எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ம. பால்ராசேந்திரம்


“ஒரு மொழியின் தேவை, முக்கியத்துவ மெல்லாம் அது பயன்படுகின்ற தன்மையைப் பொறுத்ததேயாகும். அது எவ்வளவு பெரிய ‘இலக்கியக் காவியங்களையும்’, ‘தெய்வீகத் தன்மையையும்’ தன்னிடத்தேக் கொண்டது என்று சொல்லிக்கொள்ளப்படுவதானாலும் - அது மக்களது அன்றாட வாழ்க்கையில் அவர்களது அறிவை உபயோகப்படுத்தும்படி இருக்கிறது என்பதையே அளவுகோலாகக் கொண்டு அளக்க வேண்டும்”, என்பதே தந்தை பெரியாரின் மொழிக்கொள்கையாகும்.

‘சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை

இகல்வெல்லல் யார்க்கும் அரிது’ - குறள் 647

தான் கருதியவற்றை எவருக்கும் அஞ்சாது எடுத்துரைக்கும் வல்லமை பெற்றவரே தந்தை பெரியார்.

“எனக்கு மொழி பற்றிய அறிவோ, ஆராய்ச் சியோ கிடையாது. இலக்கண, இலக்கியப் பாண் டித்தியமும் கிடையாது. என் அனுபவத்திற்கு எட்டிய செய்திகளை உங்களுக்குத் தருகி றேன்” என்று தன்னிலை விளக்கம் தருக்கிறார் அடக்கமாக அய்யா பெரியார்.

“மொழி என்பது அந்தந்த மக்களுக்காகத் தான். மொழிக்காக மக்களில்லை. தமிழும், தமிழனின் முன்னேற்றத்திற்காக, அவனின் வெற்றிக்காக அவனின் வளனுக்காக உதவுகிற மொழிதான் - தாய்மொழி என்ற மட்டிலும் அல்லாமல் எல்லா வளப்பங்களும் கொண்ட சிறந்த மொழி தமிழ்மொழி. இந்தியாவிலேயே பழைமை வாய்ந்த பண்பட்ட மொழி தமிழ்”, என்று கூறுகிறார் பெரியார். “அந்தத் தமிழ் ஏன் இருந்தவாறே இருக்க வேண்டும்?” என்று கேட்டவர் பெரியார்.

‘எழுத்தெனப்படுப அகரமுதல னகர இறுவாய்

முப்பஃது என்ப சார்ந்துவரல் மரபின் மூன்றலங்கடையே’

- என்பது தொல்காப்பியம். தமிழெழுத்துக் கள் முப்பது என்றே கொள்ளப்பட்டுள்ளது.

“சிலகற்றார் பலகற்க விரும்பும் வகை செயல் வேண்டும்”,  என்றார் பாவேந்தர்.

“தமிழை எளிமையாக்கினால் அதிகம்பேர் படிப்பார்கள்; நன்கு புரிந்து கொள்வார்கள். சிக்கன முறையில் நூல்களை அச்சிடவும், விரைவாகத் தட்டச்சுச் செய்திடவும் இயலும்”, என்பதால் தான் தமிழ்

எழுத்துச் சீர்த்திருத் தத்தை முன்னெடுத்தார் தந்தை பெரியார்.
ஒரு சமுதாயத்தின் வளர்ச்சிக்கேற்ப அதன் மொழியிலும் வளர்ச்சி ஏற்படுவது இயற்கை. படுகர், தோடர், நரிக்குறவர் போன்றோர் ஓர் அய்ம்பதாண்டுகட்கு முன் பேசிய மொழியில் இன்று எவ்வளவோ மாற்றங்களை நாம் காண முடிகிறது. இன்று அவர் தமிழை மிகத்தெளி வாகப் பேசுகிற மாற்றம் ஏற்பட்டுள்ளது. அறிவியல் தொழில்நுட்ப நோக்கில், உளவியல் நோக்கில், கல்வியியல் நோக்கில் ஆய்ந்து, தேவையற்றக் குழப்பங்களை நீக்கித் தேவை யான எழுத்து மாற்றங்களை உருவாக்கிக் கொள்வதே சாலச்சிறந்ததாகுமெனக் கூறித் தமிழர்க்கு ஆசானாய் விளங்கியவர் தந்தை பெரியார் என்பது சிண்டு முடிந்திடுவோர்க்குத் தெரியுமா?

“கரிய நிறக் களிறொன்று துதிக்கைத் தூக்கிக்
காட்டுதல்போல் திகழ்கின்ற ‘லை’ எழுத்தின்
சிறியதொரு துதிக்கையினை வெட்டி வீழ்த்திச்
சினப்பாம்பு தன்னுடலைச் சுருட்டிக் கொண்டு
சிறிதான வாலைத்தன் தலைவைத் தாற்போல்
திகழ்கின்ற ‘ணா’ எழுத்தின் வாலறுத்துப்
பெரிதாகத் தமிழ் எழுத்தைச் சீர்திருத்திப்
பேணியதும் புரட்சியென்றால் மறுப்பார் உண்டா?” என்றார் கவிஞர் பழம் நீ.

பெரியார் அவர்கள் 1935 முதல் தம் குடியரசு, விடுதலை ஆகிய ஏடுகளில் நடைமுறைப்படுத்தி வந்த தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் சரியெனப்பட்டதால் தமிழ்நாடு அரசும் ஆணை எண் 1875 - 19.10.1978 முதல் நடைமுறைப்படுத்தியதோடு, தமிழையும் வளப்படுத்தியதென்பது தெரியாதா பித்தர் களுக்கு?

“தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்பவைத் தனித்தனி மொழிகளன்று, தமிழிலிருந்து பிரிந்தவையுமன்று. தமிழ்தான் நான்கிடங்களிலும் நான்கு விதமாகப் பேசப் பட்டு வருகிறது”, என்று ஓங்கி உரைக்கின்றார் பெரியார்.

“எல்லோரும் எச்சமயத்திலும் தமிழி லேயே பேசவேண்டும்; எழுத வேண்டும்; பாட வேண்டும். தவறி ஒரு வார்த்தைக்கூட வடமொழியில் பேசக்கூடாது. பேசினால் வார்த்தைக்கு அரையணா அபராதம் கட்ட வேண்டும்”, என்று தமிழுக்குச் சட்டாம்பிள் ளையாய் ‘விடுதலை’யில் வெளியிட்டுத் தமிழ் அறிஞர் என்போர்க்கெல்லாம் அதிர்ச்சி வைத்தியம் செய்தவர் பெரியார் என்றால் அவரையா தமிழுக்குப் பகைவர் என்கிறாய்? அச்சமயம், “தமிழைத் தவறிப்பேசி விட்டேன். இதோ ரூபாய் ஒன்றினை ‘விடுதலைக்கு’ அனுப்புயுள்ளேன்”, என அனுப்பி வைத் தவர் ஆர்.கே.சண்முகம் செட்டியார் அவர் கள் என்றால் அய்யாவின் தமிழ்ப்பணியின் வேகம் எப்படிப்பட்டது என்று தெரியுமா இதுகளுக்கு? இன்னும் ஏராளமுண்டு அவ ரின் தமிழ்ப்பணி.

“யாரையடா எம் தமிழ்மொழிக்கு
எதிரியென்று காட்ட முனைகின்றாய்
அவரெம் செம்மொழிக்குக் காவலரடா!”
“தமிழுக்கு ஆபத்து வரும்பொழுதெல்லாம்

காத்தவர் பெரியாரே”, என்பார் முனைவர் மா.இராசமாணிக்கனார். சான்றாக, 1933இல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில், ‘பேசு வது போல் எழுத வேண்டும்’ என்று முடி வெடுக்கத் தமிழ் அன்பர்கள் மாநாடு கூடியது, நமக்கென்ன மொழி பற்றியக் கவலையென இருக்கவில்லை பெரியார். தோழர் குருசாமி முதலிய தமிழ் வீரர்களை அங்கே கலந்து கொள்ளச்செய்து, மாநாட்டாரின் குறிக்கோள் நிறைவேறாது தடுத்தார் பெரியார். தமிழைச் சிதைத் தழிக்கும் தீச்செயலை ஒடுக்கிச் செந்தமிழைக் காத்தார் பெரியாரென்ற வரலாறு உளறுவோர்க்குத் தெரியுமா?

1935ஆம் ஆண்டில் மறைமலையடிக ளாரின் ‘அறிவுரைக் கொத்து’ என்னும் நூல், இளங்கலை வகுப்பிற்குப் பாடமாகப் பல் கலைக்கழகம் வைத்தது. அதனை நீக்கிடப் பலர் முயன்றனர். நூல் பற்றிய விழிப்புணர் வைத் தமிழ்நாடெங்கும் மேடைச் சொற் பொழிவாய்க் கொண்டு சென்று கல்லூரியில் பாடநூலாக இருக்கச்செய்து, மாணவர்களும் அந்நூலைக் கற்றுத் தேர்ந்திடச் செய்தவர் பெரியார்.

1937இல் இராசகோபாலாச்சாரியார், “தமிழ் நாட்டில் இந்தியைக் கட்டாயம் படிக்க வேண் டும்” என்று கொண்டு வந்தார்.

“தீய இந்தியைத் திணிக்கின்றார்கள்
தமிழ் அழிந்திட்டால் தமிழர் அழிவார்
நம்தமிழ் காப்பது நம்கடன் அன்றோ?”

புரட்சிக் கலைஞர் கூறியபடித், “தமிழின் வளர்ச்சிக்குப் புத்துயிர் அளித்திட வேண்டு மென்றுதான் இந்தியை, இந்நாட்டில் புகுத்தக் கூடாதென ஓர் இயக்கமே நடத்தினேன்” என் கிறார் பெரியார். “திராவிடக்கலை, கலாச் சாரத்தை அடியோடு ஒழித்து, வடநாட்டுக்கு இந்நாட்டை வால் நாடாக்க முயல்கிறார்கள். நாம் உயிரை விட்டேனும் தமிழைக் காத்திட வேண்டும்”, என்றவர்தான் பெரியார். திருச்சி முதல் சென்னை வரை கால்நடையாகத் தமிழர்படை சென்று பட்டிதொட்டியெங்கும் இந்தியின் பேராபத்தை எடுத்துரைத்துத் தமிழ் மொழி காக்கப்பட வேண்டுமெனத் தீவிரப் போர் நடத்தியவர் தந்தை பெரியார் தெரி யுமா? சென்னைக் கடற்கரைக் கூட்டத்தில் “தமிழ்நாடு தமிழர்க்கே” என்று முதன் முதலில் குரலெழுப்பினார் பெரியார். அதனால், சிறை யும் புகுந்தார். ஆனால் சிறைப்படவிருந்த நம்தமிழ் பிழைத்தது.

ஏன் தமிழைக் கண்டித்தார்? அறிவியல் பேராசிரியர் சந்திர, சூரிய கிரகணம் பற்றிப் பாடம் கற்பிக்கிறார்; விளக்கம் தருகிறார். அவரே கிரகணங்களினன்று கடற்கரைக்குச் சென்று, கடல் நீரைத் தலைக்குமேல் வாரிய டித்துக் கும்பிட்டு நிற்கிறார். ஏனென்று கேட் டால், பாம்புகள், சந்திரனை, பூமியை விழுங் கிக் கக்குகிறது என்று அங்கே கூடி நிற் போரிடம் வகுப்பெடுக்கிறார். ஆரியக் கருத் துக்கள் கொண்ட தமிழ்ப்புராணங்கள் அவரை அந்நிலைக்காளாக்கியது, இல்லையா? அது மட்டுமின்றி, “பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நான்கும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலஞ்செய் துங்கக்கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச் சங்கத் தமிழ் மூன்றுந்தா” வெனப் பிடித்து வைத்த மாட்டுச் சாணியின் முன் மண்டியிட்டு வரங்கேட்கும் பாடல்களை, அறிவிலித் தத்துவங்களை நற் றமிழ் தாங்கியிருக்கலாமாவென்ற வேதனை யில்தான், அக்கறையோடு, ‘தமிழைக் காட்டு மிராண்டி மொழி’ என்று சொன்னார் பெரியார்.

“மற்ற மக்களெல்லாம் காட்டுமிராண்டி யாய் வாழ்ந்த காலை கப்பலோட்டி வணிகம் செய்த தமிழர் மரபில், ஒரு நியூட்டன் தோன் றாமைக்குக் காரணமே பகுத்தறிவுக் கொவ் வாத புராணங்களையே உண்மையென நம்பி வாழ்வைச் சீரழித்ததனாலேயேதான்”, என்றார் பெரியார். மெய்தானே!

செட்டிநாட்டரசர் அண்ணாமலைச் செட் டியாரும் ஆர்.கே.சண்முகம் செட்டியாரும் இணைந்து தமிழிசைச் சங்கம் நிறுவினர். அதன்வழித் தமிழிசை பரவச் செய்தனர். ஆனாலும் அங்கே அரங்கேறிய பாடல்களோ, புரட்சிக் கவிஞர் கூறுவது போல்,

“பொருளற்ற பாட்டுக்களை - அங்கு

புத்தமுதென்றனர்; கைத்தாளமிட்டனர்;

இருளுக்குள் சித்திரத்தின் - திறன்

ஏற்படுமோ? இன்பம் வாய்ந்திடக் கூடுமோ?”

தமிழர்களை மேலும் பகுத்தறிவற்றவர் களாகவே ஆக்கிடும் வசைப்பாடல்களாகவே இருந்தன. “சந்தனமென மலத்தைப் பூசுவதா?” என்றார் பெரியார். அவ்வேளை அண்ணா மலைப் பல்கலைக்கழகத்தில் கா.சு.பிள்ளை தலைமையில் பெரியார் பேசச் சென்றார். “கடவுள், மதத்தை விட்டால் வேறு கருத்துள்ள பாடல்கள் இல்லையோ? தமிழிசை இயக்கம், மேலும் தமிழர் கெடுவதற்குத்தான் பயன்படும்”, என்று தன் உள்ளக்குமுறலை வெளிப்படுத் தினார் பெரியார். குறுக்கிட்டப் பிள்ளையவர் கள், “கடவுள், மதக்கருத்துகளல்லாத பாடல்கள் இருக்கின்றன. நம் சமுதாய முன்னேற்றங் கருதிய பாடல்களும் புதிதாக இயற்றச் செய்து தமிழிசை மன்றங்களில் பாடச் செய்வதே அவர்களின் நோக்கம்”, என்று அய்யாவுக்குத் தெரியப்படுத்தினார். அய்யாவும், சரிங்க, அப்படியே செய்யுங்க” என்றார். தமிழ், தமிழர் நலனில் அக்கறைகொண்ட தலைவர் துயரங் கொள்வதா! என்றுதான் பெரியாருக்கு விளக் கம் தந்தார். பெரியார் யார் என்று தெரிகிறதா இப்போது?!

தாய் பிள்ளையை உருப்படமாட்டாய் என்பது, அது உருப்பட வேண்டுமென்பதற் காகத்தான்.

“மன்னும் தமிழ்தான் இவ் வையத்தை யாள்கஎனக்

கன்னற் குரலெடுத்துக் கூவாய் கருங்குயிலே”,

என்னும் பாவேந்தரின் கருத்திற்கியையத் தந்தை பெரியார் தமிழே ஆளவேண்டும் இந்நாட்டையென ஆசை சொண்டார். ஆனால் தமிழ், நாற்றமில்லா ஆற்றிற்கு ஊற்றாகிப் போகிறதே! என எண்ணி வருந் தினார். பெரியார் அவர்களின் வேதனை, கடுஞ்சொற்களுக்குப் பலன் கிட்டியது. ஆறு முகத்தானையும், ஆனைத்தலையனையும், அரவணிந்தோனையும், அடிமுடி காணோ னையும், ஆயர்குடித் திருடனையும் பாடிவந்த புலவர் எல்லாம் மூடநம்பிக்கையைச் சாடவும், சாதியைச் சதியெனவும், மதத்தை, மயக்கும் மருந்தெனவும், கடவுள் பற்றிக் கவலை கொள் ளாதேயெனவும் எழுதியதோடு, அவர்தம் பேச்சிலும் பகுத்தறிவு மணம் கமழும் கவிஞர் களாயினர். திருவள்ளுவர் பெயரில் மாநாடு கூட்டி உலகிற்கே திருக்குறளை அறிமுகம் செய்தார் பெரியார். சுயமரியாதைத் திருமணத் தின் மூலம் தமிழ் துலங்கிடச் செய்தார். வீண் பழி வேண்டா தந்தை மீது தமிழர் பகைவர் மூட்டிடும் தீ ஆரியத்தையே எரித்திடும். எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் என இங்குள்ள, எங்குமுள்ள தமிழர்கள் ஒன்றாகித் தந்தை பெரியாரை உயர்த்தியே பிடிப்போம். அவர் செந்தமிழ் காத்த எம்மினத் தலைவ ரல்லவா!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner