எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நாட்டின் நிதி ஆதாரங்களை ஒன்று திரட்டி தங்களுக்குள் பங்கிட்டுக் கொள்ளும் ஏற்பாடுகளை உலகில் உள்ள பெரும்பாலான கூட்டமைப்பு நாடுகள் தங்களுக்குள் செய்து கொண்டிருக்கின்றன. நிதி ஆதாரங்கள், குறிப்பாக மாநில அரசுகளின் நிதி ஆதாரங்கள் நன்றாக பாதுகாக்கும் அளவில்,  நாட்டில் திரட்டப்படும்  ஒட்டு மொத்த நிதி ஆதாரங்களையும் மத்திய, மாநில அரசுகளிடையே பகிர்ந்தளிக்கும் நடைமுறையை பரிந்துரைப்பதற்கு அய்ந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு நிதி ஆணையத்தை நியமனம் செய்வதற்கு இந்திய அரசமைப்புச் சட்டம் வகை செய்துள்ளது. அதனால்,  மாநிலங்களிடையே பகிர்ந்தளிக்கப்படுவதற்காக திரட்டப்படும் நிதி ஆதாரங்கள் பகிர்ந்தளிக்கப்படுவதற்கு,  இந்த நிதி ஆணையம் என்னென்ன விஷயங்களைப் பரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அளிக்கும் குறிப்பு மிகமிக முக்கியமானதாக ஆகிவிடுகிறது. மேம்பாட்டுக்கான பொது நிதி இவ்வாறாக மாநிலங்களுக்கிடையே நியாயமாகவும், சமமான முறையிலும் பகிர்ந்தளிக்கப்படுமா என்ற சந்தேகத்தை மத்திய அரசு அளித்துள்ள இந்த குறிப்பு உருவாக்கியுள்ளது. இது பற்றிய சில பொது விவரங்களை எடுத்துக் காட்டும் நோக்கத்துடன் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

 

பினராயி விஜயன்

முதல் அமைச்சர், கேரளா

 

நேற்றைய தொடர்ச்சி...

நான்காவதாக, எந்த ஒரு ஆணையத்திடமிருந்தும்  பரிசீலனை செய்து பரிந்துரை செய்யக் கோரும் எந்த ஒரு கடிதத்திலும் இடம் பெறக் கூடாத வருவாய் பற்றாக்குறை மான்யங்கள் மாநிலங்களுக்கு அளிக்கப் படத்தான் வேண்டுமா என்பதையும் 15 ஆவது நிதி ஆணையம் பரிசீலனை செய்யும் என்ற குறிப்பு மாநில அரசுகளின் செயல்பாடுகளில் வெளிப்படையாகக் குறுக்கிடுவதும், ஆபத்து மிகுந்ததும் ஆகும். மாநில அரசுகள் பின்பற்றி வரும் முன்னேற்ற செயல் திட்டங்களின் பக்க விளைவுகளான  இந்த வருவாய் பற்றாக் குறைககளை மிகக் குறுகிய காலத்தில் குறைத்து விட முடியாது. எடுத்துக் காட்டாக, கேரள மாநிலத்தில் மனித வள மேம்பாட்டு சாதனைகள் அனைத்தும்,  குறிப்பாக சுகாதாரம், மருத்துவம், கல்வி போன்ற சமூக நலத் துறைகளில் மக்களுக்காக அரசு செய்துள்ள முதலீடுகளின் மூலம் கட்டமைக்கப்பட்டவையாகும். அவற்றிற்காக  மாநில அரசுகளின் பொது செலவினங் களில் செய்யப்படும் செலவுகள் மிகப் பெரிய அளவி லானவை என்பதால்,  கூடுதல் வரி விதிக்கும் முயற்சி களுக்குப் பிறகும், வருவாய் பற்றாக்குறையை குறைப்பது என்பது எளிதான செயலல்ல. நிதிஆதாரங்களின் பகிர்ந்தளிப்பிற்குப் பிறகு மாநிலங்களுக்கு அளிக்கப்படும் நிதிப் பற்றாக்குறை  மான்யங்கள் வழங்கும் நடை முறையை கைவிடுவது என்பது,   மாநிலங்களின் கூட் டுறவு கூட்டாட்சி என்ற கோட்பாட்டுக்கு எதிரானது ஆகும்.

அய்ந்தாவது, 15 ஆவது நிதி ஆணையம் பரிசீலித்து பரிந்துரைக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுள்ள குறிப்புகளில், மத்திய அரசு பொறுப்பேற்றுக் கொண்ட செலவினங்கள் அனைத்துக்கும் நிதி பகிர்ந்தளிப்பதில் முன்னுரிமை அளிக்க வேண்டும்  என்பது வெளிப் படையாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்கள் இணைந்த கூட்டாட்சி என்னும் தத்துவத்தையும், மாநில அரசுகள் பெற்றுள்ள வரவு - செலவுகளைத் திட்டமிடும் தன்னாட்சியையும் நிலை நிறுத்தும் தனது அரசமைப்புச் சட்டப்படியான  பொறுப்பினை உறுதிப்படுத்த வேண்டும் என்று 15 ஆவது நிதி ஆணையத்தை நாம் கேட்டுக் கொள்ள வேண்டும். மாநிலங்களுக்கு நிதிஆதாரங் களைப் பகிர்ந்து அளிக்கும்போது, மத்திய அரசுக்கு ஒதுக்கியது போக எஞ்சியுள்ள நிதியையே மாநிலங் களுக்கு பிரித்தளிப்பது என்ற அணுகுமுறையை நிதி ஆணையம் மேற்கொள்ளக்கூடாது.

கோட்பாட்டு செயல் திட்டம்

ஆறாவதாக,  மக்கள் தொகை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதிஆதாரங்களை பிரித்தளித்தல் போன்ற நிதிப் பொறுப்புகளையும் கடந்து, மாநிலங்களின் செயல்பாட்டுத் திறன் அடிப்படையில் ஊக்கத் தொகை அளிப்பது பற்றியும் பரிசீலனை செய்து பரிந்துரைக்குமாறு 15 ஆவது நிதி ஆணையத்தை மத்திய அரசு கேட்டு இருப்பது இதற்கு முன்பு எப்போதுமே செய்யாத ஒன்றாகும். இது மத்திய அரசின் கண்ணோட்டத்தையும், கோட்பாட்டு விருப்பங்களையும் எதிரொலிப்பதாக இருப்பதாகும். அத்துடன் அது, மாநில அரசுகளின் நிதி நிர்வாக எல்லைக்குள் மத்திய அரசு ஊடுருவுவதாகவும் ஆகும். பல துறைகளிலும் முன்னேற்றத்திற்கான செயல் பாடுகளை மேற்கொள்வதற்காக, , தங்கள் மாநிலத்துக்கு என்று  சில செயல் திட்டங்களை மாநில அரசுகள் நிர்ண யித்துக் கொண்டுள்ளன என்பதை மறந்துவிடக்கூடாது. இத்துறைகளின் பட்டியல் சுகாதாரம், மருத்துவம், கல்வி, வனமேலாண்மை, உணவுப் பொருள்கள் பொது விநியோகத்திட்டம், விவசாய உற்பத்தி என்று நீண்டு கொண்டே செல்வதாகும். இத்தகைய முன்னேற்றங்கள் மாநிலங்களில் ஏற்பட்டுள்ளதற்குக் காரணமாக மத்திய அரசு வழங்கிய ஊக்கத் தொகை காரணமாக இருக்க வில்லை. மிகச் சிறந்த முன்னேற்றத்துக்கான நடை முறைகள்,  மாநில அரசுகளின் சொந்த முயற்சிகளின் விளைவாக உருவாக்கப்பட்டவையே ஆகும்.

இவ்வாறு, 'அளவிடப்பட இயன்ற செயல்திறனின் அடிப்படையில் ஊக்கத் தொகை வழங்குதல்'  என்ற திட்டத்தை நிதி ஆணையம் பரிந்துரைப்பது என்பது, அரசமைப்புச் சட்டத்தில் விதிக்கப்பட்டுள்ள மாநிலங் களின் கூட்டாட்சித் தத்துவத்தின் மீதான ஒரு தாக்குதலே அன்றி வேறல்ல. மாநில அரசுகளின் அன்றாடச் செயல்பாடுகளில் தலையிடுவது நிதி ஆணையத்தின் வேலையுமல்ல. நம் மாநில மக்களுக்கு எத்தகைய கொள்கைகள் பொருத்தமானவை என்பதை ஜனநாயக முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகள்  முடிவு செய்யும்.

இலவசங்கள் வழங்கும் எந்தக் கொள்கை மக்களி டையே ஆதரவு பெற்றுள்ளது என்று அறிவிப்பதும் நிதி ஆணையத்தின் வேலையல்ல. சமூகத்தின் பலமிழந்த பகுதிகளில் வாழும் ஏழை மக்களுக்காக வழங்கப்படும் உணவு மான்யம் மற்றும்  ஓய்வூதியம் உள்ளிட்ட எந்த ஒரு மக்கள் நல நடவடிக்கையையும், பொதுமக்கள் வரவேற்பு பெற்றது எனக் கூறி அதை நீக்கவோ, குறைக் கவோ பரிந்துரைக்கப்படலாம். மக்கள் நல திட்டங்களை, அவற்றிற்கான நிதி ஆதாரங்களைத் திரட்டும் பொறுப்புடன், நடைமுறைப் படுத்துவதற்கு   மாநில அரசுகள் சுதந்திரம் பெற்றுள்ள ஒரு நாட்டில் நிலவும் ஜனநாயக நடைமுறையின் ஆணி வேரையே தாக்கி அழிப்பதாகும் இது. வரவு - செலவு திட்ட நிதி அறிக்கை பற்றிய வாதம்

ஏழாவதாக,  14 ஆவது நிதி ஆணையத்தின் பரிந் துரைப்படி, மத்திய அரசிற்கு ஒதுக்கப்படும் நிதி ஆதாரங்களின் அளவு குறைந்து போனது என்று கூறப்படுவது தவறான தகவலே ஆகும். நாட்டின் மொத்த நிதி ஆதாரங்களில் இருந்து மாநிலங்களுக்கு பிரித்தளிக்கும் பங்களிப்பின் அளவு 32 சதவிகிதத்தில் இருந்து 42 சதவிகிதமாக உயர்த்தப்பட்டதன் காரணமாக, மத்திய அரசின் நிதி பங்களிப்பின் அளவு குறைந்து போயுள்ளது என்று கூறப்படும் வாதம் சான்றுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் வாதம் அல்ல. ஆனால், நடைமுறையில் 14 ஆவது நிதி ஆணையத்தின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டபோது,  2015-16 ஆம் ஆண்டில் பல மத்திய அரசு திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு கணிசமாகக் குறைத்துள்ளது. சுங்க வரிகள் மற்றும் இதர வரி விதிப்புகளில் இருந்து அனைத்து மாநிலங்களும் பெற்ற அளவுக்கு அதிகமான பங்களிப்புக்கு இணையான அளவில், மாநிலங்களுக்கு வழங்கவேண்டிய திட்ட செலவினங்களை  மத்திய அரசு குறைத்துள்ளது. இந்த முறையில், மத்திய அரசு தன்னைத் தானே பாதுகாத்துக் கொண்டதால், மத்திய அரசின் செலவுகளுக்குத் தேவையான நிதி பங்களிப்பில் எந்தக் குறைவும் ஏற்பட்டுவிடவில்லை. உண்மையைக் கூறுவ தானால், அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசால் பிரித்து வழங்கப்படும் நாட்டின் ஒட்டு மொத்த நிதிப் பங்களிப்பு   நிஞிறி கடந்த சில ஆண்டு காலமாக குறைந்தே வந்துள்ளது. இந்த நிதி ஆதாரங்களின் பங்கீட்டில், மாநிலங்களுக்கான பங்கினைக் குறைப்ப தற்கான காரணமோ அடிப்படையோ ஏதும் இல்லை. முன்னேற்றத்திற்கான பொறுப்பு இப்போது மாநிலங் களிடமிருந்து மத்திய அரசுக்கு மாற்றப் பெருகின்றது என்ற ஊகம் அண்மையில் தோன்றியுள்ளது. இந்த ஊகத்தை நிதி ஆணையம் ஏற்றுக் கொண்டால், அது தங்கள் மாநிலங்களுக்காக  மாநில அரசுகள் கையாளும் வரவு - செலவு திட்டங்களின் அளவு குறைந்து போகவும், மத்திய அரசு கையாளும் திட்டங்களின் அளவு  விரிவடையவும் செய்யும்.

இந்தியாவின் மாபெரும் செல்வமே அதன் பன்முகத் தன்மையில்தான் அடங்கியுள்ளது. இந்தப் பன்முகத் தன்மையை அங்கீகரிப்பது, முன்னேற்றத்துக்கான பல்வேறுபட்ட பாதைகளை மாநில அரசுகள் பின்பற்றும் என்பதை அங்கீகரிப்பதே ஆகும். மத்திய அரசுக்கும், இந்தியாவின் மாநில அரசுகளுக்கும் இடையேயான நிதி ஆதாரங்களைப் பகிர்ந்தளிக்கும்போது, நியாயத்தன்மை மற்றும் சமனத் தன்மை ஆகியவற்றுக்கு மதிப்பளித்து, முன்னேற்றத்திற்கான ஜனநாயகப் பாதை பன்முகத் தன்மை கொண்டதாக விளங்குவதற்கு நிதி ஆணையம் வழிவகை செய்ய வேண்டும்.

(நிறைவு)

நன்றி: 'தி இந்து' 12-04-2018

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner