எழுத்துரு அளவு Larger Font Smaller Font

என்னை ஒரு முட்டாளாக ஆக்க பா.ஜ.க. விரும்பியது

உங்களது  நோக்கம்தான் என்ன? மறைமுக செயல் திட்டம் தான் என்ன?

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் நேர்காணல் (05-04-2018 அன்றைய டில்லி "இந்தியன் எக்ஸ்பிரஸ்" பதிப்பில் வெளி யான ஆந்திரப்   பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் நேர்காணல்)

கேள்வி: பா.ஜ.கட்சியிடமிருந்து உறவினை முறித்துக் கொள்ள  நீங்கள் ஏன் நான்கு ஆண்டு காலம் காத் திருந்தீர்கள்?

பதில்: ஆந்திர மாநிலப் பிரிவினையின்போது ஆந்திரப்பிரதேச மாநிலத்துக்கு நீதி சேர்க்கப்படவில்லை என்ற ஒரே காரணத்தினால்தான் நான் பா.ஜ.க.வுடன் கூட்டு சேர்ந்தேன். அதற்காக காங்கிரசை மக்கள் தண்டித்து விட்டார்கள்.  பா.ஜ.க. நீதி வழங்கும் என்று ஆந்திர மக்கள் நம்பியிருந்தார்கள். அவசரம் அவசரமாக நானொரு முடிவு எடுத்திருந்தால், மக்கள் அதனை ஒப்புக் கொண்டிருக்க மாட்டார்கள். இணக்கமாக இருந்து மாநிலத்துக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றிக் கொள்வதுதான் எனது இயல்பு. கடந்த நான்கு ஆண்டுகளாக நான் பேசாமல் மவுனமாக இருந்தேன் என்ற கூறமுடியாது. 29 முறை நான் டில்லிக்கு வந்து,பிரதரையும், மற்ற அமைச்சர்களையும், நிதி அமைச்சரையும் நான் சந்தித்து பேசி இருக்கிறேன். ஒவ்வொரு முறையும் பீகாரோ, டில்லியோ, உத்தரப் பிரதேசமோ அல்லது குஜராத்தோ, எங்காவது ஓரிடத்தில் நடைபெற இருந்த தேர்தல்களையே அவர்கள் ஒரு காரணமாகக் கூறி வந்தார்கள். ஒரு கோப்பை காப்பி கொடுத்துவிட்டு இதனை அவர்கள் கூறுவார்கள். அதே நேரத்தில், எனது மாநிலத்தின் பிரச்சினைகளில் இருந்து  எனது கவனத்தையோ, ஆற்றலையோ திசை  திருப்புவதற்கு நான் விரும்பவில்லை. இது ஒரு புதிய மாநிலம் என்பதால், அதற்குண்டான பிரச்சினைகள் அதற்கு இருந்து கொண்டே இருந்தன. நான் கடினமாக உழைத்து மாநில வளர்ச்சியை இரண்டு இலக்கம் கொண்டதாக ஆக்கினேன். கடந்த வரவு - செலவு திட்டத்திலும், மத்திய அரசு இம்மாநிலத்துக்கு அநீதி யையே திரும்பவும் இழைத்துள்ளது. மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் நடைமுறையையே 14 ஆவது நிதிக்குழு நீக்கி விட்டது என்று அவர்கள் கூறினார்கள். ஆனால், அதனை மறுத்துள்ள நிதிக் குழுவின் தலைவர்களும், உறுப்பினர்களும் , தங்களது  கடமை மத்திய, மாநிலங்களுக்கு நிதி ஆதாரங்களைப் பகிர்ந்து அளிப்பதுதான் என்று கூறினர். பின்னர், மத்திய அரசு அதற்கு இணையான நிதியை வழங்கும் என்று அவர்கள் உறுதி அளித்தனர். அதிக அளவிலான நிதிஉதவி வழங்கப்படும் செயல்திட்டங்களைப் பற்றி அவர்கள் பேசினர். ஆனால், அது பற்றி எந்த தாக்கீதும் பிறப்பிக்கப்படவில்லை. பின்னர் அது வங்கிகள் மூலம் கொடுக்கப்படும் என்று கூறிய அவர்கள்,  சிறப்பு நோக்கத் திட்டத்தைத் தீட்டச் சொன்னார்கள். மாநிலத் துக்கான சிறப்பு அந்தஸ்தை நான் கேட்டேன். ஆனால், அவர்களோ சிறப்பு நோக்கத் திட்டத்தை எனக்குக் காட்டுகிறார்கள். ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தின் முதல்வராக ஒன்பது கால ஆண்டுகள் இருந்துள்ள நான் முதலாவது தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசும், அய்க்கிய கூட்டணி  அரசு அமையவும் காரணமாக இருந்தேன். நீங்களோ என்னை காக்க வைத்துவிட்டு, நான் கேட்பது போன்ற பயன்களை 11 மாநிலங்களுக்குக் கொடுத்திருக்கிறீர்கள். என்னை ஒரு முட்டாளாக ஆக்கவே நீங்கள் விரும்பினீர்கள். உங்களது நோக்கமும், மறைமுக செயல்திட்டமும்தான் என்ன?

கேள்வி: முதல் தே.ஜ.கூ அரசும், அய்க்கிய கூட்டணி அரசு அமையவும் நீங்கள் காரணமாக இருந்ததாகக் கூறுகிறீர்களே?  உங்களது கோரிக்கையை நிறைவேற் றுவது பற்றிய முதல் தே.ஜ.கூ. அரசு மற்றும் இரண்டாம் தே.ஜ.கூ. அரசின் செயல்பாடுகளை எவ்வாறு நீங்கள் ஒப்பிட்டுப் பார்க்கிறீர்கள்?

பதில்: மாநிலத்தின் நலன்களுக்காக மட்டுமல்லாமல், ஒட்டு மொத்த நாட்டின் நலன்களுக்காகவும் நான் கூறுகிறேன். திறந்தவிண்வெளிக் கொள்கை, பசுமை போர்த்த விமான நிலையங்கள், தங்க நாற்கர செயல் திட்டம், தொலைபேசித் துறை மீதிருந்த கட்டுப்பாடுகளை நீக்கியது ஆகிய அனைத்தும் எனது கருத்துகளே. அதற்காக நியமிக்கப்பட்ட செயல்குழு இணைத் தலைவராக இருந்த நான், கொள்கை வடிவமைப்பதில் ஒரு பகுதியாக இருந்தேன்; அதனால் மாநிலமும் பயன்பெற்றது. முதல் தே.ஜ.கூ. அரசு ஒரு கூட்டணி அரசு. இரண்டாம் தே.ஜ.கூ. அரசும் ஒரு கூட்டணி அரசுதான், பா.ஜ.க. மக்களவையில் அறுதிப் பெரும் பான்மையைப் பெற்றிருந்தது. முதலாவது தே.ஜ.கூ. அரசில் நான் பல கருத்துகளை அளித்தேன். இம்முறை , டிஜிட்டல் கரன்சி மாற்று; சுவாச் பாரத் ஆகிய  இரண்டு பிரச்சினைகள் பற்றிய கருத்து மட்டுமே என்னிடம் கேட்கப்பட்டது. உதவியோ, யோசனையோ என்னிடம் கேட்கும்போதெல்லாம் நான் அளித்து வந்துள்ளேன். இப்போது உள்ள பிரச்சினையே, அளிப்பதாக ஒப்புக் கொண்ட உறுதிமொழியை நிறைவேற்றத் தவறிப்போனது பற்றியதுதான். இப்போதெல்லாம் கூட்டணி கட்சி என்ற முறையில் நாங்கள் செய்வதற்கு என்று எந்த வேலையும் இல்லை. நடந்த ஒன்றிரண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டங்களிலும் நான் கலந்து கொண்டேன். டிஜிடல் கரன்சியையும், பணமதிப்பிழப்பு நடவடிக்கை யையும் நான் ஆதரித்தேன். ஆனால், பஞ்சாப் தேசிய வங்கி ஊழல் போன்ற புதிய பிரச்சினைகள் தோன் றியதால், நாட்டில் போதுமான பணப்புழக்கம் இல்லாமல் போனது. பாதுகாப்பு காரணங்களுக்காக வங்கி நடை முறை மீதே மக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர். நிதித் தீர்மானம் மற்றும் முதலீட்டு பாதுகாப்பு மசோதா இன்னமும் நிறைவேற்றப்படாமலேயே உள்ளது. எல்லாவற்றுக்கும் அரசே பொறுப்பு ஏற்றுக் கொள்ள வேண்டும். எந்த வித மோசடியும் நடந்திட அரசு அனும திக்கவே கூடாது. ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டதின் காரணமாக ஏற்பட்ட ஒரு பொதுவான வேறுபாடு உள்ளது; எனது கடந்த கால செயல்பாடுகளின் அடிப் படையில் மக்கள் என்னிடம் நம்பிக்கை கொண்டுள்ளனர். காயம் பட்டுள்ள அப்போராளிகளை மத்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். காயம் பட்ட உணர்வு அவர்களுக்கு இருக்கிறது. அவர்களுக்கு மேலும் மேலும் உங்களால் தீங்கு இழைக்க முடியாது. ஆந்திர மாநிலப் பிரிவினை சட்டத்தை நடைமுறைப்படுத்துவதும், அளிக்கப்பட்டுள்ள உறுதி மொழிகளை நிறைவேற்றுவதும் மத்திய அரசின் பொறுப்பும் கடமையுமாகும்.

கேள்வி: காங்கிரசு கட்சி ஆந்திரப்பிரதேச மக்களால் நிராகரிக்கப்பட்டுவிட்டது.  பா.ஜ.க. பற்றியும் மக்கள் அதே உணர்வைக் கொண்டிருப்பதாக நீங்கள் கூறியி ருக்கிறீர்கள். இந்த இரு கட்சிகளும் இல்லாத ஓர் அரசு நாட்டுக்கு நன்மை பயப்பதாக இருக்குமா?

பதில்: இப்போது அரசியலைப் பற்றிப் பேச நான் விரும்பவில்லை. ஆந்திரப் பிரதேச மாநிலத்தைப் பற்றிப் பேசவே இங்கு வந்திருக்கிறேன். தான்  அளித்த உறுதி மொழிகளை நிறைவேற்றிட மத்திய அரசு தவறிவிட்டது. முறையான அறிவியல் ஆய்வினை மேற்கொள்ளாமல் நீங்கள் ஆந்திர மாநிலப் பிரிவினையை செய்துள்ளீர்கள் என்று அனைத்து கட்சிகளையும் நான் எச்சரிக்கிறேன். மக்களவையில் அளிக்கப்பட்ட உறுதிமொழிகள் நிறை வேற்றப்படுகின்றனவா என்று கண்காணிப்பது மக்கள வையின் கடமை அல்லவா? நீங்கள் இதற்கெல்லாம் பதில் சொல்லித் தான் ஆகவேண்டும். முன்னதாக ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், அசாம் போன்ற மாநிலங்கள் பாதிக்கப்பட்டதை நாம் கண்டோம். ஆந்திரப் பிரதேச மாநிலத்துக்கும் அந்த கதி ஏற்படவேண்டும் என்று விரும்புகிறீர்கள். மக்களின் உணர்வுகளுடன் நீங்கள் ஏன் விளையாடிக்கொண்டிருக்கிறீர்கள்? அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதால், அவர்களது உணர்வுகள் காயம் பட்டுள்ளன. மக்களின் கோரிக்கையை இந்த நாடு, நாடாளுமன்றம், அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் ஊடகங்கள் மூலமாக நிறைவேற்றி வைக்க வேண்டும்.

கேள்வி: ஆந்திர மாநிலத்தில் உள்ள வேறொரு கட்சியின் அழுத்தத்தினால்தான் சந்திரபாபு நாயுடு டில்லிக்கு வந்து  இந்த பிரச்சினையை எழுப்புகிறார் என்றொரு வாதமும் இருக்கிறதே??

பதில்: தீயநோக்கம் கொண்ட ஒரு பிரச்சாரம் இது. இதே எதிர்கட்சி (ஒய்.எஸ்.ஆர். காங்கிரசு) 2014 இல் டில்லியில் இருந்தது. இன்று, அக்கட்சியின் தலைவர் மீது 11 குற்றப் பத்திரிகைகள் நிலுவையில் உள்ளன. மத்திய புலனாய்வுத் துறை மோசடி வழக்குகளை அவர் மீது தொடுத்துள்ளது. ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் வழக்கில் ஆஜராக அவர்கள் நீதிமன்றம் செல்கிறார்கள். அவர்களே பிரதமர் அலுவலகத்திற்கும் வருகின்றனர். இதன் மூலம் என்ன செய்தியை நீங்கள் அனுப்பிக் கொண்டிருக்கிறீர்கள்? அக்கட்சியுடன் சேர்ந்து கொண்டு ஒரு கூட்டுப் பிரச்சாரத்தை நீங்கள் மேற்கொண்டிருக் கிறீர்களா? அக்கட்சியுடன் ஏதோ ஒரு தீய நோக்கத்துடன் நீங்கள் சேர்ந்து கொண்டிருக்கிறீர்கள். அவர்கள் தொல் லைகளில் மாட்டிக் கொண்டுள்ளனர். எனவே அவர் களை நீங்கள் கட்டுப்படுத்த முடியும். நீங்கள் என்னைக் கட்டுப்படுத்த முடியாது. தலைவர்கள் ஒருவரை ஒருவர் மதிக்க  வேண்டும். நாங்கள் மாநில தலைவர்கள். நீங்கள் தேசிய தலைவர்கள். ஆனாலும், நாம் ஒருவரை ஒருவர் மதிக்க வேண்டும். எனது நற்தோற்றத்தை உங்களால் சிதைத்துவிட முடியாது. அவர்களை பிரதமர் அலுவலகம் பாதுகாக்கிறது. குற்றவாளிகளை நீங்கள் ஏன் பாதுகாக் கிறீர்கள்? நீங்கள் அனுப்பும் செய்திதான் என்ன?  40 ஆண்டு  கால அரசியல் அனுபவம் கொண்ட என்னை அந்த குற்றவாளியுடன் ஒப்பிட்டு எப்படி நீங்கள் பேசலாம்?

கேள்வி: தங்களது உதவியுடன்தான் தெலுங்கு தேசம் கட்சி தேர்தலில் ஜெயித்தது என்று பா.ஜ.க. தலைவர் கூறியிருக்கிறாரே?

பதில்: சில உள்ளாட்சிகட்கு தேர்தல்கள் நடைபெற் றன. அதன் முடிவுகள் பின்னர் வந்தன. எங்களுக்கு அதிக இடங்கள் கிடைத்தன. பா.ஜ.கட்சியுடன் ஒரு கூட் டணியையே நான் உருவாக்கி இருந்திருக்கக்கூடாது. பா.ஜ.க. எங்களுக்கு உதவும் என்ற நம்பிக்கையில், எனது மக்களின் நலனுக்காக அவர்களுடன் கூட்டணி சேர்ந்தேன்.

கேள்வி: 2019 இல் மத்தியில் எந்த மாதிரி அரசு அமையும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?

பதில்: அதைப் பற்றி இப்போது பேச நான் விரும்பவில்லை.

கேள்வி: அரசியல் ஆதாயத்துக்காக மத்திய அரசு இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது என்று நீங்கள் கருதுகிறீர்களா?

பதில்: எனது அரசியல் மற்றும் பொது வாழ்க்கை தெளிவானதாகவும், தூய்மையானதாகவும் இருக்கிறது. எனக்கு எதிராக எந்தக் குற்றச்சாட்டையும் அவர்களால் கூறமுடியாது.

கேள்வி: காங்கிரசு கட்சியையும், பா.ஜ.கட்சியையும் நீங்கள் எப்படி ஒப்பிட்டுப் பார்க்கிறீர்கள்? அவற்றைப் பற்றிய உங்களது மதிப்பீடு என்ன?

பதில்: அந்த நேரத்தில் காங்கிரசு கட்சி மக்களை ஏமாற்றியதை அவர்கள் பார்த்தனர். பா.ஜ.க. உதவி செய்ய உறுதியளித்தது. இப்போது அவர்களும் மக்களை ஏமாற்றிவிட்டார்கள். இப்போது என்ன நடந்தது என்பதை மக்கள் நினைவு வைத்துள்ளார்கள். அக்கட்சிகளை மதிப்பீடு செய்ய நான் விரும்பவில்லை.

கேள்வி: காங்கிரசு கட்சி தனது பாடத்தைக் கற்றுக் கொண்டது என்று கருதுகிறீர்களா?

பதில்: மத்தியில் ஆட்சிக்கு வந்தால் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து தருவோம் என்று அதனால்தான் அவர்கள் இப்போது கூறிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பாடம் கற்றுக் கொண்டார்களா இல்லையா என்பதை எதிர்காலம் சொல்லும்.

கேள்வி: பா.ஜ.கட்சியுடன் கைகோர்த்துக் கொண்டதால்,  உங்களது நல் வாய்ப்புகளைக் கெடுத்துக் கொண்டதாக நீங்கள் பார்க்கிறீர்களா?

பதில்: நான் பா.ஜ.க.வுடன் கூட்டு சேரும்போது மத்திய அரசிடமிருந்து ஏதோ சில உதவிகளைப் பெறுவதற்காக நான் சேர்கிறேன் என்று மக்கள் நம்பினார்கள். அரசாட்சி நிர்வாகத்திலும், மக்கள் நலனிலும் நான் மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்துள்ளேன். ஆனால், மத்திய அரசு ஏன் தனது உறுதிமொழிகளைக் காப்பாற்றவில்லை என்று மக்கள் கேட்கிறார்கள். எங்கள் மாநிலத்தில் தனிநபர் சராசரி வருவாய் மிகமிகளக் குறைவாக இருப்பதற்கு மத்திய அரசே காரணம்.

கேள்வி: அனைத்து முதலமைச்சர்களுக்கும், மாநில தலைவர்களுக்கும் மத்திய அரசைக் குறை கூறுவதற்கு பல விஷயங்கள் உள்ளன. மாநில அரசுகளைப் பற்றிய மத்திய அரசின் மனப்பான்மை மம்தா பானர்ஜி, நவீன் பட்நாயக் போன்றவர்களுக்கு ஒரு பிரச்சினையாகவே இருக்கிறது. 2019 இல் மத்திய அரசு இந்த வழியில் அமையும் என்று நீங்கள் பார்க்கிறீர்களா?

பதில்: இப்போதைய மத்திய பா.ஜ.க. அரசு மாநிலத் தலைவர்களை விரும்பவில்லை. கூட்டாட்சித் தலைவர் களையும், மாநிலத் தலைவர்களையும் அவர்களால் ஏற்று, செரிமானம் செய்து கொள்ள இயலவில்லை. எல்லா மாநிலங்களிலும் தங்களின் கட்சி மட்டுமே இருக்க வேண்டும் என்று பா.ஜ.க. விரும்புகிறது. மாநிலத் தலைவர்களின் கட்சிகளும் நாட்டில் உள்ளன. தங்கள் மாநில மக்களின் எதிர்பார்ப்புகளை மாநிலத் தலைவர்கள் சில நேரங்களில் நிறைவேற்றி வைக்கின்றனர். கூட்டுறவு கூட்டாட்சித் தத்துவத்தை தெலுங்கு தேசக் கட்சி முன்னிறுத்தி வளர்த்தது. சர்க்காரியா ஆணையம் கொண்டு வரப்படுவதற்கு நாங்களே காரணம். இப்போது அவர்கள் கூட்டுறவு கூட்டாட்சித் தத்துவத்தைப் பற்றி பேசுகின்றனர். ஆனால், நடைமுறையில் அது நிகழ்வதே இல்லை. எதிர்கால அரசியல் எவ்வாறு வடிவெடுக்கும் என்பதை இப்போது என்னால் கூறமுடியவில்லை.

கேள்வி: 15 ஆவது நிதிக் குழுவின்  பரிந்துரைகள் பற்றி விவாதிக்க கேரள நிதி அமைச்சர் டி.எம். அஸ்சக் கூட்டிய கூட்டத்தில் ஆந்திர மாநில அரசும் கலந்து கொள்ளுமா?

பதில்: எங்கள் மாநில அரசின் நிதி அமைச்சர் அக்கூட்டத்தில் கலந்து கொள்வார்.

கேள்வி: ஹரிகிஷன்சிங் சுர்ஜித் போன்ற தலைவர்களுடனெல்லாம் நீங்கள் பணியாற்றி இருக்கிறீர்கள். பிரதமராக வருவதற்கு அவர் விரும்பவில்லை என்ற போதிலும், காங்கிரசு கட்சிக்கு  எதிராக ஒரு கூட்டணி அரசைக் கொண்டு வரவேண்டும் என்று அவர் விரும்பினார். கட்சிகளை ஒன்றிணைத்து பா.ஜ.கட்சிக்கு எதிராக ஒரு கூட்டணியை  உருவாக்குவதற்கு தற்போதுள்ள சூழ்நிலையில் அவரைப் போல எவராவது இருக்கிறார்களா?

பதில்: சுர்ஜித் சிங் காலத்தில் எதிர்க்கட்சிகளை எல்லாம் நாங்கள் ஒன்றாகக் கொண்டு வந்தபோது, என்னை பிரதமர் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும்படி இரு முறை வலியுறுத்தினர். பிரதமர் பதவிக்கு ஜோதிபாசுவை பரிசீலனை செய்யும்படி நான் இடதுசாரிகளைக் கேட்டுக் கொண்டேன். கூட்டணி ஆட்சி நடத்திய அவருக்கு அனுபவம் இருந்தது என்பதுதான் அதன் காரணம். ஆனால் அதன் பிறகு, ஜோதிபாசு பிரதமராக ஆவதற்கு எதிராக அவர்களது கட்சி முடிவு செய்துவிட்டதாகக் கூறினார்கள்.

கேள்வி: அதற்காக பின்னர்  இடதுசாரிகள் வருந்தினார்கள்.  பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்வதில்லை என்ற உங்களது முடிவுக்கு பின்னர் எப்போதாவது வருந்தினீர்களா? பதில்: இல்லை; பிரதமராக வருவதற்கு நான் விரும்பவில்லை. அனைவரும் ஒன்று சேர்ந்து பாடுபட்டுத்தான் அத்தகையதொரு கூட்டணியை உருவாக்க வேண்டும். இன்றைய நிலையில், எனது கவலை எல்லாம் எனது மாநிலத்துக்கு நியாயம் பெறுவது ஒன்றுதான்.

நன்றி: "இந்தியன் எக்ஸ்பிரஸ்" 05-04-2018

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner