எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உயர் எண்ணங்கள் மலரும் சோலையாம் தந்தை பெரியாரின் 140 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை கொள்கைப் பிரச்சார விழாவாக எங்கெங்கும் நடத்திடுவீர்!

விடுதலை'யை வீட்டுக்கு வீடு சேர்த்திடுக! கொடிகளை ஏற்றிடுக!!

தந்தை பெரியார் அவர்களின் 140 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை கொள்கைப் பிரச்சார விழாவாகவும், விடுதலை' ஏட்டை வீட்டுக்கு வீடு கொண்டு சேர்த்தும், கழகக் கொடிகளை எங்கெங்கும் ஏற்றியும் கொண்டாடுமாறு கழகத் தோழர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ள திராவிடர்  கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் அறிக்கை  வருமாறு:

நம் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களின் 140 ஆம் ஆண்டு பிறந்த நாள் பெருவிழாவை திருவிழாவாகக் கொண்டாடுங்கள் தோழர்களே! பெரியார் பற்றாளர்களே!! பகுத்தறிவாளர்களே!!! இடையில் 5 நாள்களே உள்ளன.

பெரியார் ஒரு தனி மனிதரல்ல - ஒரு சகாப்தம் - காலகட்டம் - திருப்பம்'' என்றார் அறிஞர் அண்ணா.

உயர் எண்ணங்கள் மலரும் சோலை

உயர் எண்ணங்கள் மலரும் சோலையாம் தந்தை பெரியார் - வயதில் அறிவில் முதியார், வாய்மைப் போருக்கு என்றும் இளையார்'' என்றார் புரட்சிக்கவிஞர்.

பாராட்டிப் போற்றி வந்த பழைமை லோகம்

ஈரோட்டுப் பூகம்பத்தால் இடியுது பார்!''

ஈ.வெ.ரா. என்ற வார்த்தை

இந்நாட்டு ஆரியத்தின்

அடிபீடம் ஆட்டுகின்ற சூறாவளியாம்!''

என்பதாகக் கவிதை வடித்தார் மானமிகு சுயமரியாதைக் காரரான' நம் கலைஞர்.

இப்படிப்பட்ட பாராட்டுகளைவிட, அவர் வாங்கிய வசவுகளும், கல்லடி, சொல்லடி, செருப்பு வீச்சு, அழுகிய முட்டை வீச்சு, மலம் வீச்சு இவைகளையெல்லாம் தனது தொண்டு - கொள்கை என்ற வயலின் பயிருக்கு இடப்பட்ட உரம் என்றே கருதி, உலகத் தலைவராக உயர்ந்து 95 வயது வரை சலியாது உழைத்து, தனது செல்வம், சொத்து முழுமையும் மக்களுக்கே விட்டுச் சென்ற ஒப்புவமை இல்லாத வள்ளல் அவர்!

எல்லாவற்றையும்விட, நமது இனத்தின் ஒப்பற்ற மான மீட்பர்!'

அர்ச்சகர் போராட்டத்தின் வெற்றி ஆண்டு!

இவ்வாண்டு அவரது இறுதிப் போராட்டம் பலன் தந்தது; அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகி, வெற்றிப் பதாகை வீறுகொண்டு வீசிடும் ஆண்டு - 140 ஆம் ஆண்டு கொண்டாட வேண்டாமா?

45 ஆண்டுகால அவர்தம் தொண்டறப் போராட்டம் தொடர்ந்ததின் விளைவு - விளைச்சல் அவ்வெற்றி!

அதைக் கொண்டாடி, ஜாதி - தீண்டாமை ஒழிப்பின் அடுத்த கட்டம் செல்லும் நிலையை ஆயத்தக் களமாக அறிவு ஆசானின் 140 ஆவது ஆண்டு பிறந்த நாளை பெருமிதத்தோடும், சீரோடும், சிறப்போடும், பூரிப்புடனும், புளகாங்கிதத்துடனும் கொண்டாடுங்கள் தோழர்களே! தாய்மார் களே!! சான்றோர்களே!!!

பிரச்சாரம் சுழன்றடிக்கட்டும்!

இளைய தலைமுறை ஈரோட்டின் பேரேடு - எப்படி புகழ் வாய்ந்த பொன்னேடு என்று பிரச்சாரப் பெருமழை மூலம் காட்டுங்கள் தோழர்களே!

பிரச்சாரம்! பிரச்சாரம்!! எங்கும் கொள்கைப் பிரச்சாரப் பெருமழை பெய்திடுக!

விடுதலை' என்ற அய்யா தந்த அருட்கொடை அறி வாயுதத்தை அனைவர் கையிலும் கொண்டு சேர்த்திடுக!

கழகக் கொடிகள் எங்கெங்கும் ஏற்றப்படட்டும்!

தயாராவீர்! தயாராவீர்!!

 

கி.வீரமணி,

தலைவர் திராவிடர் கழகம்.

சென்னை

12.9.2018