எழுத்துரு அளவு Larger Font Smaller Font

**தந்தை பெரியார்**

மாண்புமிகு அமைச்சர் கருணாநிதி அவர்களுக்கு சென்னையில் பொதுமக்களால் உருவச்சிலை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது கண்டு பார்ப்பனர் தங்கள் ஜாதி வழமைப்படி பொறாமைக்காட்டி விஷமக்கருத்துக்களையும் "சாப"மிடுவதையும் அள்ளிக்கொட்ட ஆரம்பித்து விட் டார்கள்! அதைக் கண்டு பயந்த அமைச்சர் கருணாநிதி அவர்கள் எனக்கு சிலை வேண்டாம் சிலை வைப்புப் பெறும் அளவுக்கு நான் தகுதி பெற்றவனல்ல" என்று அறிக்கைவிட்டிருக்கிறார்.

என்னைப் பொருத்தவரை கலைஞர் கருணாநிதி அவர்கள் பார்ப்பன விஷமத்திற்குப் பயந்து சிலை வைப்பை மறுத்து தனக்கு சிலை வேண்டாம் என்று அறிக்கை விட்டதைக் கண்டிப்பதுடன் சிலை வைப்பு கமிட்டி யார் கலைஞர் அறிக்கையைப் பற்றிக் கவலைபடாமல் சிலை வைப்புக் காரியத்தை வெற்றிகரமாய் நடத்தி முடிக்க வேண்டுமென்று தெரிவித்துக் கொள்கிறேன்.

பொதுவாக சிலை வைப்புக்கு சிலைக்கு உரியவருடைய சம்மதமும் ஆமோதிப்பும் தேவை என்று நான் கருத வில்லை.

பார்ப்பனர் விஷமம்

சிலைவைப்பது பொதுமக்களுடைய உரிமையாகுமே ஒழிய, சிலைக்கு உரியவருடைய உரிமை ஆகாது என்றே நான் கருதுகிறேன் மற்றும் சிலை வைக்கப்படுவது பற்றி விஷமத்தனமான குத்தல் தன்மையில் குறைகூறுவது மிக மிக அநாகரீகமான காரியம் என்றே கூறுவேன்; எந்த சிலையும் எல்லோருக்கும் திருப்திகரமானவையாய் இருக்க முடியாது. எதற்கும் சில பொறாமைக்காரர்களும் விஷமக் காரர்களும் இருந்துதான் தீருவார்கள். அதிலும் நமது நாட்டிலுள்ள சாதி உணர்ச்சியானது கண்டிப்பாய் யாரையும் பொறாமைக்கும், விஷமத்தனத்திற்கும் எப்படியும் ஆளாக்கி விடுகிறது. கலைஞர் சிலை வைப்பு விஷ யத்தில் ஒரு பார்ப்பனப் பத்திரிகை தனது விஷயத்தைக் கொட் டுவதில் குறிப்பிட்ட சிலை வைப்பதில் தவறு என்ன என்பதைக் காட்டாமல் சாபமிடுவது போல் இது நிலைக் காது" என்று கூறி திருப்தி அடைந்து அதற்குக் காரணம் காட்டுவதில் "நாளைக்குப் போக்குவரத்து அவசியத்தால் ரோட்டை (பாதையை) அகலமாக்க வேண் டிய அவசியம் வரும்போது சிலையெல்லாம் எடுத்துவிட வேண்டிய நிலை ஏற்படலாம்" என்று கூறி திருப்தி யடைகிறார்.

குறிப்பிட்ட சிலை வைக்க ஏற்பாடு செய்த இடத்தில் இன்றைய நிலையில் பார்க்கும்போது இனியும் பத்தல்ல இருபதாண்டு கழித்தாலும் இந்த சிலையை அப்புறப்படுத்தி ரோட்டை அகலமாக்க வேண்டிய அவசியம் ஏற்படும் என்று கருத இடமில்லை மற்றும் இந்த இடம் இதற்கு முன்னும் சிலை வைக்கத் தகுதியான இடம் என்று வேறு ஒரு சிலைக்காக கண்டு பிடித்த இடமேயாகும்.

இடம் பற்றிக் கூறுவது கற்பனைக் குறைபாடே!

எந்த சிலையை எந்த பொதுமக்கள் வைப்பதற்கு ஏற்பாடு செய்தாலும் மற்ற பொதுமக்கள் பார்வைக்கு எளிதாய்க் காணும்படியான இடத்தைத்தான் விரும்பு வார்கள் மற்றும் அந்த காரியத்தை அதில் போக்குவரத்தில் கவலையும் அனுபவமும் உள்ள அதிகாரிகளிடத்தில் விட்டுவிட வேண்டியதுதான் முறையே தவிர, பொறாமைக் காரர்களுக்கு விடுவது முறையல்ல அதில் ஒரு சமயம் தவறு இருப்பதாகக் கண்டால் காண்கிறவர்கள் யோக்கியமான காரணம் சொல்ல வேண்டும். அப்படிக்கு இல்லாமல் "நாளைக்கு ஒரு சமயம் அப்படி நேரலாம், புதியக் கண்டு பிடிப்பு அதிசயங்கள் ஏற்படுகிறபோது இந்த கிளை பொதுமக்களுக்கு அசவுகரிய உருவமாகக் காணப்படலாம்" என்று கூறித்தடுக்க முயற்சிப்பது என்றால் இது எவ்வளவு மோசமானத்தன்மை என்று சிந்திக்க வேண்டுகிறேன். விஞ்ஞான முறையில் புதிய போக்குவரத்து முறைகளைக் கண்டுபிடிக்க நேரும்போது இந்த சிலை அப்புறப்படுத்த வேண்டி வரலாம் என்றால் அதைப்பற்றி இன்றைக்கு நாம் சிந்திப்பது என்று ஆரம்பித்தால் காடு வனங்களைத் தவிர்த்து ஊர்களுக்குள் எந்த பரந்த இடத்தில் சிலை வைப்பதானாலும் அதற்கு எல்லாம் இந்த "ஏற்படலாம்" என்கின்ற கஷ்டம் எற்பட்டுத்தானே தீரும்?

இன்றைய சாதாரண முறைப்படியான பழக்க வழக்கத்திலிருக்கும் தன்மைப்படி கலைஞர் சிலை வைக்க முடிவு செய்து காரியம் துவக்கப்பட்ட இடம் எந்த விதத் திலாவது அசவுகரியமாய் இருக்கிறதா என் பதைத்தான் பொதுமக்களும், பொறுப் புள்ளவர் சிந்திக்க வேண்டியது நியாயமும், அவசியமுமான காரியமாகும்.

மற்றும் பச்சைப் பார்ப்பனப்பத்திரிகையான "இந்து"

"நாட்டில் வடநாட்டு மக்கள் கட்சி மாறுகிற தொல்லைக் கொடுக்கிறார்கள்; கேரள மக்கள் கிளர்ச்சி செய்கிற தொல்லைக் கொடுக்கிறார்கள்; தமிழ்நாட்டுமக்கள் சிலை வைக்கிற தொல்லை கொடுக்கிறார்கள்'' என்று திருட்டு பாஷையில் குத்திக் காட்டுகிறது. இதிலிருந்து இந்த பார்ப்பன பத்திரிகைகளுக்கு கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு வைக்கப்படும் சிலை மாத்திரமல்லாமல் மற்றும் காமராசருக்கும், அறிஞர்  அண்ணா அவர்களுக்கும் மற்றும் என்னைப்பற்றியும் சிலை வைப்பு காரியத்தை பொதுமக்கள் முயற்சித்ததும் முயற்சிப்பதும் பெரிய பொறாமைக்கு ஆளாகிவிட்டது என்பது விளங்குகிறது. இவ்வளவு சின்னத்தனமாக இந்தக்கூட்டம் நடந்து கொள் ளும் என்று நான் நினைக்கவில்லை ,

தமிழராட்சி கொண்டுவந்தவருக்கு சிலை வைப்பதில் தவறென்ன?

பொதுமக்களுக்காக பொதுத்தொண்டு செய்தவர்கள் என்பது மாத்திரமல்லாமல் பொதுமக்கள் பாராட்டுதலுக்குரிய எந்தக் காரியத்தை யார் செய்தாலும் அவர்களைப் பாராட்ட பெருமைப்படுத்த யோக்கியமான பொதுமக்கள் முயற் சிப்பது  இயற்கையேயாகும், அதிலும் கலைஞர் கருணாநிதி அவர்கள் விஷயத்தில் பாராட்டத்தகுந்த பல தன்மைகள் இருக்கின்றன.

கலைஞர் அவர்கள் தனது பள்ளி மாணவப்பருவத்தில் இருந்து இன்றைக்கு சுமார் 45 வயது வரை, 25-30 ஆண்டுகளாக பொதுத்தொண்டு செய்து வருகிறார்; தியாகிகள் அடையாளமாகிய சிறை செல்லும் தன்மையில் பலமுறை சிறை சென்றிருக்கிறார். இவ்வளவு மாத்திரமல் லாமல் ஓரு கட்சியையே ஆரம்பித்து, ஆரம்பித்த முக்கியஸ்தர்களில் ஓருவராய் இருந்து, அந்தக் கட்சிக்கு உண்டான எதிர்ப்புகளையெல்லாம் சமாளித்து 'அந்தக் கட்சியை நல்லவண்ணம் உருவாக்கி அந்தக் கட்சியை நாடாளும் ஸ்தாபனமாக ஆக்கி, இன்று மகாவன்மை  பொருந்திய காங்கிரசை எதிர்த்துத் தோல்வியடையச் செய்து வெற்றிக் கொடி.கண்ட ஒரு முக்கியஸ்தருக்கு ஒரு சிலை பயனடைந்த பொதுமக்கள் அல்லது அக்கட்சியார் அவ்வரசியலில் பற்றுள்ளவர்கள் சிலை வைக்க முன் வந்தால் இந்தக் காரியம் கட்சி மாறும் சின்னத்தனத்திற்கும், கிளர்ச்சிசெய்யும் காலித்தனத்திற்கும் சமமான, விவாதத் திற்கு உரிய காரியமாகுமா? என்று கேட்கிறேன்.

தமிழரின துரோகிகளுக்கு சிலை இருக்கிறதே!

இப்படிப்பார்த்தால் இன்றுள்ள, இந்நாட்டிலுள்ள எல்லா சிலைகளையும் உடைத்து எறிய வேண்டியதாகத்தானே ஏற்படும்? மகா அயோக்கியனும் இனத்துரோகியுமான, கம்பனுக்கு சிலை, தமிழனுக்காக ஒருகாசு பயனுள்ள காரியமும் செய்யாத பாரதிக்கு சிலை என்றெல்லாம் வைக்கப்பட்ட காலத்தில் ஒருவரும் ஒருவார்த்தையும் பேசவில்லை! தமிழரின் பச்சைத் துரோகியாகிய சத்திய மூர்த்திக்கு அவர் ஜாதிக்கார்கள் எவ்வளவோ ஆடம் பரமான பாராட்டுதல்கள், நினனவுச்சின்னங்கள் நடத்திய காலத்தில் ஒருவரும் ஒரு சிறு வார்த்தைகூட சொல்ல வில்லை. பெசண்டுக்கு எதற்காக சிலை? அந்த அம்மாள் பார்ப்பனக் கூலியாய் இருந்து பார்ப்பன வேஷம் போட்டு தமிழர் ஸ்தாபனமான, ஜஸ்டிஸ் கட்சியை அழிக்க முற் பட்டார் என்பதல்லாமல் அந்த அம்மாளின் பொதுத் தொண்டு என்ன? அதனால் ஏற்பட்ட நன்மை என்ன?

இன்னும் எத்தனையோ சிலை இன்று தமிழர்களுக்கு கண்வலியாக இருந்து வருகிறது. இவைகளைப்பற்றி ஒருவ ரும் இவை ஒரு நாளைக்கு ஒழிந்து போகும். அப்புறப்படுத்த வேண்டிவரும். விவாதத்திற்கு இடமானது என்று யாரும் சொல்லவே இல்லை. அப்படிச் சொல்வது அநாகரீகம் என்று கருதித்தான் எவரும் பேசவில்லையே தவிர தகுதி என்று கருதி வாய்மூடிக் கொண்டு இருக்கவில்லையே!

நீல்துரை (நீலன்) சிலையை உடைக்க ஆரம்பித்தார்கள் பார்ப்பனர் (காங்கிரசார்)! அந்த சமயத்தில் வி.கிருஷ்ணசாமி அய்யர் என்கின்ற ஒரு பார்ப்பனர் சிலையை மூக்கை அறுத்து மூளி ஆக்கிய பின்பு அந்த செய்கை நின்றது மற்றும் சிலை விஷயங்களில்  பல இரகசியங்கள் உண்டு,

இனி தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கில் சிலைகள் தோன்றலாம்.  அதுவும் பார்ப்பனர் நெஞ்சம் வெடித்து விழும் அளவுக்குத் தோன்றலாம். இந்த நிலையில் பார்ப்பன பொறாமைக்குப் பயந்து "எனக்கு சிலை வேண்டாம்" என்று சொன்னால் அது பார்ப்பனருடன் சேர்ந்து கொண்டு அல்லது பார்ப்பனருக்குப் பயந்து தமிழர் பெருமையைக் குலைக்க பங்கு கொள்ளுவதேயாகும்,

எனவே கலைஞருக்கு தனக்கு சிலை வேண்டியதில்லை என்றிருந்தால் "எனக்கு வேண்டாம். நான் விரும்பவில்லை" என்று சொல்லிவிட்டுப் பேசாமல் இருக்கலாமே ஒழிய, அதைத்தடுப்பது அறிவுடைமையாகாது. ஏனென்றால் அந்த சிலை அவரது சொந்த விஷயமல்ல, ஒரு தமிழனைப் பாராட்டுவதும் தமிழ் மக்களிடையில் பின் சந்ததிக்கு நினைவூட்டும் அறிகுறியுமாகும்.

கலைஞர் அறிவில் சிறந்தவர், நிர்வாகத்தில் சிறந்தவர், பொதுத்தொண்டுக்காக தியாகம் செய்ததில் சிறந்தவர். பார்ப்பன ஆதிக்க ஆட்சியை தமிழர்க்கு ஆக்கித்தந்தவர்.

கடைசியாக "சிலைகள் போக்குவரத்துக்கு இடைஞ்சல்," என்று சொல்லுவது பொருத்தமான கருத்து ஆகாது. இன்று நாட்டில் எங்கு பார்த்தாலும் துணிகரமாக பொது இடங்களில் மக்கள் சவுகரியத்திற்குக்கேடாக கோயில்கள் கட்ட ஆரம் பித்து விட்டார்கள்! அவற்றால் ஏற்படும் போக்குவரத்து அசவுகரியத்தில் சிலை வைப்பது என்பதால் 10இல் ஒரு பங்கு அசவுகரியம் கூட கிடையாது என்று கூறுவேன்.

எனவே கலைஞரின் சிலை தயாராகி இருப்பதை ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தில் கண்டிப்பாக வைத்து, நிலை நிறுத்தியே ஆகவேண்டும். இதைக் கமிட்டியார் கை விட்டாலும் பொதுமக்கள் முன்னின்று நடத்தியே ஆக வேண்டும் என்றும், இதற்கு அறிஞர் அண்ணா அவர்கள் எந்தவித இடையூறுக்கும் இடம் கொடுக்காமல் ஆதர வளித்து தமிழர் மானத்தைக் காப்பாற்ற வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன்.

அமைச்சர் திரு. கருணாநிதி. அவர்களுக்கு சிலை வைப்பதைக் கண்டித்து எழுதிய பச்சைப் பார்ப்பன ஏடான இந்து'

"வடநாட்டில் தினம் தினம் கட்சிவிட்டு கட்சி மாறுவது அரசியல் திருப்பணியாக இருக்கிறது. தென்கோடியில் உள்ள கேரளத்தில் ஆட்சியும் கிளர்ச்சிகளும் இரண்டும் தவிர்க்கமுடியாமல் இணைக்கப்பட்ட ஒன்று என்ற கருத்து புகுத்தப்பட்டுள்ளது. சென்னை ராஜ்யத்தின் கலாச்சாரத் துறையில், பங்கு, பணி என்னவென்றால் சிலைகளை கொச கொசவென்று உற்பத்திச் செய்துகொண்டே போவதுமாகத் தான் இருக்கிறது!" என்று (25.5.1968) எழுதியுள்ள தலை யங்கத்தில் அது குறிப்பிட்டுள்ளது. இது பொறாமையாலும் பச்சை பார்ப்பன வர்ணாசிரம புத்தியாலும் எழுதப்பட்டதல்லாமல் வேறு என்ன?

காலித்தனத்தில் (கிளர்ச்சி) ஈடுபடுவதையும், கட்சி விட்டு கட்சி மாறும் பச்சோந்தித்தனத்தையும் சிலை வைப்பதுடன் ஒப்பிடுவது எவ்வகையில் பொருத்தமான தாகும்? சென்னை மாநிலத்தில் இதைத்தவிர வேறு பங்கு பணி எதையுமே இந்து'வின் கண்ணோட்டத்தில் இன்றைய அரசு செய்ய வில்லை போலும்!

கட்சிமாறும் சின்னத்தனத்தோடும் வன் முறையிலும் ஈடுபடும் கிளர்ச்சி என்ற காலித்தனத்தோடும், சிலை வைப்பதையும், சேர்த்து எழுதுவதே அசல் போக்கிரித்தனம் அல்லது அயோக்கியத்தனம் ஆகும்!

கொச கொச வென்று சிலைலைப்பது பெருகிக் கொண்டே செல்லுகிறது என்று எழுதும் இந்த பத்திரிகை, வீதிக்கு வீதி. கல்லை நட்டு வேலை நட்டு, கோயில்கட்டி உண்டியில் கொஞ்ச வசூல்பெருக ஆரம்பித் ததும் ஒரு பார்ப்பானை மணியடித்து காசு வசூலிக்கப்போடுவது 'இந்து' ஏடு அறியாதா?

போக்குவரத்துக்கு இடையூறு என்று முதலைக் கண்ணீர் வடிக்கும், இந்த பார்ப் பனர்கள் அதுபற்றி என்றாவது கண்டித்து எழுதியது உண்டா?

கட்சி விட்டு கட்சி மாறினால் ஒழுக்கக் கேடு, கிளர்ச்சி நடத்தினால் பொதுச் சொத்துக்கு சேதம்-கேடு! இவை களுடன் சிலை, வைப்பதை எப்படி ஒப்பிடமுடியும்? சிலை வைப்பதால் யாருக்கு என்ன கெடுதி? பொதுத் தொண்டு ஆற்றியவர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு வருகிறது என்றால் அதைப் பார்ப்பனரால் சகிக்க முடிய வில்லை என்பதோடு கண்நோய் கொண்டவன் சூரியனைப் பார்ப்பதில் எவ்வளவு சங்கடப்படுவானோ அது போலல் லவா இவர்கள் வேதனையை அனுப்பிவிக்கிறார்கள்?

பார்ப்பன சாதிப்புத்தி எப்படி வேலை செய்கிறது என்ப தற்கு இதைவிட வேறு எடுத்துக்காட்டு என்ன வேண்டும்?

அதுபோலவே சிலை வைப்பதற்கு வயது வேண்டும் என்று பேசுவதே கூட ஒரு முட்டாள்தனம் என்பேன். பொறாமைக்காரர்களும் வயிற்றெரிச்சல் பிண்டங்களும் வேறு குறைகூறக் காரணம் கிடைக்காததால் இப்படி ஒன்றைக் கூறுகிறார்கள்! திருவாங்கூர் ராஜாவுக்குச் சிலை வைத்தார்கள் அவருக்கு வயது மிகமிகக்குறைவு. ஒரு, சின்னப்பையன்' என்று கூறத்தக்க  வயதுதான் அப்போது அவருக்கு! அதனால் யாருக்கு என்ன இடைஞ்சல் ஏற்பட்டது?

மக்களிடம் பொதுத் தொண்டு ஆற்றுவதன் மூலம் குறிப்பிடத்தக்க சாதனைபுரிந்தவர்கள் மக்களால் பாராட்டப் படுபவர்களே தவிர, வயது ஆகிவிட்டது என்பதற்காக எல்லோரும் பாராட்டப்படுகிறார்களா?

வயதைவிட அவர்கள் மக்களுக்கு ஆற்றிய சாதனை தானே முன் நிற்கிறது?

குறைந்த வயது உடையவர்களுக்குச்  சிலை வைக்கக் கூடாது என்று கூறுவது முட்டாள் தனம்' என்றால் அதை விட பெரியமுட்டாள்தனம் உயிரோடு இருக்கிறவர்கட்கு சிலைவைக்கக்கூடாது என்று கூறும்வாதம் ஆகும்! இது முட்டாள்தனம் அல்லவென்றால் அசல் அயோக் கியத்தனம் என்பேன்!

ஒருமனிதனை அவனது தொண்டுக்காகப் பாராட்டுவது புகழ்வது, அவனது பொதுத் தொண்டினை அங்கீகரிப்பது என்றால் அவன் உயிரோடு இருக்கும்போது செய்வது எப்படித் தவறானதாகும்.

அந்த ஊக்கத்திலும் உற்சாகத்திலும், மக்களின் அன் பாலும் அவன் மேலும் மேலும் பொதுத்தொண்டு ஆற்ற உறுதிப்படுவதற்கு அது பயன்படுமே!

ஒருவருக்கு சிலை வைப்பது என்பது அவரது தொண்டுக்கு பாராட்டு என்பதல்லாமல் வேறு என்ன?

"சிலைகள் விஷயமாக இந்த நாட்டிலும் சரி, அயல் நாடுகளிலும் சரி சில மரபுகள் உண்டு. உயிருடன் இருப்ப வர்களுக்குச் சிலை வைப்பதில்லை என்பது மிக மிகத் தொன்மையான முதல் கோட்பாடு. காலத்தைமீறிய பெரும் புகழ்தான் இத்தகைய கவுரவத்திற்கு உரியது, எவ்வளவு பெரியவர்களானாலும் ராஜ்யவாதிகளுக்கு இந்த கவுரவம் கிடைப்பதில்லை என்று 'தினமணி' ஏட்டில் (28.5.1968) மற்றொரு பார்ப்பனர் தலையங்கம் எழுதியுள்ளார்!

உயிருடன் இருப்பவர்களுக்கு சிலைவைப்பதில்லை என்பது மரபு என்று கூறுவதே அர்த்தமற்ற வாதமாகும்.

சென்னை சர்வகலாசாலை வைஸ் சான்ஸ்லர் டாக்டர் ஏ. லட்சுமணசாமி முதலியாருக்கு சிலை வைக்கவில்லையா?

தலைவர் காமராசருக்கு சிலை சில ஆண்டுகளுக்கு முன் வைக்கவில்லையா?

ஒய்வு பெற்ற சென்னை பிரதம நீதிபதி டாக்டர் ராஜமன்னாருக்கு சிலை வைக்க வில்லையா?

இதுபோல் ஏராளமாக உதாரணங்கள் காட்ட முடியுமே! மரபு என்றால் இவைகள் விலக்கு என்று தானே பொருள்? அப்புறம் "மரபு" என்ன அழுகிறது?

பிரிட்டனில் சர்ச்சிலுக்கு அவரது வாழ்நாளிலேயே சிலை வைத்தார்களே அவர் ஒரு ராஜீயவாதி அல்லாமல் வேறு என்ன?

நேரு ஒரு பார்ப்பனரானபடியால் காமராஜர் சிலை திறக்கும்போது, ''உயி ருடன் இருப்பவர்களுக்கு சிலை வைப்பது கூடாது என்ற கருத்துடையவனாக நான் இருந்தாலும் நான் காமராசருக்கு ஆக இதற்கு ஒப்புக்கொள்கிறேன்" என்று அந்த  சிலைத் திறப்பு விழாவில் பேசினார்! அவரது பார்ப்பன மனப்பான்மைதான் அப்படி அவரைப் பேச வைத்திருக்கவேண்டும்!

இம்மாதிரி பார்ப்பனர்கள் எழுதுவது தமிழர்களை பெரிய மனிதர்களை அவமானப்படுத்த வேண்டும் என்ற சின்னத்தனமான அற்பபுத்தி அல்லாமல் வேறு என்ன?

தமிழர்களில் சிலரும் பார்ப்பனர்களுடன் சேர்ந்து அதே குரலில் பேசுவது அவர்களின் அசல் சூத்திர'சாதி புத்தியைத் தான் காட்டுகிறதே தவிர வேறு எதையும் காட்டவில்லை.

வெங்காயத்தை உரித்து எத்தனை தடவை வேக வைத்தாலும் அதன் வாடை போகாது என்பதுபோல, பார்ப்பான் எங்கு போனாலும் அவர்கள் சாதிப் புத்தி மட்டும் மாறாது என்பதைத் தானே இது காட்டுகிறது?

அண்மையில் வைக்கப்படும் சிலையெல்லாம் தமிழர் களுக்கு, தமிழர் தலைவர்களுக்கே இருப்பதால் பார்ப்பானுக்கு இவ்வளவு இரத்தக்கொதிப்பு ஏற்படுகிறது!

அவனது இந்த விஷமத்தைப் புரிந்து கொள்ளாமலோ, அல்லது பார்ப்பனர் மனம் குளிர வேண்டும் என்பதாலோ நம்மினத்தவர்களும் அவர்களுடன் சேர்ந்து தலை யாட்டுவது பச்சை இனத் துரோகம்.

திரு. கருணாநிதிக்கு சிலை என்பது ஒரு நபரைப் பொறுத்த சொந்தவிஷயமாக நான் கருதவில்லை. தமிழர் களின் மானத்தைப் பொறுத்ததாகத்தான் கருதுகிறேன்.

பார்ப்பன விஷமம் இதோடு நிற்காது தி. மு. க.விலும் சிலரைத் தூண்டிவிட்டு, அதைப் பிளவுப்படுத்த இதை ஒரு வாய்ப்பாக்க முடியுமா என்றுகூட முயற்சிக்கக்கூடும் அம்மாதிரி பூச்சாண்டிகளையெல்லாம் நமது முதல்வர் அண்ணா அவர்கள் லடசியம் செய்யாமல், துணிந்து செயலாற்ற வேண்டும்.

கமிட்டியார் எப்படி நடந்து கொண்டாலும் பொதுமக்கள் முன்வரவேண்டும்.

இனஉணர்ச்சி உள்ள மக்களே! தமிழர்களே சிந்தியுங்கள்! இப்படி ஒரு பார்ப்பனருக்கு அறிவிப்பும் ஏற்பாடும் நடத்து முடிந்த நிலையில் இடையில் திடீரென நிறுத்தப் பட்டால் பார்ப்பனர் சும்மா இருப்பார்களா? அதையும் சிந்தியுங்கள் எனக்கூறி இப்போதைக்கு இதை முடிக்கிறேன்.

(28.5.1968, 29.5.1968 நாள்களில் பெரியார்

'விடுதலை'யில் எழுதிய தலையங்கங்கள்)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner