எழுத்துரு அளவு Larger Font Smaller Font

குன்னூர், ஜூலை 1-  ரத்த சம்பந்த உறவைவிட கொள்கை உறவுதான் முக்கியம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

ஜூன் 24, 25 ஆகிய நாள்களில் குன்னூரில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நிறைவு நாளான 25.6.2017 அன்று பயிற்சிப் பட்டறையில் பங்கேற்ற மாணவர்களிடையே  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

பாராட்டி மகிழ்கிறோம்!

அனைவருக்கும் அன்பான வணக்கம். இரண்டு நாள் குன்னூர் பெரியாரியல் பயிற்சி பட்டறை மிகச் சிறப்பாக நடைபெற்றது. இளந்தளிர்கள் கருத்தூன்றி கேட்ட முறை சிறப்பாக அமைந்துள்ளது. இதனை பல்வேறு தொல்லை களையெல்லாம் தாண்டி, அருமையாக இந்தக் குளிர் பகுதியில் சிறப்பான ஏற்பாடுகளை எல்லோருக்கும் செய்த நம்முடைய குன்னூர் நீலகிரி மாவட்டத் தலைவர், செயலாளர், செயற்குழுவினர், அவர்களுக்கு ஆதரவாக, புரவலராக இருக்கக்கூடிய நம்முடைய கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல்செல்வி, பெரியார் மருத்துவரணியின் தலைவர் டாக்டர் கவுதமன், அவர்களுடைய குடும்பத்தவர்கள், நம்மு டைய மண்டலத் தலைவர்களாக இருக்கக் கூடிய தோழர்கள் அத்துணை பேரையும் வெகுவாகப் பாராட்டி மகிழ்கிறோம்.

அவர்களுடைய திட்டமிட்ட உழைப்பு, சிறந்த வெற்றியை ஈட்டித் தந்திருக்கிறது. எதையுமே நாம் திட்டமிட்டு செய்தால், மகிழ்ச்சியோடு இருக்கும்.

இன்றைக்கு மாநிலம் தழுவிய அளவில், வெளியூர்களிலி ருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும்கூட இயக்கத் தோழர்கள், செயலாளர்கள், பொறுப்பாளர்கள் சிலர் வந்திருப் பதும் வரவேற்புக்குரிய ஒன்று - மகிழ்ச்சிக்குரிய ஒன்று.

நல்ல ஈர்ப்போடு நீங்கள் உள்வாங்கிக் கொண்டதை எங்களால் உணர முடிந்தது

பயிற்சி பெற்ற மாணவர்களின் வினாக்களுக்கு விடை அளிப்பதற்கு முன், நேற்று நான் குறிப்பாக கவனித்தேன், இங்கே வந்திருக்கும் மாணவச் செல்வங்கள், நல்ல ஈர்ப்போடு நீங்கள் உள்வாங்கிக் கொண்டதை எங்களால் உணர முடிந்தது. இதனை மேலும் மேலும் வளர்த்துக் கொண்டு போகவேண்டும்.

இந்தப் பயிற்சி முகாமில் கலந்துகொள்கின்றவர்களுக்கு ஒரு படிவம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்தப் படிவத்தில் உங்களுடைய பெற்றோர்களுடைய அல்லது உங்களுக்கு என்று இருக்கக்கூடிய தனிக் கைப்பேசி எண் ஆகியவற்றைக் குறிப்பிடவேண்டும்.

நம்முடைய இயக்கம் ஒரு தனித்தன்மையான இயக்கமாகும்

உங்களுக்கு சில அறிவிப்புகள் வரும் - தலைமைக் கழகத் தோடு மாதத்தில் ஒருமுறையாவது தொடர்பு கொள்ளலாம். எங்களோடும் நீங்கள் பேசலாம். நமக்கு ஒரு நெருக்கமான தொடர்பு பிள்ளைகள் என்று சொன்னால், கழகக் குடும்பம்தான். வெறும் கொள்கையைப்பற்றி மட்டும் பேசி, பிரச்சாரத்தோடு நிறுத்திவிடுவதல்ல. நாம் நடத்துகிற எல்லா நிறுவனங்களும், அய்யா அவர்களுடைய காலத்திலிருந்து, அன்னை மணியம்மையார் அவர்களுடைய தலைமைக் காலத்திலிருந்து இன்றுவரையில், நம்முடைய இயக்கம் என்பது ஒரு தனித்தன்மையான இயக்கமாகும். மற்ற அரசியல் கட்சிகள் போன்று அல்ல. அரசியல் கட்சியில், பதவிக்காக செல்வார்கள்; அப்படி பதவி கிடைக்கவில்லை என்றால், இன்னொரு கட்சிக்கு தாவுவார்கள். அதிலும் இப்பொழுது சொல்லவேண்டிய அவசியமே இல்லை.

தேர்தல் வந்தால், ஒரே ஆள் நான்கு கட்சிகளிலும் வேட்பு மனு போடுகிறார். எந்தக் கட்சியில் இடம் கிடைக்கிறதோ, அந்தக் கட்சிக்குப் போகலாம் என்று. கொள்கையைப்பற்றி அவர்களுக்குக் கவலையில்லை.

உலகத்தில் வேறு எங்கும் தந்தை பெரியாரைப்போல் பார்த்திருக்கவே முடியாது

கட்சி ஆரம்பிக்கப் போகிறோம், அரசியலுக்கு வரப் போகிறோம் என்று இப்பொழுது சொல்கிறவர்கள் எல்லாம், கட்சிக்கு என்ன பெயர் என்று தெரியாது; கட்சியினுடைய கொள்கை என்ன என்று தெரியாது. ஏன் கட்சியை ஆரம் பிக்கிறோம் என்று அவர்களுக்கும் தெரியாது. எப்பொழுது ஆரம்பிக்கப் போகிறோம் என்பதும் தெரியாது. ஆனால், ஊடகங்கள், பத்திரிகைகளைச் சந்தித்து, அதனை மிகப் பிரபலப்படுத்துவது மட்டும் இருக்கிறது.

அய்யா தந்தை பெரியார் அவர்கள், தன்னுடைய வாழ் நாள் முழுவதும் இந்த மக்களுக்காக செலவழித்தார். இதுபோன்ற ஒரு தலைவரை உலகத்தில் வேறு எங்கும் நாம் பார்த்திருக்கவே முடியாது. வாழ்நாள் முழுவதும் இந்த மக்களாகவே பாடுபட்டார். கையெழுத்து வாங்கினால்கூட நாலணா வாங்குவார் அதற்காக. ஆனால், இங்கே புத்தகம் வாங்கிக்கொண்டு வந்து, கையெழுத்து வாங்கினீர்களே, அதுபோல, புத்தகம் வாங்கிக்கொண்டு அய்யாவிடம் கையெ ழுத்துப் போடுமாறு சொன்னால், அந்தக் கையெழுத்துக்கு காசு வாங்கமாட்டார். பிள்ளைகள் புத்தகம் படிக்கவேண்டும் என்பதில் அய்யாவிற்கு அவ்வளவு உற்சாகம், மகிழ்ச்சி.

அந்தக் காலத்தில்

100 ரூபாய் கொடுத்தாலே அதிசயம்

அய்யாவிற்கு அன்பளிப்பு கொடுக்கிறார்கள் - சென்னை யில் இருக்கின்ற தோழர்களும் இங்கே வந்திருக்கிறார்கள். தங்கமணி - தனலட்சுமி. இயக்கத்தில் சேர்ந்து 50 ஆண்டுகள் ஆவதையொட்டி, அவர் ஒரு பொன்விழா கொண்டாட விருக்கிறார். அதையொட்டி அவர் ஆயிரம் ரூபாய் நன்கொடை அளித்தார்.

இப்பொழுதெல்லாம் தாராளமாக 500 ரூபாய், 2000 ரூபாய் நோட்டுகள் சர்வசாதாரணம். அந்தக் காலத்தில் 100 ரூபாய் கொடுத்தாலே அதிசயம்.

வேடிக்கையாக சொல்லவேண்டும் என்றால், 101 காலணா, 51 காலணா கொடுப்பார்கள். காலணா என்றால், இன்றைய இளைஞர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. அய்யாவிற்கு 101 காலணா கொடுப்பதற்காக பெரிய பை, அதில் பூக்கள் எல் லாம் வைத்திருப்பார்கள். 16 காலணா என்றால் ஒரு ரூபாய் மதிப்பு.

ஞானசெபஸ்தியான் அவர்களின்

ஒரு ரூபாய் நன்கொடை!

நம்முடைய மருந்தியல் கல்லூரியில் இருக்கும் 97 வயதான செபாஸ்தியான் அவர்கள் இலங்கையில் இருந்தவர். அந்தக் காலத்திலிருந்தே இயக்கத்திற்கு ஆதரவாளர். பச்சை அட்டை ‘குடிஅரசி'னைப் பார்த்ததில், ஒரு சிறிய செய்தியை நான்கு வரியில் போட்டிருந்தார்.

அது என்னவென்றால், இலங்கையில் இருக்கக்கூடிய ஞானசெபஸ்தியான் அவர்களுடைய மூத்த மகளுக்கு மாதரசி என்று பெயர் வைத்தமைக்காக குடிஅரசு வளர்ச்சிக் காக பெரியார் அவர்களுக்கு ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்திருக்கிறார்.

அந்தக் காலத்தில் ஒரு ரூபாய் என்றால், பெரிய தொகை யாகும். ஆக, காலணாக்கள், நாலணாக்கள் வாங்கி வளர்ந்த இயக்கம். அத்தணையும் அய்யா அவர்கள் என்ன செய்தார்? அவ்வளவையும் பொதுமக்களே கொடுத்து அறக்கட்டளைக்கி விட்டார். அதுதான் இன்றைக்குப் பல்கலைக் கழகமாக, கல்வி நிறுவனங்களாக உள்ளன.

அதேபோன்று, நம்முடைய குழந்தைகள் இல்லத்தை எடுத்துக்கொண்டாலும், அரசாங்கம் நடத்துகின்ற குழந்தை கள் இல்லம், அல்லது தனியார் நடத்துகின்ற குழந்தைகள் இல்லத்தைப் பார்த்தீர்களேயானால், 18 வயது வரையில் வளர்த்த பிறகு, அவர்கள் வெளியில் சென்று விடுவார்கள்.

பிறந்து ஒரு நாளான

குழந்தையைக்கூட...

ஆனால்,  தந்தை பெரியாரும், அன்னை மணியம்மையார் அவர்களும், பிறந்து ஒரு நாளான குழந்தையைக்கூட எடுத்து வளர்த்திருக்கிறார்கள். மருத்துவமனைகளில் கைவிடப்பட்ட குழந்தைகள். சமூகத்தினுடைய கோளாறினால் பயந்துபோய் குழந்தையைப் பெற்றவர்கள் அப்படியே விட்டுவிட்டுப் போய்விடுவார்கள். இது நம்முடைய நாட்டில் சர்வ சாதாரணம்.

திருமணம் செய்துகொள்ளாமல், காதலனால் கைவிடப் பட்ட பெண்கள், கருவுற்ற பெண்கள் எல்லாம் குழந்தை பெற்றதும் அதை அப்படியே விட்டுவிட்டுப் போய்விடு வார்கள். அந்தக் குழந்தைக்கு அப்பா யார்? அம்மா யார்? என்றும் தெரியாது. என்ன ஜாதி? என்ன மதம்? என்பதுகூட தெரியாது.

அந்தக் குழந்தைகளை அன்னை மணியம்மையார் அவர்கள் எடுத்து வளர்த்திருக்கிறார்கள். அதுபோன்று வளர்க்கப்பட்ட குழந்தைகள் நம்முடைய நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தில் பல குழந்தைகள். அவர்கள் எப்படி வந்திருக்கிறார்கள் என்ற சொன்னால், மிகப்பெரிய அள விற்குப் படிப்பு கொடுக்கப்பட்டு, சொந்தக் குழந்தைகள்போல், அவர்களை வளர்த்து, ஆளாக்கினார்கள் என்பதை நன்றாக நீங்கள் நினைத்துப் பாருங்கள்.

தந்தை பெரியாரே

ஒரு பெரிய குழந்தைதான்!

கடவுளை மற - மனிதனை நினை! என்கிற வார்த்தையை நேற்று சொன்னோம். அது வெறும் உச்சரிப்பு அல்ல! வெறும் எழுத்தல்ல! நடைமுறையில் ஒரு இயக்கம் அதனை செய்து கொண்டிருக்கிறது என்பதற்கு மிகத் தெளிவாக நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய செய்தி என்னவென்றால்,

மருத்துவமனையில் இருந்து எடுத்து வந்த குழந்தைகளை, அன்னை மணியம்மையார் அவர்கள், தன்னுடைய உடல் நலக் குறைவைப் பொருட்படுத்தாமல் - அவரைப் பொறுத்த வரையில் தந்தை பெரியாரே ஒரு பெரிய குழந்தைதான். அவர்கள் ஒரு செவிலித்தாய் போன்றவர் அய்யாவுக்கு.

ஏழாவது கட்டத்திற்கு மனிதன் போய்விட்டால், மனிதன் முதுமை அடைந்துவிட்டால், முதுமை அடைந்தவர்கள் எல்லாம் மற்றவர்களுக்குக் குழந்தைகள்தான். குழந்தை களுக்கு இருக்கின்ற பிடிவாதம், குழந்தைகளுக்கு இருக்கின்ற முரட்டுத்தனம் - சில நேரங்களில் குழந்தைகளுக்கு இருக் கின்ற கிறுக்குத்தனம் எல்லாமே முதியோர்களுக்கு இருக்கும். எங்களுக்கெல்லாம் இருக்கும் என்று சொல்கிறேன்.

இல்லக் குழந்தைகளுக்கு

முன்னெழுத்து கொடுத்தவர்கள்

அதுபோன்ற ஒரு பெரிய வாய்ப்பு - அந்தக் குழந்தையைப் பார்க்கவேண்டும் என்பதைவிட, ஒரு நாள் குழந்தையைக்கூட, அவர் பெறாத குழந்தைகளை - பெற்ற குழந்தைகளுக்குக்கூட கிடைக்க முடியாத ஒரு சலுகையாக - அந்தக் குழந்தைகளை எடுத்து ஆளாக்கி - நல்வாய்ப்பாக நம்மிடமே பள்ளிக் கூடங்கள் இருப்பதினால், அந்தப் பள்ளிக்கூடங்களில் சேர்த்து, அந்தக் குழந்தைகளுக்கு முன்னெழுத்து போட வேண்டும் அல்லவா - அந்த முன்னெழுத்து என்ன கொடுத்தார்கள் என்றால், ஈ.வெ.ரா.ம.

உலகத்தில் எவ்வளவோ அநாதை இல்லங்கள், எவ் வளவோ ஆர்ப்பரிப்புகள் நடந்திருக்கின்றன. ஆனால், அங்கே இதுபோன்ற ஒரு சங்கதியை தேடிக் கண்டுபிடித்தால், அவர்களுக்கு லட்ச ரூபாய் பரிசளிக்கத் தயாராக இருக்கி றோம்.

எவ்வளவு மனிதநேயம் பாருங்கள். பெரியாருக்குப் பிள்ளை இல்லை என்பார்கள்; மணியம்மையாருக்குக் குழந் தைகள் இல்லை என்பார்கள். ஆனால், தங்கள் குழந்தைகளாக மருத்துவமனையில், சமுதாய சீர்கேட்டின் விளைவாக வந்த அந்தக் குழந்தைகளை வளர்த்தார்கள், அதனை எண்ணிப் பாருங்கள், கண்ணீர் வரும்.

அந்தக் குழந்தைகளைப் படிக்க வைத்து, இன்றைக்குப் பெயரில் இருந்த அநாதை என்கிற வார்த்தையை எடுத்து விட்டோம். நாகம்மையார் குழந்தைகள் இல்லம். நம்முடைய வீடுகளில் நல்ல நிகழ்வுகள் என்றால், விருந்து கொடுக்கிறோம். இப்பொழுது நம்முடைய தோழர்கள் பலர் திருச்சி நாகம் மையார் குழந்தைகள் இல்லத்திற்கு விருந்து கொடுக்கிறார்கள். தங்களுடைய பிறந்த நாள், தங்களுடைய அப்பா - அம்மா  நினைவு நாள்; தங்களுடையத் திருமண நாள்களுக்கு விருந்து கொடுப்பார்கள்.

வெளிநாட்டில் உள்ள நன்றியுள்ள தமிழர்கள், சான்றோர் கள், பொதுநல வாதிகள் இவர்கள் எல்லாம் கூட செய்கிறார்கள்.

சட்டப்படி பார்த்தால், 16 வயது ஆனவுடன் வெளியில் அனுப்பிவிடவேண்டும்!

அந்தக் குழந்தைகள் வளர்ந்து, பெரிய அளவுக்கு வந்திருக்கிறார்கள். சட்டப்படி பார்த்தால், 16 வயது ஆனவுடன் அந்தக் குழந்தைகளை வெளியில் அனுப்பிவிடவேண்டும் என்று சொல்கிறது அரசாங்கம்.

ஆனால், நாம் அப்படி செய்யவில்லை. அந்தக் குழந்தை களை வளர்த்து, ஆளாக்கி, பள்ளிப் படிப்பை முடிக்க வைத்து, அதற்குமேலும், கல்லூரிப் படிப்பையும் நம்முடைய அறக் கட்டளையிலிருந்து வழிகாட்டி செய்து கொண்டிருக்கிறோம். சில பிள்ளைகள் பள்ளிப் படிப்போடு நிறுத்திவிடுவார்கள்; சிலரை நாங்கள் வற்புறுத்தி படிக்க வைத்திருக்கிறோம்.

அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகள் காலணா வேலை செய்தால், நான்கு ரூபாய்க்கு விளம்பரம் தேடுவார்கள். நாம் நான்கு ரூபாய்க்கு வேலை செய்தாலும், காலணா விளம் பரம்கூட செய்யாத இயக்கம்.

60 ஆண்டுகளுக்கு மேலாக...

நம்முடைய தோழர்கள் பல பேர்களுக்குக்கூட நாகம்மை யார் குழந்தைகள் இல்லத்தைப்பற்றி சரியாக தெரிய வாய்ப் பில்லை. 60 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரக்கூடிய இல்லம் நாகம்மையார் குழந்தைகள் இல்லம்.

அதைவிட, இன்றைக்குப் பெரியார் அய்யா இல்லை, மணியம்மையார் அம்மா இல்லை. நம்மைப் போன்ற எளிமையானவர்கள்தான் அந்த இல்லத்தினை நடத்துகிறோம். அந்த இல்லத்தில் வளர்ந்த குழந்தையான தங்காத்தாள்தான் இன்று அந்த இல்லத்தினை கவனித்துக் கொள்கிறார்.

இப்பொழுது எங்கே பார்த்தாலும் குழந்தைகள் இல்லத்தில் தவறுகள் நடப்பதுபற்றி செய்திகளில் பார்த்திருப்பீர்கள். குழந்தைகளை விற்கிறார்கள்; குழந்தைகளைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள்.

இப்படியெல்லாம் இருக்கும்போது திருச்சியில் சில இடங் களில் இப்படி நடைபெற்றபோது, காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். அந்த வழக்கு நீதிமன்றத்திற்குச் சென்றது.

உயர்நீதிமன்ற நீதிபதியின்

பாராட்டும் - உத்தரவும்!

அந்த இல்லங்களில் இருக்கின்ற குழந்தைகளைப் பிரித்து வேறு இல்லங்களில் போட்டார்கள். மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் அந்த வழக்கு வந்தபோது, நீதிபதி அவர்கள் சொல்கிறார், இந்த இல்லத்தில் ஏன் அந்தக் குழந்தைகளைச் சேர்த்தீர்கள்; அங்கே வேண்டாம் - நாகம்மையார் குழந்தை கள் இல்லம் சிறப்பாக இருக்கிறது. அந்த இல்லத்தில் இந்தக் குழந்தைகளை சேருங்கள் - அப்பொழுதுதான் இந்தக் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு என்று உத்தரவு போட்டார்.

இதைவிட நமக்கு பெரிய பெருமை - அங்கீகாரம் வேறு என்ன வேண்டும்.

இதுவரையில் 32 குழந்தைகளுக்கு திருமணம் நடை பெற்று இருக்கிறது. அவர்கள் வாழ்க்கையில் சிறப்பாக இருக் கிறாரகள். அவர்களுடைய பிள்ளைகள் வளர்ந்து பொறி யாளர்களாகவும், மருத்துவர்களாகவும் இருக்கிறார்கள். அவர் களுடைய திருமணத்திற்குத் தலைமை தாங்கிய நான்,  அவர் களுடைய பேரப் பிள்ளைகளின் திருமணத்திற்கும் தலைமை தாங்கி நடத்தி வைத்திருக்கிறேன். தாத்தா - பேரன் உறவு.

ஒரே ஒரு உதாரணம் சொல்லி முடிக்கிறேன். ஒரு குழந்தை எஸ்.எஸ்.எல்.சி.யில் நல்ல மதிப்பெண் வாங்குவார். அந்தக் குழந்தையை அழைத்து, எல்லோர் முன்னிலையிலும் பாராட்டி, நீ பிளஸ் டூ படிக்கவேண்டும் என்றேன்.

பொறியாளராகி,

பிஎச்.டி. பட்டம் பெற்றார்!

உடனே அந்தக் குழந்தை, இல்லை அண்ணே, எனக்கு படிக்கிறது அதிகம் வராது (அண்ணன் என்றுதான் கூப்பிடு வார்கள் அந்தக் குழந்தைகள்) எனக்கு.  ஆசிரியர் பயிற்சியில் சேர விருப்பம் என்று சொல்வார்கள்.

உடனே நாங்கள், இல்லை இல்லை நீ கண்டிப்பாக பொறியாளராக வேண்டும். நம்முடைய பொறியியல் கல்லூரி யில் சேர்க்கிறோம் என்று சொல்லி, அந்தக் கல்லூரியிலேயே சேர்த்து, அதற்கான கட்டணத்தை நம்முடைய அறக்கட்டளை யிலிருந்து கட்டுகிறோம் என்றேன்.

உடனே அந்தப் பிள்ளை எனக்கு கணக்குப் பாடம் வராது, பொறியியல் படிப்பு படிக்கவேண்டும் என்கிறீர்களே அண்ணா!

கவலைப்படவேண்டாம்; கணக்குப் பாடத்திற்குத் தனியாக ஆசிரியர் இருக்கிறார், உனக்கு நான் சொல்லிக் கொடுக்கச் சொல்கிறேன் என்றேன்.

அந்த ஆசிரியரும் அருமையாக கணக்குப் பாடத்தை சொல்லிக் கொடுத்தார்.

பிறகு அந்தப் பிள்ளை நம்முடைய பொறியியல் கல்லூரியில் பி.இ. படித்து, பிறகு எம்.இ. படித்து முடித்தார். அவருக்கு ஆடிட்டர் ஒருவரை திருமணம் செய்து வைத் தோம். அவர் களுடைய குழந்தை மாநிலத்திலேயே அதிக மதிப்பெண் பெற்றார்.

படிக்க மாட்டேன் என்று சொன்ன அந்தப் பிள்ளை, கல்லூரியில் லெக்சரராக இருக்கிறார். எம்.இ. படித்த அந்தப் பிள்ளை இப்பொழுது பிஎச்.டி. பட்டம் வாங்கியிருக்கிறார்.

இதனைத் தகவலுக்காகத்தான் உங்களுக்குச் சொல்கி றோமே தவிர, விளம்பரத்திற்காக அல்ல. ஆகவே, நீங்கள் ஏதோ பயிற்சி வகுப்பிற்கு வந்தீர்கள் - அதோடு போய்விடக் கூடாது.

இந்த இயக்கத்திற்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. பெற்றோ ருக்கு ஏதாவது குடும்பப் பிரச்சினை இருந்தால்கூட, ஆலோ சனை கேட்பார்கள். அய்யா காலத்திலிருந்து இது நடை பெறுகிறது. நாம் அந்தக் குடும்பங்களில் ஒருவர் என்று நினைப்போம்.

ரத்த சம்பந்த உறவைவிட -

கொள்கை உறவுதான் மிக முக்கியம்!

நான் அண்மையில்கூட எழுதியிருப்பேன் - நமக்கு ரத்த சம்பந்தமான உறவுகள் - குருதிக் குடும்பம் என்பதைவிட, நமக்கு இயக்கக் குடும்பம்தான் பலமானது. ஒரு தோழர் இறந்தார் என்றால், அதனுடைய பாதிப்பு நமக்கு அதிகம். அதிலிருந்து வெளியில் வருவது கடினமாக இருக்கும்.

இன்றைக்குக்கூட முக்கியமானவர் மறைந்துவிட்டார். அவருக்கு இறுதி வணக்கம் நாம் செலுத்தவேண்டும்.

அப்படிப்பட்ட இயக்கம் இந்த இயக்கம். ஆகவே, ‘கடவுளை மற - மனிதனை நினை’ என்று நடைமுறையில் காட்டக்கூடிய, அதற்குப் பொருள் - ஆதாரம் - அது இலக்கணம் என்றால், இது இலக்கியம். அதற்குத் தத்துவம் என்றால், இது நடைமுறை என்று சொல்லக்கூடிய அளவிற்கு மிகச் சிறப்பாக வந்திருப்பதினால், இங்கே நம்முடைய பொதுச்செயலாளர் சொல்லியதுபோல, உங்கள் எல்லோரி டமும் செல்போன் இருக்கிறது; மின்னஞ்சல் முகவரி இருக் கிறது - பணம் செலவில்லாத வேலை. கடிதம் போட்டால்கூட அவ்வளவு சீக்கிரம் வராது. மின்னஞ்சல் என்பது மிகவும் சுலபம்.

மின்னஞ்சல் முகவரியைக் கொடுங்கள் - செல்போனில் தொடர்பு கொள்ளுங்கள். தலைமையிடம் பேசுங்கள். எந்த நேரம் நீங்கள் தொடர்பு கொண்டாலும், உங்களுக்குப் பதில் சொல்ல தயாராக இருக்கிறோம்.

அய்யா நான் இதில் பாஸ் செய்துவிட்டேன். விளையாட் டில் வெற்றி பெற்று இருக்கிறேன். அடுத்த நான் என்ன படிக்கவேண்டும் என்று இங்கே பிஞ்சுகளாக வந்த நீங்கள் மிகப்பெரிய முதிர்ந்தவர்களாகும் வரையில், நிறைய இந்த நாற்றங்காலிலிருந்து நீங்கள் நடப்படும் பயிர்களாக ஆக வேண்டும்.

ஆகவேதான், இங்கிருந்து நீங்கள் வீட்டிற்குச் சென்றாலும், புத்தகங்களை வாங்கிப் படிக்கவேண்டும்; விடுதலை நாளித ழைப் படிக்கவேண்டும். இணைய தளத்திலேயே அதனை நீங்கள் படிக்கலாம். தலைமைக் கழகத்தினுடைய தொடர்பில் இருங்கள். மாதத்திற்கு ஒருமுறையாவது நீங்கள் தொடர்பு கொள்ளுங்கள். மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளலாம்.

எதிர்காலத்தில் உங்களுடைய வாழ்வு ஒளிமிகுந்த வாழ்வாக இருக்கும்

உங்களுடைய ஒழுக்கம், உங்களுடைய கட்டுப்பாட்டினை வைத்து இந்த இயக்கத்தில் இருப்பதினால்தான் என்று, உங் களுடைய பெற்றோர்கள் உங்களைப் பார்தது வியப்படைய வேண்டும். அதுபோன்று நீங்கள் வாழ்ந்தால், எதிர்காலத்தில் உங்களுடைய வாழ்வு ஒளிமிகுந்த வாழ்வாக இருக்கும் என்று கூறி என்னுடைய உரையை முடித்துக் கொள்கிறேன்.

வாழ்க பெரியார்! வளர்க பெரியார்!

நன்றி, வணக்கம்!

இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner