எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மத்திய அரசின் மாநிலங்களுக்கான நிதி பங்கீடு அணுகுமுறை

தென்னிந்திய மாநிலங்களில் மூண்டுள்ள பெருந்  தீ  நாட்டின் கூட்டமைப்பையே எரித்து பொசுக்கி விடக்கூடும் 

- ப. சிதம்பரம்

குடியரசுத் தலைவர் (அதாவது மத்திய அரசு) அய்ந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு நிதி ஆணையத்தை நியமனம் செய்வதற்கு அரசமைப்புச் சட்டத்தின் 280ஆம் பிரிவு வகை செய்கிறது. மத்திய, மாநில அரசுகளிடையே, ஒட்டு மொத்தமாகக் கிடைத்த நிகர வரி வருவாயை, எவ்வாறு பங்கிட்டுத் தருவது என்பதைப் பற்றியும், அத்தகைய வரிவருவாயை மாநிலங்களுக் கிடையே எவ்வாறு பிரித்தளிப்பது என்பதைப் பற்றியும் குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரைப்பதே அதன் முதலும், முக்கியமான கடமையாகும். அந்த ஆணையத்திற்கு வேறு சில கடமைகளும் உள்ளன. ஆனால், இக் கட்டுரையில் கையாளப்பட்டிருக்கும் முரண்பாட்டிற்கு அவை எந்த விதத்திலும் தொடர் புடையது அல்ல. மேலே குறிப்பிடப்பட்டுள்ள அந்த ஆணையத்தின் முதல் கடமையைப் பொறுத்தவரை, மாநிலங்கள் அனைத்தும் ஒன்றுபட்ட நிலையினை மேற்கொண்டுள்ளன. ஒவ்வொரு நிதி ஆணையத்திட மிருந்தும் அதிக அளவிலான வரிப் பங்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று அவை கோரி வந்துள்ளன. கடந்த நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி மாநிலங் களுக்கான வரி பங்கீடு 42 விழுக்காடு என்று நிர்ணயிக்கப் பட்டது. அவ்வாறு கிடைக்கும் வரி வருவாயை மாநிலங்களுக்கிடையே எவ்வாறு பகிர்ந்து அளிப்பது என்ற நிதி ஆணையத்தின் இரண்டாவது கடமையைப் பற்றிதான் இப்போது முரண்பாடு வெடித் துள்ளது. ஒவ்வொரு மாநிலமும் தங்களுக்கு அதிக வரிப் பங்கீடு தேவை என்றுதான் கோரி வருகின்றன. ஆனால் அவை கோரும் பங்கீட்டின் மொத்த தொகை பகிர்ந்தளிக்கப்பட வேண்டிய 42 சதவிகித வருவாயைவிட அதிகமாக வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் அளிக்கப்பட வேண்டிய வருவாய் பங்கீட்டினைத் தராமல் நிறுத்தி வைத்துக் கொள்ளவும் முடியாது.  வரிவருவாய் பங்கீட்டினை ஒதுக்கீடு செய்வதற்கான ஆக்கபூர்வ நோக்கம் கொண்ட சூழ்நிலைகள் அய்ந்து ஆண்டு காலத்தில் மாறிவிடக்கூடும்; மாறியிருக்கிறது என்பதுதான் அதன் காரணம். ஒரு மாநிலத்தின் வரிவருவாய் பங்கீடு சிறிதளவு குறைக்கப்பட்டாலும் கூட மாநில அரசுகள் ஒப்புக் கொள்ளாமல், எதிர்ப்பையும் மகிழ்ச்சியின்மையையும் தெரிவிக்கின்றன.  ஒவ்வொரு நிதி ஆணையத்தின் பணியும், எவருமே பொறாமைப்பட இயலாத கடினமான பணியாகும். ஆனால் 2017ஆம் ஆண்டு நவம்பரில் அமைக்கப்பட்ட பதினைந்தாவது நிதி ஆணையத்தின் பணியைப் போன்று வேறு எந்த நிதி ஆணையத்தின் பணியும் இருந்ததில்லை. பதினைந்தாவது நிதி ஆணையம் பரிசீலிக்க வேண்டிய விஷயங்கள் என்று குறிப்பிடப் பட்டுள்ள குறிப்புகளில்தான் இதன் காரணம் அடங்கியுள்ளது. வழக்கம் போலவே இந்த நிதி ஆணையம் பரிசீலிக்க வேண்டிய முக்கியமான செய்திக் குறிப்புகள் வழக்கம் போலவே அமைந்திருந்தன. ஆனால், கடந்த கால நடைமுறையில் இருந்து இரு வழிகளில் அது மாற்றம் பெற்றிருப்பது குறிப்பிடத் தக்கதாகும்.  முதலாவதாக,  - மக்கள் தொகை விகிதம் மாற்றியமைக்கப்படுவதை நோக்கி மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் மற்றும் முன்னேற்றங்கள், மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துதல், வாக்காளர்களின் ஆதரவைப் பெறுவதற்காக இலவசங்களை வழங்குவதில் கட்டுப்பாட்டினை கடைப்பிடித்தல் போன்றவைகளுக் காக சில குறிப்பிட்ட செயல்திறன்களின் அடிப்படை யிலான ஊக்கத் தொகை வழங்குவது பற்றி பரிசீலிக் கும்படியும்,  அவ்வாறு பரிசீலிக்கும்போது, இது வரை பின்பற்றப்பட்டு வந்த  1971 ஆம் ஆண்டு மக்கள் தொகையைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகையைக் கணக்கில் எடுத்துக் கொள்ளும்படியும் நிதி ஆணையத்தை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த இரு மாற்றங்களுமே, மத்திய மாநில அரசுகளுக்கிடையேயான உறவில் தீவிரமான பாதிப் புகளை ஏற்படுத்த இயன்ற  மிகப் பெரிய மாற்றங்கள் ஆகும். அரசமைப்புச் சட்டக் கட்டமைப்பின்படி, வரி களை விதிப்பதற்கான அதிகப்படியான அதிகாரங்கள் மத்திய அரசுக்கும், செலவினங்களில் கூடுதலான பங்கு செலவிடும் கடமை மாநில அரசுகளுக்கும் வழங்கப்பட் டுள்ளன. எனவே மத்திய அரசின் நிகர வரிவருவாயை மாநிலங்களுக்குப் பகிர்ந்து அளிப்பதில் ஒரு நியாயமான நடைமுறை பின்பற்றப்படவேண்டியது மிகவும் இன்றி யமையாதது ஆகும். மத்திய அரசின் வரவு செலவு திட்டத்தின் மேல் நாடாளுமன்றத்திற்கு எவ்வளவு அதிகாரம் உள்ளதோ, மாநில வரவு செலவு திட்டத்தின் மீது மாநில சட்டமன்றங்களுக்கும்  அதிகாரம் உள்ளது.

மாநில அரசுகளின் மீது தனது திட்டங்களைத் திணிப்பதற்கான மத்திய அரசின் விருப்பத்தை நிறை வேற்றி வைப்பதற்கான ஓர் அமைப்பு அல்ல நிதி ஆணையம். எங்களுக்கு சேரவேண்டிய நியாயமான வரி வருவாய் பங்களிப்பினை எங்களுக்குக் கொடுத்து விட்டு, அந்த நிதியை எவ்வாறு பயன்படுத்துவது என்ற முடிவை மாநில சட்டமன்றங்கள் செய்யுமாறு விட்டுவிடுங்கள் என்று மாநில அரசுகள் கூறுவதற்கு அரசமைப்புச் சட்டப்படி ஒவ்வொரு மாநிலத்திற்கும் உரிமை உள்ளது.

இரண்டாவது மாற்றம் மிகமிக மோசமான பாதிப் புகளை ஏற்படுத்த இயன்ற மாற்றமாகும். இது வரை, மாநிலங்களுக்கு வரிவருவாய் பங்கீடு அளிப்பதில்,  1971 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு புள்ளி விவரங்கள்தான் பின்பற்றப்பட்டு வந்தன. தங்கள் மாநில மக்கள்தொகையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அளவுக்கு மிகச் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்களைப் பாதுகாப்பதற்கு 1971ஆம் ஆண்டு மக்கள் தொகையை அடிப்படையாகத் தொடர்ந்து கடைபிடிக்க முடிவெடுக் கப்பட்டது.  பதினான்காவது நிதிக் குழு இதில் ஒரு சிறு மாற்றத்தை ஏற்படுத்தியது. 1971 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பைப் பின்பற்றி அளிக்கப்படும்  ஊக்கத்தொகையின் அளவு 25 விழுக்காட்டில் இருந்து 17.5 விழுக்காட்டுக்குக் குறைத்தும்,  2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை புள்ளி விவரங்களுக்கு  பத்து விழுக்காடு ஊக்கத்தொகையைக் கூடுதலாக அளித்தும் ஒரு புதிய நடைமுறையை உருவாக்கியது. இப்போது 1971 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கை முற்றிலுமாகப் புறக்கணித்து விட்டு, 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பையே கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பதினைந்தாவது நிதிக் குழுவிற்கு மத்திய அரசு ஆணை பிறப்பித்திருப்பது, தங்களது மாநிலங்களில் மக்கள் தொகையை 1971 ஆம் ஆண்டுக் கும் 2011 ஆம் ஆண்டிற்கும் இடையே உயர்ந்து விடாமல் நிலையாக வைத்திருப்பதற்காக பாடுபட்ட மாநிலங் களுக்கு அதற்கான அளிக்கப் படும் ஒரு தண்டனையே என்பது தெளிவாகத் தெரிகிறது. நிதி ஆதாரம் திரட்டுவதற்கான அதிக ஆற்றல் அற்ற,  குறைந்த வருவாய் உள்ள, வரலாற்று ரீதியிலான பாதகங்கள் கொண்டுள்ள, மிகமிகக் குறைந்த அளவு முன்னேற்றம் பெற்றுள்ள  மாநிலங்களுக்கு கூடுதலான ஆதரவு அளிக்க வேண்டும் என்ற வாதம் ஒரு வலுமான வாதமாக இருக்கலாலம். ஆனாலும், இத்தகைய வளர்ச்சி குன்றிய மாநிலங்களுக்கு, இக்காரணம் காட்டியே,  அது வரை இல்லாத உயர்ந்த அளவு நிதி ஆதார உதவித் தொகை யாக 47.5 விழுக்காட்டில் இருந்து 50 விழுக்காட்டுக்கு உயர்த்தப்பட்டது. எவ்வாறாயினும், 1971 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் இருந்து, 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கு மாற்றப்படுவது எந்த விதத்திலும் நியாயப்படுத்தப்பட முடியாதது ஆகும். உண்மையைக் கூறுவதானால், தங்கள் மாநில மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திக் கொள்ளத் தவறி அலட்சியப் படுத்திய இத்தகைய மாநிலங்களுக்கு ஊக்கத் தொகை என்ற பெயரில் கூடுதல் நிதிஉதவி அளிப்பது சிந்தனைக்கு முரணான முறைகேடே ஆகும். நன்கு நிர்வகிக்கப்படும், திறமையாக செயலாற்றி வரும் மாநிலங்கள்  அவர்களுக்கு உரிய நியாயமான வரிவருவாய் பங்கீட்டினை குறிப்பிடத்தக்க அளவில் இழந்துள்ளன. (அட்டவணையைக் காண்க).

தங்களது சிறப்பான ஆட்சி மற்றும் தங்கள் மாநிலம் அடைந்துள்ள மேலான முன்னேற்றங்கள் காரணமாக,   தெற்கு மாநிலங்கள் 6.338 விழுக்காடு வரிவருவாய் பங்கீட்டினை இழந்துள்ளன. ஆனாலும், இந்திய மொத்த மக்கள் தொகையில் தங்கள் மாநிலத்தின் பங்கு வீழ்ச்சி அடையக் கூடிய விளைவுகளுக்கு எதிரான பாதுகாப் பாவது  இம்மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

1971ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக் கெடுப்பின்படி இம்மாநிலங்களின் மொத்த மக்கள் தொகை,  இந்தியாவின் ஒட்டு மொத்த மக்கள் தொகையில் 24.7 சதவிகிதமாக இருந்தது. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி அது 20.7 விழுக்காடாக வீழ்ச்சி அடைந் துள்ளது. மற்ற அனைத்து உண்மைகளும் இப்போது உள்ளபடியே தொடருமேயானால், 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்பெடுப்பையே மாநிலங் களுக்கிடையே வரிவருவாய் பங்கீடு செய்வதில் பின்பற்ற வேண்டும் என்று பதினைந்தாவது நிதிக் குழுவிற்கு மத்திய அரசு அளித்துள்ள ஆணை,  தென் மாநிலங்களின் வரிவருவாய் பங்கீட்டினை மேலும் பெரிய அளவில் குறைத்துவிடும். 1991 ஆம் ஆண்டிற்குப் பிறகு, வெளிப் படையான பொருளாதாரச் செயல்பாடு களை மேற்கொள்வது, , குறைந்த அளவு கட்டுப்பாடுகளை விதிப்பது  மற்றும் மாநில அளவிலான குறிப்பிட்ட உத்திகளைப் பயன்படுத்திக் கொள்வது ஆகியவற்றின் பயன்களை, சாதகங்களை  ஒவ்வொரு மாநிலமும் பெற்றி ருந்தது. முன்னர் குறைந்த நிதி ஆதாரமும், ஆற்றலும் கொண்டவை என்று தங்களைப் பற்றி கூறிக் கொண்ட மாநிலங்கள் எல்லாம் உயர்ந்த அளவு வளர்ச்சி விகிதங் களை தற்போது எட்டியுள்ளதாகக் கூறிக் கொள்கின்றன. இன்னமும் ஏழ்மை நிலையில் உள்ள மாநிலங்களுக்காக நம்மால் பரிதாபப்பட இயலும்;  ஆனால் திறமையுடன் செயல்படும் மாநிலங்களின் உரிமைகளையும், எதிர் பார்ப்புகளையும் அலட்சியப்படுத்தி விட நம்மால் இயலாது.

மத்திய அரசு ஒரு பெருந்தீயை கொளுத்திவிட்டது.  தெற்கே வெடித்தெழுந்துள்ள தீப்பிழம்புகள் நாட்டின் கூட்டமைப்பையே எரித்துப் பொசுக்கிவிடுவதற்கு முன்பு, மத்திய அரசால் மூட்டப்பட்டுள்ள இந்தத் தீ விரைவில் அணைக்கப்பட வேண்டும்.

நன்றி: பைனான்சியல் எக்ஸ்பிரஸ் 08-04-2018

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner