எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உற்பத்தியை பெருக்கச் சொல்லிவிட்டு, உரிய விலையினை வழங்காமல் வஞ்சிக்கும் மத்திய பா.ஜ.க. அரசின் உழவர் விரோதப் போக்கு

**வீ.குமரேசன்**
வெளியுறவுச் செயலாளர்
திராவிடர் கழகம்

விவசாயத்தை வியாபாரம் போல செய்திடும் பாங்கு தெரியாமல் நம் மண்ணின் விவசாயிகள் அறியாமையில் உழன்று வருகிறார்கள். விவசாயிகளை அறியாமையி லிருந்து மீட்டெடுத்து பொருளாதார தாக்குதல்களிலிருந்து பாதுகாத்திட உரிய சட்ட விதிமுறைகளை மத்தியில் ஆண்ட ஆளும் அரசுகள் உரிய அளவில் செய்திடவில்லை. தற்பொழுது மத்தியில் ஆளும் அரசோ உழவர் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என அக்கறை கூட இல்லாமல்  - உழவர்களின் தேவைகளை உதாசீனப்படுத்தி  -  தேவைப்படும் காலங்களில் ஆட்சி அதிகார வன் முறையினை உழவர்கள் மீது ஏவிவிடும் செயலைச் செய்து வருகிறது.

கரும்புப் பயிர் சாகுபடி ஓரளவிற்கு தொழிற்சாலை தொடர்புடையது என்பதால் ஒரு வகையான வியாபாரப் போக்கு அந்த வகை விவசாயத்தில் உள்ளது. ஆனால் அந்த ஒரளவு வியாபாரம் லாபகரமாக இல்லை என்பதோடு நட்டத்தின் விகிதம் ஒவ்வொரு கரும்பு சாகுபடி ஆண்டிலும் அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்படும் அவல நிலையினை ஆராய்ந்தால் உலகமயமாக்கலின் தாக்கம் இந்நாட்டு உழவர்களை எப்படியெல்லாம் ஏமாற்றி வருகிறது என்பது புரியும். சர்க்கரை ஆலைகளுக்கு வழங்கப் படும் அறுவடை செய்த கரும்பிற்கு உரிய விலையினை விவசாயிகளுக்குக் கொடுப்பதில் அளவுக்கு மீறிய தாமதம் ஏற்படுகிறது. இதனால் கரும்பு சாகுபடி செய்திடும் விவசாயிகள் படும் துன்பங்கள் ஏராளம். கரும்பு சாகுபடி விவசாயிகளின் துயரங்களை போக்குவதாகக் கூறி மத்திய பா.ஜ.க. அரசு ரூ. 8000 கோடி நிவாரணத்தை சென்ற வாரம் அறிவித்துள்ளது. சர்க்கரை ஆலைகள், விவசாயி களுக்கான வழங்க வேண்டிய நிலுவைத் தொகையோ ரூ. 22,000 கோடி ஆகும். யானைப் பசிக்கு சோளப்பொறி என்பதைப் போல விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய பணப்பட்டுவாடா தேவைக்கும், அரசு செய்திடும் நிதி ஒதுக்கீடு அளவிற்கும் பெரிய இடைவெளி உள்ளது, வழங்கப்பட உள்ள அரசின் நிதி ஒதுக்கீடும், விவசாயிகளுக்கு நேரடியாக வழங் கப்படுமா என்பதுவும் கேள்விக்குறி ஆகி உள்ளது. சர்க்கரை ஆலைகளில் தேங்கியுள்ள 30 லட்சம் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பகத்தை (Buffer Stock)  அரசு அமைக்க உள்ளது. இதற்கான சர்க்கரை கொள்முதலுக்கான செலவு அரசு நிதி ஒதுக்கீட்டில் அடங்கும். இதனால் கிடைக்கும் கொள் முதல் பணம் மட்டும் விவசாயிகளுக்கு வழங்கப் படுவதாக உள்ளது. ஆலைகளில் சர்க்கரையுடன் உபபொருளாக கிடைத்திடும் எத்தனால் (Ethanol)   பிரித்தெடுக்கும் உபகரணங்களை வாங்க ரூ. 4,400 கோடி கடனை அரசானது சர்க்கரை ஆலைகளுக்கு வழங்க இருக்கிறது. சர்க்கரை ஆலைகளுக்கு வழங்கப்படும் கடனுக்கான முதல் 5 ஆண்டு வட்டி யான ரூ. 1,332 கோடி நிதியை அரசே செலுத்திவிடுமாம். சர்க்கரை ஆலை களுக்கு கரும்பு வழங்கியுள்ள விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்க்கும் நட வடிக்கையாக மத்திய அரசு அறிவித்துள்ள இந்த நிதி ஒதுக்கீடு, நீண்டகாலமாக உள்ள புரையோடிப் போயுள்ள புண்ணுக்கு களிம்பு மருந்து தடவுவது போன்றதாகும்.

கரும்பு சாகுபடியில் நிலவிடும் பிரச்சினைகள் என்ன? 1960-களில் தொடங்கிய பசுமைப்புரட்சியினால் விவசாயத்தின் மொத்த உற்பத்தி அளவு அதிகப்படத் தொடங்கியது. உற்பத்தியாகும் விவசாய விளை பொருள்கள் இன்று உபரியாகும் நிலை உருவாகி, விளைபொருள்களுக்குக் கட்டுப்படியாகக் கூடிய விலை கிடைக்காத நிலை உள்ளது. காட் (GATT)  ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டு பின்னர் அது டபிள்யூடிஓ (WTO – World Trade Organisation)   எனப் பெயர் மாற்றம் பெற்று உறுப்புநாடுகளால் கடைப்பிடிக்கப்பட்டதால் இந்நாட்டு விவசாயப் பொருள்களுக்கு உள்நாட்டு சந்தையிலும் உரிய விலை கிடைக்கவில்லை. விவசாயத்திற்கு அளிக் கப்படும் மானியங்கள் கூடாது என உறுப்பு நாடுகளுக்கு அறிவுறுத்தும் அமெரிக்கா தனது நாட்டு விவசாய விளைபொருள் உற்பத்திக்கு மானியத்தை வழங் குவதால், உலகச்சந்தையில் அமெரிக்கப் பொருள்கள் விலை குறைவாக கிடைக்கும் நிலை உருவாகி உள்ளது. உள்நாட்டுத் தேவைக்கே வெளி நாட்டு விளை பொருள்கள் குறைந்த விலைக்குக் கிடைக்கும் சூழல்கள் உருவாகி உள்ளன. உலகச் சந்தையிலும், உள்நாட்டுச் சந்தையிலும் இந்நாட்டு விவசாய விளை பொருளின் பொதுவான விற்பனை நிலை இதுதான்.

கரும்பு சாகுபடி, விற்பனையில் உலகமயமாக்கம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது? இந்தியாவின் ஆண்டுவாரி சராசரி சர்க்கரையின் தேவை 2.5 கோடி டன்களாகும். ஆனால் 2017 - 2018 சாகுபடி காலத்தில் சர்க்கரையின் மொத்த உற்பத்தி 3.15 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. கரும்பு உற்பத்தியைப் பொறுத்த வரையில் உபரி உற்பத்தி - கட்டுப்படுத்தப்பட வேண்டும். ஏற்றுமதிக்கான வாய்ப்பு இல்லாத சூழலில் கரும்பு சாகுபடிப் பரப்பினை கட்டுப்படுத்திட அரசு கொள்கை முடிவுகள் எடுக்க வேண்டும்.

நடப்பு ஆண்டு பருவத்திற்கான சர்க்கரை ஆலையில் கொள்முதல் விலை கிலோவிற்கு ரூ. 26 ஆக இருந்தது. இந்தக் கொள்முதல் விலையினை அரசு ரூ. 29 ஆக உயர்த்தி அறிவித்து இருக்கிறது. ஆனால் சர்க்கரை உற்பத்திக்கு ஆகும் செலவு மட்டும் கிலோவிற்கு ரூ. 35 ஆகும். இப்பொழுது மத்திய அரசு அறிவித்துள்ள ரூ. 8000 கோடி நிதி ஒதுக்கீடு கரும்பு சாகுபடி விவசாயிகளுக்கு முழுமையான நிவா ரணத்தை அளித்து விடமுடியாது. மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டு நிவாரணம் அனைத்து மாநிலங் களுக்கும் ஒரே விதமாக இருக்கவும் கூடாது. மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட வேண்டும்.

உத்தரப்பிரதேசம், மாகராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் தேவைக்கு அதிகமாக சர்க்கரை உற்பத்தியாகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் தேவைக்கான சர்க்கரையே உற்பத்தி ஆவதில்லை. எனவே மத்திய அரசு அறிவித்துள்ள நிதி ஒதுக் கீட்டின்படி அனைத்து மாநிலங்களுக்குமான குறைந்தபட்ச கொள்முதல் விலையும், எத்தனால் திட்டத்திற்கான ஒதுக்கீடும், தமிழ்நாடு போன்ற சர்க்கரை உற்பத்தி மாநிலங்களுக்குப் பொருந்தாது. மேலும் நிதி ஒதுக்கீட்டில் உள்ள உபரி சேமிப்பகத் திற்கான ஒதுக்கீடும், உபரியே இல்லாத - பற்றாக்குறை மாநி லங்களுக்குப் பொருந்தாது. சர்க் கரை சாகுபடி வாய்ப்புகள், சர்க்கரை ஆலை கட்டமைப்பு ஆகியவற்றின் அடிப் படையில் அந்தந்த மாநிலங்களுக்கு உரிய அளவில் நியாயமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண் டும். அப்படி செய்யா விட்டால், கைக்கு கிடைத்தது - வாய்க்கு எட்டாததது போன்ற நிலை மைதான் தமிழகம் போன்ற பற்றாக்குறை மாநிலங் களுக்கு ஏற்படும். அந்தந்த மாநி லங்களின் அடிப்படை நீர்வளம், வளர்ச்சிக்கான வாய்ப்பு,  விற் பனைக் கட்டமைப்பு - இவை களின் அடிப்படையில் மத்திய அரசு வேளாண்மைக் கொள்கை களை உருவாக்க வேண்டும். அனைத்து மாநிலங் களையும் ஒன்றாகப் பாவிக்கும் அணுகு முறை நியாயமில்லாத தோடு, உரிய பலனையும் அளிக்காது. விவசாயத்திற்கான இந்த வகையிலான பொதுக் கொள்கை கரும்பு சாகுபடிக்கும் பொருந்தும். அந்த வகையில் மத்திய பா.ஜ.க. அரசு அறிவித்துள்ள கரும்பு சாகுபடிக்கான நிதி ஒதுக்கீடு ஒரு கண்துடைப்பே! உத்தரப்பிரதேசத்தில் கைரானா நாடாளுமன்ற தொகுதியில் - கரும்பு விவசாயிகள் பெரும் பகுதியினராகக் கொண்ட இந்தத் தொகுதியில் - நடைபெற்ற இடைத்தேர்தலில் பா.ஜ.க. அடைந்த படுதோல்வியினை நிவர்த்தி செய்ய எடுக்கப்பட்ட மத்திய பா.ஜ.க. அரசின் நடவடிக்கைகளே அண்மை யில் வெளியான சர்க்கரை ஆலைகளுக்கான ரூ. 8000 கோடி நிதி ஒதுக்கீடு - உண்மையில் பிற மாநில கரும்பு சாகுபடியாளர்களுக்கு இழைக்கப்பட்ட இன்னல் அதிகரிப்பே. உற்பத்தியைப் பெருக்கச் சொல்லி, உரிய விளைபொருள் விலையினை, உரிய காலத்தில் வழங்காமல் வஞ்சித்து வரும் மத்திய பா.ஜ.க. அரசின் உழவர் விரோதப்போக்கு அதன் மொத்த அய்ந்தாண்டு கால ஆட்சியின் கடைசி ஆண்டிலாவது மாறுமா?