எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மதுரை விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில்

இன்றைய சூழலில் பெண்களுக்கு

அதிக சுதந்திரம் இருக்கிறதா? இல்லையா?

மகளிரால் நடத்தப்பட்ட மாபெரும் பட்டிமன்றம்

மதுரை, ஜன.10 6.1.2018 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரில் உள்ள செய்தியாளர் அரங்கத்தில் மதுரை ‘விடுதலை' வாசகர் வட்டத்தின் அய்ந்தாம் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது.

விழாவிற்கு சரோசா நடராசன் தலைமை தாங்கினார். ராக்குதங்கம் (பொதுக்குழு உறுப்பினர், திராவிடர் கழகம்), அஜிதா (மதுரை மாநகர மாவட்ட மகளிரணி தலைவர்), பாக்கியலெட்சுமி (உசிலம்பட்டி மாவட்ட மகளிரணி, தலைவர்),  கலைச்செல்வி (மதுரை மாநகர மாவட்ட மகளிரணி செயலாளர்),  அன்புச்செல்வி (உசிலம்பட்டி மாவட்ட மகளிரணி செயலாளர்), புஷ்பலதா (மேலூர் மாவட்ட மகளிரணி செயலாளர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பெரியார் பிஞ்சு த. ஓவியா வரவேற் புரை ஆற்றினார். நிகழ்ச்சியை பேராசிரியர் க.அகிலாகுமாரி (சோலைமலை பொறி யியல் கல்லூரி) தொகுத்து வழங்கியது அனைவரது பாராட்டையும் பெற்றது.

விழாவுக்கு சிறப்பு விருந்தினராக வந்த திராவிடர் கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி அவர்கள் பெரியாரின் அளப்பரிய தொண்டால் பெண்களுக்கு சுதந்திரமும், விடுதலையும் எவ்வாறு கிடைத்தது என்பதை விரிவாக எடுத்துரைத்தார்.

அதற்கடுத்த நிகழ்ச்சியாக இருந்த பட்டிமன்றத்தின் தலைப்பான ‘‘இன்றைய சூழலில் பெண்களுக்கு அதிக சுதந்திரம் இருக்கிறதா? இல்லையா?'' என்ற தலைப் புக்கான  காரணங்களை பல வரலாற்று நிகழ்ச்சிகளோடு எடுத்துரைத்தது பட்டி மன்ற பேச்சாளர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக அமைந்தது.

அடுத்து பட்டிமன்ற நடுவர் ரேணுகா தேவி நடுவராக இருந்து பட்டிமன்றத்தை துவக்கி வைத்து உரையாற்றினார்.

இன்றைய சூழலில் பெண்களுக்கு அதிக சுதந்திரம் இருக்கிறது என்ற தலைப்பை ஒட்டி மகேஸ்வரி (வணிக வரித்துறை உதவி ஆணையர்) தற்போது பெண்களுக்கான சுதந்திரம் எந்தெந்த தளங்களில் எல்லாம் வழங்கப்பட்டிருக்கிறது என்பதை அழ காக எடுத்துரைத்தார்.

அதற்கடுத்து பெண்களுக்கு அதிக சுதந்திரம் இல்லை என்று பேச வந்த பேராசிரியர் சங்கீத் ராதா, சட்டங்களிலும், அரசாணைகளிலும் வழங்கப்பட்டிருந்தாலும் அவற்றை முழுமையாக அனுபவிக்க விடாமல் ஆணாதிக்க சமுதாயம் தடுத்து வருகிறது என்பதை சுவைபட எடுத்துச் சொன்னார். காந்தியார் அவர்கள், ‘‘ஒரு பெண் நடு இரவில் ஏராளமான நகைகளை அணிந்து கொண்டு தனித்து தன் இல்லத்திற்கு வர என்று முடிகிறதோ அன்றுதான் முழு சுதந்திரம் கிடைத்துவிட்டதாகக்  கருதுவேன்''  என்று கூறியதை எடுத்துக் காட்டி, இன்று நகைகள்கூட அணிந்து வராமல் சாதாரண உடை அணிந்து தன்னந்தனியாக எந்தவொரு சேதாரமும் இன்றி வரமுடிகிறதா? என்ற கேள்வியை எழுப்பியது சிந்தனையைத் தூண்டுவதாக இருந்தது.

‘‘பெரியாருக்குமுன், - பெரியாருக்குப் பின்!''

பெண்களுக்கு முழு சுதந்திரம் இருக்கிறது என்ற அணியில் மதிவதனி வாதிடும்போது, பெண்கள் சுதந்திரத்தைப்பற்றி பேசும்போது, ‘‘பெரியாருக்குமுன், - பெரியாருக்குப் பின்'' என்று பகுத்துப் பார்த்து ஆய்வு செய்யவேண்டும். அவ்வாறு ஆய்வு செய்யும்போது பெரியாருக்கு முந்தைய காலகட்டத்தைவிட, பெரியாருக்கு பிந்தைய காலத்தில்தான் பெண்களுக்கு அதிக சுதந்திரம் உள்ளது என்று கூறினார்.

அவருக்கு பதிலுரைத்த செல்வி கார்த்திகா, நான் வெகுநாள்களாக ஒரு நபரை தேடி வருகிறேன். அவர் இன்றுவரை கிடைக்கவில்லை. அவர் யாரென்றால் துரோபதை துகில் உரியப்பட்டபோது அவளுக்கு ஆடை வழங்கி மானத்தைக் காத்த அந்த கிருஷ்ண பகவானை இப்போது யாராவது பார்த்தீர்களா? என்று வினா எழுப்பியபோது, அரங்கமே சிரிப்பொலியாலும், கையொலியாலும் அதிர்ந்தது.

இறுதி தீர்ப்பு வழங்கிய ரேணுகா தேவி, எத்தனையோ வாய்ப்புகள், உரிமைகள் ஏட்டளவில் இருந்தாலும், அவைகள் நடைமுறையில் இல்லை என்பதை பல நிகழ்ச்சிகளைச் சுட்டிக் காட்டியதோடு, திரைப்படத்தில் வருகிற நகைச்சுவை வசனமான ‘‘வரும்; ஆனால் வராது'' என்ற நிலைதான் பெண்களின் சுதந்திரத்திற்கு இப்போதும் நிலவி வருகிறது என்று கூறி, பெண்களுக்கு அதிக சுதந்திரம் இல்லை என்ற தீர்ப் பினை வழங்கினார்.

இறுதியில் பா.வேல்விழி நன்றி கூற, விழா இனிது முடிந்தது.

இவ்விழாவில் ஆண்களைவிட பெண் களே அதிகமாக கலந்து கொண்டதும், அவர்கள் இந்நிகழ்ச்சியினை மகிழ்ச்சிப் பெருக்கோடு ரசித்ததும் இவ்விழாவின் சிறப்பை எடுத்துக்காட்டுவதாக இருந்தது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner