எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

கோ. ஒளிவண்ணன்

துணைத்தலைவர்,

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்

ஒரே காலக்கட்டத்தில் வெவ்வேறு நாடுகளில் பிறந்த ஒப்பற்ற சமூகச்  சீர்திருத்த செம்மல்கள் பெரியாரும், ரஸ்ஸலும் ஆவார்கள். இருவரும் பெரும் செல்வக் குடியில் பிறந்தவர்கள். பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் வேல்ஸ் நாட்டில் டிரெல்லக் என்கிற ஊரில் 1872 ஆம் ஆண்டு மே திங்கள் 18ஆம் தேதி பிறந்தவர். தனது இளம் வயதிலேயே பெற்றோரை இழந்தவர். தமது தாத்தா வீட்டில் வளர்ந்தவர். தாத்தாவும் சிறிது காலத்தில் இறந்தவுடன் ரஸ்ஸலை வளர்க்கும் பொறுப்பு அவரது பாட்டியைச் சார்ந்தது. பள்ளிக்குச் செல்லாமல் வீட்டி லிருந்தே பாடங்களைப் படித்தவர். பின் கேம்பிரிட்ஜில் ட்ரினிட்டி கல்லூரியில் சேர்ந்து படித்தார். கணிதம், தத்துவவியல் பாடங்களை பெரிதும் விரும்பி படித்தார். 'கணிதக் கோட்பாடுகள்' என்கிற புத்தகத்தை எழுதினார். இதன் மூலம் அவரது புகழ் பரவியது.

தந்தை பெரியாரின் குடும்பம் தீவிர கடவுள் பக்தி நிறைந்த வைதீக குடும்பம். ரஸ்ஸலின் பெற்றோர்களோ முற்போக்கு சிந்தனை கொண்டவர்கள், தந்தை நாத்திகர், தாயார் பெண்ணியவாதி.  ரஸ்ஸல் பெரியாரைப் போன்று எதையும் ஏன், எப்படி என்று கேள்வி கேட்டு தீர விசாரித்து அறிவுக்கு பொருந்தியதையே ஏற்க வேண்டும் என்றார். பழமைவாதிகள் நம்பிக்கையின் அடிப்படையில் திணிக்கும் பகுத்தறிவுக்கு ஒவ்வாத மதக் கருத்துகளை புறக்கணிக்க வேண்டும் என்பது ரஸ்ஸலின் அழுத்தமான கருத்து. மதத்திற்கும், மாதா கோயி லுக்கும் எதிரான அவரது தீவிரமான உறுதியான தர்க்கரீதியான கருத்துகள் புதிய சிந்தனைக்கும், மறுமலர்ச்சிக்கும் வித்திட்டன. இன்றைக்கு இங்கிலாந்தில் கடவுள் மறுப்பாளர்களின் எண்ணிக்கை கூடிவருவதற்கு (உலகில் கிறித்துவர்கள், இசுலாமியர்களுக்கு அடுத்து மக்கள் தொகையில் அதிகம் இருப்பவர்கள் மதம் துறந்தவர்கள் மற்றும் நாத்திகர்கள்) ரஸ்ஸல் அவர்கள் அன்றைக்கு வித்திட்டதே பெரும் காரணமாகும். 'நான் ஏன் கிறித்துவன் அல்ல' என்கிற புத்தகம் பெரும் வரவேற்பு பெற்ற ஒன்று. மதத்தின் ஆணிவேரையே உலுக்கிய புத்தகம். உலகில் பல மொழிகளில் வெளியான ஒன்று. பல நாடுகளில் தடை செய்யப்பட்டது. தமிழில் தந்தை பெரியார் அவர்கள் மொழி பெயர்த்து வெளியிட்டார். நியூயார்க் பொது நூலகம், இருபதாம் நூற்றாண்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய புத்தகங்களில் "நான் ஏன் கிறித்தவன் அல்ல?" இன்றியமையாதது என்று அறிவித்தது.

கடவுள் நம்பிக்கை என்பது அச்சத்தின் வெளிப்பாடு என்றார் ரஸ்ஸல். கணிதத் துறையில் நிபுணத்துவம் பெற்றவராகையால் எந்த ஒரு விஷயத்தையும் தர்க்கரீதியாக அணுகவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். மதம் சம்பந்தமான ஆராய்ச்சியில் எந்த ஒரு செய்தியையும் தீவிரமாக ஆராயாமல் கடந்து சென்ற தில்லை. உலகம் கடவுளால் படைக்கப்பட்டிருந்தால் அவர் உலகில் எங்கோ ஒரு சிறிய பகுதியில் வசிக்கும் நம்மீது மட்டும் ஏன் அதிக அக்கறைக் கொள்ள வேண்டும்? என்று கேள்வி எழுப்பினார். இங்கு, இதே கேள்வி பெரியாரால் வேறு வகையில்  வைக்கப்பட்டது. ஏன் மகா விஷ்ணுவின் பத்து அவதாரங்களும் இந்தியாவில் மட்டுமே எடுக்கப்பட்டது? என்று கேட்டார். இதற்கெல்லாம் காரணம் அன்றைக்கு கடவுளை படைத்தவனுக்கு உலகம் எவ்வளவு பெரியது என்று தெரியாது. பிறபகுதிகளில் வசித்த மக்களைக் குறித்தும் தெரியாது. தென்னிந்திய கடவுள் தென்னிந்தியனின் முகச் சாடையையும், வட இந்தியக் கடவுள்கள் அவர்கள் சாடையிலும், அய்ரோப்பிய கடவுள் அய்ரோப்பியனை போலத்தானே இருப்பார்கள். இதைத்தான் பெரியார் கடவுளை படைத்தவன் முட்டாள் என்றார்.

ரஸ்ஸலிடம் 'ஒருவேளை கடவுள் உங்கள் முன்னால் வந்தால் என்ன செய்வீர்கள்' என்று கேட்டபொழுது 'நீங்கள் இவ்வுலகில் இருக்கிறீர்கள் என்பதற்கு ஏன் எந்த ஆதாரமும் இல்லாமல் வைத்திருக்கிறீர்கள்' என்று கேட்பேன் என்றார். பெரியாரிடம் இதே கேள்வியை கேட்டபொழுது, 'கடவுள் இருக்கிறார் என்று சொல்லி விட்டுப் போவேன்' என்றார். இருவரும் எந்த அளவிற்கு தர்க்கரீதியாக அறிவுபூர்வமாக சிந்தித்தனர் என்பதற்கு இவை உதாரணங்களாகும்.

கடவுள் உலகைப் படைத்தார் என்று சொல்பவர்கள் வைக்கும் முக்கியமான காரணம், நாம் காணுகின்ற உருவாக்கப்பட்ட அனைத்திற்கும் ஒரு காரணம் உண்டு. எதுவும் தானாக உண்டாகி இருக்க முடியாது. உலகை கடவுள்தான் உருவாக்கியுள்ளார் என்பது அடிப்படை வாதிகளின் கருத்து. ரஸ்ஸல் இதற்கு  'அதே கருத்துப்படி கடவுளும் தானாக தோன்றி இருக்க முடியாது. அப்படி யென்றால் கடவுள் உண்டான காரணம் என்ன, அவரை படைத்தவர் யார்?' என்று வினா எழுப்பினார் பெரியார். "கடவுள் உலகத்தை படைத்தார் என்றால், பேய், பூதம் இவற்றைப் படைத்தது யார்?" என்று வினவினார்.

உலகம் என்பது விதிகளுக்குக் கட்டுப்பட்டு இயங்குகிறது. சூரியனை சுற்றி கோள்கள் ஒழுங்குப் பாதையில் சுற்றிவருகின்றன. பூமி குறிப்பிட்ட அச்சில் சரியாக தன்னையும் சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது. பருவக் காலங்கள், மழை இவையெல்லாம் குறித்த காலத்தில் முறையாக நடக்கின்றன. இப்படி நடைபெறுவதற்கு யாரேனும் சரியாக இயக்கவேண்டும், அதைத்தான் கடவுள் செய்து வருகிறார் என்று கூறினர். இந்தக் கூற்றிற்கு மிக முக்கிய காரணம் நியூட்டனின் புவியீர்ப்பு சம்பந்தமான கண்டுபிடிப்புகள். இதை சாமர்த்தியமாக மதவாதிகள் உள் வாங்கிக்கொண்டு கடவுள் கருத்துக்கு பொருத்திக் கொண்டனர். இதில் நகைமுரண் என்னவென்றால் நியூட்டனுக்கு முன் வாழ்ந்த கலிலியோ சூரியனை மய்யமாக வைத்து கோள்கள் சுற்றிவருகின்றன என்கிற கோட்பாட்டினை கண்டறிந்து அறிவித்ததற்கு வாழ்நாள் சிறைத்தண்டனை அனுபவித்தார்.

இந்த உலக விதி கருத்துக்கு ரஸ்ஸல் மிக அழகாக அறிவுபூர்வமான பதில் கொடுத்தார். நியூட்டனின் புவியீர்ப்பு கோட்பாடுகளில் இருந்த குறைபாடுகள் அவருக்குப் நானூறு ஆண்டுகளுக்குப் பின் வந்த ஆல்பர்ட் அய்ன்ஸ்டீன் அவர்களின் பொது சார்பியல் கோட்பாடுகள் மூலம் தீர்த்து வைக்கப்பட்டது. அதாவது, அறிவியல் விதிகள் என்பது புதிய கண்டுபிடிப்புகள் உருவாகும்போது மாற்றம் கொள் கின்றன. அறிவியலில், நமது அறிவு வளரும்போது புதிய கருத்துகள் உருவாகின்றன. ஆகவே, 'அனைத்தும் மாறாத விதிகளுக்கு உட்பட்டு நடை பெறுகின்றன. அவை கடவுள் என்ப வரால் உருவாக்கப்பட்டது என்பது அறியாமையின் வெளிப்பாடு' என்கிறார் ரஸ்ஸல். பெரியார், 'அனைத்தும் கர்மா, விதிப்படி நடக்கிறது என்றால், அதில் கடவுளின் வேலை என்ன? கடவுளுக்கு பூசை, புனஸ்காரம் ஏன்?' என்று வினவினார். எல்லாம் விதிப்படிதான் நடக்கிறது என்றால், மனிதன் அவன் செய்யும் குற்றங்களுக்கு எப்படி அவன் பொறுப்பாக முடியும். நீதிமன்றம், சட்டம், தண்டனை இவைகள் எல்லாம் கடவுள் செயலுக்கு எதிரானதாகாதா? இதைப் போன்று, மதம், கல்வி, அறிவு பரவலாகுதல், பெண்கள் மேம்பாடு போன்றவைகளில் இருவரும் ஒத்தக் கருத்தினையே கொண்டிருந்தனர்.

உலகின் வெவ்வேறு மூலைகளில் சமகாலத்தில் வாழ்ந்த இருபெரும் சமூக விஞ்ஞானிகள் கடவுள், சமயம், மதம் இவைகளை எதிர்ப்பதிலும், வெட்டிச்  சாய்ப்பதிலும் ஒத்தக் கருத்துக் கொண்டிருந்தது விந்தை. பெரியாரை போன்று ரஸ்ஸலும் ரஷ்யாவிற்கு சென்று வந்தார்.  பெர்ட்ரண்ட் ரஸ்ஸலுக்கு இலக்கியத்திற்கு நோபல்பரிசு வழங்கப்பட்டது. பெரியாருக்கு யுனெஸ்கோ விருது வழங்கப்பட்டது.  தந்தை பெரியாரைப் போன்று பல எதிர்ப்புகள், புறக்கணிப்புகள், மிரட்டல்கள், சிறைத்தண்டனை என்ற அச்சுறுத்தல்களுக்கு கிஞ்சித்தும் கவலைப்படாது ரஸ்ஸல் இறுதிவரையில் தன் கொள்கையில் உறுதியாக, நாத்திகராக தொண்ணூற்று ஏழு ஆண்டுகள் ஒன்பது மாதங்கள் பெருவாழ்வு வாழ்ந்து மறைந்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner