எழுத்துரு அளவு Larger Font Smaller Font

-   பூர்ணிமா எஸ். திரிபாதி

 

(தவிர்க்க இயலாதபடி பா.ஜ.கட்சியின் செல்வாக்கில் ஏற்படும் சரிவு,  2019ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தங்களுக்கு சாதகமாக வேலை செய்யும் என்ற காங்கிரசு கட்சியின் கண்ணோட்டத்திற்கு, இந்தி பேசும் மய்ய மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் ஊக்கம் அளித்துள்ளன.)

2019 ஆம் ஆண்டில் செங்கோட்டையில் இந்திய பிரதமராக ராகுல் காந்தி கொடி ஏற்றுவார் என்று மார்ச் 18 அன்று நவ்ஜோத் சித்து அறிவித்தபோது, அகில இந்திய காங்கிரசு தலைவராக ராகுல் காந்தி   பதவியேற்ற டில்லியில் நடைபெற்ற காங்கிரசு மாநாட்டின் பிரதிநிதிகள் கட்டுக்கு அடங்காத உற்சாகத்துடன் கூச்சலிட்டு, முழக்க மிட்டு, பெரிய அளவிலான பாராட்டுகளை கைகளைத் தட்டி வெளிப்படுத்தியபோது, பெருமையால் பூரித்துப் போன தாய் சோனியா காந்தியும், அவரது மகன் ராகுல் காந்தியும் பொருள் நிறைந்ததொரு பார்வையில் ஒரு வரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். பஞ்சாப் சட்டமன் றத் தேர்தலுக்கு சற்று முன்புதான் பா.ஜ.கட்சியில் இருந்து விலகி காங்கிரசு கட்சியில் சேர்ந்து கொண்டவரும், தற்போதைய பஞ்சாப் மாநில அமைச்சராக இருப்பவரு மான சித்து, இரண்டு நாள் காங்கிரசு கட்சியின் மாநாட்டின் இறுதி நாளன்று பேசிய போது இவ்வாறு கூறினார். அவ்வாறு அவர் கூறியதற்குக் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடையே இருந்து எழுந்த உற்சாகமான வரவேற்பு, சித்துவைத் தொடர்ந்து பேச எழுந்த ராகுல் காந்திக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்திருந்தது. எப்படி யாயினும் அன்று பிரதமர் நரேந்திர மோடி மீது முன் னெப்போதும் இல்லாத அளவில் ஒரு கடுமையான தாக்குதலை ராகுல் காந்தி மேற்கொண்டார். மோடி தன்னை ஒரு கடவுளின் அவதாரம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்... மோடி ஊழலுக்கு எதிராகப் போரிடவில்லை; மோடியே ஊழல் வடிவமாக திகழ்கிறார் என்று ராகுல் காந்தி அறிவித்தார். நரேந்திர மோடி தனது பெயரின் பிற்பாதியை மிகப் பெரிய திருட்டை செய்துள்ள நீரவ் மோடியுடனும், கிரிக்கெட் வாரியத்தில் மிகப் பெரிய ஊழல் செய்த லலித் மோடியுடனும் பகிர்ந்து கொண்டு உள்ளார் என்று ராகுல் கூறினார். போதுமான வேலை வாய்ப்புகள் இன்றி,  மக்கள் வறுமையாலும், கடன் தொல்லையாலும் தற்கொலை செய்து கொண்டிருக்கும் போது,  பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி போன்ற திட்டங்களால்  வர்த்தகமும், வியாபாரமும் பாழடைந்து, மக்கள் கடுந் துன்பத்தில் துயருற்றுக் கொண்டிருக்கும்போது,  யோகா தினம் போன்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து கொண்டிருப்பதாகவும், வாருங்கள், நாம் யோகா செய்யலாம்  என்று மக்களை அழைப்பதாகவும் நரேந்திர மோடி பற்றி  ராகுல் கிண்டல் செய்தார். 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலை வர்ணித்த ராகுல் காந்தி, அது உண்மைக்கும், பொய்க்கும் இடையே நடக்கும் போர் என்று குறிப்பிட்டார். பொய் மூட்டைகளை அவிழ்த்து விடும் பா.ஜ.கட்சியினருக்கும், ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக் கும்  எதிராக, உண்மைக்காகப் போராடும் காங்கிரசு இறுதியில் வெற்றி பெறும் என்றும் அவர் கூறினார். தங்களது சொந்த பகைகளை மறந்துவிட்டு, காங்கிரசு தலைவர்களும், தொண்டர்களும் ஒன்று சேர்ந்து காங்கிரசின் வெற்றிக்காகப் பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்ட ராகுல் காந்தி, தேர்தலுக்குப் பிறகு வேண்டுமானால் நீங்கள் எவ்வளவு சண்டை வேண்டு மானாலும் போட்டுக் கொள்ளுங்கள் என்று அவர் கூறியதை மாநாட்டு பிரதிநிதிகள் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றனர்.

மாநாட்டில் கலந்து கொண்ட, எதைப் பற்றியும் மிக வும் மென்மையாகப் பேசும்  முன்னாள் பிரதமர் மன் மோகன்சிங்  மூர்க்கத்தனமான ஒரு அவதாரம் எடுத்தது போல தோன்றினார்; முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம் பரமும் அவரைப் போலவே மிகத் தீவிரமாக மாநாட்டில்  பேசினார். இந்தியப் பொருளாதார நிலையில் ஒரு பெரும் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டதற்காக தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசைக் கடுமையாக சாடிய மன் மோகன்சிங், சில்லறைத் தனமான அரசியலை செய்து கொண்டிருந்ததன் விளைவாக பாதுகாப்பற்ற எல்லைப் புறங்களையும், வெற்று உறுதி மொழிகளையும் அது உருவாக்கியுள்ளது என்று அவர் கூறினார்.  நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக கிடைத்த பொன்னான வாய்ப்பை, தங்களது பொறுப்பற்ற, ஆடம்பரமான பண மதிப்பிழப்பு, சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு போன்ற திட்டங்களால்  பாழடையச் செய்துவிட்டதாக ப.சிதம் பரம் அரசை வன்மையாகக் கண்டித்தார். ஒவ்வொரு பொருளாதாரப் பிரச்சினைக்கும் அரசு கூறும் பதில், எதிர்ப்பிரச்சாரம் செய்வதும், முழக்கங்கள் எழுப்புவதும், பொய் புள்ளி விவரங்களைத் தயாரிப்பதும் தான் என்று அவர் குற்றம் சாட்டினார். இந்த மாபெரும் சிக்கலில் இருந்து நாட்டினை மீட்க இயன்ற ஒரே ஒரு கட்சி காங் கிரசு கட்சிதான். இதனை நான் எனது அகம்பாவத்தாலோ அல்லது மக்களை ஏமாற்றவேண்டும் என்பதற்கோ சொல்லவில்லை. இத்தகைய செயலை இதற்கு முன்பும் நாங்கள் செய்திருக்கிறோம் என்பதால், மறுபடியும் அத னைச் செய்ய எங்களால் இயலும் என்று அவர் பேசினார். கடந்த நான்கு ஆண்டு கால மத்திய பா.ஜ.க. ஆட்சி ஒரு கெட்ட கனவைப் போன்றிருக்கிறது. எங்களது கூட்டணி யினருடனும், நண்பர்களுடனும் வந்து மீண்டும் அத னைச் செய்ய எங்களால் முடியும் என்று அவர் பேசினார்.

வடகிழக்கு மாநிலத் தேர்தல்களில் வெட்கப்படத் தக்க தேர்தல் தோல்விகளை சந்தித்த பிறகும், மாநாட்டில் பேசிய அனைவரது பேச்சுகளிலும் எதிரொலித்த ஆக்க பூர்வமான நம்பிக்கை, உண்மையில் வியப்பளிப்பதாகவே உள்ளது. உத்தரப்பிரதேச மக்களவை இடைத் தேர்தலில் இரு தொகுதிகளிலும் காங்கிரஸ் முன்பணத்தை இழந்தி ருக்கிறது. பகுஜன் சமாஜ் கட்சியுடன் கைகோர்த்துக் கொண்ட சமாஜ்வாடி கட்சி கோரக்பூர், பூல்பூர் இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. பூல்பூர் தொகுதியில் வெறும் 19,353 வாக்குகளைப் பெற்ற காங்கிரசு கட்சி வேட்பாளர் மனீஷ் மிஸ்ரா நான்காவது இடத்தைப் பிடித் துள்ளார். கட்சி மாறி என்று புகழ்பெற்ற தனி வேட்பாளர் ஆடிக் அகமது கூட 48,094 வாக்குகளைப் பெற்றிருக் கிறார். கோரக்பூர் தொகுதியில் காங்கிரசு வேட்பாளர்  டாக்டர் சுர்ஹிதா கரீம் 18, 858 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

திரிபுரா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசு கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. நீண்ட காலமா கவே  முக்கிய எதிர்கட்சியாக திகழ்ந்த காங்கிரசு கட்சிக்கு 35-36 சதவிகித வாக்காளர்களின் ஆதரவு இருந்து வந்தது. இம்முறை அது வெறும் 1 . 8 சதவிகிதம் அளவுக்கு வீழ்ச்சி அடைந்துவிட்டது. ஆட்சி அதிகாரத்தில் காங் கிரசு இருந்த மேகாலயா மாநிலத்தில் 59 தொகுதிகளில் 21 தொகுதிகளில் அது வெற்றி பெற்ற போதும்,  வெறும் இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற பா.ஜ.க. மாநில கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சியை அமைத்துள் ளது. காங்கிரசு கட்சிக்கு இதை விட மிக மோசமான அவமானம் வேறு எதுவும் இருக்க முடியாது. அப்படி யிருக்கும்போது, காங்கிரசு மாநாட்டில் வெளிப்பட்ட உற்சாகம் காங்கிரசு கட்சிக்கு எங்கிருந்து கிடைத்தது?

பா.ஜ.கட்சியுடன் காங்கிரசு கட்சி நேரடியாக மோதக் கூடிய மாநிலங்களில் இருந்து நம்பிக்கை தரும் அறிகுறிகள் கிடைத்திருப்பதாக ஒரு தலைவர் கூறுகிறார். 2014ஆம் ஆண்டு தேர்தலில் மத்தியப் பிரதேச மாநில 27 தொகுதிகளில் 25 தொகுதிகளை வென்ற பா.ஜ.க. வுக்கு ஆதரவாக இருந்து வந்த மக்களின் மனநிலையில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டிருப்பதாக அண்மைக் கால போக்குகள் சுட்டிக் காட்டுகின்றன. இங்கு சித்ரகூடம், ஆடர் தொகுதிகளில் சென்ற ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற  இடைத் தேர்தலில் காங்கிரசு கட்சி இரண்டு தொகுதிகளையுமே கைப்பற்றியுள்ளது. 2014ஆம் ஆண்டு தேர்தலில் ராஜஸ்தானில் பா.ஜ.க. 25 மக்களவை தொகுதிகளையுமே கைப்பற்றி யிருந்தது.  அண்மையில் நடைபெற்ற  இடைத் தேர்தலில் ஆல்வார் மற்றும் ஆஜ் மீர்  மக்களவைத் தொகுதி களை  காங்கிரசு கட்சி பா.ஜ.க. விடமிருந்து கைப்பற்றியுள்ளது. ஆஜ்மீர் தொகுதியில் காங்கிரசு வேட்பாளர் ரகுசர்மா, பா.ஜ.க. வேட்பாளர் ராம்ஸ்வரூப் லம்பாவை விட ஒரு லட்சத்துக்கும் அதிக மான வாக்குகளைப் பெற்று தோற்கடித்தார். ஆல்வார் தொகுதியில் காங்கிரசு வேட்பாளர் டாக்டர் கரண் சிங் யாதவ் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

2014ஆம் ஆண்டு தேர்தலில்  குஜராத்தில் மொத்த முள்ள 26  மக்கவைத் தொகுதிகளிலும்  வெற்றி பெற்ற பா.ஜ.க. 2019ஆம் ஆண்டு தேர்தலில் சில தொகுதிகளை இழக்கும் என்று காங்கிரசு தலைவர்கள் நம்புகின்றனர். கடந்த ஆண்டில் இங்கு நடந்த சட்டமன்றத் தேர்தலில், பொதுமக்கள் இயக்கத் தலைவர்களான இளைஞர்கள்  ஹர்திக் படேல் மற்றும் ஜிக்னேஷ் மேவானி ஆகியோ ருடன் காங்கிரசு கட்சி கை கோர்த்துக் கொண்டது.  இந்த அறிவார்ந்த செயல் காரணமாக,  150 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று எதிர்பார்த்த பா.ஜ.கட்சி 99 தொகுதிகளுடன் தடுத்து நிறுத்தப் பட்டது.

நன்றி: "ஃப்ரண்ட் லைன்", 13 ஏப்ரல் 2018  தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner