எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

- சுரேந்திர குமார்

புதுடில்லியில் உள்ள இந்திய அனைத்துலக  மய்யத்தில், சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு நினைவுப் பேருரை ஆற்றியபோது,  தேசியத் தலைவர்கள் மக்களிடையே பெற்றிருந்த புகழ் அவர்கள் இறந்த பிறகு வழக்கமாகவே  குறைந்து போகும் நிலையில்,  டாக்டர் அம்பேத்கர் தனது வாழ்நாளில் இருந்ததைப் போன்று 10 மடங்கு  பெருமையும், புகழையும்  அவர் இறந்த பிறகு பெற்று விளங்கினார்  என்று வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குகா குறிப்பிட்டார். அங்கு கூடியிருந்த பார்வையாளர்களில் பலர் இதைக் கேட்டு கோபத்தால் சீற்ற மடைந்தனர். மகாத்மா காந்தியையும், ஜவஹர்லால் நேரு வையும் குகா இழிவு படுத்துவதாக அவர்கள் கருதினர்.

அனைத்து இந்திய அளவில் நிறுவப்பட்ட அம்பேத்கர் சிலைகளின் எண்ணிக்கையை வைத்துப் பார்க்கும் போதும், கோடிக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்கள் அவரது படத்தைத் தங்களது இல்லங்களில் ஒரு கடவுளின் படத்தைப் போன்று வைத்து வழிபடுவதையும் பார்க்கும்போதும், குகா கூறியது மிகச் சரியாக இருப்பதாகவே தெரிய வரும்.

காந்தியை மகாத்மா என்று அழைக்க மறுத்த அம்பேத்கர் ஒரு சமூக சீர்திருத்த வாதியாக காந்தியின் சாதனைகளைப் பற்றி வருந்தத்தக்க அளவில் கேள்விகள் கேட்டு கடுமையாக விமர்சனம் செய்திருந்தபோதிலும்,  மிகுந்த தயக்கத்துடன்  பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

பொதுத் தேர்தல்களின் போதாவது  மேடையில் தேசத் தந்தையை பாராட்டிப் பேசி வருவதைக் காணும்போது, அவரது பெயரைப் பயன்படுத்தி ஆதாயம் தேடும் அரசியல் கள நிலவரங்களுக்கு நன்றி கூற வேண்டும்.  காந்தியடிகள் பெயரால் இன்று எத்தனை அரசியல் கட்சிகளும், தலைவர்களும் வாக்கு சேகரிக்கின்றனர்?  ஆண்டு தோறும் அக்டோபர் 2 ஆம் தேதியன்று ரோஜா இதழ்கள் தூவி, பஜனைப் பாடல்கள் பாடுவதற்கும், இந்திய பிரதமர் உள்ளிட்டோர் தங்களது எதிர்ப்புப் பேரணிகளை நடத்துவதற்குமான  ஒரு மவுன சாட்சியாகவே  காந்தியின் நினைவிடம் இன்று ஆகிவிட்டது.

அம்பேத்கரின் புகழையும், பெருமையையும், பாரம் பரியத்தையும் தங்களுடையதாக ஆக்கிக் கொள்வதற்கு இன்று    ஆங்காங்கே நடைபெறும் தெருச் சண்டைகள் வேடிக்கை காணத்தக்கதாக உள்ளன. எவரது முன்னோர்கள் அம்பேத்கரின் பக்கத்தில் உட்கார மறுத்திருப்பார்களோ அல்லது அவருக்கு வீடு ஒன்றை வாடகைக்குக் கொடுக்க மறுத்திருப்பார்களோ, கோப்பு களைத் தூக்கி அவர் மீது எறிந் திருப்பார்களோ, சுதந்திர இந்தியாவின் முதல் அமைச்சரவையில் இருந்து பதவி விலகிய அம்பேத்கர் மறுபடியும் தேர்தலில் வெற்றி பெறாமல் இருப்பதை உறுதிப் படுத்திக் கொண்டார்களோ அவர்களின் வாரிசுகள் இன்று அம்பேத்கரின் புகழைப் பற்றி கூரைமேல் ஏறி நின்றுகொண்டு, அவர்களை அம்பேத்கர் எந்த அளவுக்குக் கவர்ந்திருக்கிறார் என்பதைப் பற்றியும்,  அவரது பெயரில் எத்தனை திட்டங்களைத் தாங்கள் அறிமுகப்படுத்தி இருக்கிறோம் என்பதைப் பற்றியும், அவர் காட்டிய பாதையில் தாங்கள் எவ்வாறு நாட்டை நடத்திச் செல்கிறோம் என்பதைப் பற்றியும்  கூக்குரல் எழுப்புவதைக், காண்பதற்கும், கேட்பதற்கும் பல கண்களும், செவிகளும் தேவைப்படுபவையாக இருக்கின்றன.

இந்த ஆண்டு ஏப்ரல் 14 அன்று அம்பேத்கரின் 127 ஆவது  பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் ஆங்கில, மாநில மொழி நாளிதழ்களில் முழுப் பக்க விளம்பரங்களை வெளியிட்டு ஒவ்வொரு கட்சியும் அவருக்கு மிக உயர்ந்த மரியாதையைத் தாங்கள் செலுத்தியிருப்பதாக  பறை சாற்றிக் கொண்டன.

மேலும், தங்கள் வாழ்நாளில் எப்போதுமே ஒரு தாழ்த்தப்பட்டவரின் வீட்டிற்குள் நுழைந்தே அறியாத தேசிய அரசியல் கட்சித் தலை வர்கள் இன்று அந்த மக்களின் வீட்டிற்கு தொலைக்காட்சி படமெடுப்பவர்களின் படையுடன் சென்று, அந்த தலித் குடும்பத்துடன் உணவு அருந்துவது போல காட்டி விளம்பரப் படுத்திக் கொள்கின்றனர்.

அன்றைய தினத்தில் நாடாளுமன்ற சாலையில் அம்பேத்கர் பற்றிய எண்ணற்ற பேனர்களும், வண்ணச் சுவரொட்டிகளும் தோற்றம் பெற்றன. ஆயிரக்கணக்கான நடைப் பயணி களுக்கு அருந்துவதற்கு தண்ணீரும், உட்காருவதற்கு நாற்காலிகளும் சாலை ஓரங்களில் போடப்பட்டிருப்பதை நீங்கள் கண்டிருக்கலாம். இதைத் தவிர அம்பேத்கர் வேறு என்ன கேட்டுவிடப் போகிறார்? அவரைப் பற்றி எழுத்தில் அடங்காத பெருமை பாராட்டி தாழ்த்தப்பட்ட மக்களை மனம் மகிழச் செய்தால் போதும், அவர்களது வாக்குகள் அடுத்த தேர்தலில் அவர்களுக்கே கிடைத்துவிடும்.

ஆனால், அவரது காலத்தில் இருந்த மிகச் சிறந்த கூர்மையான சட்ட அறிவு கொண்டவர்களில் ஒருவராக இருந்த அம்பேத்கர் இத்தகைய சந்தர்ப்ப வாதங்களையும், அடையாளச் சடங்குகளையும் கண்டு ஏமாந்து போய் விடமாட்டார். அம்பேத்கருக்கு அனைத்து விதத்திலும் மரியாதை செலுத்திக் கொண்டே இருக்கும்போதுதான், உன்னாவ்வில் ஒரு தலித் சிறுமி பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளாள். ஊடகங்கள், சமூக வலைதளங்கள், மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்ட பொதுமக்களின் பெருமளவிலான குற்றச் சாட்டுகள், கூக்குரல்களுக்குப் பிறகு,அக்குற்றம் இழைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார்.

"12 ஆண்டு அடிமை" என்ற ஒரு ஹாலிவுட் திரைப்படக் காட்சிகளை நினைவு படுத்துவது போன்றே இருக்கும் உன்னாவ்வில் நடந்ததைப் போன்ற கொடிய, வருந்தத்தக்க நிகழ்வுகள் இன்னமும்  நாட்டின் பல இடங்களில் தொடர்ந்து  நடந்து கொண்டேதான் இருக்கின்றன.

70 ஆண்டுகளுக்கு முன்னமேயே ஒழிக்கப்பட்டுவிட்டதாகக் கூறப்படும் தீண்டாமை இன்னமும் கிராமப் பகுதிகளில் கடைபிடிக் கப்பட்டு வருகிறது. சில மாநிலங்களில், தாழ்த்தப்பட்ட மாப்பிள்ளைகள் தங்களது திருமணத்தின்போது ஒரு குதிரை மீதோ அல்லது யானை மீதோ ஊர்வலம் வர முடியாது. சில இடங்களில் தாழ்த்தப்பட்டவர்கள் மீசை கூட வளர்த்துக் கொள்ளக் கூடாது.

பாடுவான் என்ற இடத்தில் 2014 ஆம் ஆண்டில் வயதுக்கு வராத இரு தாழ்த்தப்பட்ட சிறுமிகள் ஒரு வன்முறைக் கும்பலால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களது உடல்கள் ஒரு மரத்தில்  தொங்கவிடப்பட்டு இருந்தன. தினமும் பத்துப் பனிரண்டு தாழ்த்தப்பட்ட சிறுமிகள் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்படுவதாகவும்,  அவர்களுக் காக மெழுகுவர்த்தி ஏற்றிப் போராடவோ அனுதாபம் தெரிவிக்கவோ எவருமே இல்லை என்றும் நிர்பயா பாலியல் வன்முறை வழக்கிற்குப் பிறகு இந்திய தலைமை நீதிபதி மிகுந்த வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

பல்கலைக் கழகங்களில், பொறியியல் மற்றும் மருத் துவக் கல்லூரிகளில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு எதிராகப் பாகுபாடு காட்டப்படுகிறது என்பது வெறும் கற்பனை அல்ல. உண்மையில் அவர்களுக்கு எதிராக வேறுபாடுகள் காட்டப்படுகின்றன. சில நேரங்களில் அவை சோகமான முடிவுக்கு வழி வகுத்துவிடுகின்றன. அண்மையில் நாடாளுமன்றத்தில் உள்துறை இணை அமைச்சர் வெளியிட்ட ஓர் அறிக்கையின்படி,  2016 ஆம் ஆண்டில் மட்டும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்குகள் 47,338 தேசியக் குற்றப் பதிவகத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளன. நான்கில் ஒரு வழக்கு கிராமப்புறப் பகுதிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. உண்மையில் இதனைவிட நான்கு மடங்குக்கும் அதிகமாக வன்முறைக் கொடுமைகளும் நடந்திருக்கக்கூடும். ஆனால் இவற்றில் 25-27  சதவிகித வழக்குகளில் மட்டுமே குற்றம் இழைத்தவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்பது மிகவும் வருந்தத்தக்கதாகும்.

எந்த வித தண்டனைக்கும் உள்ளாகாமல், தங்கு தடையின்றி தீண்டாமை இன்னமும் தொடர்ந்து நீடித் திருப்பதற்குக் காரணம் என்ன? குற்றம் இழைத்தவர்களின் அரசியல், பணபலம், அடியாள்பலம் ஆகியவை காரண மாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரத்தில் உள்ளவர்கள் அவ்வாறு நடவடிக்கை எடுக்க அஞ்சுகின்றனர். அவர்கள் தண்டிக்கப்பட்டால், தேர்தலில் அவர் சார்ந்த அரசியல் கட்சி வாக்குகளை இழக்க நேரும். அரசியலமைப்புச் சட்டத்தை நிலை நிறுத்துவதற்குக் கடமைப்பட்ட இந்திய ஆட்சிப் பணி, காவல் துறைப் பணி அதிகாரிகள் அவர்கள் கண் முன் னாலேயே நடத்தப்படும் இத்தகைய கொடிய குற்றங் களைக் கண்டும் காணாதவர்கள் போல இருந்துவிடுவது ஏன்? ஒரு வேளை, அவர்களது உயர் கல்வி, பயிற்சி, உலக அனுபவம் ஆகியவற்றை அவர்கள் பெற்றிருப் பதற்குப் பிறகும், பலரும் தங்கள் ஆழ் மனங்களில் தாழ்த்தப்பட்வர்கள் மற்றும் சமூகத்தின் புறக்கணிக்கப் பட்ட பிரிவு மக்களுக்கு எதிரான  ஆழ்ந்த சமூக வெறுப்பையும் கொண்டவர்களாக இருக்கவும் கூடும்.

அம்பேத்கரைப் பின்பற்றுபவர்கள் உண்மையில் அவரை மனநிறைவடையச் செய்ய வேண்டும் என்று விரும்பினால்,  கீழ்க் கண்டவற்றை அவர்கள் செய்யலாம்.

* தீண்டாமையைக் கடைபிடிப்பவர்களை அவமானப்படுத்துங்கள்; அடுத்த அய்ந்து ஆண்டுகளில் இந்தியா முழுவதிலும் தீண்டாமை முற்றிலுமாக ஒழிக்கப்படவேண்டும் என்று கோருங்கள்.

* உன்னாவ், படுவான் பாலியல் வன்முறை மற்றும் கொலை வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள்  மீதான வழக்குகளை விரைவில் நடத்தி தண்டனை வழங்கக் கோரவும்.

* ஜாதிகளிடையே நடுநிலை பின்பற்றாத மாவட்ட மாஜிஸ்டிரேட் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் பணியாற்றும் பகுதிகளில் தாழ்த்தப்பட்ட பெண்கள் மீதான வன்முறை மற்றும் பாலியல் தாக்குதல்கள்  நடைபெற்றால், அவர்கள் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும். அவர்களது பணிக் காலத்தில், அவர்கள் பணியாற்றிய பகுதிகளில் மூன்று முறை  இத்தகைய தாக்குதல்கள் நடைபெற்றால், அவர்களுக்கு கட்டாய ஓய்வு அளித்து பணியிலிருந்து வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும்.

ஜாதிய வெறி கொண்ட மக்களை அனைத்து அரசியல் கட்சிகளும் தவிர்க்க வேண்டும்; புறக்கணிக்க வேண்டும். தேர்தலில் போட்டியிடு வதற்கு அத்தகையவர்களுக்கு இடம் அளிக்கக் கூடாது.

அரசியல் கட்சிகளின் பிரச்சார மாதிரிகளாகக் காட்டப்படும் பழைய தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர்களின் எதிர்காலம் ஆபத்து நிறைந் ததாக இருப்பதாகும். அடுத்த தலைமுறை தாழ்த் தப்பட்ட மக்களின் தலைவர்கள் உறுதியான மனம் கொண்டவர்களாகவும், ஆதிக்க உணர்வு கொண்டவர்களாகவும், தன்னம்பிக்கை மிகுந்த வர்களாகவும், சிறந்த பேச்சாளர்களாகவும், தொழில் நுட்ப ஆர்வலர்களாகவும் இருந்தால் தான், அவர்களுக்கான சிறந்த எதிர்காலம் காத்திருக்கும். அம்பேத்கர் தங்களுக்குப் பெற்றுத் தந்த உரிமைகளைப் பற்றி நன்கு அறிந்தவர்களாகவும், கன்ஷிராம், மாயாவதி போன்ற தாழ்த்தப்பட்டவர்களுக்கான தலைவர் களால் கற்பிக்கப்பட்ட தங்களது உரிமைகளைக் கோரி, போராடி பெறும் உறுதித் தன்மை கொண்டவர்களாகவும் இருந்து தங்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகப் போராடாமல் செயலற்று அவர்கள் இருக்க மாட்டார்கள். பல்வேறு தாழ்த்தப்பட்டவர்களுக்கான அமைப்புகள் அழைப்பு விடுத்த பாரத் பந்த் வெற்றிகரமாக நடந்தேறியது. சில இடங்களில் வன்முறைச் சம்பவங்களால் அது களங்கப்படவும் நேர்ந்தது வருந்தத் தக்கதேயாகும்.

அம்பேத்கர் பிறந்த நாளில் விளம்பரங்கள் செய்யவும், பேரணிகளை ஏற்பாடு செய்து நடத்தவும்  ஆட்சி அதிகாரத்தில் உள்ள அரசியல் கட்சிகள்  மக்களின் வரிப்பணத்தைப் பயன்படுத்துவதை விட, தாழ்த்தப்பட்ட மக்களின் குழந்தைகளுக்கான ஆரம்பப் பள்ளிகளைத் துவக்கி நடத்துவது இன்னமும் மேன்மையான செயலாக இருக்கும். உண்மையில் அதுதான் அம்பேத்கரை மனநிறைவடையச் செய்யும். அதன் காரணம் அவரைப் பொருத்தவரை தரமான கல்விதான் முன்னேற்றத்திற்கும், அதிகாரம் பெறுவதற்குமான முதல் படியாகும்.

நன்றி: 'தி டெக்கான் கிரானிகிள்' 18-04-2018

தமிழில்: த.க. பாலகிருட்டிணன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner