எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

2019 மக்களவைத் தேர்தலில் எதிர்கட்சிகளின் கூட்டணி வெற்றி பெறுவதற்கு இன்னமும் வாய்ப்புகள் உள்ளனவா அல்லது அண்மையில் நடைபெற்ற மக்களவை இடைத்தேர்தல் முடிவுகளில் இருந்து நாம் அதிகப்படியான விளைவுகளை எதிர்பார்க்கிறோமா என்பதைப் பற்றிய ஒரு விவாதத்தை அரசியல் நிகழ்வு களின் மாற்றங்களும், பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகளும் தொடங்கி வைத்துள்ளன. மத்தியப்பிரதேச, ராஜஸ்தான் மாநில இடைத் தேர்தல்களில் பா.ஜ.க. பெற்ற தோல்வி அதற்கு பெரிய கவலையை அளித்திருக்காது என்ற போதிலும், அண்மையில் நடை பெற்ற கோரக்பூர், பூல்பூர் மக்களவை இடைத்தேர்தலில் பா.ஜ.க. பெற்றுள்ள தோல்விக்காக பா.ஜ.க. நிச்சயமாகக் கவலைப்படவே வேண்டும் என்பதற்கான சில அறிகுறிகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.  பா.ஜ.கட்சிக்கு எதிரான ஒரு கூட்டணியை உருவாக்கும் முயற்சிகளை மேற்கொள்வ தற்கான ஊக்கத்தையும், ஆக்கத்தையும் எதிர்கட்சிகளுக்கு இந்த இடைத்தேர்தல் முடிவுகள் அளித்துள்ளன.

இந்த நோக்கத்தில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் இந்தத் திசையை நோக்கி தனது முதல் காலடியை ஏற்கெனவே எடுத்து வைத்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சித் தலைவி செல்வி மாயாவதியை அவர் அண்மையில் சந்தித்துள்ளார். இடைத் தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பாகவே, காங்கிரசு தலைவி சோனியா காந்தி டில்லியில் தனது இல்லத்தில் அளித்த ஒரு விருந்தில் பல்வேறுபட்ட பிராந்தியக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றுக் கொண்டுள்ளனர். அந்த விருந்தின்போது இந்தத் தலைவர்கள் எது பற்றி விவாதித்து இருப்பார்கள் என்பது எவருக்கும் வியப்பை அளிக்காது. பகுஜன் சமாஜ் கட்சியின் உதவியுடன் கோரக்பூர், பூல்பூர்  தொகுதிகளின் மக்களவை இடைத் தேர்தலில் சமாஜ்வாடி கட்சி  வெற்றி பெற முடியாமல் போயிருந்தால், பா.ஜ.க. அல்லாத கட்சிகளின் கூட் டணி அமைப்பது பற்றிய பேச்சு வார்த்தைகள் விருந்திற்குப் பிறகு தொடராமல் நின்று போயிருக்கும். ஆனால், ஒவ்வொரு மாநிலத்திலும் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் தன்மை மாறுபட்டிருப்பதால், அகில இந்திய அளவில் இத்தகைய ஒரு கூட்டணியை உருவாக்குவது அவ் வளவு எளிதாக இருக்காது என்ற போதிலும்,  பா.ஜ.க. அல்லாத கட்சி களின் ஒரு மாபெரும் கூட்டணியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்கான உந்துதலை இந்த இடைத்தேர்தல் வெற்றிகள் அளித்திருக்கின்றன. உத்தரப்பிரதேச இடைத் தேர்தல்களில் பா.ஜ.க. பெற்றிருக்கும் தோல்வி, குறிப்பாக கோரக்பூர், பூல்பூர்  மக்களவை தொகுதிகளில் அது பெற்றுள்ள தோல்விகள் அக்கட்சிக்கு எச்சரிக்கை மணி அடிப்பதாகவே அமைந்துள்ளன. இரண்டு தொகுதி தேர்தல் தோல்வி என்பது ஒரு பெரிய செய்தியே அல்ல; ஆனால் அந்த இரு மக்களவைத் தொகுதிகளின் பெயர்களே மிகமிக முக்கியமானவை. கோரக்பூர் மக்களவைத் தொகுதி உறுப்பினராக உ.பி. முதல்வர்   ஆதித்தியானந்தும், பூல்பூர் மக்களவை உறுப்பினராக அவரது துணை முதல்வர் கேசவ பிரசாத் மவுர்யாவும் 2014 பொதுத் தேர்தலின்போது 50சதவிகிதத்திற்கும் அதிகப்படியான வாக்கு வித்தியாசத் தில் வெற்றி பெற்ற தொகுதிகள் இவை.  கோரக்பூரில் 51.8 சதவிகித  வாக்குகளையும், பூல்பூரில் 52.4 சதவிகித வாக்குகளையும் அப்போது அவர்கள் பெற்றிருந்தனர். கோரக்பூர் மக்களவை தொகுதி 1989 ஆம் ஆண்டு முதல் பா.ஜ.கட்சியிடமே இருந்தது என்பது குறிப்பிடத் தக்கதாகும். முந்தைய தேர்தல்களில் 50 சதவிகிதத்திற்கும் மேலான வாக்குகளைப் பெற்றிருந்த பா.ஜ.கட்சியினால்  வாக்காளர்களின் ஆதரவைத் தக்க வைத்துக் கொண் டிருக்க இயன்றிருக்குமானால்,  அதற்கு எதிராக அனைத் துக் கட்சிகளும் ஒன்று திரண்டு வந்திருந்தாலும் கூட, இந்த இரு மக்களவை தொகுதிகளிலும் பா.ஜ.க. கட்டாயம் வெற்றி பெற்றிருந்திருக்க வேண்டும்.

பா.ஜ.கட்சிக்கு கவலை அளிக்கும் செய்தி இந்த இரு மக்களவை தொகுதிகளையும் இழந்தது மட்டுமன்றி,  இந்த இரு தொகுதிகளிலும் 10சதவிகித்திற்கும் மேற்பட்ட வாக்குகளை அக்கட்சி இழந்திருக்கிறது என்பதும்தான். கடந்த ஓராண்டு காலமாகத்தான் பா.ஜ.க. மாநிலத்தில் ஆட்சி செய்து வருகிறது என்பதால், இவ்வளவு விரைவாக அக்கட்சி மக்களின் ஆதரவை இழந்திருப்பது குறிப்பிடத் தக்கதாகும். சாதாரணமாக எந்த ஒரு புதிய அரசுக்கும் தேனிலவுக் காலம் இரண்டு ஆண்டுகளாக இருக்கும். நரேந்திர மோடியின் அரசு இந்த தேனிலவுக் காலத்தைக் கடந்து தனது அய்ந்தாவது ஆண்டு ஆட்சியை எட்டியுள்ள நிலையில்,  பா.ஜ.கட்சி இன்னமும் வலுவான நிலையில் இருந்திருக்க வேண்டும்.

பா.ஜ.கட்சிக்கு 10 சதவிகித  வாக்குகள் சரிவு, அதுவும் கோரக்பூர் போன்ற மக்களவை தொகுதியில் ஏற்பட்டு இருப்பது, உத்தரப்பிரதேச மாநிலத்தில் தொடர்ந்து 2014 மற்றும் 2017 மக்களவை, சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்ற  பா.ஜ.கட்சிக்கு ஏதோ ஒரு பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்பதையே காட்டுகிறது. இடைத் தேர்தல்கள் பொதுவாகவே உள்ளூர் பிரச்சினைகளை மய்யமாக வைத்து நடைபெறுகின்றனவே அன்றி, அகில இந்திய அல்லது மாநில அளவிலான பிரச்சினைகள் முன்னிலை பெறுவதில்லை என்பது உண்மைதான். ஆனால் இந்த அளவுக்கு வாக்காளர்களின் ஆதரவை பா.ஜ.க. இழந்திருப்பது, நிச்சயமாக வாக்காளர்கள் மனமகிழ்ச்சி அற்றவர்களாக உள்ளனர் என்பதையே காட்டுகிறது. இந்த இரு தொகுதிகளிலும் உள்ளூர் பிரச்சினைகள் முன்னிலை பெற்றிருக்கக் கூடும் என்பதை நான் மறுக்கவில்லை. என்றாலும், நாடு முழுவதிலும் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டங்களையும், நாட்டின் பல பகுதிகளில் தலித்துகளும், மாணவர்களும் நடத்தி வரும் போராட்டங்களையும் இன்னமும் அலட்சியப்படுத்த பா.ஜ.க. நினைத்தால், நிச்சயமாக அது ஒரு மாபெரும் தவறை  செய்வதாகவே ஆகும். 2014 மற்றும் 2017 மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் பா.ஜ.கட்சிக்கு வாக்களித்த பெரும்பாலான கீழ்நிலை சமூகங்களைச் சேர்ந்த  வாக்காளர்கள், குறிப்பாக தலித்து களும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்தவர் களும் இந்த இடைத் தேர்தலில் பா.ஜ.கட்சியிடமிருந்து விலகிச் சென்று விட்டனர். வாக்காளர்களின் இந்த மனநிலை இந்த இரு மக்களவை தொகுதி அளவில் மட்டுமே நீடித்திருக்கும் என்றும், மாநில எல்லையைக் கடந்து சென்றிருக்க முடியாது என்றும் நம்புவதற்கு எந்த காரணமும் இல்லை. ராஜஸ்தான் மாநில அஜ்மீர் மற்றும் ஆள்வார் மக்களவைத் தொகுதிகளிலும், மத்தியப் பிரதேச மாநில கொலாராஸ் மற்றும் முங்கோலி சட்டமன்றத் தொகுதிகளிலும் பா.ஜ.க. பெற்ற தோல்வி இதற்கான சில அறிகுறிகளைக் காட்டுகின்றன. ஆனால், இந்த பா.ஜ.கட்சிக்கு எதிரான காற்று, எதிர்கட்சிகள் எதிர்பார்ப்பது போல பலமானதாக இல்லாமலும் போகலாம்.

பா.ஜ.கட்சிக்கு ஏற்பட்டிருக்கும் இந்த பின்னடைவுகள் அக்கட்சிக்கு எச்சரிக்கை மணி அடிப்பதாக இருக்க வேண்டும். அதே நேரத்தில், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் தான் பெற்ற வெற்றிக்காக காங்கிரசு கட்சியும், பீகார் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் பெற்ற தங்களின் வெற்றிக்காக மாநில கட்சிகளும் மகிழ்ச்சி நிறைந்தவை யாகவும், புத்துணர்வு பெற்றவையாகவும் இருக்க வேண் டும். பா.ஜ.கட்சிக்கு எதிரான ஒரு கூட்டணியை உருவாக்கு வதற்கான முயற்சிகளையும், நடைமுறைகளையும் இந்த வெற்றிகள் நிச்சயமாக விரைவு படுத்தும். ஆனால், இரண்டு மக்களவை தொகுதி தேர்தலில் கருத்தொற்றுமை ஏற்படுத்தப்பட்டது போன்று அவ்வளவு எளிதாக இருப்பதல்ல, அகில இந்திய அளவிலான பா.ஜ.கட்சிக்கு எதிரான கூட்டணியை அமைப்பது என்பது.

ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தலில் போட்டியிடும் பல்வேறு கட்சிகளின் தன்மையைக் கொண்டு பார்க்கும்போது, அகில இந்திய அளவில் பா.ஜ.கட்சிக்கு எதிரான ஒரு கூட்டணியை உருவாக்குவது என்பது அவ்வளவு எளிதான செயலல்ல என்றே தோன்றுகிறது. அகில இந்திய அளவில் பா.ஜ.கட்சிக்கு எதிரான கூட்டணியில் சேர்ந்து கொள்ள விரும்பும் மேற்கு வங்காள, ஒடிசா மற்றும் தமிழ்நாடு மாநில கட்சிகளும், சட்டமன்றத் தேர்தல்களில் தங்களில் ஒருவருக்கு ஒருவர் எதிராகப் போட்டியிடவேண்டியவர்களாக இருப்பார்கள். இத்தகைய சூழ்நிலையில் மேற்கொள்ள இயன்ற சிறந்த வழி, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், சத்தீஷ்கர், இமாசலப்பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.கட்சிக்கு எதிரான கூட்டணி அமைக்கும் முயற்சியில், பா.ஜ.கட்சிக்கு எதிராக இம்மாநிலங்களில்  இருமுனைப் போட்டியிட இயன்ற நிலையில் உள்ள காங்கிரசு கட்சி முன்னிலை வகிக்கலாம். அதே நேரத்தில், மாநில கட்சிகள் பலமாக உள்ள மாநிலங்களில், பீகார் உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களிலும்கூட, காங்கிரசு கட்சி பின்னிருக் கையை ஏற்றுக் கொள்ளத் தயாராகவும் விரும்புவதாகவும் இருக்க வேண்டும். பா.ஜ.கட்சிக்கு எதிரான தேர்தல் போராட்டத்துக்கு, மாநில  கட்சிகளும், தலைவர்களும் தலைமை தாங்கி வழிநடத்துவதற்கு காங்கிரசு கட்சி அனுமதித்து வழிவிட வேண்டும். இதனை காகிதத்தில் எழுதுவது வேண்டுமானால் சுலபமாக இருக் கும்; ஆனால் தேர்தல் களத்தில் நடை முறைப்படுத்துவது அவ்வளவு எளிதானது அல்ல.

நீண்ட காலமாக ஆட்சி அதிகாரத்தில் இருந்த மாநிலத் தலைவர்களின் தன்முனைப்பு இந்த கூட்டணி முயற்சிக்கு ஒரு பெரும் தடையாக இருக்கும் என்பதால், பல்வேறு மாநில கட்சிகளுடனான கூட்டணி ஏற்பாடுகள் மிகுந்த எச்சரிக்கையுடன் மேற்கொள்ளப்பட வேண்டியதாகும். ஒவ்வொருவரும் மோடிக்கு எதிரான கூட் டணியில் சேர்கின்றனர் அல்லது மோடிக்கு எதிராக அனைவரும் ஒன்று திரள்கின்றனர் என்ற தோற்றம் அளிக்கும் ஒரு சூழ்நிலை ஏற்படுவதை மாநில கட்சிகள்  தவிர்க்க வேண்டியது அவசியமானதாகும். பல மாநிலங்களில் பா.ஜ.கட்சிக்கு எதிராக காங்கிரசும், மற்ற மாநிலங்களில் பா.ஜ.கட்சிக்கு எதிராக மாநில கட்சிகளும்  போட்டியிடுவது போன்ற ஒரு தோற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும். 2019 மக்களவைத் தேர்தலை, நேரடியாக அதிபர் தேர்ந்தெடுக்கப்படும் தேர்தலைப் போன்றதொரு சூழ்நிலை உருவாக்கப்படுவது பா.ஜ.கட்சிக்கு மிகவும் ஆதரவான நிலையை ஏற்படுத்திவிடும். மக்களவைத் தேர்தலையே மோடிக்கு ஆதரவான அல்லது எதிரான தேர்தலாக எடுத்துக் காட்டுவதற்கு பா.ஜ.கட்சியினர் முயற்சி செய்வர். அதிபர் தேர்தல் நடைமுறைப்படியான தேர்தலாக மாற்றும் முயற்சியில் பா.ஜ.க. வெற்றி பெற்றுவிட்டால், எதிர் கட்சிகள் நிச்சயமாக தோல்வி அடையவே நேரும். எதிர் கட்சிகள் செய்ய வேண்டியதெல்லாம், கூடுமானவரை  அந்த நிலை உருவாவதைத் தவிர்ப்பதுதான்.

நன்றி: "டெக்கான் கிரானிகிள்" 19-03-2018

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner