாது.  அறைக்குள் இருக்கும் நபர்களில் எவர் சிறந்தவர் என்ற போட்டியில் அவர்கள் கலந்து கொள்ளவில்லை. தங்களது கோட் பாடுகள் பற்றிய தெளிவும் துணிவையும்தான் தலைவர் களிடமிருந்து வாக்காளர்கள் எதிர்பார்க்கின்றனர்; மக் களைக் கவர்ந்திழுப்பதும் கூட அரசியல் தலைவர்களுக்கு ஒரு கூடுதலான சொத்துதான்.

நாட்டிற்கு மீண்டும் ஒரு முறை தலைமை தாங்கி நடத்திச் செல்ல காங்கிரசு கட்சி விரும்பினால், வெறும் மதச்சார்பற்ற கோட்பாட்டை மட்டுமே தராமல், அதனை விட அதிகமான பலன்களை அளிக்கும் திட்டங்களுக்கான வழிகளை மக்களுக்கு வகுத்துக் கொடுக்க வேண்டும். குஜராத் சட்டமன்றத் தேர்தல் மற்றும் இடைத் தேர்தல் முடிவுகளைப் பார்க்கும்போது, மதச்சார்பின்மை பற்றிய எந்த ஒரு பாடத்தையும் கற்க வேண்டிய நிலையில் வாக்காளர்கள் இல்லை என்றே தெரிகிறது. இந்துத்துவ அரசியல் எத்தகையது என்பதை மதிப்பிடுவதற்கு அவர்களால் இயலும். அதற்கு மாறாக, மேலான வாழ்வாதார சூழ்நிலைகளை அரசியல் கட்சிகள் உருவாக்கித் தரவேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். நகர்ப்புற அறிஞர்களின் கருத்துகளை ஏற்று செயல் படுவதை வழக்கமாகக் கொண்டுள்ள காங்கிரசு கட்சியினால் இந்த உண்மையைக் காண முடியவில்லை. தனிமைப்படுத்திக் கொள்ளப்பட்ட தங்களது சமூகங்களில் வாழும் இந்த அறிஞர்கள், இந்நாட்டு பாமர மக்களின் எதிர்பார்ப்புகளுடன் எந்த விதத் தொடர்பும் அற்ற வர்களாகவே உள்ளனர். மக்களாட்சி என்றால் மக்களுக்கு மேலான வாழ்க்கை அளிப்பது என்றே பொருள்படும். ஆனால், சுதந்திர இந்தியாவில் மக்களுக்கு இந்த மேலான வாழ்க்கை அளிக்கப்படவில்லை. உலக அளவில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து சமூக நல ஆய்வுகளிலும், உலக சராசரிக்கும் குறைவாகவே இந்தியா இடம் பெற்றுள்ளது.  1980 ஆம் ஆண்டுகளில்  இதர அய்ரோப்பிய நாடுகள் வாழ்க்கைத் தரத்தில் சோவியத் யூனியனை விட அதிக அளவில் முன்னேறி இருந்தன என்பதை சோவியத் மக்கள் காண இயன்றதைப் போலவே, இந்தியாவும் இதர ஆசிய நாடுகளை விடவாழ்க்கைத் தரத்தில் மிகவும் பின் தங்கியுள்ளதை இந்திய மக்கள் இப்போது காண்கின்றனர். எனவே, எதிர்கட்சியினர் மத்தியில் ஆட்சிக்கு வர விரும்பினால்,  இந்திய குடிமக்களுக்கு ஒரு மேலான வாழ்க்கையை அளிப்பதற்கான தீர்வுகளைக் காட்ட வேண்டும். மத்தியில் ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் ஆனபிறகும் மோடி நல்லாட்சி தந்துள்ளார் என்று கூற முடியாவிட்டாலும், வியர்வை சிந்தி கடுமையாக உழைத் தார் என்பதை மறுக்கமுடியாது.  அதைப் போன்று பாடு பட்டு ஆட்சி செய்வதற்கான ஆவலை, ஏக்கத்தை எதிர்கட்சிகள் வெளிப்படுத்த வேண்டும். அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் இரண்டாவது தவணை ஆட்சியின்போது, அது நிறைவேற்றிய உரிமைகள்  சட்டங்கள்  பற்றி டில்லியில் உட்கார்ந்திருக்கும் அறிஞர்கள் வேண்டுமானால் பாராட்டலாமே தவிர, அது மட்டுமே போதும் என்று வாக்காளர்கள் கருதவில்லை என்பதை 2014 மக்களவை தேர்தலில் மோடிக்கு வாக்களித்து மக்கள் காட்டி விட்டனர். உரிமைகள் முக்கியமற்றவை என்று கூற இயலாத போதிலும்,  தங்கள் மீது கவிந்துள்ள மோசமான பொருளாதார பாது காப்பின்மை முதலில் தீர்க்கப்பட வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். இதற்கு தனியார் துறையிடமிருந்து விலைக்கு வாங்க முடியாத நாட்டின் பொருளாதார வளர்ச் சியைத் தொடர்ந்து நிலையாக வைத் திருப்பதும், மக்களுக்குத் தேவையான அடிப் படை சேவைகளை முறையாக அளிப்பதும் மிகமிக அவசியமானதாகும். இந்துத்துவக் கோட்பாட்டின் செல்வாக்கு மறைந்து வருகிறது என்பது உள்ளிட்ட ஆழ்ந்த சில சமூக சக்திகளை பிரதிபலிப்பதாக தேர்தல் முடிவுகள் இருக்கின்றன என்று பார்ப்பதும், இந்துத்துவக் கோட்பாடு செல்வாக்கு பெறுவதை தடுத்து நிறுத்த முடியாது என்று கருதுவதும் சோம்பேரித்தனமுமேயாகும். இது போன்றதொரு சிந்தனையின் மடமையை உத்தரப் பிரதேச மாநிலத்தின் கடந்த 25 ஆண்டு கால தேர்தல் வரலாறு காட்டுகிறது. பாபர் மசூதி இடிக்கப்பட்டவுடன் பா.ஜ.கட்சி பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டு, அடுத்த 25 ஆண்டு காலம் அது ஆட்சியைத் திரும்பக் கைப்பற்ற இயலாமல் வனவாசம் போனது. மாயாவதி நான்கு முறையும், முலாயம் சிங் யாதவும், அவரது மகன்அகிலேஷ் யாதவும் ஒவ்வொரு முறையும் மாநிலத்தில் பதவிக்கு வந்தனர். இந்த மாற்றங்களுக் கெல்லாம் காரணமாக ஏதோ ஒரு பெரிய சக்தி செயலாற்றியது என்று கருத முடியாது. ஒரு முறை ஆட்சிக்கு வந்த பிறகு மக்களுக்கு மனநிறை வளிக்கும் நல்லாட்சியை அவர்கள் அளிக்கத் தவறும் போது, மெத் தனமாக செயல்படும் அரசியல் கட்சிகளை மக்கள்தான் பதவியில் இருந்து நீக்கியுள்ளனர். உத்தரப் பிரதேச மக்களவை இடைத்தேர்தல் முடிவுகள், நரேந்திர மோடி பதவியில் இருந்து தூக்கி எறியப் படுவதற்கான போதுமான அறிகுறிகளைக் காட்டுவதாக இல்லை என்றாலும், அதற்கான ஒரு வாய்ப்பு இருப்பதாகவே அதில் இருந்து தெரிகிறது.

நன்றி: 'தி இந்து' 19-3-2018

தமிழில்: த.க. பாலகிருட்டிணன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner