எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஆவடி, நவ.4  தமிழர்களின் பண்பாட்டு விழாவாக நரகாசுரன் நினைவுநாளை கொண்டாட வேண்டும் என்று தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் அறிவித்ததை யொட்டி, முதல் நிகழ்வாக ஆவடியில் நரகாசுரனின் நினைவு நாள் பெருவிழாவாகக் கொண்டாடப்பட்டது.

உண்மை வாசகர் வட்டத்தின் சார்பில், 22.10.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலையில் 11 மணியளவில் ஆவடியிலுள்ள பெரியார் மாளிகையில் ‘‘தேவாசுரப் போர்;  அன்றும் இன்றும்'' என்ற தலைப்பில் ஒரு கருத் தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் நரகாசுரன் நினைவுநாள், வீரவணக்க நாளாக மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. உரை நிகழ்த்த தலைமை கழகத்தின் சொற்பெருக்காளர் தஞ்சை இரா.பெரியார் செல்வன் வருகை தந்திருந்தார். இந்நிகழ்வில் உண்மை வாசகர் வட்டத்தின் பொறுப்பாளர்களான கி.மு.திராவிட மணி அனைவரையும் வரவேற்று உரையாற்ற,

சி.ஜெயந்தி, கோ.முருகன், பூவை செல்வி, இ.தமிழ்மணி, க.கலைமணி, வை.கலையரசன் ஆகியோர் முன்னிலை வகித்துச் சிறப்பித்தனர். மண்டலச் செயலாளர் வெ.பன் னீர் செல்வம், மண்டல மாணவரணிச் செயலாளர் பா.மணியம்மை, மாவட்டத் தலைவர் பா.தென்னரசு, மாவட் டத் துணைத் தலைவர் கி.ஏழுமலை, அமைப்பாளர் உடுமலை வடிவேல், இளைஞரணித் தலைவர் வெ. கார் வேந்தன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

தமிழர் தலைவரின் முத்தான அறிவிப்பு!

பண்பாட்டு படையெடுப்பால் ஆரியர்களை எதிர்த்த நமது மூதாதையர்களின் வரலாற்றை திரித்து நம்மை கேவலப்படுத்தி, அந்தக் கேவலத்தை நம்மையே கொண் டாடும்படி செய்துவிட்ட சூழ்ச்சியை முறியடிக்கும் விதமாக, முள்ளை முள்ளால் எடுப்பது போல, தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் இந்தாண்டு முதல் மூடநம்பிக்கை மற்றும் மானமிழப்பு பண்டிகையாகவும், சுற்றுச்சூழலுக்கு எதிராகவும், காசு பணத்தை கரியாக்கும் முட்டாள் தனமாகவும், கொண்டாடப்படுகின்ற ‘‘தீபாவ ளியை'' மக்கள் மனங்களிலிருந்து மாற்றும் விதமாக அதே நரகாசுரன் பெயரிலேயே விழா எடுத்து அவரது அருமை, பெருமைகளையும், ஆரியருக்கு விலைபோகாத வீரத்தையும் பேசி, அதேயே ஒரு கொண்டாட்டமாக மாற்றுகின்ற ஒரு பண்பாட்டுப்புரட்சி விழாவாக தமிழ்நாடு முழுவதும் கொண்டாட வேண்டும் என்று அறிவிப்பு வெளியிட்டார். அதையொட்டி ஆவடி மாவட்டத்தில் இவ்விழா முன்னெடுக்கப்பட்டது.

நரகாசுரன் தலைமையில் ஊர்வலம்!

முன்னதாக மாவட்டத் துணைத் தலைவர் கி.ஏழுமலை நரகாசுரன் வேடமணிந்து பூவிருந்தவல்லி ஆவடி நெடுஞ்சாலையிலுள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலையணிவித்து, அங்கிருந்து இராமலிங்கபுரத்திலுள்ள பெரியார் மாளிகை வரையில் கருஞ்சட்டை தோழர்களு டன் ஊர்வலமாக நடந்து வந்தனர். அப்போது நரகாசுரன் யார் என்பதை விளக்கும் வண்ணம், வீரவணக்கம்! வீரவணக்கம்! அசுரகுலத் தலைவனாம் நரகாசுரனுக்கு வீரவணக்கம்! என்றும், ஆரியரின் சூழ்ச்சியால் வீழ்ந்த மாவீரன் நரகாசுரனுக்கு வீரவணக்கம்! என்றும், கல்புர்க்கி யாரு? கோவிந்த் பன்சாரே யாரு? நரேந்திர தபோல்கர் யாரு? கவுரி லங்கேஷ் யாரு? என்று வரிசையாகக் கேட்டு, அசுரர் குலத் தளபதிகள்! என்றும், எங்கள் தந்தை பெரியாரும் அசுரர் குலத் தலைவரே! என்றும், எங்கள் தலைவர் வீரமணியும் அசுரர் குலத் தலைவரே! என்றும், ‘‘அசுரர் எல்லாம் நம்மாளு, சுரரெல்லாம் அவாளு'' என்றும் ஒலிமுழக்கங்கள் செய்தபடி சென்றனர். இந்நிகழ் வில் சிறப்புப் பேச்சாளர் இரா.பெரியார்செல்வன், மும்பை யிலிருந்து வருகை தந்திருந்த பகுத்தறிவாளர் கழகத் தோழர் ரவிச்சந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டு உடன் வந்தனர்.

நரகாசுரனுக்கு விழா அவசியமா?

அதைத் தொடர்ந்து பேசிய பெரியார் செல்வன், முதலில், ‘உண்மை'  நாளிதழின் சிறப்புகளைப்பற்றி கூறி விட்டு, நரகாசுரனுக்கு விழா எடுக்க வேண்டிய அவசியம் என்ன? என்று ஒரு அவசியமான கேள்வியைக் கேட்டு, அதை விளக்கும் வகையில் தமிழக வரலாற்றில் நடை பெற்ற ஒரு முக்கிய சம்பவத்தைக் குறிப்பிட்டார். பேரறிஞர்  அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் இருவரும் ஒரு திரைப்படம் பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது அரசு தரப்பில் வெளியிடப்படுகிற செய்திப் பிரிவு படத்தில் (நியூஸ் ரீலில்) ஆண்டுதோறும் டில்லியில் நடைபெறும் ராம்லீலா காட்டப்படுகிறது. அதில் இராவ ணன், கும்பகர்ணன், இந்திரஜித், மேகநாதன் ஆகியோரின் பேருருவங்களுக்கு வெடிவைத்து கொளுத்துகின்றனர். அதைப் பார்த்து கலைஞர், அண்ணா நாமும் இதைப் போல ராமனையும், இலெட்சுமணனையும், சீதையையும் கொளுத்தினால் என்ன? (உணர்வு பொங்க பலத்த கைதட்டல்) என்று கேட்டாராம். அன்று கலைஞருக்கு ஏற்பட்ட அதே உணர்வுதான், இன்று இந்த நரகாசுரனின் திருவிழா நடப்பதற்குக் காரணம் என்று கூறி, தேவாசுரப் போராட்டத்திற்கு ஒரு முன்னோட்டம் கொடுத்தார்.

இது ஆரியர் - திராவிடர் போராட்டம்தான்!

தொடர்ந்து பேசிய அவர், இது இன்றைக்கு நேற்றைக்கு நடைபெற்று வருவது அல்ல. ஆயிரமாயிரம் ஆண்டு களாக நடந்து வருகிறது என்றார். இது ஆரியர்- திராவிடர் போராட்டம்தான் என்பதை பண்டிதர் நேரு, தன் மகள் இந்திராவுக்கு சிறையிலிருந்து எழுதிய கடிதங்களில் இராமாயணம், மகாபாரதம் என்பது ஆரியர்- திராவிடர் போராட்டமே என்று குறிப்பிட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி, வேதகாலம், புராணகாலம், இதிகாசகாலம் ஆகியவற்றில் வருகிற தஸ்யுக்கள், அசுரர்கள், இராட்சதர்கள் என்று குறிப்பிடப்பட்டிருப்பது  திராவிடர்களாகிய நம்மைத்தான் என்று கூறிவிட்டு, அசுரர்களின் பண்பாடு, குணம் ஆகியவையும், சுரர்களின் பண்பாடு ஆகியவையும் எப்படி ஒன்றுக்கொன்று நேர் எதிரானதாக இருக்கிறது என்பதை ஒருவனுக்கு ஒருத்தி என்ற நமது பண்பாட்டையும், அய்வருக்கும் தேவியாம் அழியாத பத்தினியாம் என்ற ஆரியர் பண்பாட்டையும் பட்டியலிட்டு, பாரதத்தில் தர்மனுக்கு ஏற்படுகிற ‘தர்மசங்கடம்' என்ன? என்பதையும் குறிப்பிட்டு, பொருள் புரியாமலேயே பல சொற்களை பயன்படுத்துகின்றோம். இதுவும் பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்புதான் என்று, இன்றும் ஊர், நாடு நகரங்களின் பெயர்கள் எப்படி பார்ப்பன மயமாக்கப்பட்டிருக்கிறது என்பதை சுரீரென்று உறைக்கும்படி எடுத்துரைத்தார்.

அசுரர் குலத்தலைவர் தந்தை பெரியார்!மேலூம் அவர் நரகாசுரன் பற்றிய ஆபாசப் புராணக்கதையை குறிப்பிட்டுவிட்டு, ஏன் நரகாசுரன் கொல்லப்பட்டான்? என்று கேள்வி கேட்டு, அதன் பின்னணியில் இருக்கும் காரணத்தைச் சொல்லி, அவர்கள் எழுதி வைத்த கதையின்படியே ஆரியர்கள் நம்மீது நடத்திய ஒரு பண்பாட்டுப் படையெடுப்பை அன்றைக்கு துணிச்சலாக எதிர்கொண்டு வீரத்தால் வீழ்த்த இயலாமல், ஆரியரின் வழக்கப்படியான சூழ்ச்சியால் வீழ்ந்தவன்தான் நரகாசுரன் என்றார். அதேபோல இராமாயணத்தில் ஆரிய குலதர்மத்திற்கு எதிராகவும், திராவிட மக்களின் மாண்புகளை பேணுபவர்களாகவும் இருந்த இராவணனையும், வாலி, இந்திரஜித் ஆகியோரையும் வீரத்தால் வெல்ல முடியாத ஆரியக் கோழைகள் சூழ்ச்சியால்தான் படுகொலை செய்தனர் என்று குறிப்பிட்டுவிட்டு அந்தப் போர் இன்றும் நடப்பதை இன்றைய அரசியல் சூழ்நிலைகளையும், சாரணர் இயக்கத்தில் நடைபெற்ற தேர்தலையும் குறிப்பிட்டு, அன்று நம்மை ஆரியர் சூழ்ச்சியால் வீழ்த்தினர். ஆனால், இன்று அப்படி நடக்குமா? என்று ஒரு கேள்வி கேட்டுவிட்டு, அவர்களின் சூழ்ச்சிக்குப் பலியாகாத வண்ணம் தடுத்து நிறுத்தியது மட்டுமல்ல, அவாளையே வீழ்த்திக் காட்டியவர்தான் நம் அசுரர் குலத்தலைவர் தந்தை பெரியார் என்றதும், உணர்வுப் பெருக்காலும், கைதட்டலாலும் அரங்கு அதிர்ந்தது.

இறுதியாக அவர், தேவாசுரப் போராட்டம் இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. நடைபெறும் பண்பாட்டுப்போரில் இறுதி வெற்றி நமக்குத்தான். அதில் எந்த அய்யமுமில்லை என்று உரத்த குரலில் கூறி தனது உரையை நிறைவு செய்துகொண்டார். கலந்து கொண்டவர்களுக்கும் இந்த பண்பாட்டுப் போரில் நிச்சயம் நாம் வெல்லத்தான் போகிறோம் என்கிற புத்துணர்வும் ஏற்பட்டது. அடுத்துவரும் நரகாசுரன் திருவிழாவை இன்னும் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று தங்களின் ஆசையையும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் வெளிப்படுத்தியவாறு கலைந்து சென்றனர்.

கலந்து கொண்டவர்கள்!முன்னதாக மும்பையிலிருந்து வருகை தந்திருந்த பகுத்தறிவாளர் கழகத் தோழர் ரவிச்சந்திரன் நெகிழ்ச்சியுடன் தனது உணர்வுகளைப் பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொண்டார். தொடர்ந்து கடந்த மாதம் நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்துத் தந்த உண்மை வாசகர் வட்டத்தின் பொறுப்பாளர்களுக்கு ஆடை போர்த்தி மரியாதை செய்யப்பட்டது. நிகழ்ச்சியை மாவட்டத் தலைவர் பா.தென்னரசு ஒருங்கிணைத்துக் கொடுத்தார்.

நிகழ்ச்சியில் அருந்ததி திராவிடமணி, பகுத்தறிவு பாசறை ஒருங்கிணைப்பாளர் கொரட்டூர் கோபால், இளவரசு, முத்துக்கிருஷ்ணன், நடராசன், தொண்டறம், பெரியார் மாணாக்கன், ஆவடி வேலு, கண்ணன், க.பாக்கியா, கி.மணிமேகலை, வை.கனிமொழி, தேன்மொழி, செல்வி முருகானந்தம், முருகானந்தம், ஜெயவேலு, பட்டாபிராம் உதயா, தேவராஜ், தே.ஆகாஷ், வ.ம.வேலவன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். முன்னதாக உண்மை வாசகர் வட்டத்தின் செயற்குழு உறுப்பினராக இருந்த சித்தார்த்தனுக்குப் பதிலாக விடுதலை இராவணன் சேர்த்துக்கொள்ளப்பட்டதாக ‘உண்மை' வாசகர் வட்டத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner